Wednesday, July 26, 2017

யோக சூத்திரம் - 1.24 - ஈஸ்வரத்தன்மை

யோக சூத்திரம் - 1.24 - ஈஸ்வரத்தன்மை 



क्लेश कर्म विपाकाअशयैःअपरामृष्टः पुरुषविशेष ईश्वरः ॥२४॥

kleśa karma vipāka-āśayaiḥ-aparāmr̥ṣṭaḥ puruṣa-viśeṣa īśvaraḥ ॥24॥

நம் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் படைக்கும் ஆற்றல் தான் ஈஸ்வரன் என்று சிந்தித்தோம். அந்த படைக்கும் ஆற்றல் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். படம் வரைவது, இசை அமைப்பது, சிற்பம் செதுக்குவது என்று மட்டும் அல்ல....சமைப்பது, வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்வது, குளியல் அறையில் பாடுவது, வண்டி ஓட்டுவது, பேசுவது ...எல்லாமே படைப்புதான். தாய் பாடும் தாலாட்டும் ஒரு படைப்புதான். பாத்திரம் கழுவுவதும் ஒரு படைப்புதான். உள்ளிருந்து ஏதோ தூண்டுவதால் தானே எந்த செயலும் எழுகிறது. அந்த தூண்டும் சக்தியே ஈஸ்வரன்.

அந்த ஈஸ்வர சக்திக்கு செய்யும் செயல்களை அர்ப்பணித்து விடுவது சமாதி அடைய இன்னொரு வழி என்றும் சிந்தித்தோம்.

சரி, அப்படியே சமர்ப்பித்தால், நாம் செய்யும் செயல்களின் விளைவுகள், தன்மைகள், நல்லது கெட்டது அந்த ஈஸ்வர சக்தியை பற்றாதா ? அது நமது சித்தத்தில் சலனங்களை தோற்றுவிக்காதா என்ற கேள்வி எழும் அல்லவா ?

அந்த கேள்விக்கு இங்கே பதில் தருகிறார்.


kleśa =  கிலேசம் = தடைகள், துன்பங்கள், அவற்றிற்கான காரணங்கள்
karma = கர்மா = கர்ம வினைகள்
vipāka = விபக = வினைப் பயன்கள்
āśayaiḥ = அசைய = வினையில் இருந்து எழும் எண்ணங்கள். வினை முடிந்த பின் எழும் ஆசைகள், அது பற்றிய எண்ணங்கள்
aparāmr̥ṣṭaḥ = அபரம்ரிஸ்த = அவற்றால் எந்த பாதிப்பும் இல்லாமல்
puruṣa = புருஷா = அந்த அனுபவங்களை ஏற்பவன்
viśeṣa = விசேஷ = சிறப்பான, தனியான
īśvaraḥ = ஈஸ்வரா = ஈஸ்வரன்


ஒன்றை நாம் அடைய விரும்பும் போது , சில தடைகள் வரும். அந்தத் தடைகள் சின்னதாக இருக்கலாம் அல்லது பெரியதாக இருக்கலாம். அந்தத் தடைகளை வென்று எடுத்தால்தான் நாம் அந்த ஆசையை நிறைவேற்றிக் கொள்ள முடியும்.

தடைகளோடு போராடும்போது பல அனுபவங்கள் நமக்கு நிகழ்கின்றன.

நாம் விரும்பியதை அடைகிறோமோ இல்லையோ, அதை அடையும் முயற்சியில் நாம் ஈடுபடும்போது பல காரியங்களை செய்கிறோம். அந்த காரியங்களுக்கு , வினைகளுக்கு பலன் இருக்கும். விரும்பியதை அடைவது மட்டும்தான் வினைப் பயன் இல்லை. வினை செய்யும் போது உண்டாகும் அனுபவமும், வினைப் பயந்தான்.

செய்யும் முயற்சியின் அளவு, யார் நமக்கு உதவி செய்தார்கள், யார் நமக்கு எதிராக நின்றார்கள், யாரை நம்பலாம், யாரை நம்பக் கூடாது, நம் திறமையின் அளவு என்ன என்றெல்லாம் நாம் அறிய முடியும். இவையும் வினைப் பயன் தான்.

இந்த வினை பயனில் இருந்து நமது எதிர்கால சிந்தனை மற்றும் செயல்கள் அமைகின்றன.

அனுபவங்களில் இருந்து பாடம் கற்றுக் கொள்கிறோம். எப்படி செய்ய வேண்டும், எப்படி செய்யக் கூடாது, யாரை நம்பலாம், யாரை நம்பக் கூடாது என்று அறிந்து அதன் படி நமது எதிர்கால திட்டங்களை அமைக்கிறோம்.

ஒவ்வொரு வினையும் நம் எதிர் காலத்தை தீர்மானிக்கின்றன. கர்ம வினை.


கர்ம வினை என்பதை பாவ புண்ணியம் என்று பார்க்காமல் இப்படி பார்த்தால் என்ன ?  கர்மங்கள் அனுபவங்களை உண்டாக்குகின்றன. அனுபவங்கள் நமது எதிர்காலத்தை தீர்மானிக்கின்றன.

அது மட்டும் அல்ல, ஒரு ஆசை நிறைவேறிவிட்டால் அதோடு அது முடிந்து விடுவது இல்லை.

அந்த ஆசையில் இருந்து இன்னொரு ஆசை முளைக்கிறது. மீண்டும் அது வேண்டும் என்று மனம் நினைக்கிறது. அதை விட மேலும் வேண்டும் என்று நினைக்கிறது.

இப்படி ஆசைகள், வினைகள், அனுபவங்கள், அதில் இருந்து எழும் எதிர்கால வாழ்வின் விதை என்று வாழ்க்கை ஒரு வட்டத்தில் சுத்தி சுத்தி வருகிறது.

இந்த சூழலில் இருந்து எப்படி விடுபடுவது ?

செயலின் பலன்களை ஈஸ்வரனுக்கு அர்ப்பணம் செய்து விட வேண்டும்.

செயல் ஈஸ்வர சக்தியில் இருந்து விளைந்தது. அந்த செயலின் பலன்கள் அந்த ஈஸ்வர சக்திக்கே என்று அர்ப்பணித்து விட வேண்டும்.

அப்படி செய்யும் போது என்ன நிகழ்கிறது என்று பார்ப்போம்.

நாம் ஒரு பெரிய படைப்பாற்றலின் ஒரு கூறு என்று அறிவோம். நாம் நம்மை தனிமை படுத்திக் கொள்வதால்தான் இத்தனை போராட்டம். ஆற்றின் நீரோடு செல்லும் போது மிக எளிதாக இருக்கும். எதிர் நீச்சல் போடும் போது தளர்ந்து போகிறோம். வாழ்க்கை போராட்டமாகத் தெரிகிறது. நாம் ஆற்று வெள்ளத்தில் ஒரு துளி என்று அறிந்து கொண்டால் போராட்டம் இல்லை.

அப்படி செய்யும் போது அந்த ஆசை , கர்மா, வினை, வினைப் பயன், வினையின் விளைவுகள் நம்மை பாதிக்காது என்று யோக சூத்திரம் சொல்கிறது.

சிந்தித்துப் பாருங்கள்.

http://yogasutrasimplified.blogspot.in/2017/07/124.html

No comments:

Post a Comment