Tuesday, February 27, 2018

யோக சூத்திரம் - 2.29 - யோகத்தின்எ ட்டு அங்கங்கள் - பாகம் 5

யோக சூத்திரம் - 2.29 - யோகத்தின்எ ட்டு அங்கங்கள் - பாகம் 5



यम नियमाअसन प्राणायाम प्रत्याहार धारणा ध्यान समाधयोऽष्टावङ्गानि ॥२९॥

yama niyama-āsana prāṇāyāma pratyāhāra dhāraṇā dhyāna samādhayo-'ṣṭāvaṅgāni ॥29॥


yama = இயமம்  = கட்டுப்பாடு, நெறி படுத்துதல்

niyama = நியமம் = கடைபிடித்தல்

āsana = ஆசனம் = உடல் இருக்கும் நிலை

prāṇāyāma = பிராணாயாமம்

pratyāhāra = புலன்களை உள் திருப்புதல்

dhāraṇā  = தாரணம் = மனதை ஒருமுகப் படுத்துதல்

dhyāna = தியானம்

samādhayo = சமாதி

'ṣṭāvaṅgāni = அசத்து + அங்காணி = எட்டு அங்கங்கள்

இயமம், நியமம், ஆசனம், பிராணாயாமம் வரை பார்த்தோம்.

அடுத்தது பிரத்தியாகாரம்.

ப்ரத்த்யாகாரம் என்றால் என்ன?

அகராதியில் உள்ள அர்த்தம் புலன்களை அடக்குதல், கட்டுப் படுத்துதல்.

நுணுக்கமான அர்த்தம் புலன்களை உள் நோக்கி திருப்புதல்.

அது என்ன உள் நோக்கி திருப்புதல்?

நாம் எப்போதும் புலன்கள் இழுக்கும் பக்கம் எல்லாம் ஓடுகிறோம். 

அங்கே ஒரு நல்ல படம் என்றால் அதை பார்க்க ஓடுகிறோம். 

நல்ல உணவு என்றால் ருசிக்க ஓடுகிறோம் 

கச்சேரி கேட்க ஓடுகிறோம். 

அந்த நாடு பார்க்க எவ்வளவு அழகாக இருக்கு. அங்க போகணும் னு ஜொள்ளு விடுகிறோம். 

அந்தக் கோவில், இந்த குளம், அந்த சாமியார், என்று அலைந்து கொண்டு இருக்கிறோம். 

இப்படி புலன்களை நம்மை இழுத்து இழுத்து , நாம் நம்மை விட்டு வெகு தூரம் வந்து விட்டோம். 

நம் வீடு எங்கே இருக்கிறது என்று நமக்குத் தெரியாது. 

நாம் யார் என்றே நமக்குத் தெரியாமல் போய் விடுகிறது. 

இவ்வளவு நாள் அலைந்தாயே என்ன கிடைத்தது என்று கேட்டால் ஒன்றும் இருக்காது. 

அங்காடியில் (market ) சில நாய்கள் இருக்கும். காலை எழுந்தது முதல் அங்கு ஓடும், இங்கு ஓடும், அங்கு சில நாய்களை பார்த்து குரைக்கும் , இங்கு சில நாய்களை பார்த்து வாலாட்டும். அங்கும் இங்கும் பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கும். நிற்க நேரம் இருக்காது. மாலை வந்தவுடன், "நாயே, நாள் முழுவதும் அலைந்தாயே, என்ன சாதித்தாய் " என்று கேட்டால் நம்மைப் பார்த்து இரண்டு குலை குலைத்து விட்டு மீண்டும் ஓடும். 

அங்காடி நாய் போல்  அலைந்தனையே நெஞ்சமே என்பார் பட்டினத்தார். 


மண்காட்டிப் பொன்காட்டி மாய் இருள் காட்டிச்
செங்காட்டில் ஆடுகின்ற தேசிகனைப் போற்றாமல்
கண்காட்டும் வேசியர் தம் கண்வலையில் சிக்கிமிக
அங்காடி நாய்போல் அலைந்தனையே நெஞ்சமே.

வெளியே அலையும் புலன்களை உள்நோக்கி திருப்புதல் பிரத்தியாகாரம். 

ஆசைகளுக்கான காரணம் என்ன, ஆசைகள் எவ்வாறு உதிக்கின்ற, அவை எவ்வாறு திருப்த்தி படுத்தப் படுகின்றன, இந்த இரண்டுக்கும் உள்ள இடை வெளியில் என்ன நிகழ்கிறது என்று சுயபரிசோதனை செய்வது  பிரத்தியாகாரம். 

பதஞ்சலி புலன்களை அடக்க வேண்டும் என்று சொல்லவில்லை. வெளியே சொல்லும் புலன்களை உள் நோக்கி திருப்பச் சொல்கிறார். 


அங்காடி நாய் ஒரு  வினாடி நின்று யோசித்து இருந்தால், ஓடுவதை நிறுத்தி  இருக்கும்.

 காரணம் தெரியாமல் ஓடுவதால் ஓடிக் கொண்டே இருக்கிறது.  

யோசிப்போம். 

ஏன் இந்த ஓட்டம். இந்த  ஓட்டத்தினால் நமக்கு கிடைத்த இலாபம் என்ன  

நாம் சரியான திசை நோக்கித் தான் ஓடுகிறோமா ? ஓட்டத்தின் முடிவில் என்ன இருக்கிறது என்று தெரியுமா ?

தெரியாவிட்டால் , பின் எதற்காக ஓட வேண்டும். அறியாத ஒன்றை எப்படி அடைவது ?

தெரியும் என்றால், பின் ஓட்டம் எதற்கு ?

சிந்திப்போம்




Sunday, February 25, 2018

யோக சூத்திரம் - 2.29 - யோகத்தின் எட்டு அங்கங்கள் - பாகம் 4

யோக சூத்திரம் - 2.29 - யோகத்தின்எ ட்டு அங்கங்கள் - பாகம் 4



यम नियमाअसन प्राणायाम प्रत्याहार धारणा ध्यान समाधयोऽष्टावङ्गानि ॥२९॥

yama niyama-āsana prāṇāyāma pratyāhāra dhāraṇā dhyāna samādhayo-'ṣṭāvaṅgāni ॥29॥


yama = இயமம்  = கட்டுப்பாடு, நெறி படுத்துதல்

niyama = நியமம் = கடைபிடித்தல்

āsana = ஆசனம் = உடல் இருக்கும் நிலை

prāṇāyāma = பிராணாயாமம்

pratyāhāra = புலன்களை உள் திருப்புதல்

dhāraṇā  = தாரணம் = மனதை ஒருமுகப் படுத்துதல்

dhyāna = தியானம்

samādhayo = சமாதி

'ṣṭāvaṅgāni = அசத்து + அங்காணி = எட்டு அங்கங்கள்

இயமம், நியமம், ஆசனம் தாண்டி அடுத்தது பிராணாயாமம். 

பிராணாயாமம் என்பது மூச்சு உள்வாங்கி விடுதலில் உள்ள ஒழுங்கு. 

நம் மன நிலைக்கு தகுந்தவாறு  மூச்சும் மாறுகிறது. 

கோபமாக இருக்கும் போது மூச்சு ஒரு விதமாக இருக்கும். 

சோகமாக இருக்கும் போது , மூச்சு வேறு விதமாக இருக்கும். 

மனதில் அன்பும், காதலும் வரும் போது மூச்சு மற்றொரு விதமாக இருக்கும். 

இதில் முக்கியமானது என்ன என்றால், மன நிலைக்கு தகுந்தவாறு மூச்சு விடுவது இருப்பது போல, மூச்சு விடுவது மாறும் போது மன நிலையம் மாறும். 

மூச்சை மாற்றினால் மனம் மாறும். 

மூச்சை மாற்ற வேண்டும் என்றால், உடல் நேராக வேண்டும். முதுகு தண்டு நிமிர வேண்டும். அதற்கு  ஆசனம் உதவும். ஆசனம் செய்ய வேண்டும் என்றால் வாழ்க்கையில் ஒரு ஒழுங்கு முறை வேண்டும். அதற்கு இயம நியமங்களை கடை பிடிக்க வேண்டும். 

கவனித்துப் பாருங்கள் , உங்கள் மூச்சு விடும் விதம் நாளில் பல தடவை மாறிக் கொண்டே இருக்கும். மூச்சு எப்படி மாறுகிறதோ அப்படி மன நிலை மாறும். 

இந்த பதற்றம், டென்ஷன் , எல்லாம் மூச்சோடு சம்பந்தப் பட்டது. 

மூச்சை கட்டுக்குள் கொண்டு வந்தால், மனம் வசப்படும். 

மனதை வசப்படுத்துவது ஒரு முடிவு அல்ல. அதற்கு மேலும் சில படிகள் இருக்கின்றன.

அவற்றையும் சிந்திப்போம். 



http://yogasutrasimplified.blogspot.com/2018/02/229-4.html





Saturday, February 24, 2018

யோக சூத்திரம் - 2.29 - யோகத்தின் எட்டு அங்கங்கள் - பாகம் 3

யோக சூத்திரம் - 2.29 - யோகத்தின்எ ட்டு அங்கங்கள் - பாகம் 3



यम नियमाअसन प्राणायाम प्रत्याहार धारणा ध्यान समाधयोऽष्टावङ्गानि ॥२९॥

yama niyama-āsana prāṇāyāma pratyāhāra dhāraṇā dhyāna samādhayo-'ṣṭāvaṅgāni ॥29॥


yama = இயமம்  = கட்டுப்பாடு, நெறி படுத்துதல்

niyama = நியமம் = கடைபிடித்தல்

āsana = ஆசனம் = உடல் இருக்கும் நிலை

prāṇāyāma = பிராணாயாமம்

pratyāhāra = புலன்களை உள் திருப்புதல்

dhāraṇā  = தாரணம்ம = மனதை ஒருமுகப் படுத்துதல்

dhyāna = தியானம்

samādhayo = சமாதி

'ṣṭāvaṅgāni = அசத்து + அங்காணி = எட்டு அங்கங்கள்

இதில் மூன்றாவதாக வரும் ஆசனம் பற்றி நேற்று சற்று சிந்தித்தோம். 


தற்போது எங்கு பார்த்தாலும் யோகா நிலையங்கள் இருக்கின்றன. ஏதேதோ பெயர் சொல்கிறார்கள். அந்த யோகா , இந்த யோகா என்று புது புது பெயரெல்லாம்  வருகிறது.


பத்தாதற்கு youtube , மற்றும் யோகாசன கலை என்று பல புத்தகங்கள் சந்தையில் கிடைக்கின்றன. இவற்றின் மூலம் யோகாசனம் கற்றுக் கொள்ள முடியுமா ?


முடியாது. 

 காரணம் என்ன ?

இயம நியமங்களை சரியாக கடை பிடிக்காமல்  மூன்றாவது அங்கமான யோகத்திற்குள் அடி எடுத்து வைக்க முடியாது. 

பணம் கட்டி சேர்ந்தவுடன் யோகா படித்துவிட முடியாது. 

அப்படியே படித்தாலும் அதனால் பலன் ஒன்றும் அதிகம் இருக்காது.   


உடம்பு வேண்டுமானால் கொஞ்சம் வளைந்து கொடுக்கும். சில பல தசைகள் வலுப் பெறலாம்.  ஆனால், அது உங்களை அடுத்த உயர்  நிலைக்கு கொண்டு செல்லாது. 

வெறும் ஆசனம் மட்டும் படித்தால் போதாது. வாழ்க்கை முறை மாற வேண்டும். ஆசனம் என்பது தனியாக செய்யும் ஒன்று அல்ல. 

இயம நியமங்களை கை கொண்ட பின் ஆசனம் செய்யப் பழக வேண்டும். 

கள்ளுண்ணாமை, பொய் பேசாமை, கோபம் கொள்ளாமை , நடுவு நிலைமை போன்றவற்றை கடை பிடிக்க வேண்டும். 

நாளும் பொய், புரட்டு, திருட்டு, இலஞ்சம், ஏமாற்று என்று செய்து கொண்டு, ஆசனம் படிக்கிறேன் என்று சொன்னால் அதனால் என்ன பலன் இருக்கும். 

உணவு கட்டுப்பாடு கிடையாது, புகை பிடிப்பது, காப்பி , டீ குடிப்பது, இரவு வெகு நேரம் விழித்து இருப்பது, பகலில் நீண்ட நீரம் தூங்குவது, இதற்கிடையில் யோகா பயிற்சி என்றால் சரியாகுமா ?

இயமம், நியமம், ஆசனம் இவை எல்லாம் ஒன்றோடு ஒன்று தொடர்பு கொண்டவை. யோகம் என்ற உடலின் அங்கங்கள். ஒன்றை விட்டு விட்டு ஒன்றை செய்ய முடியாது.

ஆசனம் பழகுவதற்கு முன், அன்றாட வாழ்க்கையை நெறி படுத்த வேண்டும்.

அவற்றை செய்யாமல் ஆசனம் பழகவும் முடியாது. பழகினாலும் பயன் தராது.

யோக நெறியில் போவதாக முடிவு செய்து விட்டால், வாழ்க்கை ஒரு கட்டுக்குள் வர வேண்டும். நல்லவற்றை செய்து பழக வேண்டும். அல்லனவற்றை விலக்க வேண்டும்.

அது வசமானபின் , ஆசனத்திற்கு போக வேண்டும்.


http://yogasutrasimplified.blogspot.in/2018/02/229-3.html










Thursday, February 22, 2018

யோக சூத்திரம் - 2.29 - யோகத்தின் எட்டு அங்கங்கள் - பாகம் 2

யோக சூத்திரம் - 2.29 - யோகத்தின்எ ட்டு அங்கங்கள் - பாகம் 2



यम नियमाअसन प्राणायाम प्रत्याहार धारणा ध्यान समाधयोऽष्टावङ्गानि ॥२९॥

yama niyama-āsana prāṇāyāma pratyāhāra dhāraṇā dhyāna samādhayo-'ṣṭāvaṅgāni ॥29॥


yama = இயமம்  = கட்டுப்பாடு, நெறி படுத்துதல்

niyama = நியமம் = கடைபிடித்தல்

āsana = ஆசனம் = உடல் இருக்கும் நிலை

prāṇāyāma = பிராணாயாமம்

pratyāhāra = புலன்களை உள் திருப்புதல்

dhāraṇā  = தாரணம்ம = மனதை ஒருமுகப் படுத்துதல்

dhyāna = தியானம்

samādhayo = சமாதி

'ṣṭāvaṅgāni = அசத்து + அங்காணி = எட்டு அங்கங்கள்

மூன்றாவது, "ஆசனம்". 

ஆசனம் என்றால் உடலை சரியான நிலையில் வைத்திருத்தல். 

அது என்ன சரியான நிலை?

இன்பப் பெருக்கோடு வாழ்வதற்கு மனதையும், உடலையும் தயார் செய்வது ஆசனம். 

சற்று ஆழமாக சிந்திப்போம். 

நம் மனதை நாம் கட்டுப் படுத்த முடியாது. ஒரு நிமிட நேரம் நாம் சொல்வதைக் கேட்காது. அது பாட்டுக்கு அலையும்.  ஒரு சிந்தனையில் இருந்து இன்னொரு சிந்தனைக்கு தாவும். பயம், ஆசை, கோபம், ஏக்கம், காமம் என்று மாறி மாறி சுழன்று கொண்டே இருக்கும். 

அந்த மனதை அமைதிப் படுத்தாவிட்டால், வாழ்வில் நிம்மதி இருக்காது. 

மனதை எப்படி அமைதி படுத்துவது? 

மனமும் உடலும் ஒன்றோடு ஒன்று பின்னி பிணைந்து இருக்கின்றன. 

உடலை அசைத்தால், மனம் அசையும். 

கார் ஓட்டும் போது , நம்மால் காரின் என்ஜினை நேரடியாக வேலை செய்ய வைக்க முடியாது. ரொம்ப கடினம். நாம் என்ன செய்கிறோம், accelarator ஐ அழுத்துகிறோம். வண்டி நகர்கிறது.  அது எப்படி  வேலை செகிறது என்று கூட நமக்குத் தெரியாது. 

Send என்ற button ஐ அழுத்தினால் e  மெயில் போய் சேர வேண்டிய இடத்துக்குப் போய் விடுகிறது. எப்படி என்று நமக்குத் தெரியாது. 

அது போல, மனதை சரி செய்ய வேண்டும் என்றால், உடலை சரி செய்ய வேண்டும். உடல் சரியானால், மனமும் சரியாகும். 

உதாரணமாக, நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கும் போது உங்கள் உடல் எப்படி இருக்கிறது என்று பாருங்கள். மார்பு விரிந்து, உடல் நேராக இருக்கும். 

சோகமாக இருக்கும் போது , தலை லேசாக கவிழ்ந்து, தோள் கீழே இறங்கி, கைகள் தளர்ந்து இருக்கும். 

ஒரு முறை முயற்சி செய்து பாருங்கள், சந்தோஷமாக இருக்கும் போது , தலையை தொங்கப் போட்டு, கைகளை தளர்த்தி, தோள்களை தொய்ய விட்டு ...எப்படி இருக்கிறது என்று பாருங்கள். சந்தோஷம் போய் விடும். 

அதே போல் சோகமாக இருக்கும் போது , நிமிர்ந்து நின்று, முதுகு தண்டை நேராக்கி, தலையை நிமிர்த்தி, மார்பை விரிவாக்கி நின்று பாருங்கள்...முடியாது. சோகம் போய் விடும். 

இன்பமாக இருக்கும் போது உடல் ஒரு மாதிரி இருக்கும். 

துன்பமாக இருக்கும் போது உடல் வேறு ஒரு நிலையில் இருக்கும். 


யோகத்தின் மிகப் பெரிய கண்டு பிடிப்பு எது என்றால், உடலின் நிலையை மாற்றினால், மனதின்  நிலையை மாற்ற முடியும் என்பதுதான். 

இன்பத்தில் உடல் ஒரு நிலையில் இருக்கும் என்றால், உடலை அந்த நிலையில் வைத்தால் இன்பம் , சந்தோஷம் தானாகவே வந்து விடும். 

எப்போதும் இன்பமாக இருக்க வேண்டுமா ? உடலை எப்போதும் ஒரு குறிப்பிட்ட நிலையில் வைத்தால் போதும்.

யோகத்தின் குறிக்கோள் நாம் அளவற்ற இன்பத்தில் எப்போதும் இருப்பது தான்.

அதற்கு உடலும், மனமும் ஒன்று பட வேண்டும். உடலை ஒழுங்கு படுத்தினால் மனம்  வசப்படும்.

சரி. இந்த ஆசனங்கள் செய்ய என்ன செய்ய வேண்டும்.

எங்க வீட்டுக்கு பக்கத்தில் ஒரு யோகா நிலையம் இருக்கிறது. அங்கு போய் இந்த ஆசனங்களை கற்றுக் கொள்ளலாமா ?

Power Yoga , 1000 யோகா, என்றெல்லாம் பல யோகா நிலையங்கள் இருக்கின்றன. நிறைய ஆசனம் எல்லாம் சொல்லித் தருகிறார்களாம். போய் கற்றுக் கொள்ளலாமா ?

அல்லது, 30 நாட்களில் யோகா, lightning யோகா போன்ற புத்தகங்களை படித்து அறிந்து கொள்ளலாமா ?

அல்லது, youtube போன்றவற்றில் பார்த்து பயிற்சி செய்யலாமா ?

சிந்திப்போம்.

http://yogasutrasimplified.blogspot.in/2018/02/229-2.html






Wednesday, February 21, 2018

யோக சூத்திரம் - 2.29 - யோகத்தின் எட்டு அங்கங்கள் - பாகம் 1

யோக சூத்திரம் - 2.29 - யோகத்தின் எட்டு அங்கங்கள் - பாகம் 1



यम नियमाअसन प्राणायाम प्रत्याहार धारणा ध्यान समाधयोऽष्टावङ्गानि ॥२९॥

yama niyama-āsana prāṇāyāma pratyāhāra dhāraṇā dhyāna samādhayo-'ṣṭāvaṅgāni ॥29॥


yama = இயமம்  = கட்டுப்பாடு, நெறி படுத்துதல்

niyama = நியமம் = கடைபிடித்தல்

āsana = ஆசனம் = உடல் இருக்கும் நிலை

prāṇāyāma = பிராணாயாமம்

pratyāhāra = புலன்களை உள் திருப்புதல்

dhāraṇā  = தாரணம்ம = மனதை ஒருமுகப் படுத்துதல்

dhyāna = தியானம்

samādhayo = சமாதி

'ṣṭāvaṅgāni = அசத்து + அங்காணி = எட்டு அங்கங்கள்

இந்த எட்டில் முதல் சொன்ன இரண்டை எடுத்துக் கொள்வோம். 

இயமம், நியமம். 


இயமம் என்பது கொஞ்சம் ஆழமான வார்த்தை. 

இயமம் என்றால் கட்டுப்பாடு, ஒழுங்கு படுத்துதல் என்று பொருள். 

என்னடா இது, எவரும் இப்படி ஆரம்பித்து விட்டாரா...புலன் அடக்கம், கட்டுப்பாடு என்று...சரியான சாமியார் மடம் போல் இருக்கிறதே என்று அலுத்துக் கொள்ளத் தோன்றுகிறதா ?

இல்லை இல்லை, பதஞ்சலி அப்படி எல்லாம் சொல்ல வில்லை. 

நாம் எடுத்த எந்த காரியத்திலும் வெற்றி பெற வேண்டும் என்றால் , நமது சக்தியை, முயற்சியை அந்த காரியத்தில் மட்டும் செலுத்த வேண்டும். நமது சிக்கல் என்ன என்றால், நாம் நமது சக்தியை ஒரு கட்டு பாடு இல்லாமல் சிதற விடுகிறோம். 

ஒன்றை செய்யும் போதே இன்னொன்றின் மேல் ஆசை. செய்வதில் நம்பிக்கை கிடையாது. 

எப்போதும் சந்தேகம். 

அது மட்டும் அல்ல, சந்தேகம் வந்தவுடன் உத்வேகம் குறையும். கொஞ்ச நாளில் முயற்சியை கை விட்டு விடுதல் என்பது நிகழும். 

வருட பிறப்பில் எத்தனை பேர், "இந்த வருஷம் எப்படியாவது 10 கிலோ எடையை குறைக்க வேண்டும்  என்று உடற் பயிற்சி நிலையத்தில் சென்று பேர் கொடுப்பார்கள்....ஒரு வாரம் இருக்காது...அப்படியே விட்டு விடுவார்கள்"

டிவி பார்ப்பது, whatsapp இல் நேரம் செலவிடுவதை குறைப்பது என்று நிறைய குறிக்கோள் இருக்கும். ஆனால், செய்வது கிடையாது. டிங் என்று செல் போனில் ஒரு சத்தம் கேட்டால், ஓடிப் போய் எடுப்பார்கள். 

இயமம் என்றால் செய்யாமல் இருப்பது. தவறானவற்றை செய்யாமல் இருப்பது. 

நியமம் என்றால், சரியானவற்றை செய்வது. 

அல்லது ஒழித்தலும், நல்லது செய்தலும் என்று சொல்லுவார்கள். 

இதைத்தான் கட்டுப்பாடு என்கிறார்கள். 

அற நூல்களில் சொல்லியவற்றை செய்ய வேண்டும். அவை கூடாது என்று சொல்பவற்றை விலக்க வேண்டும். 

நமக்கு வாய்த்த பெரிய நன்மை என்ன என்றால், கணக்கில் அடங்காத அற நூல்களை நம் முன்னவர்கள் விட்டுச் சென்றிருக்கிறார்கள். கொட்டிக் கிடக்கிறது. 

நமக்கு நேர்ந்த பெரிய தீமை என்ன என்றால், அவற்றை படிப்பது இல்லை, படித்தாலும், "இதெல்லாம் சரிப்படாது " என்று அவற்றை ஓரம் கட்டி வைத்து விடுவது.

எது செய்ய வேண்டும் , எது செய்யக் கூடாது என்று முடிவு செய்து கொள்ளுங்கள்.

அதன் படி விடாமல் நடவுங்கள்.

இன்று ஒரு நாள் தானே, நாளும் கிழமையுமா ஒரே ஒரு லட்டு தானே, ஒரே ஒரு கிளாஸ் தானே, ஒரே ஒரு சிகரெட் தானே என்று தொடங்கக் கூடாது.

இவை இயம நியமங்கள். இதை விரித்து சொல்லிக் கொண்டு போனால் சொல்லிக் கொண்டேபோகலாம். நீங்களே சிந்தித்துப்  பாருங்கள்.

அடுத்தது ஆசனம்.

நாளை சிந்திப்போம்.

http://yogasutrasimplified.blogspot.in/2018/02/229-1.html









Monday, February 19, 2018

யோக சூத்திரம் - 2.29 - யோகத்தின் எட்டு அங்கங்கள் - பாகம் 0

யோக சூத்திரம் - 2.29 - யோகத்தின்எ ட்டு அங்கங்கள் - பாகம் 0



यम नियमाअसन प्राणायाम प्रत्याहार धारणा ध्यान समाधयोऽष्टावङ्गानि ॥२९॥

yama niyama-āsana prāṇāyāma pratyāhāra dhāraṇā dhyāna samādhayo-'ṣṭāvaṅgāni ॥29॥


yama = இயமம்  = கட்டுப்பாடு, நெறி படுத்துதல்

niyama = நியமம் = கடைபிடித்தல்

āsana = ஆசனம் = உடல் இருக்கும் நிலை

prāṇāyāma = பிராணாயாமம்

pratyāhāra = புலன்களை உள் திருப்புதல்

dhāraṇā  = தாரணம்ம = மனதை ஒருமுகப் படுத்துதல்

dhyāna = தியானம்

samādhayo = சமாதி

'ṣṭāvaṅgāni = அசத்து + அங்காணி = எட்டு அங்கங்கள்

அவ்வளவு தான். இந்த எட்டும் யோகத்தின் எட்டு அங்கங்கள். இவற்றை தொடர்ந்து பயிற்சி செய்தால் முன்பு கூறிய பலன்கள் கிடைக்கும்.

இந்த எட்டு அங்களைத்தான் அட்டா + அங்கம் , அட்டாங்க யோகம் என்று கூறுகிறார்கள்.

இயமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், மற்றும் சமாதி என்ற எட்டு அங்கங்கள்.

ஒவ்வொன்றாக பார்ப்போமா ?

http://yogasutrasimplified.blogspot.in/2018/02/229-0.html


யோக சூத்திரம் - 2.28 - பயிற்சி

யோக சூத்திரம் - 2.28 - பயிற்சி 



योगाङ्गानुष्ठानादशुद्धिक्षये ज्ञानदीप्तिराविवेकख्यातेः ॥२८॥

yoga-aṅga-anuṣṭhānād-aśuddhi-kṣaye jñāna-dīptir-āviveka-khyāteḥ ॥28॥

yoga = யோக

aṅga = அங்கங்கள்

anuṣṭhānād = பயிற்சி

aśuddhi = அசுத்தம்

kṣaye = மறைதல், அழிதல்

jñāna = ஞானம்

dīptir = வெளிச்சம்

āviveka = அவிவேகம்

khyāteḥ = தொடர்ச்சியாக, விடாமல்

இந்த யோக அங்கங்களை பயிற்சி செய்வதன்ப மூலம், மன மாசுகள் நீங்கி, அறிவும், இடைவிடாத மெய்யறிவும் கிடைக்கும். 

யோகத்தின் ஏழு படிகளை பற்றி நேற்று சிறிது சிந்தித்தோம்.

பதஞ்சலி , நம்மை அடுத்த நிலைக்கு கொண்டு செல்கிறார்.

ஏழு படி என்றால் , ஒவ்வொரு படிக்கும் எத்தனை நாள் ஆகுமோ என்ற பயம் வரலாம்.

பதஞ்சலி சொல்கிறார். அவை படிகள் மட்டும் அல்ல, அவை அங்கங்கள் கூட.

அங்கம் என்றால் எல்லாம் ஒன்று சேர்ந்தது. கை , கால், மூக்கு போன்று ஒன்றோடு ஒன்று தொடர்பு உடையவை. அவை தனித் தனியாக இருப்பவை அல்ல.

என்ன அர்த்தம்?

ஒன்றை செய்யும் போது, இன்னொன்றும் செய்யப்படும்.

காலும், கையும் இணைத்து இருப்பதைப் போல இந்த யோக அங்கங்கள் இணைந்தவை.

அடுத்தது, "பயிற்சி".

அந்த யோக அங்கங்களை இடை விடாது பயிற்சி செய்ய வேண்டும். ஏதோ ஓரிரண்டு நாள் முயன்றேன். ஒண்ணும் நடக்கவில்லை என்று நிறுத்தி விடக் கூடாது.  தொடர்ந்து பயிற்சி செய்வதன் மூலம், அவை நமது வாழ்வின் ரூ பாகமா க மாறிவிடும். நமது இயல்பே அதுவாக மாறி விடும்.

மூன்றாவது, பயிற்சி செய்தால் என்ன கிடைக்கும்? எதற்காக மெனக்கிட வேண்டும்?

கீழே கண்ட பலன்கள் கிடைக்கும் என்கிறார்:


1. மன மாசுகள் நீங்கும் - மாசு என்றால் இங்கே குற்றம் என்று அல்ல அர்த்தம். தவறான  எண்ணங்கள், தவறான நம்பிக்கைகள், மூட நம்பிக்கைகள். உதாரணமாக, நான் என்பது இந்த உடம்பு என்று நினைப்பது ஒரு மன அழுக்கு. இளமை எப்போதும் இருக்கும் என்று நம்புவது ஒரு மன அழுக்கு. இந்த பயிற்சியின் மூலம்  இந்த அழுக்குகள் நீங்கும்.

2. ஞானம் , அறிவு பெருகும்

3. வெளிச்சம் உண்டாகும், அதாவது தெளிவு பிறக்கும். குழப்பங்கள் தெளியும்.

4. அவிவேகம் மறையும் - தவறான ஞானம் மறையும். தவறான புத்தகங்களை படித்து, தவறானவர்கள் கூறிய வார்த்தைகளை கேட்டு வளர்த்துக் கொண்ட ஞானம், விவேகம், அவிவேகம் எனப்படும். அந்த அவிவேகம் நீங்கும். நாம் ஞானம் சேர்க்கிறோம் என்று நிறைய குப்பைகளை சேர்த்துக் கொண்டிருக்கிறோம். அவைகள் நீங்க வேண்டும்.

இந்த பயிற்சியை எவ்வாறு செய்ய வேண்டும்?

விடாமல், தொடர்ந்து செய்ய வேண்டும். ஏதோ ஆரம்பித்தோம், ஒரு சில நாள் செய்தோம் என்று இருக்கக் கூடாது.

சரி, எதை செய்ய வேண்டும் என்கிறார் ?

அதுதான் இந்த யோக சூத்திரத்தின் மூல மந்திரம்.

நாளை முதல் அதை பற்றி சிந்திக்க இருக்கிறோம்.

http://yogasutrasimplified.blogspot.in/2018/02/228.html





Saturday, February 17, 2018

யோக சூத்திரம் - 2.27 - ஏழு படிகள்

யோக சூத்திரம் - 2.27  - ஏழு படிகள்



तस्य सप्तधा प्रान्तभूमिः प्रज्ञ ॥२७॥

tasya saptadhā prānta-bhūmiḥ prajña ॥27॥

tasya = இந்த

saptadhā = ஏழு படிக்கள் , ஏழு படிமங்கள்

prānta = பாதைகள்

bhūmiḥ = நிலைகள்

prajña = அறிவதற்கு

இதை அறிவதற்கு ஏழு வழிகள்/படிகள் உள்ளன.

எதை அறிய?

எது உண்மையோ அதை அறிய? அவித்தை மறைய. நான் என்பது இந்த உடம்பு அல்ல என்று அறிய. பார்ப்பவனும், பார்க்கப்படுவதும் ஒன்றென்று அறிய. மெய்யறிவு பெற (enlightenment).

அதற்கு ஏழு படிகள் அல்லது நிலைகள் அல்லது படிமங்கள் உள்ளன என்று கூறுகிறார்.

நமக்கு எல்லாமே உடனடியாக வேண்டும்.

ஆண்டாண்டு காலம் கண்டதையும் உண்டு, உடற் பயிற்சி எதுவும் செய்யாமல் உடம்பு நன்றாக சதை போட்டு இருக்கும். ஒரு நாள், முடிவு செய்வோம். நாளையில் இருந்து உணவு கட்டு பாடு, மற்றும் உடற் பயிற்சி செய்வது என்று.

ஆரம்பித்த இரண்டு மூணு நாளில், "என்ன இது ஒரு மாற்றமும் இல்லையே. எவ்வளவு வாய கட்டி, வயித்த கட்டி, உடற் பயிற்சி செய்கிறேன்...ஒரு முன்னேற்றமும் இல்லையே " என்று சலித்துக் கொள்வோம்.

எல்லாம் உடனேயே வேண்டும்.

எதிலும் பொறுமை இல்லை.

பதஞ்சலி சொல்கிறார். ஏழு படிகள் இருக்கின்றன.

முதல் படியில் ஏறாமல் மூன்றாம் படிக்கு போக முடியாது. ஒவ்வொன்றாகத்தான் ஏற முடியும். அதற்கு பொறுமை அவசியம்.

படி என்றால் இங்கே மாடிப் படி இல்லை.

ஒவ்வொரு படியும் ஒரு நிலை. சில பயிற்சிகள். சில ஒழுக்க முறைகள் (discipline ).

ஒரு நிலையில் தேர்ச்சி  பெற்ற  பின் அடுத்த நிலைக்கு செல்ல வேண்டும்.

சிலருக்கு சில படிகள் கடினமாக இருக்கும். சிலருக்கு எளிமையாக இருக்கும்.

எனவே, இந்த ஏழு படிகளை கடக்க எவ்வளவு நாள் ஆகும் என்று தெரியாது.

அது ஒவ்வொரு தனி மனிதனையும் பொறுத்தது.

அவன் எவ்வளவு தூரம் முனைப்புடன் இருக்கிறான். எவ்வளவு ஆர்வமாக இருக்கிறான். எவ்வளவு விடா முயற்சியுடன் இருக்கிறான் என்பதையெல்லாம் பொறுத்தது.

அது என்ன ஏழு படிகள்.

அடுத்த சூத்திரத்தில் சொல்கிறார்.

மிக மிக முக்கியமான சூத்திரம். பதஞ்சலியின் முழு யோக சாஸ்திரமும் அந்த ஒரு சூத்திரத்தில் அடங்கி இருக்கிறது.

அது என்ன என்று நாளை பார்ப்போம்.


http://yogasutrasimplified.blogspot.in/2018/02/227.html




Friday, February 16, 2018

யோக சூத்திரம் - 2.26 - தொடர் புரிதலும் நுண்ணறிவும்

யோக சூத்திரம் - 2.26 - தொடர் புரிதலும் நுண்ணறிவும் 


विवेकख्यातिरविप्लवा हानोपायः ॥२६॥

viveka-khyātir-aviplavā hānopāyaḥ ॥26॥

viveka = விவேகம், அறிவு

khyātir = நுண்ணறிவு, புரிந்து கொள்ளுதல்

aviplavā = தொடர்ந்து, இடை விடாமல்

hānopāyaḥ = குறிக்கோளை அடைய வழி

இடைவிடாத புரிதலும், நுண்ணறிவும் குறிக்கோளை அடைய வழி.

குறிக்கோள் என்ன?

பார்ப்பவனும் , பார்க்கப் படுவதும் ஒன்றென்று அறியும் நிலை. அது குறிக்கோள். அதை அடைய என்ன வழி?

இடை விடாத புரிதலும், நுண்ணறிவும்

அது என்ன இடைவிடாத புரிதல்? இதற்கு பல அர்த்தங்கள் உண்டு. ஒவ்வொன்றாக சிந்திப்போம்.

முதலாவது, நமக்கு பல நல்ல விஷயங்கள் தெரியும். இருந்தும் நாம் அவற்றை கடை  பிடிப்பது இல்லை. ஏன் ? உதாரணமாக, இனிமேல் ஐஸ் கிரீம், எண்ணெய் பலகாரங்கள் சாப்பிடுவது இல்லை என்று முடிவு செய்திருப்போம். ஆனால்,  நல்ல ஐஸ் கிரீமை பார்த்தவுடன், கொண்ட உறுதி எல்லாம் மறந்து போய் விடும். சாப்பிட்டு விடுவோம். பின்னால், வருந்துவோம்.

புரிதல் இருந்தது. அந்த நேரத்தில் அது எங்கோ போய் விட்டது.

ஆசை அதிகமாகும் போது , அறிவு மங்கி விடுகிறது.

உலகில் தவறு செய்பவர்கள் எல்லோருக்கும் தெரிந்துதான் இருந்திருக்கும் தாங்கள் செய்வது தவறு என்று. இருந்தும் அந்த நேரத்தில் அது மறந்து போய் விடுகிறது.

விழிப்புணர்வு என்பது விட்டு விட்டு வருகிறது. தொடர்ந்து இருப்பதில்லை.

அடுத்ததாக, சில சமயம் விழிப்புணர்வு என்று நாம் நினைத்துக் கொண்டிருப்பது  விழிப்புணர்வாக இருக்காது. நுண்ணறிவு வேலை செய்யாது.

எப்படி ?

சில சமயம் ஏதாவது ஒரு வேலையில் நாம் தீவிரமாக மூழ்கி இருந்தால், நேரம் போவதே தெரியாது. இப்ப தான் அலுவலகத்துக்குள் வந்த மாதிரி இருக்கு, அதுக்குள்ள மணி மூணு ஆயிருச்சா ? என்று ஆச்சரியப்படுவோம். பசித்திருக்காது.

எங்கே போயிற்று பசி ?

மற்ற நேரங்களில், ஒரு மணி ஆனவுடன், எல்லோருமே சாப்பிட கிளம்பியவுடன் நமக்கும் பசி வந்து விடும். அது பசி அல்ல. மனத் தோற்றம். எல்லோரும் போகிறார்கள். மணி ஒன்றாகி விட்டது. சாப்பாட்டு நேரம். எனவே, சாப்பிடணும் என்ற ஆவல். பசி போல தோன்றும். ஆழ்ந்து சிந்தித்தால் அது பசி அல்ல என்று தோன்றும். .

மருந்து பற்றி சொல்ல வந்த வள்ளுவர் சொல்கிறார்,

மூன்று வேளை ஒழுங்காக சாப்பிட்டால் நோய் வராது என்று சொல்லவில்லை.

அற்றால் அளவு அறிந்து உண்டால் பெற்றான் நெடிதுயிர்க்கும் ஆறு என்கிறார்.

அதாவது, முன் உண்ட உணவு நன்கு ஜீரணமாகி விட்டதா என்று அறிந்து பின் அளவோடு உண்டால், நீண்ட நாள் உயிரோடு இருக்கலாம் என்கிறார்.

நாம் செய்யும் வேலை, தட்ப வெப்பம், உடல் நிலை இவற்றின் காரணமாக சில சமயம் சீக்கிரம்சீரணமாகி விடும், சில சமயம் நேரமாகும். அது தெரிந்து உண்ண வேண்டும். மூணு வேளையும் , கடிகாரத்தை பார்த்து உணவு உண்ணக் கூடாது.

அது போல, நாம் செய்யும் பல காரியங்களுக்கு காரணம் இல்லாமல் இருக்கும். எல்லோரும் செய்கிறார்கள், நாமும் செய்வோம்.

உழவன், அவன் வயலில் இருந்து அறுவடை வந்தால் , அந்த மகிழ்ச்சியை பொங்கல் இட்டு கொண்டாடுகிறான். அலுவலகத்துக் போகும் ஆட்களும் கொண்டாடுகிறார்கள். ஏன் ? தெரியாது. எல்லோரும் கொண்டாடுகிறார்கள், நாமும் கொண்டாடுவோம்.

இப்படி, நாளில் நாம் செய்யும் பல காரியங்களை , ஒரு நிமிடம் யோசித்துப் பார்த்தால் தெரியும், நாம் எவ்வாறு ஒரு விழிப்புணர்வு இல்லாமல் காரியங்களை செய்து கொண்டிருக்கிறோம் என்று.

ஒரு இயந்திர கதியில்  காரியம் செய்கிறோம்.

என் அப்பா செய்தார், அவர் அப்பா செய்தார், நானும் செய்கிறேன்.

எதிலும் தெளிவு இல்லாமல்,  எதற்கும் காரணம் இல்லாமல் , எதன் மேலோ ஏதோ பெய்த மாதிரி  காரியங்கள் நிகழ்கின்றன.

என் கணவன் என்னை நேசிக்கிறான். என் மனைவி என்னை நேசிக்கிறாள். என் பிள்ளைகள்  என்னை பின்னாளில் பார்த்துக் கொள்ளும். அரசாங்கம் மக்களுக்கு நல்லது  செய்யும். டிவி மற்றும் செய்தி தாள்களில் வரும் செய்திகள் உண்மை....என்று நாம் நினைக்கிறோம். நம்புகிறோம்.

இது பற்றி எல்லாம் எப்போதாவது யோசித்து இருக்கிறோமா ?


நுண்ணறிவு. விழிப்புணர்வு வேண்டும்.


டிவி யில் ஒரு விளம்பரம் பார்த்தால், அது நமக்குள் என்ன விளைவை ஏற்படுத்துகிறது என்று நமக்குத் தெரியுமா ?

செய்தித் தாளில் ஒரு செய்தியை படித்தால் அது நமக்குள் என்ன பாதிப்பை உண்டு பண்ணும் என்று தெரியுமா ?

நம்மை அறியாமலேயே இவை நம்மை கொஞ்சம் கொஞ்சமாக மாற்றிக் கொண்டே வருகின்றன. நாம் அறிவது இல்லை.

அவை செலுத்தும் திசையில் மந்தைகள் மாதிரி போய் கொண்டிருக்கிறோம்.


அவற்றை நிறுத்த வேண்டும். நமக்கு என்ன என்ன நிகழ்கிறது என்ற உள்ளுணர்வு வேண்டும். நம்மை சுற்றி நிகழ்பவைகளைப் பற்றி ஒரு விழிப்புணர்வு வேண்டும்.

இவை இரண்டும் தொடர்ந்து இருக்க வேண்டும்.

நமது கோபம் எங்கிருந்து வருகிறது. ஆசை எங்கிருந்து வருகிறது, காமம் எங்கிருந்து வருகிறது என்று அறிய வேண்டும்.

எது நம்மை தூண்டி விடுகிறது என்று அறிய வேண்டும்.

அந்த அறிவே குறிக்கோளை அடையும் இரண்டாம் படி.

அவித்தை போது முதலாவது படி.

தொடர்ந்த விழிப்புணர்வும், நுண்ணறிவும் இரண்டாம் படி.


விழியுங்கள். உங்களுக்குள் நிகழும் மாற்றங்களை எந்நேரமும் கவனியுங்கள்.

உலகம் வசப்படும்.

http://yogasutrasimplified.blogspot.in/2018/02/226.html




Friday, February 9, 2018

யோக சூத்திரம் - 2.25 - கைவல்யம்

யோக சூத்திரம் - 2.25 - கைவல்யம்

तदभाबात्संयोगाभावो हानं तद्दृशेः कैवल्यम् ॥२५॥

tad-abhābāt-saṁyoga-abhāvo hānaṁ taddr̥śeḥ kaivalyam ॥25॥

tad = அது , அதன்

abhābāt = மறைந்தால்

saṁyoga = சேர்தல், கூடுதல்

abhāvo = இல்லாமல் இருத்தல் , மறைதல்

hānaṁ = விட்டு விடுதல்

tad = அது

dr̥śeḥ = பார்ப்பவரின்

kaivalyam = விடுதலை, முக்தி,

அது மறையும் போது அதோடு சேர்ந்து தொடர்புகளும் மறைகிறது. அந்தத் தொடர்புகள் மறையும் போது விடுதலை கிடைக்கிறது. 


அது மறையும் போது என்றால் , எது மறையும் போது ?

அவித்தை, அறிவீனம், மறையும் போது.

மற்றவையும் மறையும்.

எது மற்றவை ?

இந்த உலகம், அதில் உள்ள பொருள்கள், அதில் உள்ள மனிதர்கள் அவர்களிடம் உள்ள  பற்று எல்லாம் மறையும். பற்று அல்லது பாசம் என்று நாம் கொண்டிருப்பதற்கு காரணம், நம் அறியாமை.

செல்வத்தின் மேல் பற்று.

இளமையின் மேல் பற்று.

உறவுகளின் மேல் பற்று.

இந்த உடலின் மேல் பற்று.

இந்த அனைத்து பற்றுக்களுக்கும் காரணம் அவித்தை  தான்.

சரி, இந்த அறியாமையை போக்க என்ன செய்ய வேண்டும் ?


அறியாமையை போக்க அறிவை பெற வேண்டும் என்று சொல்ல வில்லை பதஞ்சலி.

அறிவைப் பெறுகிறேன் பேர்வழி என்று சிலர் கண்ணில் கண்டதையெல்லாம் படித்துக்  கொண்டிருப்பார்கள். அந்த சாமியார் அப்படி சொன்னார். இந்த சாமியார்  இப்படி சொன்னார் என்று ஓடி ஓடி கேட்பார்கள்.

பாத்தா  குறைக்கு mp3, CD , Youtube என்று கேட்பார்கள்.

எவ்வளவு படித்து விட முடியும் ? எவ்வளவு கேட்டு விட முடியும்.

சொல்லப் போனால், படிக்க படிக்க குழப்பம் தான் மேலும்  அதிகரிக்கும். குறையாது.

பதஞ்சலி சொல்கிறார் - அறியாமை விலக வேண்டும் என்று. வேண்டும் என்றால்  "அறிவு பெருக வேண்டும் " என்று சொல்லி இருப்பார் அல்லவா ? அப்படி சொல்லவில்லை.  அறியாமை விலக வேண்டும்.

அறிவு , ஆணவத்தை கொண்டு வரும்.

அறிவு, குழப்பத்தைத் தரும்.

"கற்றாரை யான் வேண்டேன், கற்பனவும் இனி அமையும் " என்பார் மணி வாசகர்.

அறியாமையை போக்குகிறேன் என்று அறிவை சேர்க்கத் தொடங்கினால் , அறியாமை  மேலும் கூடுமே தவிர குறையாது.

எனவே, அவித்தை நீங்க வேண்டும். நீங்கினால் பற்று நீங்கும். பற்று நீங்கினால்  விடுதலை கிடைக்கும். (liberation ).


அது எப்படி என்று மேலும் சிந்திப்போம்.

http://yogasutrasimplified.blogspot.in/2018/02/225.html