Friday, July 7, 2017

யோக சூத்திரம் - 1.8 - தவறான எண்ணங்கள் எப்படி வருகிறது ?

யோக சூத்திரம் - 1.8 - தவறான எண்ணங்கள் எப்படி வருகிறது ?



विपर्ययो मिथ्याज्ञानमतद्रूप प्रतिष्ठम् ॥८॥

viparyayo mithyā-jñānam-atadrūpa pratiṣṭham ॥8॥

விபரியாயோ மித்ய ஞானம் அதத் ரூப ப்ரதிஸ்தம் 

விபரியாயோ = தவறான அறிவு, குழப்பம், உண்மை இல்லாத அறிவு

மித்ய = உண்மை இல்லாதது, பொய்யானது, தவறானது, மாயை

ஞானம் = அறிவு, அறிவது

அதத் = அது அல்லாத

ரூப = வடிவம் , தோற்றம்

ப்ரதிஸ்தம் = அடிப்படையாக கொண்டது, அதன் மூலம், உறுதியாக நிற்பது


தவறான அறிவு எப்படி வருகிறது என்றால், ஒன்றை அதன் தோற்றத்தை , வடிவை வைத்து எடை போடுவதால்.

மிக ஆழமான வரி. ஆழ்ந்து சிந்திக்க வேண்டிய வரி.

முதலில் ஐந்து விதமான எண்ண அலைகளைப் (thought process ) பற்றி சொன்னார்.

அவையாவன

1. பிரமாணம்
2. விபரீதம்
3. விகல்பம்
4. நித்திரை
5. ஞாபகம்

இதில் பிரமாணம் என்பது மூன்று  வகைப்படும் என்று பார்த்தோம்.

1. காட்சி பிரமாணம்
2. அனுமானப் பிரமாணம்
3. ஆகம பிரமாணம்

அடுத்து இங்கு விபரீதம் என்பது பற்றி சிந்திக்க இருக்கிறோம்.

முதலில் விபரீதம் என்றால் ஏதோ திகில் பட சம்பந்தமானது என்று நினைத்துக் கொள்ளக் கூடாது. தமிழில் அப்படித்தான் உபயோகப்  படுகிறது. ஏதோ விபரீதம் நடக்கப் போகிறது என்றால் ஏதோ மர்மமான ஒன்று நடக்கப் போகிறது என்று தான் புரிந்து  கொள்வார்கள்.

அப்படி அல்ல.

விபரீதம் என்றால் சமஸ்க்ரிதத்தில் தவறான என்று பொருள்.

தவறான எண்ணங்கள், அறிவு எப்படி வருகிறது ?

ஒரே ஒரு காரணம் தான் சொல்கிறார் பதஞ்சலி.

பொருள்களை , மற்றவர்களை தோற்றத்தை வைத்து , அதுவே உண்மை என்று நினைத்துக் கொள்வதால் வருகிறது என்கிறார்.

கேட்பதற்கு மிக எளிதாக இருந்தாலும், முழுவதுமாக புரிந்து கொள்வது மிக மிக கடினம்.

என்னால் முடியவில்லை, நீ வந்து அருள் செய்ததனால் அது நிகழ்ந்தது என்பார் மணிவாசகர்.

"பொய்யாயினவெல்லாம் போயகல வந்தருளி"

என்பது திருவாசகம்.

சிறு குழந்தைகளின் பையை எடுத்துக் பார்த்தால் தெரியும் அதில் பழைய  சீட்டு , குளிர்பான பாட்டிலின் மூடி, பரிசு பொருள்கள் சுற்றிவந்த கலர் காகிதம், என்று பைசாவுக்கு பெறாத பொருள்கள் எல்லாம் இருக்கும். குழந்தைக்கு அது பெரிய பொக்கிஷம் போல.

அந்த  குப்பைகளை பெரிய செல்வம் போல அவை காப்பாற்றி வைத்து இருக்கும்.

கொஞ்சம் பெரிய ஆள் ஆனவுடன், அவற்றை தூக்கி எறிந்து விட்டு, வேறொன்றின் பின்னால் போகும்.

விளையாட்டு அட்டைகள், gaming catridge , comic books என்று...பின் அதுவும் மாறும்.

இப்படி அர்த்தமில்லாத, நிரந்தரமில்லாதவற்றின் பின்னால் போய் கொண்டிருக்கும்.

நாம், நம் வாழ்வில் பணம், காசு என்று அலைகிறோம் .  நம்மை விட வயதில் மூத்தவர்களை, வாழ்வின் எல்லையில் இருப்பவர்களை கேட்டுப் பாருங்கள் சொல்லுவார்கள்

"...இப்படி பணம் காசு என்று வாழ் நாள் எல்லாம் அலைந்து , நல்ல பல விஷயங்களை இழந்து விட்டேன். நீயும் அப்படி அலையாதே "

என்று தான் சொல்லுவார்கள்.

 இருந்தும், பணம்தான் மிக முக்கையாமான ஒன்று நாம் அலைந்து கொண்டிருக்கிறோம். அது மகிழ்ச்சியைத் தரும் என்று  நம்புகிறோம். அது உண்மையா ?

திருமணம் இன்பம் தருமா ?

வீடு வாசல், தோட்டம் துரவு , நகை நட்டு, இவை இன்பம் தருமா ?

இன்பம் தருவது போல தோற்றம் இருக்கும்.  ஆனால் இவற்றில் இன்பம் இல்லை.

எது நிரந்தரம், எது உண்மையானது என்று அறியாமல் தோற்றப் பொலிவை கண்டு  அவற்றை உண்மை என்று நம்பிக் கொண்டிருக்கிறோம்.

கணைகொடிது யாழ்கோடு செவ்விதுஆங் கன்ன

வினைபடு பாலால் கொளல்.

அம்பு (கணை ) பார்க்க அழகாக இருக்கும். நேர்த்தியாக இருக்கும். உறுதியாக இருக்கும். ஆனால், உயிரைக் குடிக்கும்.

யாழ் பார்க்க வளைந்து நெளிந்து இருக்கும். உறுதியானது அல்ல. ஆனால் மிக இனிமையான இசையைத் தரும்.

தோற்றத்தை வைத்து முடிவு செய்யக் கூடாது.

அரசியல் வாதிகள், விளம்பரப் படங்கள் , டிவி யில் வரும் செய்திகள் என்று எங்கு பார்த்தாலும் பொய்கள் மலிந்து கிடக்கிறது. இவற்றில் இருந்து உண்மையை தேடி கண்டு பிடிக்க  வேண்டும்.

இப்போது, இவை போதாது என்று whatsapp , facebook என்று அதில் வேறு உண்மை அல்லாத  எவ்வளவோ உலா வருகின்றன.

தோற்றத்தைக் கண்டோ, கேட்பதைக் கொண்டோ முடிவு செய்யக் கூடாது.

உண்மை என்ன என்று கண்டு அறிய வேண்டும்.


இது ஒரு பக்கம். வெளி உலகில் உள்ள தோற்றங்களை தாண்டி உண்மையை அறிவது ஒரு பக்கம் இருக்கட்டும்.

நமது மனதில் சில படிவங்கள், வடிவங்கள்  விழுந்து விடுகின்றன. நாம் அவற்றின் மூலமே உலகை அறிகிறோம். அதனாலும் உண்மையை அறிய முடியாமல்  போகிறது.

அது என்ன மன படிவம் ?

அடுத்த பிளாகில் பார்ப்போம்.


http://yogasutrasimplified.blogspot.in/2017/07/18.html

No comments:

Post a Comment