Friday, July 28, 2017

யோக சூத்திரம் - 1.26 - முதல் ஆசிரியன்

யோக சூத்திரம் - 1.26 - முதல் ஆசிரியன் 



स एष पूर्वेषामपिगुरुः कालेनानवच्छेदात् ॥२६॥

sa eṣa pūrveṣām-api-guruḥ kālena-anavacchedāt ॥26॥

sa = ச = அவன், அது

eṣa = ஏச = அவன்

pūrveṣām = பூர்வேஸம் = பழைய, ஆதி, தொன்மையான

api = மேலும்

guruḥ = குரு = ஆசிரியன், ஆச்சாரியன்

kālena = காலேன = காலத்தால்

anavacchedāt = அனவச்சேதத் = முடிவில்லாத, மாற்றம் இல்லாத

அந்த ஈஸ்வரனே , ஆதி ஆசிரியன். மாற்றம் இல்லாத, முடிவில்லாத தொன்மையான ஆசிரியன். 

நமக்குள் இருக்கும் படைப்பாற்றல் தான் ஈஸ்வர சக்தி என்று பார்த்தோம். அந்த படைப்பாற்றல் அளவில்லாதது என்றும் பார்த்தோம். நமக்குள் இருக்கும் அந்த சின்ன படைப்பாற்றலுக்கும் , ஞானத்துக்கும் பிரபஞ்ச ஞானத்துக்கும்  வேறுபாடு இல்லை. இரண்டும் ஒன்றுதான் என்றும் பார்த்தோம்.

அந்த ஞானத்தைப் பற்றி மேலும் இங்கே கூறுகிறார்.

நமக்குள் இருக்கும் அந்த ஞானத்தை எப்படி வெளியே கொண்டு வருவது ?

வீடுகளில் ஆழ் துளை கிணறு தோண்டி அதில் ஒரு பம்பு செட் வைத்து நீர் ஏற்றுவதை பார்த்து இருக்கிறீர்களா ? உங்கள் வீட்டிலோ அல்லது அக்கம் பக்கத்திலோ ஆழ் துளை கிணறு (borewell ) போட்டு இருப்பார்கள். இரண்டு மூணு நாள் தலை வேதனையாக இருக்கும். ஒரே சத்தம், தூசி என்று அமர்க்களப் படும்.

தோண்டிய பின், குழாயை சொருகுவார்கள். 100 அடி , 300 அடி , 500 அடி என்று நீர் இருக்கும் நிலையைப் பொறுத்து அதன் ஆழம் இருக்கும். பின் அந்த குழாயின் முடிவில் ஒரு நீர் இறைக்கும் மோட்டாரை மாட்டுவார்கள்.

பின் ?

மின் swtich ஐ போட்டால் தண்ணி வராது.

முதலில் அந்த குழாய்க்குள் நீரை ஊற்ற வேண்டும். வெளியில் இருந்து உள்ளே செலுத்த வேண்டும். அந்த குழாய் முழுவதும் நிறைந்த பின், மோட்டாரை  சுற்ற விட்டால் முதலில் நாம் ஊற்றிய தண்ணி வரும். பின் நிலத்தடி நீர் வரும்.

அது போல

நமக்குள் இருக்கும் ஞானத்தை வெளியே கொண்டு வர வேண்டும் என்றால் , முதலில் கொஞ்சம் உள்ளே செலுத்த வேண்டும். உள்ளே போனது , முதலில் வெளியே வரும். பின், உள்ளே உள்ளதை வெளியே கொண்டு வரும்.

அந்த ஆதி ஞானம் உள்ளே உறைந்து கிடக்கிறது.

அது தான் ஆதி குரு. ஆசிரியர்களுக்கு எல்லாம் ஆசிரியர். முதல் ஆசிரியர்.

ஆனால், அந்த ஞானத்தை வெளிக் கொண்டு வர, ஒரு தூண்டுதல் வேண்டும்.

ஆழ் குழாய் கிணற்றை பார்காதவர்களுக்கு இது புரியாது.

வீட்டில் அன்றாடம் நடக்கும் ஒரு உதாரணம் பார்ப்போம்.

வீட்டில் குத்து விளக்கு அல்லது காமாட்சி விளக்கு அல்லது ஏதாவது எண்ணெய் திரி போட்டு ஏற்றும் விளக்கு இருக்கும். அதில் திரியில் தீபம் ஏற்றியவுடன் நின்று எரியாது. ஏற்றிய தீ குச்சியால், பெண் மணிகள், அந்தத் திரியை கொஞ்சம் தூண்டி விடுவார்கள். அல்லது விரலால் சற்று தூண்டி விடுவார்கள்.

எண்ணெய் இருக்கிறது. திரி இருக்கிறது. தீபம் இருக்கிறது. இருந்தும் அது சுடர் விட்டு பிரகாசிக்க வேண்டும் என்றால் ஒரு தூண்டு கோல் வேண்டும்.

தூண்டி விட்டால் நின்று எரியும்.

அது போல, நாம் இருக்கிறோம், நமக்குள் ஞானம் இருக்கிறது. அதை வெளியே கொண்டு வர ஒரு குரு வேண்டும், ஆசிரியன், ஆசாரியன் வேண்டும்.

திரி தன்னைத் தானே தூண்டிக் கொள்ள முடியாது.

ஆசாரியன் இருந்தால் மட்டும் போதாது. அவன் சொல்படி பயிற்சியும் செய்ய வேண்டும்.

ஆசாரியன் என்பது ஒரு ஆளாக இருக்க வேண்டும் என்று இல்லை.

இந்த வடிவில் தான் இருக்க வேண்டும் என்று இல்லை.

ஞானத்தை தேடுபவனை தேடி ஆசாரியன் வருவான் என்பது நம்பிக்கை.

கோவில் கட்ட போன மாணிக்க வாசகரைத் தேடி சிவன் வந்தான். வந்த சிவனை ஆச்சாரியனாக அறியவில்லை மணிவாசகர். தவற விட்டு விட்டு வாழ் நாள் எல்லாம் புலம்பினார். அந்த புலம்பல் தான் திருவாசகம்.

கல்வி வேறு. அறிவு வேறு.

கல்வி எனபது வெளியில் இருந்து உள்ளே செல்வது.

அறிவு என்பது உள்ளிருந்து வெளியே வருவது.

அதனால் தான் கல்விக்கு ஒரு அதிகாரம், அறிவுடைமைக்கு ஒரு அதிகாரம் வைத்தார் வள்ளுவர்.

அந்த ஆதி ஞானத்தை வெளிக் கொணர பதஞ்சலியின் யோக சூத்திரம் வழி காட்டுகிறது.

குருவாய் வருவாய் அருள்வாய் குகனே !

http://yogasutrasimplified.blogspot.in/2017/07/126.html

No comments:

Post a Comment