Monday, May 7, 2018

யோக சூத்திரம் - 2.48 - இருமைகள் மறையும்

யோக சூத்திரம் - 2.48 - இருமைகள் மறையும் 


ततो द्वङ्द्वानभिघातः ॥४८॥

tato dvaṅdva-an-abhighātaḥ ॥48॥


tato = அப்போது

dvaṅdva = இருமைகள்

an = இல்லை

abhighātaḥ  = தோற்கும்

இருமைகள் மறையும் என்றால், அது ஏன் மறைய வேண்டும் என்ற முதல் கேள்வி வரும் அல்லவா ?

இன்பம் வேண்டும், துன்பம் வேண்டாம்.

செல்வம் வேண்டும், வறுமை வேண்டாம்.

மகிழ்ச்சி வேண்டும், துக்கம் வேண்டாம். 

உயர்ந்தது வேண்டும், தாழ்ந்தது வேண்டாம் 

என்று தானே எல்லோரும் நினைக்கிறார்கள். பின் எதற்கு இருமை வேண்டாம் என்று சொல்ல வேண்டும். இருமை வேண்டும் என்று அல்லவா தோன்றுகிறது. 

நாளில், பகல் எப்போது முடிகிறது, இரவு எப்போது ஆரம்பிக்கிறது ?

வறுமை எங்கு முடிகிறது ? செல்வம் எங்கு ஆரம்பிக்கிறது? எவ்வளவு இருந்தால் செல்வந்தன் என்று சொல்லலாம் ?

துன்பம் எங்கு முடிகிறது ? இன்பம் எங்கு ஆரம்பிக்கிறது ?

முதலில் இந்த இருமைகளே கிடையாது. வாழ்க்கையில் எல்லாமே ஒரு தொடர்ச்சியான ஒன்று தான்.  இங்கு இது முடிகிறது, இங்கு இது தொடங்குகிறது என்று ஒன்றுமே இல்லை. எல்லாம் ஒரே தொடர்தான். 

நாம் தான் பிரித்து வைத்துக் கொண்டு அல்லாடுகிறோம். 

இவன் நல்லவன், இவன் கெட்டவன், 
இவன் உயர்ந்தவன், இவன் தாழ்ந்தவன் 

என்று பிரித்து வைத்துக் கொண்டு, இது வேண்டும், அது வேண்டாம் என்று சங்கடப் படுகிறோம். 

வாழ்க்கை பிரிக்க முடியாத ஒன்று. நாம் பிரித்து வைத்துக் கொண்டு வருத்தப் படுகிறோம். 

ஆண் பெண் பாகுபாடு கூட இல்லை என்று அர்த்த நாரி என்று வைத்தார்கள். 

நல்லார்க்கும் பொல்லார்க்கும் நடு நின்ற நடுவே என்பார் வள்ளலார். 

கல்லார்க்கும் கற்றவர்க்கும் களிப்பருளும் களிப்பே 
          காணார்க்கும் கண்டவர்க்கும் கண்ணளிக்கும் கண்ணே 
     வல்லார்க்கும் மாட்டார்க்கும் வரம்அளிக்கும் வரமே 
          மதியார்க்கும் மதிப்பவர்க்கும் மதிகொடுக்கும் மதியே 
     நல்லார்க்கும் பொல்லார்க்கும் நடுநின்ற நடுவே 
          நரர்களுக்கும் சுரர்களுக்கும் நலங்கொடுக்கும் நலமே 
     எல்லார்க்கும் பொதுவில்நடம் இடுகின்ற சிவமே 
          என்அரசே யான்புகலும் இசையும்அணிந் தருளே. 

நரர்களுக்கும், சுரர்களுக்கும் நலம் கொடுக்கும் நலமே. 

எல்லாமே தேவை என்று தான் இயற்கை படைக்கிறது. நாம் தான் இது வேண்டும், அது வேண்டாம் என்று பிரித்து வைத்துக் கொண்டு துன்பப் படுகிறோம். 

உடல் relaxed ஆக இருக்கும் போது ...என்று சொல்லும் போது...உடல் எப்போது relaxed  ஆக இருக்கும் ?

மனதில் ஆசை பெருக்கெடுத்தது ஓடாத போது , காமம், கோபம் , பொறாமை, போட்டி கொந்தளிக்காத போது மனம் சாந்தப் படும். 

சூரியன் எந்தப் பக்கம் உதித்தால் எங்களுக்கு என்ன என்று ஆனந்தமாக இருப்போம் என்கிறார் மணிவாசகர். 

"எங்கெழிலென் ஞாயி றெமக்கேலோர் எம்பாவாய்."

ஞாயிறு எங்கு எழுந்தால் என்ன ? கிழக்கில் எழுந்தால் என்ன ? மேற்கில் உதித்தால் என்ன...அதைப் பற்றி எல்லாம் ஒரு கவலையும் இல்லை என்கிறார் மணிவாசகர். 


உங்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலமென்
றங்கப் பழஞ்சொற் புதுக்குமெம் அச்சத்தால்
எங்கள் பெருமான் உனக்கொன் றுரைப்போங்கேள்
எங்கொங்கை நின்னன்பர் அல்லார்தோள் சேரற்க
எங்கை உனக்கல்லா தெப்பணியுஞ் செய்யற்க
கங்குல் பகல்எங்கண் மற்றொன்றுங் காணற்க
இங்கிப் பரிசே எமக்கெங்கோன் நல்குதியேல்
எங்கெழிலென் ஞாயி றெமக்கேலோர் எம்பாவாய்.

விடுங்கள். எல்லாவற்றையும் பிடித்துக் கொண்டு இருக்காதீர்கள். அனைத்தையும் உங்கள் பிடியில் இருக்க வேண்டும் என்று நினைக்காதீர்கள். நீங்கள் பிறப்பதற்கு பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக இந்த உலகம் இருந்தது. உங்களுக்கு பின்னும் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் இது இருக்கும். தளைகளை எல்லாம் விட்டு விட்டு , ஆனந்தமாக இருங்கள். 

உலகம் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று அடம் பிடிக்காதீர்கள். மக்கள் இப்படி இருக்க   வேண்டும், மகன் மருமகள் இப்படி இருக்க வேண்டும், என்று வரையறுக்காதீர்கள். அந்த வரையறைக்குக் காரணம் நீங்கள் நினைத்துக் கொண்டிருக்கும் நல்லது கெட்டது  என்ற அபிப்ராயம். 

அவற்றை விடுங்கள். 

வாழ்க்கை இனிமையாக இருக்கும். சுகமாக இருக்கும். 

அது எப்படி விட முடியும் என்று வாதம் பண்ணினால் , என்ன சொல்ல ?

இன்னும் நாள் ஆகும் , காத்திருக்க வேண்டியது தான்....

http://yogasutrasimplified.blogspot.in/2018/05/248_7.html


Sunday, May 6, 2018

யோக சூத்திரம் - 2.48 - இருமைகள் மறையும்

யோக சூத்திரம் - 2.48 - இருமைகள் மறையும் 


ततो द्वङ्द्वानभिघातः ॥४८॥

tato dvaṅdva-an-abhighātaḥ ॥48॥


tato = அப்போது

dvaṅdva = இருமைகள்

an = இல்லை

abhighātaḥ  = தோற்கும்

எப்போது உடல் relaxed ஆக இருக்கிறதோ, அப்போது இருமைகள் தோற்று அழியும்

நமது உடலில் தலை, கழுத்து, மார்பு, வயிறு என்றெல்லாம் இருக்கிறது அல்லவா ?

தலை எங்கே முடிகிறது? கழுத்து எங்கிருந்து தொடங்குகிறது ?

கழுத்து எங்கே முடிகிறது? மார்பு எங்கிருந்து தொடங்குகிறது?

அங்கே ஏதாவது கோடு போட்டு இருக்கிறதா ? இது வரை தலை, இதற்குப் பின் கழுத்து என்று?

இல்லை.

இருந்தும் நாம் ஒவ்வொன்றுக்கும் ஒரு பெயர் வைத்து இருக்கிறோம்.

உடம்பு ஒன்று தான். அதில் பிரிவு என்பதே கிடையாது.

காரில் இருப்பது போல இது டையர் , இது கதவு, இது brake , என்று உதிரி பாகங்கள்  கிடையாது. உடம்பு பூராவும் ஒன்று தான்.

இதன் அடுத்த நிலை,  நாம் உடம்பு வேறு, மனம் வேறு என்று பிரித்து வைத்து இருக்கிறோம்.

இவை இரண்டு அல்ல ஒன்று தான். உடலும் மனமும் ஒன்று சேர்ந்தததுதான் நாம்.

Psychosomatic என்று ஆங்கிலத்தில் சொல்லுவார்கள். உடலும் மனமும் ஒன்று சேர்ந்த கலவை நாம்.

எனவே உடல் அசைந்தால் மனம் அசையும், மனம் அசைத்தால் உடல் அசையும்.

மனதை நம்மால் நேரடியாக கட்டுப் படுத்த முடியாது. எனவே, உடலை relaxed ஆக வையுங்கள் என்கிறார்.

சரி அப்படி வைத்தால் என்ன ஆகும் ? எதற்காக அப்படி வைக்க வேண்டும்?

அப்படி வைத்தால், இருமைகள் மறையும் என்கிறார்.

அது என்ன இருமை?

இன்பம், துன்பம்
நல்லது கெட்டது
உயர்ந்தது தாழ்ந்தது
பாவம் புண்ணியம்

என்று வாழ்வில் பல இமைகள் இருக்கின்றன. இவை  அனைத்தும்  போய்  விடும் என்கிறார்.

அது எப்படி போகும்?

அப்படியே போனாலும், அது நல்லாவா இருக்கும். பாவமும் புண்ணியமும் போய் விட்டால்  பின் பாவம் செய்யலாமா? எதுக்கு புண்ணியம் செய்யணும் ?

இப்படிப் பட்ட கேள்விகள் எல்லாம் வரும். அதுக்கு என்ன பதில் ?

http://yogasutrasimplified.blogspot.in/2018/05/248.html

Thursday, May 3, 2018

யோக சூத்திரம் - 2.47 - உடம்பே ரிலாக்ஸ் ப்ளீஸ்

யோக சூத்திரம் - 2.47 - உடம்பே ரிலாக்ஸ் ப்ளீஸ் 


प्रयत्नशैथिल्यानन्तसमापत्तिभ्याम् ॥४७॥

prayatna-śaithilya-ananta-samāpatti-bhyām ॥47॥

prayatna = பிரயத்தன , முயற்சி

śaithilya = தளர விடும் போது

ananta = ஆனந்தம்

samāpatti = சமாதி

abhyām = இரண்டும் ॥47॥


மனதும் உடலும் நெகிழ்ந்து இருக்கும் போது சமாதி நிலை அடைய முடியும். அது அளவற்ற ஆனந்தம் தரும்.

śaithilya என்ற அந்த வார்த்தைக்கு  சரியான தமிழ் சொல் கிடைக்க மாட்டேன் என்கிறது.

Relaxation என்ற ஆங்கில வார்த்தை கொஞ்சம் கிட்ட வருகிறது. இப்போதைக்கு relaxation என்றே வைத்துக் கொள்வோம்.

நமது உடம்பு எந்நேரமும் ஒரு முறுக்கில் (tension ) ஆகவே இருக்கிறது.

காலை எழுந்தவுடன் இந்த பதட்டம் ஆரம்பமாகி விடுகிறது.

அதைச் செய்ய வேண்டும், இதைச் செய்ய வேண்டும், என்று ஆயிரம் எண்ணங்கள்  ஓட ஆரம்பிக்கிறது. மனதில் அழுத்தம் ஏற ஏற உடலில் அது  பிரதிபலிக்கிறது.

உடலில் பல ஹார்மோன்கள் சுரக்க ஆரம்பிக்கிறது.  அவை ஒன்றோடு ஒன்று  கலந்து  உடலுக்குள் யுத்தம் ஆரம்பிக்கிறது.


உடம்பு relaxed ஆக இருப்பதே இல்லை.

அதற்கு பலப் பல காரணங்கள்.

உணவு முறை. வேலையில் வரும் அழுத்தம். உறவுகள் தரும் அழுத்தம்.  சரியான ஓய்வு கிடையாது.

ஆசைகள். பொறாமைகள். பயங்கள். சந்தேகங்கள். என்று ஆயிரம் விஷயங்கள்  உடலை ரிலாக்ஸ் பண்ண விடுவதில்லை.

ரொம்ப முயற்சி  செய்தால்,சில நிமிடங்கள் relaxed ஆக இருக்கலாம். உடனே மனம் சொல்லும் "என்ன சும்மா உக்காந்து கிட்டு இருக்க.. எழுந்திரு...எவ்வளவு  வேலை இருக்கிறது...ஓடு " என்று விரட்டும்.

எந்நேரமும் நாம் ஓடிக் கொண்டே இருக்கிறோம்.

உடம்பை relaxed ஆக வைத்தால் மனமும் relax ஆகும்.

எதிர் காலம் பற்றிய பயம், கனவுகள், சந்தேகங்கள்,ஆசைகள் அனைத்தையும் மூட்டை கட்டி வைத்து விட்டு, இந்த நேரம், இந்த நொடியில் மனதையும் உடலையும் relax ஆக வைக்கப் பழகினால், எல்லை அற்ற ஆனந்தம் வரும் என்கிறார் பதஞ்சலி.

ஆசனம் என்றால் ஸ்திரம் மற்றும் சகஜம் என்று பார்த்தோம்.

அடுத்தது, ஆசனம் என்பது relaxed ஆக இருப்பது.

உடலை வருத்தக் கூடாது. அதை கசக்கிப் பிழியக் கூடாது. அது ஒரு மலர் போல மென்மையாக மலர வேண்டும். உடலில் அழுத்தம் நிகழ்ந்தால் அது மனத்திலும் நிகழும்.

உடலை தளர விடுங்கள். மனதும் மென்மையாகும்.

http://yogasutrasimplified.blogspot.com/2018/05/247.html