Sunday, July 9, 2017

யோக சூத்திரம் - 1.10 - எண்ண அலைகளும் தூக்கமும்

யோக சூத்திரம் - 1.10 - எண்ண அலைகளும் தூக்கமும் 


अभावप्रत्ययाअलम्बना तमोवृत्तिर्निद्र ॥१०॥

abhāva-pratyaya-ālambanā tamo-vr̥ttir-nidra ॥10॥

அபவ ப்ரத்யாய அலம்பன தமோ வ்ருத்தி நித்திரா

abhāva = அபவ = இல்லாததால்,

pratyaya = ப்ரத்யாய = பதிவுகள்

ālambanā = அலம்பன = சார்ந்து இருக்கிறது, சேர்ந்து இருக்கிறது

tamo = தமோ குணம்.

vr̥ttir = எண்ண அலைகள்

nidra  = தூக்கத்தில்

தூக்கத்திலும் எண்ண அலைகள் தோன்றுகின்றன. 

நாம் விழித்திருக்கும் போது நமது சித்தத்தில் பல்வேறு எண்ண அலைகள் உண்டாகின்றன.

அவற்றுள் பிரமாணம், விபரீதம், விகல்பம் என்பனவற்றை பற்றி முந்தைய பிளாக்கில் பார்த்தோம்.

அடுத்தது தூக்கம்.

தூக்கத்தில் நமக்கு உலகோடு தொடர்பு இல்லை. புலன்கள் வேலை செய்வது இல்லை. அப்படி இருக்கும் போது எண்ண அலைகள் எப்படி தோன்றும் ?

தோன்றும் என்கிறார் பதஞ்சலி.

எப்படி நம்புவது ?

தூங்குபவனை பார்த்தால் ஏதோ பிணம் போல கிடக்கிறான். வெளியே என்ன நடக்கிறது என்றே தெரியாமல் இருக்கிறான். அப்படி இருக்கும் போது , எப்படி எண்ண அலைகள் தோன்றும் ?

நம் மனம் எப்போதும் வேலை செய்து கொண்டே இருக்கிறது.

நல்ல உணவு சாப்பிட்டால், அந்த சுகமான அனுபவம் சாப்பிட்டபின் நமக்குத் தெரிகிறது அல்லவா ?

நல்ல இசையை கேட்டால், கேட்டு முடிந்த பின், "ஆஹா என்ன அருமையான இசை" என்று அந்த அனுபவத்தை நம்மால் நினைத்துப் பார்க்க முடிகிறது அல்லவா ?

காரணம், நம் மனம் அந்த அனுபவத்தை தன்னுள் வாங்கிக் கொண்டது. அது நல்லதா, கெட்டதா, இனிமையானதா , இல்லையா என்று அலசி எடை போட்டு வைத்து இருக்கிறது.

மனம் வேலை செய்வதால் தான் அந்த அனுபவங்கள் நமக்கு இருக்கின்றன அல்லவா ?

தூங்கி எழுந்த பின், "இன்று நிம்மதியாக தூங்கினோம்" , அல்லது " இன்று சரியாவே  தூங்கலை " என்று தெரிகிறது அல்லவா ?

நம் தூக்கத்தின் தரம் இன்னது என்று எப்படி நமக்குத் தெரிகிறது ? மனம் வேலை செய்வதால்.

தூங்காமல் இருக்கும் போது மற்றவற்றை பற்றிக் கொண்டிருந்த மனது (சித்தம்),  தூங்கும்போது தூக்கத்தைப் பற்றிக் கொள்கிறது.

விழித்திருக்கும் நிலை  - இதில் புற உலக விடயங்கள் புலன்கள் மூலமாக சித்தத்தில் வந்து மோதுகின்றன. அதனால் எண்ணங்கள் சிதறிக் கொண்டே இருக்கின்றன. சித்தம் தெளிவற்று இருக்கிறது. அதனால் உண்மை தெரிவது இல்லை.

தூக்க நிலை - இதில் புற உலக தூண்டுதல்கள் இல்லை.  தான் என்ற எண்ணமும் இல்லை. இருந்தும் மனம் தூக்கத்தைப் பற்றிக் கொண்டு இருக்கிறது. உண்மையை அறிய முடியாது.

இவை இரண்டையும் தாண்டி ஒரு நிலை இருக்கிறது.

அது சமாதி - விழித்திருக்கும் நிலையிலும் சித்தம் அமைதியாக இருக்கும் நிலை.

அது பற்றி மேலும் சிந்திப்போம்.

http://yogasutrasimplified.blogspot.in/2017/07/110.html

No comments:

Post a Comment