Thursday, November 30, 2017

யோக சூத்திரம் - 2.7 - ராக

யோக சூத்திரம் - 2.7 - ராக 



सुखानुशयी रागः ॥७॥

sukha-anuśayī rāgaḥ

sukha = சுகம்

anuśayī = நம்பிக்கை, யூகம்

rāgaḥ = ஆசை , கவர்ச்சி

அவ்வளவுதான். சுகம், நம்பிக்கை, ஆசை.

இது என்ன சுலோகம். ஒண்ணுக்கு ஒண்ணு சம்பந்தமில்லாம மூணு வார்த்தைகளை ஒண்ணா சேர்த்தா ஸ்லோகமா ஆயிருமா ?

பதஞ்சலி அப்படித்தான், கணக்கு பார்முலா மாதிரி , கண்ணு முன்னால பூச்சி பறக்கும். கொஞ்சம் கொஞ்சமாக பிரித்து படிக்க வேண்டும்.

கொஞ்சம் rewind .

மன கிலேசத்துக்கு முதல் காரணம் அவித்தை என்று பார்த்தோம்.

அடுத்தது, அஸ்மிதா, அதாவது ஞாபகத்தையும், அறிவையும் ஒன்று என்று நினைத்து குழம்பிக் கொள்வது.

மூன்றாவது, ராக.

அவித்தையின் இன்னொரு வடிவம் இந்த ராக என்பது.


நமக்கு வாழ்வில் எப்போதும் சில ஆசைகள் இருந்து கொண்டே இருக்கின்றன. பிறந்ததில் இருந்து இறக்கும் வரை ஏதோ ஒரு ஆசை இருந்து கொண்டே தான் இருக்கிறது.



பொம்மை, ஐஸ் கிரீம், சாக்லேட், புது உடை, சாப்பாடு, ஊர் சுற்றல், அழகான பெண்/ஆண் , பிள்ளைகள், பணம், புகழ் , அதிகாரம், அழகு, ஆரோக்கியம் என்று  ஏதோ ஒரு ஆசை நம்மை துரத்திக் கொண்டே இருக்கிறது.

இந்த ஆசை, விருப்பம் தான் ராக எனப்படுகிறது.


சரி தான், பதஞ்சலியும் ஆரம்பிச்சுட்டாரா ...ஆசை படக் கூடாது என்று. போங்கப்பா, இதை கேட்டு கேட்டு அலுத்து போச்சு. வேறு ஏதாவது இருந்தா சொல்லுங்க னு சொல்லிவிட்டு நீங்கள் பிளாக்கை மூடு முன், ஒரு வார்த்தை.

மேலும் படியுங்கள்.  ஆச்சரியப் படுவீர்கள், பதஞ்சலியின் ஆராய்ச்சியை பார்த்து.


பதஞ்சலி ஆசைப் படாதே என்று சொல்லவில்லை.


ஆசைப் படு என்றும் சொல்லவில்லை.

பின் ?

"நீ உன்னையும் அறிந்து கொள்ளவில்லை. நீ ஆசைப் படும் பொருளையும் அறிந்து கொள்ளவில்லை. அந்த சமயத்தில் ஆசை என்பது மன கிலேசத்தை உண்டாக்கும் " என்கிறார்.

எப்படி என்று பார்ப்போம்.


நமக்கு ஆசை எப்படி வருகிறது ?

எங்கேயோ பார்க்கிறோம் - டிவியில், நண்பர்கள், உறவினர்கள் வீட்டில், செய்தித் தாளில், அல்லது வலை தளங்களில் பார்க்கிறோம். கேள்விப் படுகிறோம்.

அடடா, இந்த மாதிரி நமக்கும் இருந்தால் எவ்வளவு நல்லா இருக்கும் என்று நினைக்கிறோம் . அந்த நினைவு ராக என்று சொல்லப்படும். அந்த நினைவு , ஆசையாக மாறும். எனக்கு அது வேண்டும் என்று ஒரு ஒரு வலுவான எண்ணமாக மாறுகிறது.

சரி, அதில் என்ன தப்பு இருக்கிறது ? நல்ல , சுகமான பொருள்கள் மேல் ஆசைப் படுவது தவறா ?

சுகம் . அங்குதான் சிக்கல் வருகிறது.

அவை, அந்த பொருள்கள் உங்களுக்கு சுகம் தரும் என்று நீங்கள் எப்படி அறிவீர்கள் ?

ஒரு நல்ல ஸ்மார்ட் போன் மார்க்கெட்டில் வருகிறது. அடடா, இது மட்டும் நமக்கு இருந்தால்   என்று ஆசைப் படுகிறீர்கள். வாங்கியும் விடுகிறீர்கள். ரொம்ப சந்தோஷம். நண்பர்களிடம் காட்டி காட்டி பெருமை படுகிறீர்கள். சிறிது நாளில், அதை விட சிறந்த ஒன்று மார்க்கெட்டில் வருகிறது.

"அடடா, இன்னும் கொஞ்ச நாள் பொறுத்து இருந்தால், அதை வாங்கி இருக்கலாமே  " என்று கவலை வருகிறது. சரி, பரவாயில்லை, இது ஒண்ணும் மோசம் இல்லை  என்று உங்களை நீங்களே தேறுதல் சொல்லிக் கொள்கிறீர்கள்.

சிறிது காலம் கழித்து உங்கள் நண்பர் அந்த புது போனை வாங்கி விடுகிறார். நீங்கள் மற்றவர்களிடம்  காட்டி பெருமை பட்டது  போல,அவர் உங்களிடம் அவர் போனை  காட்டுகிறார்.

"அவன் புத்திசாலி தான்...எப்போதும் நல்ல பொருள்களை எப்படியோ சரியா  வாங்கிவிடுகிறான்  ...நான் தான் காசை காரியாக்குகிறேன்...அடுத்த முறை இன்னும்  கொஞ்சம் புத்திசாலித்தனமாக இருப்போம் " என்று உங்களை நீங்களே திட்டிக் கொள்கிறீர்கள்.

சந்தோஷம் என்ன ஆனது ?

சோகம், தேறுதல், தன்னிரக்கம் என்று ஆகிப் போனது.

போன் என்பது ஒரு உதாரணம் தான்.

உயிருக்கு உயிராய் காதலித்து, இவள் இல்லை என்றால் வாழ்க்கையே இல்லை என்று நினைத்து அவளையே திருமணம் செய்து கொள்கிறான். சில வருடங்கள்  கழித்து , "இவளைப் போய் திருமணம் செய்தேனே " என்று நொந்து கொள்ளாத  ஆட்கள் எத்தனை பேர் ?

வீட்டை வாங்கிவிட்டு , அதற்கு கடன் கட்ட மற்ற செலவுகளை குறைத்துக் கொண்டு  வாழ்நாள் கஞ்சத் தனமாக வாழ்பவர்கள் எத்தனை பேர் ?

ஒரு பொருளை கண்டால், அது நமக்கு சுகம் தரும் என்று நினைக்கிறோம்.

அதில் சில விஷங்களை நாம் மறந்து போகிறோம்.

ஒன்று, அதை அடைந்தவர்கள் எல்லோரும் சந்தோஷமாக , சுகமாக இருக்கிறார்களா ? இல்லை என்றால், நாம் மட்டும் எப்படி சுகமாக இருப்போம்.

இரண்டாவது, அது வேறு சுகத்தை மட்டும் கொண்டு வருமா ? வேறு சுகம் மட்டும் தரும்  பொருள் உலகில் எதுவுமே இல்லை. ஒவ்வொரு சுகத்தோடு ஒரு துக்கமும் கூடவே   வரும். வேறு சுகத்தை மட்டும் பார்த்து ஒன்றை அடைந்தால், அது கூடவே ஒட்டிக் கொண்டு வரும் துக்கம் நம்மை வருத்தும்.

மூன்றாவது, ஒரு சுகத்தை அடைய வேண்டும் என்றால், பல சுகங்களை துறக்க  வேண்டி இருக்கும். திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றால், சுதந்திரம்  பறி போகும், நிறைய உழைக்க வேண்டி இருக்கும், நிறைய சமரசம்  செய்ய வேண்டி இருக்கும், (compromise ), நிறைய சகிக்க வேண்டி இருக்கும்...இப்படி ஒரு சுகத்தை அடைய பல சுகங்களை இழக்க வேண்டி வரும்.

நான்காவது, மற்றவர்கள் ஒரு பொருளை வைத்து சுகமாக இருக்கலாம்.  அல்லது இருப்பது போல தோன்றும். நாம் அவர்கள் இல்லை. அவர்களுக்கு சுகமாக இருப்பது  நமக்கு சுகமாக இருக்க வேண்டும் என்று இல்லை. இரண்டாவது, அவர்கள் அனுபவிக்கும் துன்பம் நமக்குத் தெரியாது.

நாம் நம்மை அறிந்து கொள்ளதாவரை, நாம் இந்த உலகில் உள்ள பொருள்களை அறிந்து கொள்ளாதவரை , சுகம் துக்கம் என்பவற்றை அறியாதவரை , ஆசை என்பது மன கிலேசத்தை தரும்.

அப்படி என்றால் என்ன செய்வது ?

உங்களை அறிந்து கொள்ள முயலுங்கள். பொருள்களின் தன்மைகளை அறிந்து கொள்ளுங்கள், சுகம் துக்கம் இவற்றின் தன்மைகளை அறிந்து கொள்ளுங்கள்.

அப்புறம் ஆசைப் படுங்கள். அந்த ஆசையின் தன்மையே வேறு.

அதுவரை, நீங்கள் ஆசைப் படுவது எல்லாம் மன கிலேசத்தையும் உண்டாக்கும்.

பதஞ்சலி , ஆசைப் படாதே என்று சொல்லவில்லை.

ஏன் ஆசைப் படுகிறாய், அந்த ஆசையின் தன்மையை அறிந்து கொள் , அது சுகம் தானா  என்று அறிந்து கொள் என்கிறார்.

அப்படி அறிந்த பின் ஆசைப் பட்டால், அது மன கிலேசத்தை தராது.


இதை செய், அதை செய்யாதே என்று பதஞ்சலி சொல்வதில்லை. அதை உங்கள் முடிவுக்கே விட்டு விடுகிறார்.

சிந்தியுங்கள். உங்கள் ஆசைகளை பட்டியல் போடுங்கள். அவை எப்படி உங்களுக்கு சுகம் தரும் என்று நினையுங்கள். உங்களை அறியுங்கள்.

அப்புறம் நடப்பது நடக்கட்டும்.

http://yogasutrasimplified.blogspot.in/2017/11/27.html

யோக சூத்திரம் - 2.6 - அஸ்மித

யோக சூத்திரம் - 2.6 - அஸ்மித


दृग्दर्शनशक्त्योरेकात्मतैवास्मिता ॥६॥

dr̥g-darśana-śaktyor-ekātmata-iva-asmitā ॥6॥


dr̥k = (nom. sg. f.) பார்ப்பவன்
darśana-śakti = பார்க்கும் சக்தி
eka = ஒன்று
ekātmatā = ஒன்றிணைந்து
eva = அதாவது
asmitā = அஸ்மிதா

பார்ப்பவனையும் பார்வையையும் ஒன்றாக நினைத்து குழம்புவது அஸ்மிதா.

ரொம்ப குழப்பமாக இருக்கிறதா ?

இதை வேறு விதமாக சிந்தித்தால் பொருள் விளங்கும்.

மன கிலேசத்துக்கு முதல் காரணம் அவித்தை என்று பார்த்தோம். அது எப்படியெல்லாம் வெளிப்படும் என்றும் பார்த்தோம்.

அவித்தையை தொடர்ந்து வருவது அமிஸ்த.

அமிஸ்த என்றால் அறிவுக்கும் ஞாபகத்துக்கும் வித்தியாசம் தெரியாமல் குழம்புவது.


நமது அறிவு என்பது நமது ஞாபகம் அன்றி வேறு என்ன.

நமக்குத் தெரியும் என்று நாம் சொல்லிக் கொள்வதெல்லாம் எப்போதோ யாரோ சொல்லக் கேட்டதன்  ஞாபகங்களின் தொகுதி தான்.

நாம் எதையும் தோண்டி துருவி ஆராய்ந்தது அல்ல.

சொன்னார்கள் , கேட்டுக் கொண்டோம்.

படித்தோம், மனதில் இருத்திக் கொண்டோம்.

அவ்வளவே.

வெளியில் உள்ள உலகமானது வேறு விதமாக இருக்கிறது. அது மாறிக் கொண்டே இருக்கிறது. நமது ஞாபக குவியலை விட அது மிகவும் சிக்கலாக இருக்கிறது. (complex )

நாம் , இந்த வெளி உலகை, அதாவது உண்மையை நம் ஞாபக குவியலோடு (memory template ) ஒத்துப் பார்க்கிறோம். இரண்டும் ஒன்றாகிப் போகினால் , நல்லது. இல்லை என்றால் சிக்கல் ஆரம்பமாகிறது.

இதற்கு ஆயிரம் உதாரணங்கள் சொல்லலாம்.

பிற மத கருத்துகளை நம்மால் ஏற்றுக் கொள்ள முடிகிறதா ?

நீங்கள் சைவமாக இருந்தால், மாமிசம் சாப்பிடுவதை உங்களால் ஏற்றுக் கொள்ள முடியுமா ?

ஓரினத்தை சேர்ந்த இருவர் திருமணம் செய்து கொள்வதை உங்களால் ஜீரணிக்க முடிகிறதா ?

திருமணம் ஆகாமல் ஆணும் பெண்ணும் ஒன்றாக இருப்பது சரி என்று உங்களுக்குப் படுகிறதா ?

இவற்றில் எல்லாம் உங்களுக்கு ஒரு அபிப்ராயம் இருக்கலாம். அந்த அபிப்பிராயம் அறிவினால் வந்தது அல்ல. நீங்கள் ஆராய்ந்து, அதன் சாதக பாதகங்களை அறிந்து பின் வந்த அறிவு அல்ல. அவை உங்களின் பழைய நினைவு குவியலில் இருந்து வந்தவை.


அதனால் அவை தவறு என்று ஆகி விடாது.


ஆனால், நீங்கள் ஒன்றை மட்டும் எப்போதும் அறிந்து இருக்க வேண்டும்.

அறிவு என்பது வேறு. ஞாபகம் என்பது வேறு.

பார்வை என்பது வேறு. பார்ப்பவன் என்பது வேறு.

இரண்டையும் போட்டு குழப்பக் கூடாது.

இந்த தெளிவு வராதவரை உலகோடு கிடையாது முட்டி மோதிக் கொண்டிருப்போம்.

அது எப்படி சரியாகும், இது தான் சரி, அவன் இப்படி செய்திருக்கக் கூடாது,  அது  நியாயமே இல்லை என்று மனதுக்குள் எந்நேரமும் அலை அடித்துக் கொண்டே இருக்கும்.

அது நமது ஆன்மீக முன்னேற்றத்துக்கு தடையாக இருக்கும்.

அடுத்த தடவை ஏதோ ஒன்றில் உங்களுக்கு தடங்கல் வந்தால், ஒரு நிமிடம் சிந்தியுங்கள்.

நீங்கள் அறிவு பூர்வமாக அதை எதிர் கொள்கிறீர்களா அல்லது உங்கள் பழைய நினைவுகளில் இருந்து எதிர் கொள்கிறீர்களா என்று.

பெரும்பாலான சமயம், அது நினைவின் வெளிப்பாடாகவே இருக்கும்.

நமது ஞாபகம் என்பது , அறிவை அடைய பெரிய தடை.

நாம் நினைத்துக் கொண்டிருப்பது தான் சரி என்று நாம் உறுதியாக நம்புவோம். அதற்கு எதிரான எந்த கருத்தையும் நாம் ஏற்றுக் கொள்ள மாட்டோம். அது தான் அறிவுக்குத் தடை.

தவறானவற்றை விட்டுத் தள்ள மனம் வருவது இல்லை.

பழக்கத்தை விடுவது மிக மிககடினம் . அப்படியே பழகி போய் விட்டது என்று அதை தொடர்ந்து கொண்டே இருப்போம்.

நினைவில், ஞாபகத்தில் இருந்து செயல் படும் போது  நாம் ஒரு இயந்திரம் போல  செயல் படுகிறோம். ஒரு கணணி போல ஆகி விடுகிறோம்.

அறிவு என்பது அன்றலர்ந்த மலர் போன்றது. ஞாபகம் என்பது வாடி அழுகிப் போன மலர் போன்றது.


ஞாபகம் என்பது கண்களுக்கு போடும் திரை. கலர் கண்ணாடி. அதன் மூலம் உலகைப் பார்த்தால், அது வேறு விதமாகத்தான் தெரியும்.

கணவனை பார்க்கும் போது , இன்று தான் முதன் முதலில் பார்க்கும் , பேசப் போகும் காதலனைப் போல் பாருங்கள். வித்தியாசம் தெரியும்.

எதையும் ஞாபகத்தின் இடையூறு இல்லாமல், தெளிவான பார்வையோடு சிந்திக்க முடிகிறதா என்று பாருங்கள்.

பதஞ்சலி இதை ஏன் சொல்கிறார் என்றால், சிறு வயதில் நமக்கு பல விஷயங்கள் சொல்லப் படுகின்றன. அறியாத அந்த வயதில் சொல்லப் படுபவை எல்லாம் நம் மனதில் பசுமரத்தாணி போல பதிந்து விடுகிறது. அவற்றை நாம் உண்மை என்றே நம்புகிறோம்.

அவற்றிற்கு எதிரான ஏதாவது வேறு கருத்து வந்தால், நம்மால் சகிக்க முடிவதில்லை . இப்படி கூட மனிதர்கள் யோசிப்பார்களா என்று ஆச்சரியமும், அருவெறுப்பும் வருகிறது.

ஏதோ நாம் அறிந்தது மட்டும் தான் உண்மை போலவும், மற்றவை எல்லாம் தவறு என்று நினைக்கிறோம்.

இது ஆன்மீக முன்னேற்றத்திற்கு பெரிய தடைக் கல்.

சிந்தியுங்கள்.

http://yogasutrasimplified.blogspot.in/2017/11/26.html

Tuesday, November 28, 2017

யோக சூத்திரம் - 2.5 - விழிப்புணர்வு - பாகம் 1

யோக சூத்திரம் - 2.5 - விழிப்புணர்வு - பாகம் 1



अनित्याअशुचिदुःखानात्मसु नित्यशुचिसुखाअत्मख्यातिरविद्या ॥५॥

anityā-aśuci-duḥkha-anātmasu nitya-śuci-sukha-ātmakhyātir-avidyā ॥5॥


anityā = அநித்தியம் (நித்யம் இல்லாதது)

aśuci = அசூயை , தூய்மை அற்ற

duḥkha = துக்கம், கவலை

an = இல்லை

atma = உண்மையான தன்மை


nitya = நித்யம், நிரந்தரமான

śuci = தூய்மையான

sukha = சுகம்

ātma = உண்மையான தான்

khyātir = கியாதி, அறிவு , உள்ளுணர்வு

avidyā  = அவித்யா

அவித்தையின் காரணாமாக நிலையானது/நிலையற்றது, தூய்மையானது/தூய்மையற்றது, உண்மையான நான் / உண்மையற்ற நான் இவற்றை அறிய முடியாமல் குழம்புகிறோம்


மீண்டும் ஒரு முறை அவித்தை என்றால் என்ன என்று நினைவு படுத்திக் கொள்வோம்.

அவித்தை என்பது விழிப்புணர்வு இல்லாமை. அறிவீனம் என்பது அல்ல. அறிவு இருக்கும். இல்லாவிட்டாலும் பெற்றுக் கொள்ள முடியும். விழிப்புணர்வு (awareness ) இல்லாமையே அவித்தை என்று சொல்லப்படுகிறது.

பெரும்பாலும் நாம் ஒரு விழிப்புணர்வு அற்ற நிலையில், ஒரு தூக்க நிலையில் இருக்கிறோம்.

நாம், என்ன செய்கிறோம், ஏன் செய்கிறோம், நமது நோக்கம் என்ன, நம்மைச் சுற்றி என்ன நடக்கிறது, நம் மனம் எப்படி வேலை செய்கிறது என்பதெல்லாம் ஒன்றும் தெரியாது. ஏதோ எழுந்தோம், பல் விளக்கினோம், சாப்பிட்டோம், வேலைக்கு போனோம், வீட்டுக்கு வந்தோம், தூங்கினோம் என்று செக்கு மாடு போல செய்த ஒன்றையே மீண்டும் மீண்டும் செய்து கொண்டிருக்கிறோம்.


நாம் ஒன்றின் மேல் ஆசைப் படுகிறோம் என்றால் , ஏன் ஆசைப் படுகிறோம் என்று தெரியாது.

ஒன்றை வெறுக்கிறோம் என்றால் , ஏன் வெறுக்கிறோம் என்று தெரியாது.

சிலவற்றை நம்புகிறோம் . ஏன் ? தெரியாது.

இந்த மிகப் பெரிய தூக்கத்தில் இருந்து எழுந்திருக்கத்தான் , திருப்பள்ளி எழுச்சி , திருப்பாவை பாடப் படுகிறது. இல்லாமல், இறைவன் தூங்கி விட்டான் , அவனை எழுப்ப அல்ல திருப்பாவையும், திருப்பள்ளி எழுச்சியும்.

தூங்கிக் கொண்டிருக்கும் நம்மை எழுப்ப .

இந்த விழிப்புணர்வு இல்லாமை அல்லது அவித்தை காரணமாக என்ன நிகழ்கிறது.

முதலாவது, நித்யம் இல்லாததை நித்யம் என்று நினைக்கிறோம். நித்யம் என்றால் நிரந்தரமானது.


நில்லாத வற்றை நிலையின என்றுணரும்
புல்லறி வாண்மை கடை.

என்பார் வள்ளுவர்.

நில்லாதவற்றை , நிலையின என்று உணர்வது புல்லறிவு என்கிறார் வள்ளுவர்.

இளமை, செல்வம், வாழ்க்கை இவை எல்லாம் நிலையானவை அல்ல. இருந்தும் இவை நிலையானவை என்று நினைத்து அதை சேகரிக்க மனிதன் வாழ் நாள் எல்லாம் செலவழிக்கிறான்.

சரி, இவை நிலையானவை இல்லை என்றால் பின் எது தான் நிலையானது?

இவை நிலையானவை என்று அறியும் அறிவு நிலையானது. உண்மை நிலையானது. இப்படி  , எவை நிலையானவை என்று அறிந்து அவற்றை அடைய முயல வேண்டும்.

சுகத்தை துக்கமாகவும், துக்கத்தை சுகமாகவும் நினைப்பது அவித்தையின் இன்னொரு வெளிப்பாடு.

துக்கம் தருவதை செய்யக் கூடாது. சுகம் தருவதை செய்ய வேண்டும்.

புகை பிடிப்பது, மது அருந்துவது, கண்ட மேனிக்கு உண்பது, facebook , whatsapp அரட்டை,.....

இவை எல்லாம் சுகமா ? துக்கமா ? துக்கம் தருபவை . இருந்தும் மனிதன் இவற்றை தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறான். ஏன் ? செய்கின்ற அந்த நேரத்தில் அவை சுகம் "போல" தெரியும். ஆனால், அவை துக்கத்தை கொண்டு தருபவை என்ற அறிவு வர வேண்டும்.


நிறைய வாசிப்பது, உடற் பயிற்சி செய்வது, அளவாக உண்பது ....இவை எல்லாம் அந்த நேரத்துக்கு துன்பமாகத் தெரியும். ஆனால், அவன் இன்பம் பயப்பவை.  இருந்து மனிதன், இவற்றை செய்வது இல்லை.

எது சுகம், எது துக்கம் என்று தெரியாமல் இருப்பது அவித்தை.

சிந்தித்துப் பாருங்கள், நீங்கள் என்னவெல்லாம் செய்கிறீர்கள். அவற்றுள் எவை எவை சுகம் , துக்கம் என்று அறியுங்கள். துக்கத்தை விலக்கி , சுகத்தை தேடுங்கள்.

தூய்மை மற்றும் தூய்மை அல்லாதவை, இவற்றுக்குள் உள்ள வித்தியாசம் அறியாமல்  இருப்பது.

அது என்ன தூய்மை ? தூய்மை அற்றது ?

நாளை பார்ப்போம்.


http://yogasutrasimplified.blogspot.in/2017/11/25-1.html

Monday, November 27, 2017

யோக சூத்திரம் - 2.4 - அவித்தையின் வெளிப்பாடுகள்

யோக சூத்திரம் - 2.4 - அவித்தையின் வெளிப்பாடுகள் 



अविद्या क्षेत्रमुत्तरेषाम् प्रसुप्ततनुविच्छिन्नोदाराणाम् ॥४॥

avidyā kṣetram-uttareṣām prasupta-tanu-vicchinn-odārāṇām ॥4॥

avidyā = அவித்யா , அறிவீனம்

kṣetram = நிலைக்களன்

uttareṣām = மற்றவற்றிற்கு

prasupta = மறைந்து இருத்தல், அடங்கி இருத்தல்

tanu = வலுவில்லாத

vicchinn = வலுவோடு

odārā =உதார், வெளிப்படையாக

aṇām  =இவாறாக



அறிவீனம் மற்ற நான்கு துன்பங்களுக்குக் காரணம். அந்த அறிவீனம் நான்கு விதங்களில் வெளிப்படுகிறது - வலு குறைந்து, வலுவுடன், மறைந்து இருந்து, வெளிப்படையாக


நான் முன்பே கூறியது போல, அவித்தை என்பது அறிவீனம் என்று நேரடியாக கூற   முடியாது. வித்தை, அவித்தை. Lack of Awareness தான் அவித்தை என்பது.

இந்த அறிவீனம் இருக்கிறதே, அது தான் அனைத்து துன்பங்களுக்கும், அனைத்து மன கிலேசங்களுக்கும் காரணம். கிலேசம் என்றால் விஷம் என்கிறது சமஸ்க்ரிதம். ஒரு குடம் பாலுக்கு ஒரு துளி நஞ்சு போதும். உங்களிம் ஆயிரம் நல்ல குணங்கள் இருக்கலாம், முட்டாள்தனம் என்ற ஒரு கெட்ட குணம்  இருந்தால் போதும் அது அனைத்து நல்ல குணங்களையும்  வீணடித்து விடும்.

அது ஒரு புறம் இருக்கட்டும்.

இந்த அறிவீனம் நான்கு வழிகளில் வெளிப்படுகிறது.

அறிவு வேண்டுமானால் பல வழிகளில் வெளிப்படலாம். அறிவீனம் எப்படி பல வடிவில் வெளிப்படும். ?

அறிவீனம் சில சமயம் மறைந்து வெளிப்படும்.

அதுஎப்படி மறைந்தும் , வெளிப்படும் ஒரே சமயத்தில் இருக்க முடியும் ?


ஒரு உதாரணம் பார்ப்போம்.

உடல் பருமனை குறைக்க வேண்டும். கண்டதையும் சாப்பிடக் கூடாது என்ற அறிவு நமக்கு இருக்கும். இருந்தாலும், நல்ல உணவை பார்த்தவுடன் , சாப்பிடும் ஆர்வத்தில், சாப்பிடக் கூடாது என்ற அறிவு மறைந்து போகும்.

புகை பிடிக்கக் கூடாது என்ற அறிவு புகை பிடிக்கும் எல்லோருக்கும் இருக்கும். இருந்தும் , புகை பிடிக்கிறார்கள். ஏன் ? அந்த அறிவு மறைந்து இருக்கிறது.

ஒருவரிடம் ஒரு சில விஷயங்களை பேசக் கூடாது என்று நினைத்திருப்போம், பின் நம்மை அறியாமல் பேசி விடுவோம்.

வாழ்வில் பல விஷயங்கள் நாம் தெரிந்தே, அறிந்தே செய்யும் தவறுகள் தான். காரணம், அறிவீனம். அறிவு மங்கி , அறிவீனம் வெளிப்படும்.

அடுத்தது, வலு குன்றி, வலுவுடன்.


நான் பிடித்த முயலுக்கு மூணே கால் என்று வாதம் செய்வது, என் மதம், என் கடவுள் , என் உண்மைதான் உயர்ந்தது என்று உரக்கச் சொல்லுவது, அதற்காக யுத்தம் செய்வது, மனிதர்களை கொல்லுவது என்பது அறிவீனத்தின் வலுவான வெளிப்பாடு.

அதையே வெளியே சொல்லாமல், சண்டை பிடிக்காமல், அதே கொள்கைளை கொண்டிருப்பது வலு இழந்த வெளிப்பாடு.

எத்தனை விவாதங்கள், எத்தனை சர்ச்சைகள், நீயா நானா, எது சரி, யார் உயர்ந்தவன், என்று ஆயிரம் தர்க்கங்கள். எல்லாம், அறிவீனத்தின் வெளிப்பாடு.


இதற்கெல்லாம் காரணம் தெளிவற்ற சிந்தனை. Lack of Awareness .

நான் யார், நான் ஏன் இப்படி இருக்கிறேன், இப்படி பேசுகிறேன், என் கொள்கைகள் என்ன, அவை எங்கிருந்து வந்தன, அவை சரியா தவறா, அவற்றை நான் எப்படி பயன்படுத்துகிறேன் , எப்படி வெளிப்படுத்துகிறேன் என்று அறியாமல், உணர்ச்சிகளால் உந்தப்பட்டு செயலாற்றுவது.

அது மனதை விஷமாக்குகிறது.

இந்த அவித்தையின் தன்மை என்ன ? அது எப்படி செயல் படுகிறது என்பதைப் பற்றி அடுத்த ஸ்லோகத்தில் பார்க்க இருக்கிறோம்.



http://yogasutrasimplified.blogspot.in/2017/11/24.html 

Sunday, November 26, 2017

யோக சூத்திரம் - 2.3 - மன சஞ்சலங்களுக்குக் காரணம்

யோக சூத்திரம் - 2.3 - மன சஞ்சலங்களுக்குக் காரணம் 



अविद्याअस्मितारागद्वेषाभिनिवेशः क्लेशाः ॥३॥

avidyā-asmitā-rāga-dveṣa-abhiniveśaḥ kleśāḥ ॥3॥

avidyā = அவித்யா , வித்தை இல்லாதது, அறிவீனம்,

asmitā = தான் என்ற உணர்வு

rāga = ஆசை,

dveṣa = துவேஷம் , வெறுப்பு

abhiniveśaḥ = பயம்

kleśāḥ = கிலேசம், சஞ்சலம்

ஆன்மீக பாதையில் செல்லும் போது பல தடைகள் வரும். சமாதி நிலையை அடைய நமக்கு தடையாய் இருப்பவை எவை ?

நம்மால் அந்த நிலையை அடைய முடியுமா ?

முடியும் ? மனம் சஞ்சலப் படாமல் இருந்தால்.

மனம் ஏன் சஞ்சலப் படுகிறது ?

காரணம் சொல்லுகிறார் பதஞ்சலி.

முதலாவது, அவித்தை. அதாவது, அறிவீனம். அவித்தை என்பதை அறிவீனம் என்று கூட சொல்ல முடியாது. அறிவில்லாதவற்றை அறிவு என்று நினைத்துக் கொள்வது. யாரோ சொன்னார்கள், எங்கேயோ படித்தது என்று ஒன்றை பிடித்துக் கொண்டு, அதுவே உண்மையான அறிவு என்று நினைத்துக் கொள்வது. படிப்பதே கொஞ்சம். அதிலும், சரியானவற்றை படிப்பது கிடையாது. அப்படியே சரியானவற்றை படித்தாலும் அவற்றை சரியாக புரிந்து கொள்வது கிடையாது. தவறாக புரிந்து கொள்வது மட்டும் அல்ல, அந்த தவறே சரி என்று நினைத்துக் கொள்வது. இது அவித்தை.

இதை முதலில் சரி செய்ய வேண்டும். எதை அறிவது, எப்படி அறிவது, என்று திட்டமிட்டு  சரியான முறையில் வித்தையை அறிய வேண்டும்.


Whatsapp லும் , youtube லும் பார்த்து விட்டு, இதுதான் அறிவு என்று நினைத்துக் கொள்ளக் கூடாது.

படிக்காமல் இருப்பதை விட, தவறானதை படித்து , தவறாக புரிந்து கொண்டு அதுவே சரி நினைப்பது ஆபத்தானது.

இரண்டாவது, அஸ்மிதா. தான் என்ற உணர்வு. அகங்காரம். தன்னை முன்னிறுத்தி உலகை அளப்பது. அளவுக்கு அதிகமாக தன்னைப் பற்றி பெருமை கொள்வது. தான் பெரிய ஆள் என்று நினைத்துக் கொள்வது. இதனால் பல சிக்கல்கள் வருகின்றன. கோபம் பயம் என்ற இவைகள் இதில் இருந்து வருகின்றன.

மூன்றாவது, ரகா , அதாவது ஆசை. ஆசை என்றால் என்ன ? நமது  சந்தோஷம் வெளியே இருக்கிறது என்று நினைப்பது ஆசை. அந்த பெண் வேண்டும், அந்த கார் வேண்டும், அந்த வீடு வேண்டும், அந்த வெளி நாட்டுக்குப் போக வேண்டும் என்று வெளியில் உள்ள பொருள்கள் நம் சந்தோஷத்துக்கு காரணம் என்று நினைப்பது. நாம் எதெல்லாம் வந்தால் சந்தோஷமாக இருப்போம் என்று நினைக்கிறோமோ , அதை எல்லாம் அடைந்தவர்கள் சந்தோஷமாக இருக்கிறார்களா என்று எண்ணி பார்க்க வேண்டும். நமது சந்தோஷம்  வெளியில் இருந்து வருகிறது என்று நினைப்பதால் ஆசை எழுகிறது.

நான்காவது, துவேஷம். வெறுப்பு. வெறுப்புக்குக் காரணம் அன்பின்மை. நம்மை விட கீழே உள்ளவர்கள் மேல் வெறுப்பு. அந்த வெறுப்பின் மறு வடிவம் நம்மை விட உயர்ந்தவர்கள் மேல் உள்ள பொறாமை. வெறுப்பும் பொறாமையும் ஒன்று தான். இதை அறிய வேண்டும்.

ஐந்தாவது, பயம். ஆசையில் இருந்து பயம் வரும். ஆசைப் பட்டது கிடைக்காமல் போய் விடுமோ என்ற பயம். வாழ்க்கையின் மேல் ஆசை வைத்தால், சாவை குறித்து பயம் வரும். ஆசையின் கருவில் பயம் பிறக்கும். பயம் இல்லாமல் இருக்க வேண்டும் என்றால், ஆசை இல்லாமல் இருக்க வேண்டும்.

இவற்றை எல்லாம் அறியாமல் இருப்பது அவித்தை.

நேரம் கிடைக்கும் போது இவற்றை தனிமையில் சிந்தித்துப் பாருங்கள்.

இவை எல்லாம் ஒரு முறை படித்தவுடன் புரிகிற விஷயம் அல்ல.


http://yogasutrasimplified.blogspot.in/2017/11/23.html

Saturday, November 25, 2017

யோக சூத்திரம் - 2.2 - நோக்கமும் செயலும்

யோக சூத்திரம் - 2.2 - நோக்கமும் செயலும் 



समाधिभावनार्थः क्लेश तनूकरणार्थश्च ॥२॥

samādhi-bhāvana-arthaḥ kleśa tanū-karaṇa-arthaś-ca ॥2॥

samādhi = சமாதி

bhāvana = நிலை, ஒன்று படுத்தல்

arthaḥ = அர்த்தம், நோக்கம், குறிக்கோள்

kleśa = கிலேசம், சுமை, தடை,

tanū = குறைதல்

karaṇa = செய்தல், அடைதல்

arthaś-ca = குறிக்கோளை


செயலும், குறிக்கோளும் ஒன்று பட்டால், தடைகளை மீறி குறிக்கோளை அடையலாம்.

கேட்பதற்கு ஏதோ சாதாரணமான ஒன்றாகத் தோன்றுகிறது. சிந்தித்துப் பார்த்தால் நம் மொத்த வாழ்க்கையும் இந்த ஒரு வரியில் அடங்கும்.


சிந்திப்போம்.


நமக்கு பணம் எடுக்க வேண்டும் என்றால் எங்கு செல்வோம் ? ஒன்று ATM க்கு  போக வேண்டும். அல்லது வங்கிக்குப் போக வேண்டும்.

உடற் பயிற்சி செய்ய வேண்டும் என்றால் எங்கு செல்ல வேண்டும் ? உடற் பயிற்சி நிலையத்துக்கு செல்ல வேண்டும். (gym ).

பணம் எடுக்க உடற் பயிற்சி நிலையத்துக்கு சென்றால் எப்படி இருக்கும் ?

வாழ்க்கையில் நாம் அப்படித்தான் செய்து கொண்டு இருக்கிறோம்.

யோசித்துப் பாருங்கள், நீங்கள் செய்யும் ஒவ்வொரு காரியமும் எந்த குறிக்கோளை நோக்கி போகிறது என்று ?

முதலில் பல பேருக்கு வாழ்வில் குறிக்கோளே கிடையாது. ஏதோ இன்றைய தினம் ஓடினால் சரி என்று இருக்கிறார்கள்.

குறிக்கோள் உள்ளவர்கள் கூட, அதை அடைய என்ன செய்ய வேண்டும் தெரியாமல் தவிக்கிறார்கள்.

தெரிந்தால் கூட , அதைச் செய்யாமல், அதற்கு சம்பந்தமில்லாத பலவற்றை செய்து கொண்டிருக்கிறார்கள்.

எப்படி என்று பார்ப்போம்.

ஒரு மாணவனுக்கு என்ன குறிக்கோள் இருக்க முடியும் ? நன்றாக படிக்க வேண்டும், புரிந்து படிக்க வேண்டும், நிறைய மதிப்பெண்கள் பெற வேண்டும். இவை தானே ?

அவன் செய்யும் செய்லகளைப் பாருங்கள்.

வீடியோ கேம், சினிமா, நண்பர்களோடு ஊர் சுற்றுவது, நாவல் படிப்பது, டிவி பார்ப்பது, அதிகமாக தூங்குவது. இந்த செயல்களுக்கும், படிப்புக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா ?

ஒரு குடும்பத் தலைவியின் குறிக்கோள் என்னவாக இருக்க முடியும் ?

வீட்டை நன்றாக பராமரிப்பது, தானும், வீட்டில் உள்ளவர்களும் சந்தோஷமாக இருப்பது,...இவை தானே ?

பொதுவாக அவர்கள் செய்யும் காரியங்களைப் பாருங்கள் ...

அளவுக்கு அதிகமான டிவி சீரியல்கள், மற்ற பெண்களோடு அரட்டை, குப்பை வார மற்றும் மாத பத்திரிகைகளை வாசிப்பது, எந்நேரமும் ஏதாவது வாங்கிக் கொண்டே இருப்பது (shopping ), கணவனை நச்சரிப்பது ...இப்படி பல.

இந்த செயல்களுக்கும், குறிக்கோளும் ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா ?

ஒரு குடும்பத் தலைவனின் குறிக்கோள் என்ன ?

வீட்டை பாதுகாப்பது, பிள்ளைகளுக்கு நல்ல வழியை சொல்லித் தருவது, மனைவியை சந்தோஷமாக வைத்துக் கொள்வது, செல்வம் சேர்ப்பது, என்பவை தானே ?

சதா சர்வ காலமும் அலுவலகத்தியிலேயே பழியாக கிடப்பது, புகை பிடிப்பது, மது அருந்துவது, மற்ற பெண்கள் சகவாசம், சீட்டு ஆடுவது, நேரத்துக்கு சாப்பிடாமல் இருப்பது, பிள்ளைகள் என்ன படிக்கிறார்கள், எப்படி இருக்கிறார்கள் என்று தெரியாமலேயே இருப்பது....


செயலுக்கும், குறிக்கோளுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா ?

முதலில் ஒரு குறிக்கோளை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.

பின் நாம் செய்யும் ஒவ்வொரு செயலும் அந்த குறிக்கோளை நோக்கி எடுத்து வைக்கும் அடியாக இருக்க வேண்டும்.

ஒரு மாணவன் தூங்கப் போகிறான் என்றால் அது கூட அவன் குறிக்கோளை நோக்கி எடுத்து வைக்கும் அடியாக இருக்க வேண்டும். "நான் நீண்ட நேரம் படித்து  களைத்து விட்டேன் ...என் மூளைக்கும் என் உடலுக்கும் ஓய்வு தேவை ..எனவே தூங்கப் போகிறேன் " என்று தூக்கம் கூட குறிக்கோள் அடையவே இருக்க வேண்டும்.

ஒவ்வொரு நிமிடமும் , ஒவ்வொரு செயலையும் யோசியுங்கள்.

நான் பேசுவது, செய்யவது எந்த குறிக்கோளை அடைய உதவுகிறது என்று ?

நான் சீரியல் பார்க்க செலவிடும் இந்த நேரம் எதை அடைய உதவுகிறது என்று சிந்தியுங்கள்.

அரட்டை அடிப்பதனால் நான் என்ன சாதிக்கப் போகிறேன் என்று நினையுங்கள்.

கணவனிடம் சண்டை போடும் முன் (அல்லது மனைவியிடம்) , இதனால் நான் என்ன அடைய நினைக்கிறேன் என்று யோசித்து செயல்படுங்கள்.

உணர்ச்சிகளால் தூண்டப் பட்டு செயல் படுவதை விட்டு விட்டு, அறிவு பூர்வமாக சிந்தித்து செயல் பட வேண்டும்.

ஒவ்வொரு கணமும், ஒவ்வொரு செயலும் நமது குறிக்கோளை அடையும் முயற்சியாக இருக்க வேண்டும்.

சரி, பதஞ்சலி இதையா சொல்லி இருக்கிறார்  என்றால் இல்லை.

அவர் சொன்னது, செயலும் குறிக்கோளும் ஒன்றாக இருந்தால் தடைகளை மீர் குறிக்கோளை அடையலாம் என்று.

அவர் நினைத்துச் சொன்னது, சமாதி நிலை அடையும் குறிக்கோளை.

எப்படி சமாதி நிலை அடைவது என்றால் , நமது எல்லா செயல்களும் அதை அடைவதை நோக்கியே இருக்க வேண்டும்.

சமாதி நிலைக்கு பின்னால் வருவோம்.

முதலில் சின்ன சின்ன விஷயங்களில் குறிக்கோளை சரி செய்து, அவற்றை அடைந்து விட்டால் , அது ஒரு பழக்கமாகி விடும். பின் சமாதி அடைய என்ன செய்ய வேண்டும் என்று அறிந்து அதைச் செய்யலாம்

எடுத்தவுடனேயே சமாதி அடைய போகிறேன் என்று ஆரம்பித்தால் சரியாக வராது.

கொஞ்சம் கொஞ்சமாக செல்வோம்.

வாழ்க்கையை நெறி படுத்துங்கள். உயர்ந்த குறிக்கோளை கொள்ளுங்கள்.

வெள்ளத்து அணையது மலர் நீட்டம், மாதர் தம் உள்ளத்து அணையது உயர்வு

என்பார் வள்ளுவர்.

உயர்ந்த குறிக்கோள். அதை அடைய விடா முயற்சி உங்களை சிறந்தவர்களாகச் செய்யும்.

எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியர் திண்ணியாராகப் பெறின் என்பது வள்ளுவம்.

சமாதி நிலை அடைவது மட்டும் அல்ல, வாழ்வில் நீங்கள் நினைத்த எதையும் அடைய இதுவே வழி.

http://yogasutrasimplified.blogspot.in/2017/11/22.html

Friday, November 24, 2017

யோக சூத்திரம் - 2.1 - கிரியா யோகம்

யோக சூத்திரம் - 2.1 - கிரியா யோகம் 


तपः स्वाध्यायेश्वरप्रणिधानानि क्रियायोगः ॥१॥

tapaḥ svādhyāy-eśvarapraṇidhānāni kriyā-yogaḥ ॥1॥

tapaḥ = தவம்

svādhyāy = சுய அறிதல்

eśvarapraṇidhānāni = அர்ப்பணிப்பு

kriyā-yogaḥ = கிரியா யோகம்

முந்தைய அத்தியாயத்தில் மனம் எவ்வாறு சலனம் அடைகிறது, அவ்வாறு சலனம் அடைவதால் நாம் எவ்வாறு உலகை சரியாக புரிந்து கொள்ள முடியாமல் துன்பப் படுகிறோம், சித்த நிரோதம் என்ற நிலையை அடைந்த யோகி எப்படி இருப்பான் என்று  கூறினார்.

சரி,  அதை எப்படி அடைவது என்ற கேள்வி எழும் அல்லவா ?

அதை எப்படி சாதிப்பது என்று இந்த சாதன பாதத்தில் கூறுகிறார்.

முன்பே கூறியது போல, பதஞ்சலி வள வள என்று பேசுபவர் அல்ல. மிக மிக சுருக்கமாக நேரடியாக  சொல்லுவார்.

சாதன பாதத்தில் முதலில் கிரியா யோகம் பற்றி கூறுகிறார்.

கிரியா யோகம்  என்பது மூன்று பகுதிகளை கொண்டது.

தவம்

தன்னை அறிதல்

அர்பணிப்பு

தவம் என்றால் என்ன ?

காட்டில் போய் , பட்டினி கிடந்து, அக்கினிக்கு நடுவில் நின்று கடவுளை நினைப்பதா தவம் ?

அப்படி என்றால் எல்லோரும் நாட்டை விட்டு கட்டுக்குப் போக வேண்டியதுதானா ?

இல்லை.

எது தவம் என்று யாரைக் கேட்டால் சரியாக இருக்கும் ? வள்ளுவரை கேட்போமா ?

உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை
அற்றே தவத்திற்கு உரு

தவத்திற்கு வடிவம் எது என்றால் தனக்கு வந்த துன்பத்தைப் பொறுத்தல், மற்றவர்களுக்கு துன்பம்  செய்யாது இருத்தல் .

அவ்வளவுதான்.

வாழ்க்கை என்பதே ஒவ்வொரு நொடியும் பிரச்சனைகளை வெற்றி கொள்வதுதான். வாழ்க்கை என்பது துன்பம் நிறைந்தது. துக்ககரமானது என்பார்  புத்தர்.

துக்கம் என்றால் ஏதோ சோகம் என்று நினைக்கக் கூடாது.

ஒவ்வொரு செயலும் ஏதோ ஒரு விதத்தில் வலியை தருகின்றன.  வீட்டில் இருந்து  வெளியே செல்ல வேண்டும் என்றால் உடல் உழைக்க வேண்டும். அது ஒரு வலி.   சின்ன வலிதான். இருந்தாலும் வலிதான் . பேசாமல் வீட்டிலேயே இருந்து  விட்டு போகலாமே ? உண்பதும், அவற்றை செரிப்பதும் எல்லாமே  ஒரு வேலை தான். அந்த வேலை செய்யும் போது உடல் உழைப்பு தேவைப் படுகிறது . அது ஒரு சங்கடம். வலி. துன்பம்.

நாம் முன்னேற வேண்டும் என்றால், நம் முன்னால் உள்ள பிரச்சனைகளை நாம்  சரி செய்ய வேண்டும்.

எப்படி பிரச்சனைகளை சரி செய்வது ? அதற்குண்டான நேரம் ஒதுக்கி, அதற்கு தேவையான  உழைப்பை தருவது.

மாணவனாக இருந்தால் , படிக்க வேண்டும்.

வேலை பார்ப்பவராக இருந்தால், வேலை செய்ய வேண்டும்.

பிள்ளைகளை வளர்க்க வேண்டும். வீட்டை நன்றாக வைத்திருக்க வேண்டும்.  உறவுகளுக்கும், நட்புக்கும் நேரம் ஒதுக்க வேண்டும். அளவுக்கு அதிகமாக உண்ணாமல்  நாக்கை கட்டுப் படுத்த வேண்டும், உடற் பயிற்சி செய்ய வேண்டும்.

இப்படி ஒவ்வொன்றும் செய்வதற்கு நேரமும், உழைப்பும் தேவைப் படுகிறது.

உழைப்பு என்றால் வலி இருக்கத்தான் செய்யும்.

தனக்கு வந்த வலியை பொறுத்தல் - தவத்தின் ஒரு கூறு.

வலி பொறுக்க முடியவில்லை என்றால் நீங்கள்  முன்னேற வில்லை என்று அர்த்தம். நீங்கள் உயரும் போது , உங்களின் இன்றைய நிலையை விட்டு உயர்ந்த  நிலைக்கு செல்லும் போது , புது புது பிரச்சனைகள்  வரும். அவற்றை  சமாளிக்க வேண்டும். அப்போதுதான் உயர்வு அடைய முடியும்.

பெரிய நிலையை அடைந்தவர்கள், உயர்ந்தவர்கள் வாழ்க்கையை பாருங்கள். எவ்வளவு வலி தாங்கி வந்திருப்பார்கள் என்று தெரியும். தூக்கம் தொலைத்து, பசி தாகம் மறந்து, பல சுகங்களை தியாகம் செய்து வந்திருப்பார்கள்.  அது தவம்.

சரி, அந்த தவத்தை எதை நோக்கி செய்ய வேண்டும் ?

பணம் வேண்டும்,  பொருள் வேண்டும், வீடு வாசல் வேண்டும், பதவி, அதிகாரம் வேண்டும்  என்று நினைத்து செய்ய வேண்டுமா ?

இல்லை,

தன்னை அறிய தவம் செய்ய வேண்டும்.

உலகிலேயே மிக கடினமான விஷயம் தன்னை அறிவது தான்.  நீங்கள் நினைப்பது போல  அது அவ்வளவு எளிமையான ஒன்று அல்ல.

நீங்கள் செய்யும் ஒவ்வொரு காரியத்துக்கு பின்னாலும் ஒரு காரணம் இருக்கும். ஆனால், நீங்கள் அது என்ன என்றே அறியாமல் செய்து கொண்டிருக்கிறீர்கள். ஒரு இயந்திரத்தைப் போல.

உங்களின் ஒவ்வொரு குணத்துக்கு பின்னாலும் ஒரு காரணம் இருக்கும்.

அது பக்தியாக இருக்கட்டும், பொறாமையாக இருக்கட்டும், புத்தகம் வாசிப்பதாக  இருக்கட்டும் எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும்.

நீங்கள் உங்களை அறியாதவரை , அதற்கு காரணம்  தெரியாது. ஏதோ இயந்திர கதியில்  செய்து கொண்டே போவீர்கள்.

"தன்னை அறிதல்"

என்பது க்ரியா யோகத்தின் இரண்டாவது கூறு.


அர்ப்பணிப்பு (ஈஸ்வர ப்ரணிதானம்).

எதற்க்காக அர்பணிப்பு செய்ய வேண்டும். தவம் செய்து, தன்னை அறிந்து பின் எதற்காக அர்ப்பணிக்க வேண்டும் ?


இந்த அர்பணிப்பு என்பதை பல கோணங்களில் பார்க்கலாம்.

ஒன்று, வாழ்வில் நல்ல விஷயங்கள் எதுவும் முடிவது இல்லை. செய்து கொண்டே இருக்க வேண்டியது தான். அதற்கு இவ்வளவு என்று அளவு கிடையாது. இன்று செய்தோம். அவ்வளவு தான். அதற்கு பலன் என்று எதுவும் கிடையாது.

பிள்ளைகள் மேல் அன்பு செய்கிறோம். இவ்வளவு அன்பு செய்தால் போதும். இதுவரை செய்த அன்பையும் சேர்த்து நமது இலக்கை எட்டி விட்டோம் , இனி மேல்  அன்பு செய்ய வேண்டாம் என்று சொல்ல முடியுமா ? அன்பு செய்து கொண்டே இருக்க வேண்டியது தான்.  அதற்கு என்ன பலன் இருக்க முடியும் ?

உடற் பயிற்சி செய்தோம். எடை குறைந்தது. நிறுத்தி விட முடியுமா ?

கல்வி கற்கிறோம். போதும். என்று நிறுத்தி விட முடியுமா ?

இது போல பல. செய்து கொண்டே இருக்க வேண்டியது தான்.

என்னடா இது நாம் பாட்டுக்கு செய்து கொண்டே இருக்கிறோம். இதற்கு முடிவுதான் என்ன என்று கேட்டால் ஒன்றும் இல்லை. அப்படி என்றால் ஒரு ஆயாசம் வரும்.  அந்த ஆயாசத்தை தவிர்க்கத் தான், அர்ப்பணிப்பு என்ற ஒன்றை சொல்கிறார்கள்.

எனக்காக என்று நான் இதைச் செய்யவில்லை. செய்ய வேண்டியது என் கடமை , செய்து கொண்டு போகிறேன் என்று நினைக்க வேண்டும்.

வாழ்நாள் முழுவதும் செய்து கொண்டே இருக்க வேண்டியது தான்.

அர்ப்பணிப்பு என்றால் யாருக்கு அர்பணிப்பது ?

ஈஸவர ப்ரணிதானி ....

சிக்கல். ஈஸ்வரன் என்றால் யார் ? சிவன் ? விஷ்ணு  ? பரமாத்மா ? ஆளாளாளுக்கு ஒருவரை சொல்லுவார்கள்.

யோக முறையை பின்பற்றுபவர்கள் (yoga school of thought ), ஈஸ்வரன் என்று சொல்லுவது   ஒரு ஆன்மீக உந்து சக்தியை (spiritual inspiration ). ஒரு உயர் நிலையை.

உங்களுக்கு பிடித்த தெய்வத்துக்கு நீங்கள் அர்பணிப்பதில் ஒரு தவறும் இல்லை. அர்ப்பணிப்பு தான் முக்கியம். யாருக்கு என்பதல்ல.

தவம் - தன்னை அறிதல் - அர்ப்பணிப்பு

இந்த மூன்றும் கிரியா யோகத்தின் மூன்று கூறுகள். இது தான் சாரம். விளக்கம் என்பது ஒரு விவாதப் பொருள். அவ்வளவு தான். மூலத்தை பிடித்துக் கொள்ளுங்கள்.

மொத்தம் 45 ஸ்லோகங்கள் உள்ள அத்யாயம். வாருங்கள் மேலும் சிந்திப்போம்.

http://yogasutrasimplified.blogspot.in/2017/11/21.html

Thursday, November 23, 2017

யோக சூத்திரம் - 1.51 - எண்ணங்களை கடந்த படிமங்கள்

யோக சூத்திரம் - 1.51 - எண்ணங்களை கடந்த படிமங்கள் 



तस्यापि निरोधे सर्वनिरोधान्निर्बीजः समाधिः ॥५१॥

tasyāpi nirodhe sarva-nirodhān-nirbījaḥ samādhiḥ ॥51॥



tasya =  அதில் இருந்து
api = மேலும்
nirodhe = நிறுத்துதல், கட்டுப்பாடு, கட்டுப்படுத்தல்
sarva = அனைத்தும்
nirodhat = கடந்த பின்
nirbījaḥ = விதை இல்லாமல்
samādhiḥ = சமாதி

சமாதி பாதத்தின் கடைசி சுலோகம்.

சமாதியின் உச்சம், முடி இந்த சுலோகம்.

பீஜம் என்றால் விதை. வித்து. விதையில் இருந்து, செடி முளைக்கிறது. செடியில் இருந்து மரம், பின் காய், கனி, அதில் இருந்து இன்னொரு விதை என்று போய் கொண்டே இருக்கிறது. ஒரு விதையில் இருந்து பல்லாயிரக்கணக்கான விதைகள் தோன்றும்.

நிர் பீஜம் என்றால் விதை இல்லாத.

நிர் பீஜ சமாதி என்றால் = விதை இல்லாத சமாதி. அது தான் சமாதியின் இறுதி நிலை. உச்ச நிலை.

அது என்ன விதை இல்லாத சமாதி ?

சமாதியின் தொடக்கத்தில் யோகி இந்த உலகை அவற்றில் உள்ளவற்றை அவற்றின் பெயர் கொண்டு அறிகின்றான். இது மரம், செடி, தாய், தந்தை, கணவன் , மனைவி என்று அனைத்துக்கும் ஒரு பெயர். அவை செய்யும் செயல்களுக்கு ஒரு பெயர். இவை தான் அவை அறிந்தவை.

அடுத்தது, பெயர் இல்லாமல் அவன் அவற்றை அறிய முற்படுகிறான். வார்த்தை அவனது  சிந்தனைக்கு இடையில் வருவது இல்லை. சூரிய உதயத்தைப் பார்க்கிறான் என்றால், அது சூரியன், கடல், காலை நேரம், சிவப்பாக அழகாக இருக்கிறது என்று அவன் நினைப்பது இல்லை. அந்த அழகை  வார்த்தை ஏதும் இல்லாமல் உணர தலைப்படுகிறான்.

கொஞ்சம் கொஞ்சமாக, வெளியே செல்லும் சிந்தனைகளை உள் நோக்கி திருப்புகிறான்.

தன்னைத் தானே அறிய முற்படுகிறான்.

அடுத்த கட்டத்தில் உலகில் உள்ளவற்றை புலன்கள் மற்றும் அறிவின் துணையின்றி நேரடியாக அறிய தலைப்படுகிறான்.

இதுவரை , ஏதோ ஒரு விதத்தில் அறிந்து கொண்டிருந்தான். அறிதல் என்று ஒன்று இருந்தால், அறிபவன், அறியப் படுவது என்ற இரண்டும் உண்டு.

நாம் அறிகிறோம் என்ற எண்ணம் இருக்கும் வரை, நான் என்ற அந்த உணர்வு இருக்கும் வரை உலகம் முழுவதும் புரிபடுவது இல்லை.

நான் அறிகிறேன் என்றால், அறிதல் நிகழும், அறியாமை புலப்படும், என் அறிவின் எல்லை தெரியும், அறிவின் கண் கொண்டு பார்ப்பதால், உண்மை என்ன என்று தெரியாது.

அந்த மாதிரி சமயத்தில் ஒரு அறிதல் , பல அறியாமைகளை சுட்டிக் காட்டும். அதில் இருந்து மேலும் சில அறிதல்கள் நிகழும். அதில் இருந்து மேலும் பல அறியாமை என்று  விதையில் இருந்து மரம், மரத்தில் இருந்து விதை என்று போய் கொண்டே இருக்கும்.

ஒரு உதாரணம் பார்ப்போம்.

நான் உங்களிடம் ஒரு பேனாவை காட்டி, இது இந்த கம்பெனி செய்த பேனா என்று சொல்லுகிறேன் என்று வைத்துக் கொள்ளுங்கள்.

இது ஒரு புதிய செய்தி. புது அறிவு.

இப்போது இந்த அறிவு என்ன செய்கிறது தெரியுமா ?

இதன் விலை என்ன ? எங்கே தயாரிக்கிறார்கள் ? எந்த மாதிரி மை போடணும் ? ஒரு தரம் போட்டால் எவ்வளவு நாளைக்கு வரும் ? வேறு யார் எல்லாம் இது மாதிரி பேனா தயார் செய்கிறார்கள் ? இது எத்தனை நிறத்தில் வருகிறது ?  இதன் எடை என்ன ? கீழே விழுந்தால் உடையுமா ?

என்று ஆயிரம் விடை தெரியாத கேள்விகள் வரும்.

அறியாமை வெளிப்படும். விடை தேடி மனம் அலையும். ஒரு சில கேள்விகளுக்கு விடை தெரியலாம். அந்த தெரிந்த விடையில் இருந்து இன்னும் பத்து கேள்விகள் புறப்படும்.

இதுதான் பீஜம். நிர் பீஜம் என்பது இந்த தொடர்பை அறுப்பது.

அறிவு வேலை செய்வது நின்று போகும்.

அறிவு என்பது பழையனவற்றின் தொகுப்பு. அறிவு என்பது இறந்த காலம்.

அறிகிறோம், அறிதல் என்ற ஒன்றே இருக்காது இந்த நிர் பீஜ சமாதியில்.


அறிபவன் என்று யாரும் இல்லை.

அந்த நிலை வரும்போது, அனுபவம் நிகழாது. அனுபவிப்பவன் இல்லாததால். அனுபவ தொகுப்பு இருக்காது.  அறிதலும் அறியாமையும் இருக்காது.

அமைதி மட்டுமே இருக்கும்.

அறிதல் என்பது ஒரு செயல். ஒரு நிகழ்வு. அது நிகழும் போது மனதில் , சித்தத்தில் ஒரு  சலனம் உண்டாகத்தான் செய்யும். நிர் பீஜ சமாதி நிலையில், அறிதல் என்பது இல்லை என்பதால், சலனம் என்பதே இல்லை. மனம் சலனமற்று இருக்கும்.

அதை எப்படி அடைவது என்று அடுத்து வரும் அத்தியாயங்களில் காணலாம்.

சமாதி பாதம் நிறைவு பெற்றது.

சாதன பாதம் நாளை தொடங்கும்.


http://yogasutrasimplified.blogspot.in/2017/11/151.html

யோக சூத்திரம் - 1.50 - புலன் மற்றும் அறிவைத்தாண்டி

யோக சூத்திரம் - 1.50 - புலன் மற்றும் அறிவைத்தாண்டி 


तज्जस्संस्कारोऽन्यसंस्कार प्रतिबन्धी ॥५०॥

tajjas-saṁskāro-'nya-saṁskāra pratibandhī ॥50॥

tad = இதில்
ja = இருந்து
saṁskāra = படிமங்கள்
anya = மற்ற
saṁskāra = படிமங்கள்
pratibandhī = தடுக்கிறது,குறைகின்றது,  மற்ற ஒன்றை தருகிறது

ஒரு பூவை ஒரு கவிஞன் பார்க்கிறான். அவன் மனதில் ஆயிரம் கவிதை ஓடுகிறது. அதே பூவை நாமும் பார்க்கிறோம். நன்றாக இருக்கிறது என்று மட்டும் தோன்றுகிறது. கவிதை எல்லாம் வருவது இல்லை.

ஒரு பெண்ணை அவளின் காதலன் பார்பதற்கும், மற்றவர்கள் பார்பதற்கும் வேறுபாடு இருக்கிறது அல்லவா ?

நமது புலன்கள் மிக நுட்பமானவை அல்ல. அவைகளுக்கென்று ஒரு அறிவும் கிடையாது. வெளியில் இருந்து செய்திகளை உள்ளே அனுப்ப வேண்டியது. அவ்வளவுதான் அவற்றின் வேலை.  அதிலும் கூட ஓரளவுதான் செய்யும். அதற்கு மேலும் , கீழும் உள்ளவைகளை அவற்றால் அறிய முடியாது.

கொஞ்ச தூரம் வரை தான் கண் பார்க்கும். அதற்கு மேல் வேண்டும் என்றால் telescope வேண்டும். ஒரு அளவு பருமன் உள்ளதை மட்டும் தான் கண் பார்க்கும், அதை விட சிறியது என்றால் microscope வேண்டும். இப்படி எதிலும் ஒரு இடைப்பட்ட ஒன்றை மட்டும் தான் நம் புலன்கள் உணரும்.


இது ஒரு சிக்கல்.

அடுத்த சிக்கல் என்ன என்றால், இந்த செய்திகளை அறியும் மூளை அல்லது அறிவு இருக்கிறதே, அதுவும் ஓரளவுதான் செயல் படும். ஒரே நேரத்தில் பல விஷயங்கள் வந்து கொண்டே இருக்கும். அது மட்டும் அல்லாமல், மூளை அது பாட்டுக்கு வேறு ஒன்றை நினைத்துக் கொண்டு இருக்கும்.


வீட்டில் மனைவி ஆசை ஆசையாக ஏதாவது இனிப்பு செய்து வைத்திருப்பாள். அலுவலகத்தில் ஏதோ ஒரு சிக்கல் . மனம் அதையே நினைத்துக் கொண்டிருக்கும். இனிப்பு தெரியாது.

மனதில் ஆயிரம் எண்ண ஓட்டங்கள் இருந்து கொண்டே இருக்கு. ஒரு நொடி கூட அது சும்மா இருப்பது இல்லை. எனவே, புலன்கள் அனுப்பும் சங்கதிகளை அறிவு முழுவதுமாக உணர்வதே இல்லை.

வருவதே சொற்பம். வந்ததையும், சரியாக புரிந்து கொள்வது இல்லை.

எனவே நாம் உலகை அறிய பயன்படுத்தும் நம் பொறிகளும், அறிவும் நமக்கு அரைகுறையாக உலகை நமக்கு அறியத் தருகின்றன.


நாம் இந்த உலகை, அதில் உள்ளவற்றை ஒரு போதும் முழுவதும் அறிந்து கொள்வதே இல்லை. அரை குறையாக அறிந்து கொண்டு அல்லல் படுகிறோம்.

எனவே இந்த புலன்களும், அறிவும் சரிப்படாது என்று புரிகிறது அல்லவா ?

புலன்களும் அறிவும் உலகை நமக்கு வடிகட்டித் தருகின்றன.

ஒரு பெரிய அறிஞர் பேசுகிறார். ஆனால் அவர் பேசும் மொழி நமக்குத் தெரியாது. ஒரு மொழி பெயர்பாளரை வைத்துக் கொள்கிறோம்.

சிக்கல் எவ்வளவு என்று பாருங்கள்.

முதலில் அந்த அறிஞர் தான் நினைத்ததை தனது மொழியில் சொல்ல வேண்டும். அது ஒரு சிக்கல். நினைப்பதை எல்லாம் சொல்லில் வடித்து விட முடியாது.

அவர் சொன்ன பின், மொழி பெயர்ப்பாளர் அதை நமக்குத் தெரிந்த மொழியில் மொழி பெயர்க்கிறார். அறிஞர் சொன்ன சொல்லுக்கும், இவர் நமது மொழியில் கண்ட சொல்லுக்கும் நூறு சதம் ஒற்றுமை இருக்குமா என்பது சந்தேகம்.

சரி மொழி பெயர்த்து விடுகிறார் என்றே வைத்துக் கொள்வோம். நாம் அந்த சொல்லை கேட்கிறோம். நமக்கு அந்த சொல்லின் அர்த்தம் தெரியும். ஆனால், அது தான் மொழி பெயர்ப்பாளர் நினைத்த அர்த்தம் என்று சொல்ல முடியாது.

இப்படி வடி கட்டி வடி கட்டி வரும் போது உண்மை மறைந்து போய் விடுகிறது.

உதாரணமாக இயேசு கிறிஸ்து அராமை என்ற மொழியில் பேசினார். அதில் இருந்து ஹீப்ரு மொழிக்குப் போய் , அங்கிருந்து கிரேக்கம், லத்தீன் மொழிகளுக்குப் போய் , அங்கிருந்து ஆங்கிலத்துக்குப் போய் , அங்கிருந்து தமிழுக்கு வருகிறது அவர் சொன்ன விஷயங்கள். நாம் தமிழில் படிக்கும் பைபிள் இயேசு சொன்னது தான் என்று உறுதியாகச் சொல்ல முடியுமா ?

சரி, இந்த அறிவும் புலன்களும் இல்லை என்றால் வேறு எப்படித்தான் அறிந்து கொள்வது ?


நிர்விசார சமாதி அடைந்த யோகி, அறிவும் புலன்கள் இவற்றின் துணை இல்லாமல் நேரடியாக அறிவான்.

அது என்ன நேரடியாக அறிவது ?


மீண்டும் உலக நடைமுறைக்கு வருவோம்.

காதலனும் காதலியும் சந்திக்கிறார்கள்.  அவர்கள் பேச வேண்டும் என்பது இல்லை. கண்கள் ஒன்றை ஒன்று பார்த்தாலே போதும். ஆயிரம் வார்த்தைகள் சொல்லாததை ஒரு பார்வை சொல்லும்.

கண்ணோடு கண்இணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள்

என்ன பயனும் இல

சொல்லால் எந்த பயனும் இல்லை என்கிறார் வள்ளுவர்.  பேசாமலேயே , ஒருவர் மனதில் இருப்பது இன்னொருவர் மனதுக்கு தெரிந்து விடும்.

உண்டா இல்லையா ?

ஒரு மென்மையான  கை பிடியில் அன்பு கொட்டிக் கிடக்கும். அவளுக்கு மட்டும் தெரியும்.

ஒரு தாய் , தன் குழந்தையின் உளறலுக்கு அர்த்தம் கண்டு விடுவாள். அது மொழி வழி வந்த அர்த்தம் அல்ல. மொழி என்றால், காது, கேட்க வேண்டும். வார்த்தையின் ஒலி வடிவத்தை அறிவு அறிந்து சொல்ல வேண்டும். குழந்தை ஒன்றும் பேசவில்லை. ஏதோ உளறுகிறது. தாய் அதை அறிந்து கொள்வாள்.

புலன்கள் மற்றும் அறிவை தாண்டி அது நேரடியாக அறிந்து கொள்ளும் விதம்.

இது எப்படி சாத்தியமாகிறது ?

காதலனும் காதலியும் , இருவர் அல்ல, ஒருவராக மாறிவிடுகிறார்கள். அவள் ஏதோ ஒன்றை நினைக்கிறாள். அவள் இதைத்தான் நினைக்கிறாள் என்று அவன் உணர்ந்து கொள்கிறான். இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளி மறைந்து போய் விடுகிறது.

இன்னும் ஒரு படி மேலே போய் சொல்ல முடியும்.

மிகவும் அன்பு கொண்ட கணவன் மனைவி இருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். கணவன் வெளியூர் போயிருப்பான், எங்கோ தொலை தூரம். அவனுக்கு  அங்கே ஒரு துன்பம் என்றால், மனைவிக்கு எங்கே என்னமோ செய்யும். இவள் சங்கடப் படுவாள். அவருக்கு என்னவோ துன்பம், ஆபத்து என்று இவளுக்குத் தெரியும். எப்படி ?

குழந்தை இன்னொரு அறையில் தூங்கிக் கொண்டிருக்கும். தொட்டிலுக்குள் அது பசித்து விழித்தால் , மற்றொரு அறையில் ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கும் தாய்க்கு அது தெரியும். தானே விழித்துக் கொள்வாள். யாரும் எழுப்ப வேண்டாம்.

யோகிக்கு , இந்த உலகமே அப்படித்தான். அவன் உலகை தன்னுள் அறிகிறான். உலகம் வேறு தான் வேறு என்று அவன் நினைப்பது இல்லை. இரண்டும் கலந்து விடுகிறது.

அறிவும் வேண்டாம், புலனும் வேண்டாம்.

கண் மூடி மனதுக்குள் சிந்தியுங்கள்.

http://yogasutrasimplified.blogspot.in/2017/11/150.html

Tuesday, November 21, 2017

யோக சூத்திரம் - 1.49 - அறிவும், வெளி உலக தொடர்பும்

யோக சூத்திரம் - 1.49 - அறிவும், வெளி உலக தொடர்பும் 



श्रुतानुमानप्रज्ञाअभ्यामन्यविषया विशेषार्थत्वात् ॥४९॥

śruta-anumāna-prajñā-abhyām-anya-viṣayā viśeṣa-arthatvāt ॥49॥

Consciousness is characterized by a special relationship to the object. This relationship exceeds the bounds of knowledge that is received and followed. ||49||


śruta = கேட்டல்
anu = அவற்றில் இருந்து
māna = மனம்
anumāna = அனுமானம். யூகித்தல்
prajñā = பிரஞ்ஞா. அறிவு நிலை.
anya = அந்நியம், வெளியில் உள்ளவை
viṣayā = விஷயம் , பொருள்கள்
viśeṣa = விசேஷம்
artha = அர்த்தம்
arthatvāt = அர்த்தங்களின் தத்துவம், அல்லது ஆழ்ந்த உண்மையான அர்த்தம்

பதஞ்சலி வார்த்தைகளை மிக மிக சுருக்கமாக உபயோகப் படுத்துவார். வள்ளுவரின் குறள் போல. ஒவ்வொரு வார்த்தைக்கு பின்னாலும் பெரிய பொருள் புதைந்து கிடக்கும். நாம் தான் தோண்டி எடுக்க வேண்டும்.

பொதுவாக நாம் இந்த உலகை எப்படி அறிகிறோம் ?

நமது புலன்கள் வாயிலாக. கண்டு, கேட்டு, முகர்ந்து, சுவைத்து, தொட்டு அறிகிறோம். கண், காது , மூக்கு, நாக்கு, தோல் என்ற இந்த ஐந்து புலன்களும் நமக்கு அறிவை பெற்றுக் கொள்ளும் கருவிகளாக இருக்கின்றன. அல்லவா ?

காது கேட்காவிட்டால் இசை, இராகம், தாளம் , பறவைகளின் ஒலி , போன்றவை என்ன என்றே நமக்குத் தெரியாமல் போய் விடும்.

அதே போல் கண் இல்லை என்றால் நிறம் என்றால் என்ன, ஒளி, இருள் என்றால் என்ன என்று தெரியாது.

இப்படி ஒவ்வொரு புலனும் நமக்கு அறிவை பெற்றுத் தருகின்றன.

நமக்கு ஐந்து புலன்கள் இருப்பதால், ஐந்து அறிவு சாத்தியம்.

இவை மட்டும் இல்லாமல், நமக்கு மனம் என்ற ஆறாவது ஒரு புலன் இருக்கிறது.  மனதின் மூலம் நாம் அனுமானித்து சிலவற்றை அறிகிறோம்.

தூரத்தில் புகை வருகிறது என்றால் அங்கே தீ இருக்கும் என்று அறிகிறோம். அந்த தீயை நாம் காணவும் இல்லை, கேட்கவும் இல்லை, வெப்பத்தை உணரவும் இல்லை இருந்தாலும் தீ இருக்கிறது என்று அறிந்து கொள்கிறோம். காரணம் மனம்.

அது யாராவது பொறி. மனம் வேலை செய்வதால் நாம் ஆறறிவு உடைய பிராணிகள். இல்லை என்றால் நாமும் ஐந்து அறிவு ஜீவன்கள் தான்.


மனம் வேலை செய்வதால் மனிதன் என்று அழைக்கப் படுகிறான்.

எனவே, இந்த ஆறு பொறிகளின் வாயிலாக நாம் இந்த உலகை அறிகிறோம்.

அது பொருளாக இருக்கட்டும், மனிதர்களாக இருக்கட்டும், உணர்வு பூர்வமான விஷயமாக இருக்கட்டும், இந்த ஆறில் ஒன்றோ ஒன்றுக்கு மேற்பட்டவையோ நமக்கு  உதவி செய்கின்றன.

சரி தானே ? அதில் சந்தேகம் இல்லையே ?

இப்போது பதஞ்சலி புதிதாக ஒன்றை சொல்கிறார்.

நிர்விசார சமாதியை அடையும் போது , இந்த புலன்களின் வழி இல்லாமால் நம்மால் இந்த உலகை நேரடியாக அறிய முடியும் என்கிறார்.

புலன்களை by paas செய்து விட்டு, நாம் இந்த உலகை நேரடியாக அறிய முடியும் என்கிறார்.

புலன்கள் மந்தமானவை.

ஒரு குறிப்பிட்ட தூரம் தெரியும். ஒரு குறிப்பிட்ட அளவுள்ள சத்தம் தான் கேட்கும். ஓரளவுக்கு பெரிய உருவங்கள்தான் தெரியும். அதை விட சிறியவை கண் முன் இருந்தாலும் தெரியாது. நுண்ணோக்கி (microscope ) வேண்டும்.

அது மட்டும் அல்ல, நமக்கு 5 புலன்கள் இருக்கின்றன என்பதால், பொருள்களுக்கும் ஐந்து குணங்கள்தான் இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. அவற்றிற்கு ஐந்துக்கும் மேற்பட்ட குணங்கள் இருக்கலாம். நம்மால் அவற்றை  அறியவே முடியாது.

கண் தெரியாத ஒருவருக்கு நிறம் என்றால் என்ன என்று எப்படி சொல்வீர்கள்?  சிந்தித்துப் பாருங்கள்.

அது போல,  இந்த புலன்களைத் தாண்டி பல குணங்கள் இருக்கலாம். அவற்றை அறிய இந்த புலன்கள் உதவாது.

மேலும்,

பொருள்கள் என்பது என்ன ?

குணங்களின் தொகுப்பு.

மல்லிகை என்றால் என்ன ?

வெண்மையாக இருக்கும், நல்ல வாசம் தரும், சின்னதாக இருக்கும், பச்சை நிறத்தில் காம்பு இருக்கும் என்று பல குணங்களின் தொகுப்பு தான் மல்லிகை என்பது.

குணங்கள் என்பது நாம் அவற்றை அறிவதில் இருக்கிறது. ஒருவனுக்கு இராகமாக இருப்பது இன்னொருவனுக்கு சத்தமாக கேட்கிறது. பஞ்சு மெத்தை ஒருவனுக்கு, அதே முள் படுக்கை இன்னொருவனுக்கு.

குணங்கள் , பொருளில் இருக்கிறதா, அதை அறியும் நம்மிடம் இருக்கிறதா ? பொருளில் இருக்கிறது என்றால் மிளகாய் காரம் என்று எல்லோரும் சொல்ல வேண்டுமே ? ஒருவன் உரைப்பே இல்லை என்கிறான், ஒருவன் காரம் மண்டையை பிடிக்கிறது என்கிறான்.

எனவே, குணம் என்பது பொருள் மற்றும் நம் அனுபவம் என்ற கலப்பில் இருக்கிறது. இரண்டும் சேரும் போதுதான் ஒரு பொருளின் தன்மை புலப்படுகிறது.

எனக்குள் அந்த தன்மையை எது அறிகிறது என்று யோகி அறிய முற்படுகிறான்.

அப்படி அறியும் போது , புலன்கள் இல்லாமல் , புலன்களைத் தாண்டி அவன் நேரடியாக உலகை அறிகிறான்.

அவன் அறிவு புலன் சார்ந்தது அல்ல. அனுபவம் சார்ந்தது.

அங்கே அறிபவனும், அறியப்படுவதும், அறிதலும் ஒன்றாக இருக்கும். வெளி உலகம் என்று ஒன்று இல்லை.

சிற்றின்பம் என்பதை அறிந்தவர்கள் , இதை ஓரளவு புரிந்து கொள்ள முடியும்.

ஆணும் பெண்ணும் இணையும் அந்த கணத்தில், ஆண் இல்லை, பெண் இல்லை, அனுபவமும் இல்லை, ஆனாலும் எல்லாம் இருக்கிறது.

புலன்கள் மூலம் தான், இருந்தாலும் ஒரு கட்டத்தில் புலன்களை கடந்து அந்த அனுபவம் நிகழ்கிறது.

"காதல் மடப் பிடியோடு களிறு வருவன கண்டேன்,
கண்டேன் அவர் திருப் பாதம், கண்டறியாதன கண்டேன் "

என்றார் நாவுக்கரசர்.

யானையை பார்த்தது இல்லையா அவர்.

யானை இல்லை அவர் சொல்ல வந்தது.

ஆண் யானையும், பெண் யானையும் ஒன்று சேரும்போது நிகழும் அந்த இரசவாதம்.

புலன்கள் அற்றுப் போகும் அந்த இடத்தில் உள்ளும் வெளியும் ஒன்றாக சேர்ந்து விடும் (fusion ). அந்த அனுபவம்.

"உலகெல்லாம் உணர்ந்து ஓதற்கரியவன் " என்பார் சேக்கிழார்.

உணர முடியும்,சொல்ல முடியாது.

"சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார் , செல்வர் சிவ புரம்" என்பார் மணிவாசகர்.


புலன்கள் மூலம் அறியாத அந்த அறிவு ஒரு விஷேஷ அறிவு என்கிறார்.

"நீக்கமற  நிறைந்து " என்பார்கள். நான் வேறு, இந்த உலகம் வேறு அல்ல. இரண்டும் வேறு அல்ல. ஒன்றே தான். வேறு போல தெரிகிறது , இந்த் புலன்கள் இருப்பதால். இவற்றைத் தாண்டினால், எல்லாம் ஒன்றாகிப் போகும்.

சிந்திப்போம்.

http://yogasutrasimplified.blogspot.in/2017/11/149.html

Monday, November 20, 2017

யோக சூத்திரம் - 1.48 - உண்மை அறிதல்

யோக சூத்திரம் - 1.48 - உண்மை அறிதல் 


ऋतंभरा तत्र प्रज्ञा ॥४८॥

r̥taṁbharā tatra prajñā ॥48॥



r̥tam = உண்மை, சத்யம்
bharā = நிரம்பி இருக்கும் , சூல் கொண்டு
tatra = அங்கே
prajñā = பிரஞ்ஞா , உண்மையான அறிவு, அறிதல் பற்றிய உணர்வு


அந்த இடத்தில், அந்த நேரத்தில் உண்மை அறிதல் நிகழும். 

நம் அறிவு என்பது உண்மை, பொய் என்று எல்லாம் நிறைந்தது. அதனால் நமக்கு அடிக்கடி சந்தேகம் வருகிறது. நாம் நினைப்பது சரிதானா என்ற சந்தேகம் வருகிறது.

ஒருவேளை நாம் சரி என்று நினைத்துக் கொண்டிருப்பது தவறாக இருக்குமோ என்று மனம் சஞ்சலப் படுகிறது.

இத்தனை நாள் சரி என்று நினைத்தது இப்படி ஆகி விட்டதே என்று கவலைப் படுகிறோம்.

காரணம், நம் அறிவு முழுமை பெற்றது அல்ல.

தவறானவற்றை சரி என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். சரியானவற்றை தவறு என்று நினைத்துக் கொண்டு இருக்கிறோம்.

இதற்கு காரணம் என்ன ?

நம் அறிவு என்பது முழுக்க முழுக்க இரவல் அறிவு. யார் யார் சொன்னதெல்லாம் நாம் உண்மை என்று நம்பிக் கொண்டிருக்கிறோம். நமக்கென்று ஒரு  உண்மையான அனுபவம் கிடையாது. மற்றவர்களின் அனுபவத்தை நம் அனுபவம் போல , நாமே கண்டு பிடித்தது போல சொல்லிக் கொண்டு திரிகிறோம்.

முந்தைய சூத்திரத்தில் அதைத்தான் சொன்னார் - அனுபவ அறிவு. உண்மையின் நேரடி தரிசனம்.

நீச்சல் அடிப்பது எப்படி என்று ஆயிரம் புத்தகம் படித்தாலும் , நீருக்குள் இறங்கி  ஒரு நிமிடம் நீந்தி வரும் அனுபவத்துக்கு ஈடாகாது.

உண்மையான அறிவு உள்ளே செல்ல வழி இல்லாமல் , பொய்யான, இரவல் ஞானங்களை இட்டு  நிரப்பி வைத்திருக்கிறோம்.

எல்லாவற்றையும் காலி செய்யுங்கள். அப்போதுதான் புது பொருள்கள் வைக்க இடம் இருக்கும்.

அடுத்தது, வீட்டின் கதவு ஜன்னல்களை எல்லாம் மூடி வைத்திருக்கிறோம்.

நான் இந்த மதம். நான் இந்த ஜாதி. இந்த இனம். இந்த குருவின் சிஷ்யன் . இந்த  வழியில் நடப்பவன் என்றும் மற்றவை எல்லாம் தேவை இல்லை என்றோ அல்லது தவறென்றோ நினைத்து அவற்றை மறுக்கிறோம்.

இப்படி அனைத்து ஜன்னல்களையும் , கதவையும் மூடி வைத்திருந்தால் எங்கே  வெளிச்சம் வரும், எங்கே புதிய காற்று வரும்.

வீட்டை காலி செய்தால் மட்டும் போதாது, கதவு ஜன்னல்களை திறந்து வையுங்கள்.

வெளிச்சம் வந்து வீட்டை நிறைக்கும். புத்தம் புது காற்று வரும்.

வீடு முழுவதும் வெளிச்சமாக , சுத்தமான சுகந்தம் வீசும்.

"அப்போது அறிவு உண்மையால் நிறைந்து இருக்கும்" என்பது சூத்திரம்.


மற்றவர்களின் அனுபவம் உங்கள் அனுபவம் ஆகாது. அனுபவம் நிகழாதவரை உண்மையின் தன்மை புரியாது.

தேடுங்கள். கண்டடைவீர்கள் என்றார் இயேசு பெருமான்.

படியுங்கள் . கண்டடைவீர்கள் என்று சொல்லவில்லை.

நீங்களேதான் தேட வேண்டும்.


படித்ததை, கேள்விப் பட்டதை. வாசித்ததை ஒதுக்கி வையுங்கள். முதலில் இருந்து  தொடங்குங்கள்.

சித்தார்தனுக்கு , அரண்மையில் இல்லாத வசதியா ? எத்தனை புத்தகங்கள் வேண்டுமானாலும் கிடைத்திருக்கும். எத்தனை அறிஞர்களை வேண்டுமானாலும்  வரவழைத்து பாடம் கேட்டிருக்கலாம்.

அத்தனையும் வேண்டாம் என்று உதறிவிட்டு காடு மேடெல்லாம் அலைந்தான் உண்மையைத் தேடி. புத்தனானான்.

அத்தனை சொத்துகளையும் தெருவில் போடு என்று சொல்லி விட்டு கட்டிய கோவணத்தோடு  கிளம்பினார் பட்டினத்தார்.

நீங்களே தேடி கண்டுபிடிக்காதவரை , நீங்கள் அறிந்திருப்பது எல்லாம் உண்மை இல்லை.

தேடுங்கள்

தேடிக் கண்டுகொண்டேன் - திரு
மாலொடு நான்முகனும்
தேடித் தேடொணாத் தேவனை யென்னுளே

தேடிக் கண்டுகொண்டேன்.

என்பார் திருநாவுக்கரசர்.

பழைய குப்பைகளை தூக்கிப் போடுங்கள். தேடல் எளிமையாகும்.


http://yogasutrasimplified.blogspot.in/2017/11/148.html




Friday, November 17, 2017

யோக சூத்திரம் - 1.47 - அனுபவமும் , பிரசாதமும்

யோக சூத்திரம் - 1.47 - அனுபவமும் , பிரசாதமும் 

निर्विचारवैशारद्येऽध्यात्मप्रसादः ॥४७॥


nirvicāra-vaiśāradye-'dhyātma-prasādaḥ ॥47॥


nirvicārā = நிர் விசார
vaiśāradye = அனுபவம்
adhy = அது வரும்போது
ātma = உண்மையான
prasādaḥ = பிரசாதம்


நிர்விசார சமாதியின் அனுபவம் நிகழும் போது , அதுவே உண்மையான பிரசாதம். 

எங்கள் வீட்டில் ஒரு புதுவித இனிப்பு பலகாரம் செய்தோம்.  இதுவரை யாரும் அந்த மாதிரி செய்தது இல்லை. சும்மா செய்து பார்த்தால் எப்படி இருக்கும் என்று செய்து பார்த்தோம். மிக நன்றாக வந்தது. மிக மிக சுவையாக இருந்தது.....

என்று இப்படி சொல்லிக் கொண்டே போகிறேன் என்று வைத்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு ஏதாவது புரிகிறதா ? அது என்ன பலகாரம், எப்படி செய்வது ...ஒன்றும் தெரியாது. "வாயில போட்டா அப்படியே கரையும்" ..."என்ன மாதிரி வாசம் தெரியுமா ", "பாக்கவே அழகா இருக்கும் " என்று நான் அடுக்கிக் கொண்டே   போகிறேன்.

உங்களுக்கு ஒன்றும் புரியவில்லை.

ஆனால், என் மேல் உங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது. நான் பொய் சொல்ல மாட்டேன் என்று.

நீங்கள் உங்கள் நன்பரிடம் போய் நான் செய்த பலகாரம் பற்றி சொல்கிறீர்கள். "அது எப்படி இருக்கும் தெரியுமா...வாயில போட்டா அப்படியே   கரையும், பாக்கவே அவ்வளவு அழகா இருக்கும் ..." என்று நான் சொன்னதை  அப்படியே திரும்பிச் சொல்கிறீர்கள்.

அவர் அவருடைய நண்பரிடம்...இப்படி போய் கொண்டே இருக்கிறது அந்த பலகாரக் கதை.


என்னைத் தவிர யாருக்கும் அது என்ன என்றே தெரியாது. அதை சுவைத்து அனுபவித்தவன்  நான் மட்டும் தான் .

இந்த கதை எப்படி ஒரு போலியான ஒன்று தெரிகிறது அல்லவா ?

வாழ்க்கையில் பல விஷயங்கள் அப்படித்தான் இருக்கிறது. கடவுள், சொர்கம், நரகம், பாவம் , புண்ணியம், ஆத்மா, மறு பிறப்பு, வினை பலன் என்று  நிறைய விஷயங்கள் நமக்கு நேரடியான "அனுபவம்" கிடையாது. யாரோ சொல்ல, யாரோ கேட்க, அவர் சொல்ல, அவர் இன்னொருவரிடம் சொல்ல...இப்படி வந்த கதைகளை ஏதோ நாமே அறிந்த மாதிரி மற்றவர்களுக்குச் சொல்லிக் கொண்டு  திரிகிறோம்.

அதில் என்ன தவறு இருக்கிறது ? என்று நீங்கள் கேட்கலாம் ? தெரிந்ததைத் தானே சொல்கிறார்கள்.  அதை கேட்டு மற்றவர்களிடம் சொன்னால் என்ன என்று கேட்கலாம்.


ஒரு ஐந்து வயது சிறுமி அவளுடைய தாயிடம் , "அம்மா, நீயும் அப்பாவும் கணவன் மனைவியாக  இருக்கிறீர்கள். ஒரு பெண் , அவளுடைய கணவனிடம் பெறும் சுகம் என்பது என்ன ? அது எப்படி இருக்கும் ? எனக்கு கொஞ்சம் விளக்கிச் சொல்லேன். நானும் நாளை திருமணம் செய்து கொண்டால் எனக்கு உன் விளக்கம் உதவியாக இருக்குமே " என்று கேட்கிறாள்  என்று வைத்துக் கொள்வோம்...

அந்த தாய் என்ன செய்ய வேண்டும் ?

அவள் கணவனிடம் பெற்ற இன்பத்தை ஐந்து வயது சிறுமிக்கு விளக்கிச் சொல்ல முடியுமா ? சொன்னால் தான் புரியுமா ?


அனுபவங்களை மடை மாற்ற முடியாது. ஒவ்வொருவரும் தங்களுக்கு தாங்களே அனுபவித்து அறிந்தால் தான் உண்டு. மற்றவர் அனுபவத்தை எவ்வளவு விளக்கினாலும் ஏறாது.


முகத்தில் கண் கொண்டு பார்க்கின்ற மூடர்காள்
அகத்தில் கண்கொண்டு பார்ப்பதே ஆனந்தம்.
மகட்குத் தாய் தன் மணாளனோடாடிய
சுகத்தை சொல் என்றால் சொல்லுமாறெங்கனே?

என்பார் திருமூலர்.

மகளுக்கு , தாய் தன் மணாளனோடு ஆடிய சுகத்தை சொல் என்றால் சொல்லுவது எப்படி ?

அனுபவம் இல்லாத அறிவு , கடன் வாங்கிய ஞானம். இரவல் ஞானம்.

நம் சொந்த அறிவு அல்ல.

பதஞ்சலி சொல்கிறார்.....இதையெல்லாம் படித்து விட்டு, "ஆஹா எனக்கு நிர்விசார சமாதி கிடைத்து விட்டது  என்று சொல்லிக் கொண்டு தெரியாதே "....

நாளடைவில் உனக்கு அந்த அனுபவம் நிகழும். அது வரை பொறுத்திருக்க வேண்டும் என்கிறார்.

அனுபவம் நிகழவில்லை என்றால் ஏதோ தவறு என்று அறிந்து கொள் .


மருத்துவர் மாத்திரை தருகிறார். நோய் குணமாகவில்லை என்றால், மருந்தை மாத்தித் தருவார். அது போல , அனுபவம் நிகழ வேண்டும். நிகழ வில்லை என்றால், "என்னடா இது இவ்வளவு செய்தோம் ஒன்றும் நிகழ வில்லை, எதற்கு ஒன்றும் நடக்கவில்லை என்று நம்மை நாமே தாழ்த்திக் கொள்ள வேண்டும்...இப்படி இப்படி நடந்து என்று சொன்னால் ஏதோ ஒரு மதிப்பு இருக்கும் அல்லவா " என்று பொய் சொல்லாதே என்கிறார்.

உன்னால் அதை அனுபவித்து உணர முடிகிறதா...அதுவே உண்மை.

அந்த அனுபவம் நிகழும் போது , அதுவே பிரசாதம் என்கிறார்.

பிரசாதம் என்றால் ஏதோ சர்க்கரை பொங்கல், சுண்டல் என்று நினைத்துக் கொள்ளக் கூடாது.

பிரசாதம் என்ற சமஸ்கிரத சொல்லுக்கு நேரடியான தமிழ் சொல் கொஞ்சம் கடினம்.

அருள் நோக்கு, கருணை, grace என்று சொல்லுவார்களே அது நிகழும்.

உங்கள் பார்வையில், நடையில், பேச்சில், ஒரு மென்மை , ஒரு அன்பு, ஒரு அருள், ஒரு கருணை இருக்கும். ஒரு வசீகரம் இருக்கும்.

"நாலாயிரம் கண் படைத்திலனே அந்த நான்முகனே " என்பார் அருணகிரிநாதர். பார்த்துக் கொண்டே இருக்கலாம். அப்படி ஒரு அழகு இருக்கும்.

"ஓவியத்தில் எழுத ஒண்ணா உருவத்தாய் " என்று இராமனை கம்பர் சொல்லுவார். அப்படி சொல்லுக்கும், ஓவியத்துக்கு எட்டாத ஒன்று அந்த அனுபவம் பெற்றவர்களிடம் இருக்கும். அதை வரைந்து காட்டி விட முடியாது.

அது யோகிகளின் தன்மை.

யோகி என்பவன் ஏதோ மெலிந்து போய் , தாடி மீசையோடு, அழுக்கான ஆடையோடு ஒரு பிச்சை காரன் போல இருப்பான் என்றில்லை. அவன் எப்படி இருந்தாலும், அவனிடம் ஒரு வசீகரம் இருக்கும்.

அது உண்மையின் அழகு.

அவன் பேச்சில், அவன் நடையில், அவன் கண்ணில், அது வெளிப்படும்.

http://yogasutrasimplified.blogspot.in/2017/11/147.html



Thursday, November 16, 2017

யோக சூத்திரம் - 1.46 - விதை

யோக சூத்திரம் - 1.46 - விதை 


ता एव सबीजस्समाधिः ॥४६॥

tā eva sabījas-samādhiḥ ॥46॥




tā = இவை (இந்த சமாதிகள்)
eva = மேலும்
sabīja = விதையுடன் கூடியவை
samādhiḥ = சமாதி

 இதுவரை நாம் பார்த்த சமாதிகள் விதையுடன் கூடியவை.

அதாவது , பொருள், அவற்றின் பெயர் , அவற்றின் தன்மை இவற்றை அறிவது.

அடுத்து, பெயர் எதுவும் இல்லாமல் அவற்றை நேரடியாக அறிவது

மூன்றாவது, வெளி நோக்கி செல்லும் சித்தத்தை உள் நோக்கி செலுத்தி தன்னைத் தான் அறிவது.

இந்த மூன்றும் விதையுடன் கூடிய சமாதி நிலைகள்.

அது என்ன விதையுடன் கூடிய சமாதி ?

அதை பார்ப்பதற்கு முன்னால் , நாம் இந்த நிலைகளை கொஞ்சம் சிந்திப்போம்.

நீங்கள், உங்கள் மனதுக்கு பிடித்தவரை பார்க்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். கணவனோ, மனைவியோ, காதலனோ, காதலியோ...யாரோ ஒருவர்.

சாதாரணமாக எப்படி பார்ப்போம் ?

சாதாரணமாக நாம் முகத்துக்கு முகம் கூட சரியாக பார்ப்பது இல்லை. எங்கேயோ பார்த்துக் கொண்டு, எதையோ சிந்தித்துக் கொண்டு, பேசுகிறோம்.

அதைத் தாண்டி, நேரில் அமர்ந்து , அவர்களின் கையைப் பிடித்துக் கொண்டு பேசுகிறீர்கள்  என்று வைத்துக் கொள்வோம்...அப்போது என்ன தெரியும் ? அவர்களின் முகம், கையின் ஸ்பரிசம், முகத்தின் உணர்ச்சிகள் இவை தெரியும். அவர்களின் நல்ல  குணங்கள், சில கெட்ட குணங்கள், சொன்ன வார்த்தைகள் இவை எல்லாம் மனதில் அலை மோதும்.

அடுத்த கட்டம், அவர்களின் அன்பு, நேசம், பாசம், அவர்களோடு செலவழித்த இனிய நினைவுகள் மனதில் ஊசலாடும்.

அடுத்த கட்டம், எப்படி அவர்களின் அன்பு உங்களுக்கு தேவையாக இருந்தது, எப்படி  அது மனதுக்கு இதமாக இருந்தது , சுகமாக இருந்தது என்று தோன்றும்.

இப்படி வெளி உலகில் இருந்து, பொருள்கள், உடல்கள் இவற்றில் இருந்து மென்மையான உணர்ச்சிகளை  தொட்டு பின் நமக்கு அது எப்படி இருந்தது என்று வந்து நிற்போம்.


எது எப்படியாக இருந்தாலும், இவற்றைப் பற்றி சிந்திக்கின்ற நான் என்பது  இருந்து கொண்டே இருக்கும்.

நான் பார்க்கிறேன், நான் இரசிக்கிறேன், நான் அனுபவிக்கிறேன்  என்று ஒவ்வொரு நிலையிலும் , அது வெளியில் உள்ள பொருளாக இருந்தாலும் சரி,  உள் நோக்கி  போவதாக இருந்தாலும் சரி, நான் என்ற எண்ணம் இருந்து கொண்டே இருக்கும்.

நான் என்னை அறிகிறேன், நான் என்னை அறிந்து கொண்டேன் என்று கூறும் போது  அறியும் நான், அறிந்து கொண்ட நான் என்று இரண்டு இருந்து கொண்டே இருக்கும்.

நீங்கள் ஒன்றை அறிகிறீர்கள் என்றால் நீங்கள் வேறு, அறியப் படும் பொருள் வேறு என்று  இரண்டு இருக்க வேண்டும் அல்லவா ? இல்லை என்றால் அறிவது யார் ? அறிவது எதை ?

இந்த பிரிவு இருக்கும் வரை, தொடர்பு இருக்கும்.

தொடர்பு என்று சொல்லும் போது, ஆசை, வெறுப்பு, பயம், அருவெறுப்பு என்று எல்லாம் அதில் அடங்கும்.

இவளே எனக்கு அடுத்த பிறவியிலும் மனைவியாக வேண்டும் என்ற ஆசை இருக்கலாம்.

ஒரு பிறவியே போதும் என்ற வெறுப்பு இருக்கலாம்.


இன்னொரு பிறவி இவளுடனா என்ற பயம் இருக்கலாம்.

எப்படி இருந்தாலும், அந்த பிணைப்பு இருந்து கொண்டே இருக்கும்.

அந்த பிணைப்பு, தொடர்பு இருக்கும் வரை, மனம் மீண்டும் மீண்டும் அதில் விழுந்து  விழுந்து எழும்.

அதைத்தான் விதை என்கிறார் பதஞ்சலி.

எப்படி விதையில் இருந்து மீண்டும் ஒரு மரம் முளைக்கிறதோ, இந்த இருமையினால் (நான், நான் அல்லாத வெளி உலகம் ) மனம் மீண்டும் மீண்டும் விழுகிறது முளைக்கிறது, விழுகிறது முளைக்கிறது.


எண்ண ஓட்டங்கள் இருக்கும் வரை , அலை அடித்துக் கொண்டே இருக்கும். கடல் ஒரு கணம் அலை இல்லாதது போலத் தோன்றினாலும், அடுத்த கணம் பேரலை எழ வாய்ப்பு இருக்கிறது.

இந்த விதை விழுந்து மீண்டும் அதில் இருந்து புது மரம் தோன்றும் செயலை பலர் அறிந்து இருந்தனர்.


உ வே சாமிநாத அய்யர், இறக்கும் தருவாயில், திருவாசகத்தில் இருந்து ஒரு பாடலை வாசிக்கச் சொன்னாராம்.

"வித்து மேல் விளையாமல் " என்ற அந்த பாடல்.

இனி பிறவி இல்லாமல் என்ற அந்தப் பாடல்



பிணக்கு இலாத பெருந்துறைப் பெருமான்! உன் நாமங்கள் பேசுவார்க்கு,
இணக்கு இலாதது ஓர் இன்பமே வரும்; துன்பமே துடைத்து, எம்பிரான்!
உணக்கு இலாதது ஒர் வித்து, மேல் விளையாமல், என் வினை ஒத்த பின்,
கணக்கு இலாத் திருக்கோலம் நீ வந்து, காட்டினாய், கழுக்குன்றிலே!



வித்து மேல் விளையாமல் என் வினை ஒத்த பின்

என்கிறார் மணிவாசகர்.

நல் வினை, தீ வினை என்றும் ஒன்றாக ஆன பின். நல்லது கெட்டது , உயர்ந்தது, தாழ்ந்தது , என்ற வினைகள் எல்லாம் ஒன்றான பின் ....

எப்படி ஒன்றாகும் ?

சிந்தனை முற்றுமாய் நின்ற பின். நான் செய்கிறேன் என்ற அந்த எண்ணம் நின்ற பின், செயல் இருக்கும், செய்பவன் இருக்க மாட்டான்.

செயல், செய்பவன், செய்யப்படுவது எல்லாம் ஒன்றாகி விடும்.

அது வரை , அனைத்து யோகங்களும் , மீண்டும் மீண்டும் சலனத்தைத் தரும், பிறவியைத் தரும், குழப்பமும், தெளிவும் மாறி மாறி வந்து கொண்டே இருக்கும்.

இவை முற்றுமாக நின்றபின் என்ன ஆகும் ?

சிந்திப்போம்.

http://yogasutrasimplified.blogspot.in/2017/11/146_16.html

Wednesday, November 15, 2017

யோக சூத்திரம் - 1.45 - ஆதியை நோக்கி

யோக சூத்திரம் - 1.45 - ஆதியை நோக்கி 



सूक्ष्मविषयत्वम्चालिण्ग पर्यवसानम् ॥४५॥

sūkṣma-viṣayatvam-ca-aliṇga paryavasānam ॥45॥




sūkṣma = சூட்சும
viṣaya = விஷயம்
ca = மேலும்
aliṅga = வெளிப்படாத
paryavasānam = எல்லைகள், முடிவைத் தாண்டி

யோகியின் படிப்படியான நிலைகளை கூறிக் கொண்டு வருகிறார்.

முதலாவதாக, பொருள்கள், மனிதர்கள், அவற்றின் தன்மை , அவற்றின் பெயர், போன்றவற்றை தெளிவாக அறிகிறான் யோகி.


இரண்டாவாது, பொருள்களின் பெயர்கள், அவற்றை விட்டு விட்டு அவை உண்மையில் என்ன என்று அறிகிறான்.

மூன்றாவதாக, வெளியில் செல்லும் மனதை திருப்பி தன்னைத் தானே அரியத் தலைப்படுகிறான்.

நான்காவது நிலை, தன்னை அறிய முயலும் போது , தான் என்ற இந்த உடல், மனம்,  நினைவுகள் இவற்றைத் தாண்டி அரூபமான ஒன்றை அறிகிறான்.

இது கொஞ்சம் சிக்கலான ஒன்று. நிதானமாக சிந்திக்க வேண்டிய ஒன்று.

சிந்திப்போம்.

உலகில் உள்ள அனைத்துக்கும் இரண்டு வடிவங்கள் உண்டு. ஒன்று ஸ்தூல வடிவம். மற்றொன்று சூக்கும வடிவம்.

ஸ்தூலம் என்பது திடப் பொருள். பார்க்க, கேட்க, தொட , முகர முடியும்.

சூக்குமம் என்பது கண்ணுக்குத் தெரியாத ஒன்று.

சில உதாரணங்கள் பார்ப்போம்.


ஒரு ஊதுபத்தி இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அது கறுப்பாக இருக்கிறது. நீளமாக இருக்கிறது. ஒல்லியாக இருக்கிறது. எடை குறைந்து இருக்கிறது. என்று இவற்றை நாம் அறிகிறோம். இது ஸ்தூல நிலை.

அந்த ஊதுபத்திக்குள் ஒரு மணம் ஒளிந்து கிடக்கிறது. அது தெரியாது. ஊதுபத்தி எரியும் போது அந்த மணம் வெளிப்படும்.

லட்டு பார்க்க மஞ்சளாக இருக்கிறது, உருண்டையாக இருக்கிறது. தொட்டால் நெய் ஒட்டுகிறது . ஏலக்காய், நெய் மணம் மூக்கை துளைக்கிறது. அது ஸ்தூல வடிவம்.

அதன் சுவை இருக்கிறதே அது சூக்கும வடிவம். கண்ணுக்குத் தெரியாது. எந்த பூத கண்ணாடி வைத்துப் பார்த்தாலும் தெரியாது. வாயில் போட்டு கரையும் போது அந்த ஒரு கணம் அது வெளிப்படும்.

நல்ல இசையைக் கேட்கிறோம். சுகமாக இருக்கிறது. இசை தெரிந்தவர்களுக்கு அதில் உள்ள இராகம், தாளம், சுருதி எல்லாம் தெரியும். இசை தெரியாதவர்களுக்கு அது ஒரு சத்தம் அவ்வளவுதான். கேட்க இனிமையாக இருக்கிறது. அவ்வளவுதான். இராகம் , சத்தத்தின் சூக்கும வடிவம்.

முதலில் மனிதர்கள், பொருள்கள் இவற்றை காண்கிறோம். அவற்றின் பெயர், அவற்றின் உறவுகள் இவற்றை அறிகிறோம். பின், பெயர் தவிர்த்து அது என்ன என்று அறிய  முற்படுகிறோம். பின், இந்த உலகம் இப்படி இருக்க காரணம் நமது அறிவும், புலன்களும் என்று அறிகிறோம். வெளியில் உள்ளவற்றை அறிந்த மாதிரி நம்மை நாமே அறிய முனைகிறோம்.

அப்படி அறியும் போது இந்த திட வடிவங்களைத் தாண்டி , ஸ்தூல வடிவங்களைத் தாண்டி சூக்கும வடிவம் என்று ஒன்று இருப்பதை நாம் அறிவோம். அது வெளிப்படாது. அது இன்னது என்று கூற முடியாது.

விறகில் தீயினன் பாலில்படு நெய்போல் 
மறைய நின்றுளன் மாமணிச் சோதியான் 
உறவு கோல்நட்டு உணர்வுக் கயிற்றினால் 

முறுக வாங்கிக் கடையமுன் நிற்குமே

விறகின் உள்ளே தீ இருப்பது போல, பாலில்ன் உள்ளே நெய் இருப்பது போல, மணியின் உள்ளே ஒளி இருப்பது போல ஸ்தூலத்திற்குள் சூக்குமம் இருக்கிறது.

முறுக வாங்கிக் கடைய முன் நிற்குமே என்கிறார் அப்பர் சுவாமிகள்.

அதையே பதஞ்சலியும் சொல்கிறார். உள்நோக்கி தேடினால், சூக்குமம் புரியும் என்கிறார்.

சாதாரணமாக யாருக்கும் தெரியாது என்கிறார் அருணகிரிநாதர். "தெரியாது ஒரு பூதற்குமே "


வேதா கமசித்ர வேலா யுதன் வெட்சி பூத்ததண்டைப்
பாதார விந்தம் அரணாக அல்லும் பகலுமில்லாச்
சூதான தற்ற வெளிக்கே யொளித்துச்சும் மாவிருக்கப்

போதா யினிமன மேதெரி யாதொரு பூதர்க்குமே.

என்பது அருணகிரியார் வாக்கு.

மலை மேல் மயிலாடக் கண்டேன் 
மயில் குயில் ஆச்சுதடி குதம்பாய் 
மயில் குயில் ஆச்சுதடி 

என்பார் குதம்பைச் சித்தர்.


மயில் கண்ணுக்குத் தெரியும். அதன் வடிவம், தோகை , அது ஆடும் அழகு எல்லாம் ஸ்தூல வடிவம்.

குயில் என்றால் அதன் குரல் கேட்கும். பொதுவாக குயில் இருக்கும் இடத்தை அறிய முடியாது. குரல் சூக்கும வடிவம்.


எவ்வளவு பெரிய சங்கீத வித்வானாக இருக்கட்டும், அவரிடம் இராகம் என்றால் என்ன என்று கேட்டுப் பாருங்கள். சொல்வதற்கு திணறுவார்.

ஒரு பெரிய மருத்துவரிடம் சென்று ஆரோக்கியம் என்றால் என்ன என்று கேட்டுப் பாருங்கள். திணறுவார். காய்ச்சல் என்றால் என்ன என்று தெரியும்,  இரத்தக் கொதிப்பு என்றால் என்ன என்று தெரியும். ஆனால் ஆரோக்கியம் என்றால் என்று தெரியாது.

ஸ்தூலம் என்பது வெளிப்டையாகத் தெரியாது.

நான் யார் - உடலா, மனமா, அறிவா, நினைவுகளா என்று சிந்தித்துக் கொண்டே போகும் போது , நான் யார் என்பதை அறிய முடியும், ஆனால் சொல்ல முடியாது.

உடல் தெரிகிறது. அதன் அசைவுகள் தெரிகிறது. அதை ஆட்டுவிக்கும் மனமும் சிந்தையும் கூட தெரிகிறது. மனதை ஆட்டுவிப்பது யார் ? நம் சிந்தனையை செயல் பட செய்வது யார் ?

சிவன் அவன் என் சிந்தையுள் நின்ற அதனால் 
அவன் அருளாலே அவன் தாள் வணங்கி 

என்பார் மணிவாசகர்.

சிந்தனைக்குள்ளே ஏதோ ஒன்று இருக்கிறது. அதை அறிய முடியும் என்கிறார்.

எப்படி என்று பின்னால் பார்ப்போம்.

பதஞ்சலியின் யோக சூத்திரம் என்பது ஒரு மிகப் பெரிய பிரம்மாண்டமான படைப்பு.

நான் எப்போதும் சொல்லுவது போல, மூலத்தை தேடிப் படியுங்கள். ஆயிரம் உரைகள்  ஒரு மூல நூலுக்கு இணையாகாது.

http://yogasutrasimplified.blogspot.in/2017/11/146.html

யோக சூத்திரம் - 1.44 - பார்வையை திருப்பு

யோக சூத்திரம் - 1.44 - பார்வையை திருப்பு 


एतयैव सविचारा निर्विचारा च सूक्ष्मविषय व्याख्याता ॥४४॥

etayaiva savicārā nirvicārā ca sūkṣma-viṣaya vyākhyātā ॥44॥


etayā = இதன் மூலம்
eva = மேலும்
savicārā = ச விசார = ஆராய்வதன் மூலம் savicārā = without an investigation; nirvichara nirvicara  = நிர் விசார = சூக்கும ஆராய்ச்சியின் மூலம்
ca = மேலும்
sūkṣma = சூட்சும
viṣaya = விஷயம்
vyākhyātā = வியாக்யதா = விளக்கப்பட்டது

தியானம் பண்ணுகிறோம். ஆழ்நிலை தியானம் பண்ணுகிறோம். மனதை ஒருமுகப் படுத்துகிறோம் என்று சொல்லும் போது என்ன நிகழ்கிறது ?

மனம் ஏதோ ஒன்றின் மேல் நிலைத்து நிற்கிறது.

அது கடவுளாக இருக்கலாம், ஜோதியாக இருக்கலாம், எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும்.

எதுவாக இருந்தாலும், மனம் வெளியில் உள்ள ஒன்றை பற்றி சிந்திக்கிறது.

மனம் உள்ளில் இருந்து வெளியே செல்கிறது.

வெளியில் உள்ள ஒன்றை அதன் பெயரின் மூலம் சிந்திக்கலாம்.

பெயர் இல்லாமல் சிந்திக்கலாம்.

எப்படியாக இருந்தாலும் அது வெளியில் உள்ள ஒன்று தான்.

அதில் உயர்ந்தது தாழ்ந்தது என்று ஒன்றும் இல்லை.

கடவுளை பற்றி நினைத்தால் உயர்தது. வேறு யாரையாவது நினைத்தால் தாழ்ந்தது என்று இல்லை.


வெளியில் உள்ள ஒன்றை மனம் பற்றி நிற்கிறது. அவ்வளவுதான். எதை என்பதில் பெரிய வித்தியாசம் இல்லை.

மூன்றாவது படியில், யோகி மனத்தை உள்நோக்கி திருப்புகிறான் .

பார்ப்பது யார் ? தியானம் செய்வது யார் ? ஏன் தியானம் செய்ய வேண்டும் ? அதை செய்தால் என்ன பலன் ? அந்த பலன் யாருக்கு கிடைக்கிறது ?

நாம் வெளியில் உள்ளவற்றை பற்றி சிந்திக்க செலவிடும் நேரத்தில் ஒரு சிறு பகுதியைக் கூட நம்மை பற்றி அறிந்து கொள்ள செலவிடுவதில்லை.

நான் யார் ? நான் ஏன் இப்படி இருக்கிறேன் ? எனது நம்பிக்கைகள் என்ன ? அவை எங்கிருந்து வந்தன ? அவை சரியா தவறா ?

எனது ஆசைகள் என்ன ? இந்த ஆசைகளுக்கு காரணம் என்ன ? இந்த ஆசைகளை அடைய நான் என்னவெல்லாம் இழக்க வேண்டி இருக்கிறது ? இப்படி இழந்து பெற்ற ஆசைகளால் எனக்கு மகிழ்ச்சி உண்டாகுமா ?

சிலர் பணம் பணம் என்று அலைவார்கள். அதற்காக குடும்பத்தைக் கூட பார்க்க மாட்டார்கள். பணம் வந்த பின் என்ன ஆகும் ? அது மகிழ்ச்சியை தருமா ?

எனது பயங்கள் என்ன ? அவை எங்கிருந்து வந்தன ? அவன் என்னை எப்படி செலுத்துகின்றன ?

இப்படி தன்னைத்தானே அறிய முற்பட வேண்டும் ?

நமது ஒவ்வொரு சிந்தனைக்கும், செயலுக்கும் பெரிய காரணம், பின் புலம் இருக்கும்.

நம் பெற்றோர், அவர்கள் நம்மை வளர்த்த முறை, நாம் பார்த்த சினிமாக்கள், படித்த கதைகள், நண்பர்கள், உறவினர்கள் என்று எத்தனையோ பேர் நமது சிந்தனையை செதுக்கி வைத்திருக்கிறார்கள்.

இதில் பெரும்பாலோனோர் ஒன்றும் அறியாதவர்கள். அவர்களது மூடத் தனத்தை நம் மீது ஏற்றி வைத்து விடுகிறார்கள். அது போலத்தான் நாம் வாசித்த புத்தகங்களும், சினிமாக்களும், நண்பர்களும்.

நம் வாழ்க்கை அவர்களால் உருவாக்கப் பட்டது. இந்த பாசியை விலக்கினால்  தூய நீர் தெரியும்.  ஆனால்,அதை பார்க்க முடியாதபடி இந்த பாசி படர்ந்திருக்கிறது.

சிந்தனையை உள் நோக்கி திருப்ப வேண்டும்.

மனதில் உள்ள கசடுகளை, மலங்களை நீக்க வேண்டும். அப்போதுதான் உண்மையில் நாம் யார் என்று அறிய முடியும்.

பேற்றை தவம் சற்று செய்யாத என்னை 
பிரபஞ்சம் எனும் சேற்றை கழிய வழி விட்டவா 

என்பார் அருணகிரிநாதர்.

பிரபஞ்சம், இந்த உலகம் ஒரு சேறு போல நம் மனதின் மேல் படிந்து கிடக்கிறது.

ஆசைக் கடலில் அகப்பட்டு அருளற்ற அந்தகன் கை 
பாசத்திடை அல்லல் படையிருந்தனே நின் பாதம் எனும் வாசக் கமலம் தலை மேல்  வலிய வைத்து ஆண்டு கொண்ட நேசத்தை என் சொல்லுவேன் என்பார் அபிராமி பட்டர்.

சிலந்தி வலை படிந்து கிடக்கிறது. அவற்றை நீக்கி உண்மையான நாம் யார் என்று அறிய வேண்டும்.

அந்த இடத்தில் மனம் எதையும் பற்றி சிந்திக்காது. எந்த பொருளையும் பற்றி சிந்திக்காது.

நிர் விசாரம்

என்கிறார் பதஞ்சலி.



“வான் கெட்டு, மாருதம் மாய்ந்து,
   அழல், நீர், மண் கெடினும்,
தான் கெட்டல் இன்றிச்
   சலிப்பு அறியாத் தன்மையனுக்கு,
ஊன் கெட்டு, உயிர் கெட்டு,
   உணர்வு கெட்டு, என் உள்ளமும் போய்,
நான் கெட்டவா பாடித்
   தெள்ளேணம் கொட்டாமோ!”

ஊன் மறைந்து , உயிர் மறைந்து , உணர்ச்சிகள் போய் , உள்ளமும் போய் , கடைசியில் நான் என்பதும் போய் விட்டது ...அது ஒரு பெரிய இன்பகரமான நிகழ்வு ...அதை பாடி கொண்டாடுவோம் என்கிறார் மணிவாசகர்.

தன்னை மறந்தாள் , தன் பெயரைக் கூட மறந்து விட்டாள் என்பார் திருநாவுக்கரசர்.


முன்னம் அவனுடைய நாமம் கேட்டாள்
மூர்த்தி அவனிருக்கும் வண்ணம் கேட்டாள்
பின்னை அவனுடைய ஆரூர் கேட்டாள்
பெயர்த்தும் அவனுக்கே பிச்சி யானாள்
அன்னையையும் அத்தனையும் அன்றே நீத்தாள்
அகன்றாள் அகலிடத்தார் ஆசாரத்தைத்
தன்னை மறந்தாள் தன்நாமம் கெட்டாள்
தலைப்பாட்டாள் நங்கை தலைவன் தாளே.


வெளியில் அலையும் மனதை கட்டி கொண்டுவந்து, தன்னை தானே அறிய முற்படுவது யோகத்தின் மூன்றாம் நிலை.

நிர்விசார சமாதி.

டிவி, செய்தித்தாள், அரட்டை, whatsapp , facebook இவற்றில் மனதை அலைய விடாமல், மனதை உள் நோக்கி திருப்பி , நீங்கள் யார் என்று அறிய தொடங்குங்கள்.

பல ஆச்சரியங்கள் காத்திருக்கும் , உங்களுக்கு.

http://yogasutrasimplified.blogspot.in/2017/11/144.html

Friday, November 10, 2017

யோக சூத்திரம் - 1.43 - சரியான பார்வை

யோக சூத்திரம் - 1.43 - சரியான பார்வை 



स्मृतिपरिशुद्धौ स्वरूपशून्येवार्थमात्रनिर्भासा निर्वितर्का ॥४३॥

smr̥ti-pariśuddhau svarūpa-śūnyeva-arthamātra-nirbhāsā nirvitarkā ॥43॥


smr̥ti = நினைவுகள், ஞாபகங்கள்
pariśuddhau = பரிசுத்தமானபின் , தூய்மையானபின்
svarūpa = உண்மையான நிலை
śūnya = சூன்யம், வெற்றிடம், நீக்கப்பட்டது
iva = இங்கே
artha = அர்த்தம், பொருள், உண்மை
mātra = மட்டுமே
nirbhāsā = ஒளிரும் , விளங்கும்
nirvitarkā = நிர்விதர்க , அடுத்து

சமாதியின் பல படிகளை சொல்லிக் கொண்டு வருகிறார்.

நேற்று நாம் பார்த்தது, "சவிதர்க " சமாதி எனப்படும். அதில், யோகி பொருள், அவற்றின் அர்த்தம் இவற்றின் தன்மைகளை  கொள்கிறான்.

அடுத்த கட்டம், நிர்விதர்க சமாதி.

நாம் உலகை அது இருக்கும் நிலையில் பார்ப்பது இல்லை.

அப்படி என்றால் என்ன ?

உதாரணமாக, நாம் ஒரு மஞ்சள் நிற கண்ணாடியை அணிந்து கொண்டு உலகை பார்த்தால், உலகில் உள்ள எல்லாம் மஞ்சளாகத் தெரியும். நாம் அப்படி பார்க்கிறோம் என்பதற்காக, அதுவே உண்மையாக முடியாது அல்லவா ? எல்லாம் மஞ்சளாக இருப்பது இல்லை.

கண்ணாடியை கழட்டி விட்டு பார்த்தால் , எது உண்மையான நிறம் என்று தெரியும்.

இப்போது அறிவியல் மேலும் வளர்ந்து விட்டது. virtual glass என்று சொல்கிறார்கள். அதை அணிந்து கொண்டு பார்த்தால், இல்லாத ஒன்று கூட இருப்பதாகத் தெரியும். வானில் பறப்பது போலவும், நீருக்குள் மூழ்குவது போலவும், சறுக்கு பலகையில் சறுக்குவது போலவும் தெரியும். அதை அணிந்து கொண்டிருப்பவர்கள் தாங்கள் காணப்பது நிஜம் என்று நம்புவார்கள். கீழே வீழ்வது போலத் தெரிந்தால், இருக்கையை இறுக்கி பிடித்துக் கொள்வார்கள். அவர்களுக்கு அது தான் நிஜம்.

சிக்கல் என்ன என்றால், நாம் கண்ணாடி அணிந்து கொண்டிருக்கிறோம் என்றே நமக்குத் தெரியாது.

தெரிந்தால் அல்லவா அதை கழட்டி விட்டு பார்த்து, உண்மை எது என்று அறிந்து கொள்வது.


நமது ஞாபகங்களே நமது கண்ணாடி.

நாம் இந்த உலகை , நமது பழைய ஞாபகங்கள் என்ற கண்ணாடியின் ஊடே பார்க்கிறோம்.

இல்லாததை இருப்பதாய் பார்க்கிறோம்.

இருப்பவற்றை  வேறு விதமாக பார்க்கிறோம்.

ஒருவனுக்கு ஒருத்தி என்பதில் நமக்கு அசைக்க முடியாத நம்பிக்கை. அது தான் சரி என்று நாம் நினைக்கிறோம்.

வேறு மதத்தை சார்ந்தவர்கள் அது சரி அல்ல. ஒருவன் ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களை மணந்து கொள்ளலாம். அது தவறில்லை என்று சொல்லலாம்.

இப்போது , எது சரி. இருவரும், தாங்கள் கொண்டதே சரி என்று வாதம் பண்ணிக் கொண்டிருப்பார்கள்.

இந்த சரி , தவறு என்ற எண்ணங்களுக்குக் காரணம், அவர்களுக்கு சொல்லித் தரப்பட்ட போதனைகள், அவர்களின் மத நம்பிக்கைகள்.


உண்மையில் சரி தவறு என்று ஒன்றும் கிடையாது.

ஒரு பொருள் இருக்கிறது என்றால், அது எல்லோருக்கும் தெரிய வேண்டும் அல்லவா ?

நெருப்பு இருக்கிறது. ஒருவருக்கு நெருப்பு சுடும் என்ற நம்பிக்கை இருக்கிறது. இன்னொருவருக்கு நெருப்பு சுடாது என்ற நம்பிக்கை இருக்கிறது.

இரண்டு பேரும் நெருப்பில் கை வைக்கிறார்கள். என்ன ஆகும் ? நம்பினாலும், நம்பாவிட்டாலும் நெருப்பு சுடும்.

உண்மைக்கும், நமது நம்பிக்கைக்கும் ஒரு சம்பந்தமும் கிடையாது.

வேற்று மதத்தைச் சார்ந்த ஒருவரை , ஒருவர் இந்து கோவிலுக்கு  கூட்டிச் செல்லுங்கள்.  அவருக்கு பக்தி வருமா ? இந்து கடவுளை வணங்க வேண்டும் என்று தோன்றுமா ?

ஒரு இந்து கிறித்துவ தேவாலயத்துக்கு செல்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அவருக்கு பக்தி வருமா ? என்னடா இது ஒரு மரியாதை இல்லாமல் எல்லோரும் செருப்பு, ஷூ அணிந்து கொண்டு கோவிலுக்குள் வருகிறார்கள் என்று ஒரு நெருடல் வரலாம், சிலுவையில் அறையப்பட்ட யேசுவைப் பார்த்து ஒரு பரிதாபம் வரலாம். பக்தி வருமா ?

உண்மை என்றால், நம்பினாலும், நம்பாவிட்டாலும் பக்தி வந்திருக்க வேண்டும்.

வருவது இல்லை.

நமது கடவுள், மதம், என்பது ஒவ்வொரு தனிப்பட்ட மனிதனின் நம்பிக்கையைப் பொறுத்தது. அது உண்மை அல்ல. உண்மை என்றால் எல்லோருக்கும் அது சமமாக இருக்க வேண்டுமே. நம்பாதவனையும் நெருப்பு சுடுவது போல.

கடவுள் நம்பிக்கை மட்டும் அல்ல.

நமது வாழ்வில், ஏராளமான விஷயங்கள் , நாம் உண்மை, சரி, சத்தியம் என்று நம்புபவை எல்லாம் நமக்குச் சொல்லப்பட்ட ஞாபகங்களின் மிச்சம் தான்.

மாமிசம் தின்பது சரியா தவறா ?

wine போன்றவற்றை அருந்துவது சரியா தவறா ?

நமது கொள்கைகள், கோட்பாடுகள், நம்பிக்கைகள் இவை அனைத்துமே நமக்குச் சொல்லப்பட்டவை. 

அவற்றைத் தாண்டி உண்மை என்ன என்று அறிய வேண்டும்.

யோகிகள் ஞாபகத்தின் தன்மையை அறிவார்கள்.

தங்கள் ஞாபகங்களைத் தாண்டி அவர்கள் உண்மையை அறிவார்கள்.

பொருள்களின் உண்மையான தன்மையை அறிவார்கள்.

உங்கள் செயல்கள் ஒவ்வொன்றுக்கும் பின்னால் வண்டி வண்டியாக ஞாபக குவியல்கள் இருக்கின்றன. நீங்கள் அவற்றை எண்ணி பார்ப்பது இல்லை.

உங்கள் கணவரோடு சண்டையா ? அவர் அப்படி செய்திருக்கக் கூடாது , இப்படி செய்திருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களா ?


ஏன் அப்படி நினைக்கிறீர்கள் என்று ஒரு கணம் சிந்தித்துப் பாருங்கள். அவர் செய்வது உண்மை. அவர் அப்படி செய்யக் கூடாது என்று நீங்கள் எதிர்பார்ப்பது உங்கள் கற்பனை. அதற்கு காரணம் உங்களுக்கு சொல்லப்பட்ட விஷயங்கள். அவற்றின் நினைவுகள்.

கற்பூரம் காட்டும் போது , ஏன் என்று சிந்தியுங்கள். கற்பூரம் காட்டுவதால் என்ன நிகழ்கிறது என்று யோசியுங்கள்.

ஒரு இயந்திர கதியில் வாழ்வை செலுத்தாமல் எதையும் சிந்திக்க தலைப் படுங்கள்.

ஒரு கணணி , அதில் பொருத்தப்பட்ட மென் பொருள் என்ன சொல்கிறதோ  அது படி செய்யும்.

நாமும், நமக்குள் ஒரு மென் பொருளை (software ) வைத்திருக்கிறோம். அதன் படி ஒரு இயந்திரம் போல செயல் படுகிறோம்.

சிந்தியுங்கள்.

ஞாபகங்கள் தேவை தான். ஞாபகங்கள் இல்லாமல் வாழ முடியாது.

ஆனால், எந்த ஞாபகம் தேவை, எது தேவை இல்லை என்று அறியும் அறிவு வேண்டும்.

தேவை இல்லாத குப்பைகளை சேர்த்துக் கொண்டு, அவைதான் சரி என்று ஒரு வாழ்க்கை பூராவையும் வீணடிப்பது சரிதானா ?


பொய்யாயினவெல்லாம் போயகல வந்தருளி 

என்பார் மணிவாசகர்.

அவருக்குள்ளும், பொய்யான பல விஷயங்கள் இருந்தன. அவை போக வேண்டும்.

சித்த மலம் தெளிவித்து சிவமாக்கி எனை ஆண்ட
அத்தன் எனக்கு அருளியவார் யார் பெறுவார் அச்சோவே 

என்பார் மணிவாசகர்.

சித்தத்தில் பல மலங்கள், குற்றங்கள் குவிந்து கிடக்கின்றன. அவற்றை நீக்க வேண்டும்.

பாரதியார், தனது  மெய் ஞான தரிசனத்தில் கூறுவார்,

"அகத்தி னுள்ளே, இன்னதொரு பழங்குப்பை சுமக்கி றாய்நீ” என்று.

பாரதியாரின் ஞான குரு, குள்ளச் சாமி , பாரதியாரிடம் சொன்னாராம், "மனதுக்குள்ளே ஆயிரம் குப்பைகளை சுமந்து திரிகிறாய் " என்று.



மற்றொருநாள் பழங்கந்தை யழுக்கு மூட்டை
வளமுறவே கட்டியவன் முதுகின் மீது
கற்றவர்கள் பணிந்தேத்தும் கமல பாதக்
கருணைமுனி சுமந்துகொண்டேன் னெதிரே வந்தான்;
சற்றுநகை புரிந்தவன்பால் கேட்க லானேன்;
தம்பிரானே!இந்தத் தகைமை என்னே?
முற்றுமிது பித்தருடைச் செய்கை யன்றோ?
மூட்டைசுமந் திடுவதென்னே? மொழிவாய்”என்றேன்

புன்னகைபூத் தாரியனும் புகலு கின்றான்;
“புறத்தேநான் சுமக்கின்றேன்; அகத்தி னுள்ளே,
இன்னதொரு பழங்குப்பை சுமக்கி றாய்நீ”
என்றுரைத்து விரைந்தவனும் ஏகி விட்டான்.
மன்னவபன்சொற் பொருளினையான் கண்டுகொண்டேன்;

பாரதியாரின் மனதில் ஆயிரம் குப்பைகள் என்றால், நமது மனதில் எவ்வளவு இருக்கும். சுத்தம் செய்யுங்கள். வாழ்க்கை வசப்படும்.

http://yogasutrasimplified.blogspot.in/2017/11/143.html

Thursday, November 9, 2017

யோக சூத்திரம் - 1.42 - உண்மையான அறிவு

யோக சூத்திரம் - 1.42 - உண்மையான அறிவு



तत्र शब्दार्थज्ञानविकल्पैः संकीर्णा सवितर्का समापत्तिः ॥४२॥

tatra śabdārtha-jñāna-vikalpaiḥ saṁkīrṇā savitarkā samāpattiḥ ॥42॥


tatra =  இது, இவை
śabda = சப்தம், ஒலி , பெயர்
artha = அர்த்தம், பொருள்
jñāna = ஞானம், அறிவு
vikalpaḥ = மாய தோற்றம்
saṁkīrṇa = கலைந்த , குழம்பிய
savitarka = ஏற்றுக் கொள்வதன் மூலம்
samāpattiḥ = சமாதி , மெய்ஞானம்
savitarka samāpattiḥ = சவிதர்க சமாதி எனப்படும்

நாம்  .பலவற்றை படிக்கிறோம். கேட்டு அறிந்து கொள்கிறோம்.

நம் அறிவு என்பது என்ன ?

பொருள்களுக்கும், செயல்களுக்கும் உள்ள பெயரை அறிந்து கொள்கிறோம். அவ்வளவுதான்.

உதாரணமாக  நெஞ்சு வலி என்று மருத்துவரிடம் போகிறோம்.  அவர் சோதனை செய்து விட்டு, இது  miocardial  infarction   என்று சொல்கிறார்.

ஓ, இது  miocardial  infarction ஆ என்று நாம் சொல்லிக் கொள்கிறோம். ஏதோ அந்த பெயரை அறிந்து கொள்வதன் மூலம் அது என்ன என்பதை அறிந்து கொண்டது மாதிரி.

பொருள்கள் மேலே தூக்கிப் போட்டால் கீழே விழுகிறது. ஏன் விழுகிறது என்று கேட்டால் "புவி ஈர்ப்பு விசை" என்கிறோம். கீழே விழும் அந்த செயலுக்கு நாம் ஒரு பெயர் வைத்து இருக்கிறோம். அவ்வளவுதான்.

பொருள்கள், அதன் பெயர்கள் , அதன் தன்மை இவற்றை நாம் அறிவு என்று சொல்கிறோம். யாருக்கு நிறைய பெயர்கள் தெரிகிறதோ அவர் பெரிய அறிஞர் என்று சொல்கிறோம்.

அந்த நாட்டின் தலை நகரின் பெயர் என்ன ?
அதை கண்டு பிடித்த அறிஞரின் பெயர் என்ன ?
எந்த வருடம் இது நிகழ்ந்தது ?
இதையும், இதையும் சேர்த்தால் வரும் பொருளின் பெயர் என்ன ?

இவை எல்லாம் தெரிந்து விட்டால் அவர் பெரிய அறிவாளி என்று நினைக்கிறோம்.

கருப்பான, கடினமான, கரடு முரடான ஒரு பொருள் இருக்கிறது.

"ஓ, அதுவா...அது ஒரு கல்லு " என்று சொல்வதன் மூலம், ஏதோ அதை முழுவதுமாக அறிந்து கொண்டது போல ஒரு பிரமை உண்டாகிறது.

கல்லு என்பது ஒரு பெயர். அதற்கு மேல் ஒன்றும் இல்லை.

ஆழ்ந்து சிந்தித்தால், நமக்கும் வெளி உலகுக்கும் உள்ள தொடர்பு என்பது இந்த  பெயர்களின் மூலமே நடக்கிறது.

கணவன், மனைவி, பிள்ளை, ஓட்டுநர், வேலைக்காரன், தபால்காரன் , இட்லி, தோசை என்று பெயர்களால் ஆனது இந்த உலகம்.

சிக்கல் என்ன என்றால், ஒவ்வொரு பெயருக்கும் ஒரு குணாதிசயம் இருக்க வேண்டும் என்று நினைக்கிறோம்.

மனைவி என்றால் இப்படி இருக்க வேண்டும் என்று நமக்கு ஒரு எண்ணம் உண்டு.

எல்லா மனைவியும் அப்படி இருப்பார்களா ? எல்லா சமயத்திலும் அப்படி இருப்பார்களா ?

மனைவி என்ற சொல்லை தவிர்த்து விட்டு,  அவள் உங்கள் காதலி என்று நினைத்துப் பாருங்கள். உங்கள் உறவின் தன்மை மாறும். "நீ என் மனைவி இல்ல, என் தாய்" என்று சொல்லிப் பாருங்கள், உறவின் தன்மை மாறும்.

அம்மா என்றால் இப்படி இருக்க வேண்டும். கணவன் என்றால் அவன் குணாதிசயம் இது இது என்று வரையறுத்து வைத்திருக்கிறோம். அப்படி இல்லாத ஒருவரை கணவனாக அடைந்தால் வாழ்க்கை நரகமாக மாறி விடுகிறது. மன அழுத்தம் வருகிறது. மன சோர்வு வருகிறது.

அவன் ஒரு மனிதன். அவனிடமும் குறை நிறை இருக்கும்.

அவள் ஒரு பெண், மனுசி. அவளிடம் குறை நிறை இருக்கும்.

அவளிடம் உள்ள குறை என்ன, நிறை என்ன என்று அறிந்து கொண்டு வாழ்க்கை நடத்தினால் வாழ்க்கை சுகப்படும்.

பெயர்கள் எப்போதும் இறந்த காலத்தை கொண்டு வருகின்றன.

இந்த பெயர் இருந்தால் , அது இப்படித் தான் இருக்க வேண்டும் என்ற பழைய நினைவுகளை , அனுபவங்களை கொண்டு வருகின்றன.

நாம் இறந்த காலத்தில் வாழத் தலைப்படுகிறோம்.

பெயர்கள் இல்லாமல் வாழ்க்கையை இரசித்துப் பாருங்கள்.

ரோஜா என்று சொல்லாதீர்கள். அழகாய் இருக்கிறது என்று மனதுக்குள் கூட சொல்லாதீர்கள்.அதைப் பாருங்கள். பார்த்துக் கொண்டே இருங்கள்.

அப்படி பெயர் இல்லாமல் பார்க்கும் போது , பார்ப்பவன், பார்க்கப்படுவது, பார்வை என்ற மூன்றும் கரைந்து போகும்.

இசையை கேட்கும் போது ...அடடா, இது இந்த இராகம், இந்த தாளம், இத்தனை கட்டை சுருதி, இந்த வார்த்தைக்கு இந்த அர்த்தம், இதை எழுதியது அவர் , பாடுவது இவர் என்ற பெயர்களை எல்லாம் விட்டு விடுங்கள். அந்த ஒலியோடு வேறு எந்த வார்த்தையும் இல்லாமல் ஒன்றி இருந்து பாருங்கள்.

அப்படி பெயர் இல்லாமல், கேட்கும் போது , கேட்பவன், கேட்கப்படும் ஒலி , கேட்டல் இந்த மூன்றும் ஒரு புள்ளியில் நிற்கும்.


மனைவியை , மனைவி என்ற சொல் இல்லாமல் பாருங்கள். அவள் புதியதாய் தெரிவாள். பழமை அத்தனையும் போய் விடும். ஏதோ புதியதாய் பார்ப்பது போல இருக்கும்.  பார்வையில் ஒரு தெளிவு இருக்கும்.

இறை அனுபவம் பெற்ற பின் மணிவாசகர் கூறுவார் ,

"ஒரு நாமம், ஒரு உருவம் , ஒன்று இல்லாதவர்க்கு ஆயிரம் திரு நாமம் பாடி நாம் தெள்ளேணம் கொட்டாமோ " என்று



திருமாலும் பன்றியாய்ச் சென்றுணராத் திருவடியை
உருநாம் அறியவோர் அந்தணனாய் ஆண்டுகொண்டான்
ஒருநாமம் ஒருருவம் ஒன்றுமில்லாற் காயிரந்
திருநாமம் பாடிநாம் தெள்ளேணம் கொட்டாமோ.


பெயர்கள் நமது சிந்தனையை மடை மாற்றுகின்றன. பெயரில்லாமல் சிந்தித்துப் பாருங்கள். சமாதியின் ஒரு வகை அது.


http://yogasutrasimplified.blogspot.in/2017/11/142.html

யோக சூத்திரம் - 1.41 - அனுபவம் மட்டுமே

யோக சூத்திரம் - 1.41 - அனுபவம் மட்டுமே 



क्षीणवृत्तेरभिजातस्येव मणेर्ग्रहीतृग्रहणग्राह्येषु तत्स्थतदञ्जनता समापत्तिः ॥४१॥

kṣīṇa-vr̥tter-abhijātasy-eva maṇer-grahītr̥-grahaṇa-grāhyeṣu tatstha-tadañjanatā samāpattiḥ ॥41॥



kṣīna = ஷீணம் என்றால் மெலிதல், குறைதல்

vr̥ttiḥ = என்ன அலைகள், மன சலனங்கள்

abhijātasya = தெளிவு

eva = அது (எப்படி என்றால் )

maṇi = மணி, ஸ்படிகம் போல

grahītr̥ = கிரஹிப்பவன் , பார்ப்பவன், அனுபவிப்பவன்

grahaṇa =அனுவபம். கிரகணம் என்றால் பிடித்தல்.

grāhyeṣu = அனுபவிக்கப் படும் பொருள்

tatstha = இரண்டற கலந்து

tadañjanatā = ஒன்று மற்றொன்றாக மாறி

samāpattiḥ = சம நிலை அடைகின்றன

முதலிலேயே சொல்லி விடுவோம். சமாதி என்றால் இறந்த பின் புதைக்கும் இடம் அல்ல.

சமாதி = சமம் + ஆதி. ஆதியோடு சமமாக ஆகி விடுவது.

மனம் அமைதி ஆனால், என்ன நிகழும் என்று சொல்கிறார் பதஞ்சலி சொல்கிறார்.

நாம் பலவிதமான அனுபவங்களை பெறுகிறோம்.

நல்லவை, கெட்டவை , இனிமையான அனுபவங்கள், கசப்பான அனுபவங்கள்.


அனுபவங்கள் மனதில் படிகின்றன. இனிமையான அனுபவங்கள் என்றால் அவை மேலும் மேலும் வேண்டும் என்று விரும்புகிறோம். துன்பமான அனுபவம் என்றால் அவற்றை மறுபடியும் பெறாமல் இருக்க முயற்சி செய்கிறோம்.

வாழ்க்கை பூராவும் இந்த சிக்கலிலேயே போய் விடுகிறது.

கோபம், பயம், நடுக்கம், எரிச்சல், காதல், காமம், பொறாமை, என்று உணர்ச்சிகளில் சிக்கி தத்தளிக்கிறோம்.

இந்த சூழலில் இருந்து எப்படி விடுபடுவது.

எப்படி உணர்வு கொந்தளிப்பு இல்லாமல், வாழ்க்கையை சுகமாக , மென்மையாக நடத்திச் செல்லுவது ?

எந்த அனுபவத்துக்கும் மூன்று விஷயங்கள் தேவை.

அனுபவிப்பவன்
அனுபவிக்கப் படும் பொருள்
அனுபவம்

Observer  - Observed - and Observation

இந்த மூன்றுக்கும் இடை வெளி இருப்பதால் தான் அனுபவங்கள் நிகழ்கிறது.

மனம் தெளிவு அடையும் போது , இந்த மூன்றும் ஒன்றாக ஆகிவிடுகிறது.


நீங்கள் இது வரை எவ்வளவோ வாசித்து இருக்கலாம். படித்து வியந்து இருக்கலாம்.

அவை அனைத்தையும் மிஞ்சக் கூடியது இந்த ஒரு வரி. எவ்வளவு ஆழமாக சிந்திக்க முடியுமோ, இதை சிந்தியுங்கள். எவ்வளவு நேரம் சிந்திக்க முடியுமோ, அவ்வளவு சிந்தியுங்கள். எத்தனை முறை சிந்திக்க முடியுமோ, அத்தனை முறை சிந்தியுங்கள்.


அனுபவிப்பவன், அனுபவிக்கப் படுவது, அனுபம், இந்த மூன்றும் ஒன்றாகி விடும்.

அனுபவிப்பவனுக்கும், அனுவிக்கப் படுவதற்கும் இடையில் உள்ள இடைவெளி மறைந்து விடும்.

அப்படி மறைந்தால், அனுபவம் என்ற ஒன்றே இருக்காது.

நிகழ்வுகள் இருக்கும். அனுபவங்கள் இருக்காது.

"ஆஹா இந்த ரோஜா மாலர் எவ்வளவு அழகாக இருக்கிறது "

என்று நீங்கள் அனுபவிக்கும் போது நீங்கள் வேறு, ரோஜா வேறு என்ற நிலை இருக்கிறது.

உங்களுக்கும், ரோஜாவுக்கும் ஒரு இடைவெளி இருக்கிறது.

அந்த இடைவெளியினால்தான் அனுபவம் நிகழ்கிறது.

அந்த இடைவெளி ஏன் வருகிறது ?

அந்த இடை வெளி நம்மை அனுபவத்தில் இருந்து பிரிக்கிறது.

அழகான ஒரு சூரிய உதயத்தை பார்க்கிறோம்.

ஒரு கணம். அதன் அழகு, வெளிச்சம், அந்த கடற்கரை, காற்று ,எல்லாம் ஒன்றாக கலந்து நீங்கள் உங்களை மறக்கிறீர்கள். அந்த பிரமாண்டத்தில் உங்களை மறந்து இலயித்து இருக்கிறீர்கள்.

ஒரு கணம் தான். அடுத்த கணமே, "ஆகா என்ன அழகு " என்று உங்கள் சிந்தனை வந்து குறுக்கே விழுகிறது.

அடுத்த கணம், செல் போனை எடுத்து அதை படம் எடுக்க முயல்கிறீர்கள். அந்த அனுபவத்தை படமாக பிடித்து வைத்து பின்னால் பார்க்கலாம் என்று நினைக்கிறீர்கள். உங்கள் நண்பர்களிடம் காட்டலாம் என்று நினைக்கிறீர்கள்.

சூரியன், கடல், காற்று, அழகு எல்லாம் போய் விடாது. அந்த அனுபவ தோய்தல் நின்று போய் விடுகிறது.

அனுபவம் நின்று போவதால், அது முழுமை பெறுவதில்லை. முழுமை பெறாததால், அது மீண்டும் மீண்டும் வேண்டும் என்று மனம் அலைகிறது.


அனுபவங்களை பத்திர படுத்த வேண்டும் என்ற ஆசை, பழைய நினைவுகள் (அன்னைக்கு பாத்த சூரிய உதயம் போலவே இருக்கு ), என்று மன சஞ்சலம் குறுக்கே வந்து எதையும் முழுமையாக அனுபவிக்க விடுவதில்லை.

மன சஞ்சலம் போய் விட்டால், ஸ்படிக மணி எப்படி தன் அருகில் உள்ளதை அப்படியே பிரதி பலிக்குமோ, அது போல நீங்களும் இந்த உலகை உங்களில் பிரதி பலிப்பீர்கள்.

உங்களுக்கும், இந்த உலகுக்கும் இடையே உள்ள இடைவெளி மறைந்து போகும்.

நீங்கள் வேறு, இந்த உலகம் வேறு அல்ல என்ற நிலை வரும்.

அதுவே சமாதி .

நான் என்ற எண்ணம் மறையும். நான் என்ற அகந்தை உலகில் கரையும்.

அங்கே அனுபவிப்பவனும் கிடையாது, அனுபவிக்கப் படுவதும் கிடையாது.

அனுபவம் மட்டுமே இருக்கும்.


"என்னை மறந்து இருந்தேன் , இறந்தே விட்டது இவ்வுடம்பே " என்பார் அருணகிரி நாதர்.

சொன்ன கிரௌஞ்ச கிரி ஊடுருவத் துளைத்த வைவேல்
மன்ன கடம்பின் மலர்மாலை மார்ப மௌனத்தை உற்று
நின்னை உணர்ந்து உணர்ந்து எல்லாம் ஒருங்கிய நிர்க்குணம் பூண்ட
என்னை மறந்து இருந்தேன் இறந்தே விட்டது இவ்வுடம்பே.


சிந்திப்போம்

http://yogasutrasimplified.blogspot.in/2017/11/141.html

Wednesday, November 8, 2017

யோக சூத்திரம் - 1.40 - அணுவுக்கு அணுவாய் அப்பாலுக்கு அப்பாலாய்

யோக சூத்திரம் - 1.40 - அணுவுக்கு அணுவாய் அப்பாலுக்கு அப்பாலாய்



परमाणु परममहत्त्वान्तोऽस्य वशीकारः ॥४०॥

paramāṇu parama-mahattva-anto-'sya vaśīkāraḥ ॥40॥

A person who attains this goal has mastery over everything, from the smallest atom to the entire universe. ||40||


parama = எல்லைகள்
aṇu = அணு, நுண்ணிய பொருள்
parama = எல்லை
maha = மிகப் பெரிய
tvānto = பொருள்
mahattva = மகத்துவம், தன்மை , உண்மை
antah = அந்தம், முடிவு,
asya = இது
vaśīkāraḥ = வசீகரம், கட்டுக்குள் , வசப்படுத்தல்

இது வரை மனதை எப்படி சலனம் இல்லாமல் கொண்டு செல்வது என்று பார்த்தோம். அப்படி செய்தால் என்ன கிடைக்கும் ? அதனால் என்னென்ன இலாபங்கள்.

மிகப் பெரிய பொருளும், மிகச் சிறிய பொருளும் வசப்படும்.


அப்படி என்றால் என்ன ?

நமது புலன்களுக்கு புலப்படுவது இந்த உலகின் மிகச் சிறிய பகுதிதான்.

கன்னுக்குத் தெரியாத எவ்வளவோ கண் முன்னே  இருக்கிறது. நுண்ணியிரிகள், அணு என்று எவ்வளவோ இருக்கிறது. microscope போன்ற கருவிகளால் பார்த்தால் தெரியும். Microscope ன் சக்தியைப் பொறுத்து இருக்கிறது நாம் எவ்வளவு தூரம் பார்க்க முடியும் என்பது.

அது போல தூரத்தில் உள்ள பொருள்களை பார்க்க telescope  போன்ற சாதனங்களை உபயோகப் படுத்துகிறோம். அவற்றின் சக்தி அதிகமாக அதிகமாக தூரத்தில் உள்ள பொருள்களை காண முடியும்.

அது போலத்தான் சத்தம், வாசனை என்பவை.

சரி. அதிலிருந்து என்ன தெரிகிறது ?


இந்த உலகம் என்பது நாம் உணர்வது மட்டும் அல்ல. நமக்குத் தெரியாத எவ்வளவோ இருக்கிறது. கண் முன்னே இருந்தும் நம்மால் காண முடிவதில்லை.

காண முடியவில்லை என்பதால் அவை இல்லை என்று நாம் சொல்ல முடியாது.

ஒன்று புலப்படும்...அணுவுக்கு அணுவாயும், அப்பாலுக்கு அப்பாலும் இந்த  உலகம் விரிந்து கொண்டே போகிறது. முடிவில்லாமல் இது விரிந்து கொண்டே போகிறது.

மேலும், இந்த உலகத்தில் அனைத்தும் ஒன்றோடு ஒன்று தொடர்பு கொண்டவை. ஒன்றிலிருந்து ஒன்று வரும். சாதாரணமாக நாம் இவற்றை அறிவதில்லை. பொருள்கள், உயிர்கள் அனைத்தும் ஒன்றோடு ஒன்று தொடர்பு கொண்டவை.

அது மட்டும் அல்ல, உணர்வுகள், உணச்சிகள், அவற்றின் வெளிப்பாடுகள் அனைத்தும் தொடர்பு கொண்டவை.

உங்களுக்கும் எனக்கும் தொடர்பு உண்டு.

என் உணர்வுகளுக்கும், நான் சாப்பிட உணவுக்கும் தொடர்பு உண்டு.

நாம் மரத்தை பார்த்தால் இலையை பார்ப்பது இல்லை. இலையை பார்த்தால் மரத்தை பார்ப்பது இல்லை.

இரண்டும் ஒன்றோடு ஒன்று தொடர்பு கொண்டவை.

ஒரு யோகி மிக நுணுக்கமானதையும், மிக  பரந்து பட்டதையும் ஒருங்கே காண்கிறான்.


அணுவிற்(கு) அணுவாய் அப்பாலுக்(கு) அப்பாலாய்க்
கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி

என்பார் ஒளவையார்.

அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம்
அளப்பு அரும் தன்மை வளப் பெருங் காட்சி
ஒன்றனுக்கு ஒன்று நின்றெழில் பகரின்
நூற்று ஒரு கோடியின் மேல்பட விரிந்தன
இல்நுழை கதிரின் துன் அணுப் புரையச்
சிறிய ஆகப் பெரியோன் தெரியின்

என்பார் மணிவாசகர்.

இந்த அண்ட சராசரங்கள் எல்லாம் , வீட்டில் ஒளியில் மிதக்கும் ஒரு தூசு போல  என்கிறார்.

ஒன்றுமில்லா வெளியே. வெளி முதல் பூதங்கள் ஆகி விரிந்த அம்மே.  அடியேன் அறிவுக்கு அளவானது அதிசயமே என்று அதிசயப் படுகிறார் அபிராமி பட்டார்.


கிளியே கிளைஞர் மனத்தே கிடந்து கிளர்ந்து ஒளிரும்
ஒளியே ஒளிரும் ஒளிக்கு இடமே எண்ணில் ஒன்றும் இல்லா
வெளியே வெளி முதல் பூதங்கள் ஆகி விரிந்த அம்மே
அளியேன் அறிவு அளவிற்கு அளவானது அதிசயமே

விரிந்து பரந்த இந்த உலகம் யோகிகளுக்கு வசப்படுகிறது

நமக்கு நமது உடலே வசப் பட மாட்டேன் என்கிறது. எங்கே சொன்னால் கேட்கிறது. சாப்பிடாதே என்றால்  சாப்பிடுகிறது.செய்யாதே என்றால் செய்கிறது. பார்க்காதே என்றால் பார்க்கிறது.

யோக நிலையில் மனம் வசப்பட்டால், இந்த பிரபஞ்சம் வசப்படும்.


http://yogasutrasimplified.blogspot.in/2017/11/140.html

Monday, November 6, 2017

யோக சூத்திரம் - 1.39 - மனதுக்கு பிடித்ததை தியானம் பண்ணு


யோக சூத்திரம் - 1.39 - மனதுக்கு பிடித்ததை தியானம் பண்ணு




यथाअभिमतध्यानाद्वा ॥३९॥

yathā-abhimata-dhyānād-vā ॥39॥



yatha =  அப்படி

ābhimata = பிடித்ததை, விரும்புவதை

dhyānād = தியானம் செய்

vā = அது, மேலும்

மனதுக்கு எது பிடிக்கிறதோ, அதை தியானம் செய்.

இது என்ன புதிதாக இருக்கிறது !

மனம் அமைதி பட வேண்டும் என்றால் இறைவனை நோக்கி தியானம் செய்ய வேண்டும், அல்லது ஜோதியை நினைத்து தியானம் செய்ய வேண்டும் என்று அல்லவா கேட்டு இருக்கிறோம்.

இவர் என்ன புதிதாக சொல்கிறார்.


மனதுக்கு பிடித்ததை தியானம் செய் என்று.

ஒருத்தருக்கு ஒரு நடிகையை பிடிக்கும், சிலருக்கு தண்ணி அடிக்க பிடிக்கும்,  சிலருக்கு  சிக்கன் பிடிக்கும், இப்படி ஆளாளுக்கு ஒண்ணு பிடிக்கும் என்றால்  இதையெல்லாம்  வைத்து எப்படி தியானம் செய்வது ?

சரி அப்படியே  அவற்றை தியானம் செய்தால் என்ன கிடைக்கப் போகிறது ?


எவ்வளவு நேரம் தான் ஒரு அழகான பெண்ணைப் பற்றி நினைத்துக் கொண்டே இருக்க  முடியும். சலிக்காதா ? அப்புறம் என்ன செய்வது ?


ஆழ்ந்து சிந்திக்க வேண்டிய விஷயம்.

சிந்திப்போம்.

முதலில் மனதை அடக்க முயற்சி செய்யக் கூடாது. எவ்வளவுக்கு எவ்வளவு நாம்  அதை அடக்க முயற்சி செய்கிறோமோ, அவ்வளவுக்கு அவ்வளவு அது திமிறிக் கொண்டு ஓடும்.

பெரிய பெரிய ஞானிகள் எல்லாம் மனதை அடக்க முயன்று தோல்வி அடைத்து இருக்கிறார்கள்.

அருணகிரி நாதர் அரை நிமிடம் மனதை அடக்க முடியாமல் தவித்து இருக்கிறார்.

சரண கமலா லயத்தை அரை நிமிட நேர மட்டில் தியானம் பண்ண முடியாத  தன்னை  சட கசட மூட மட்டி என்று திட்டிக் கொள்கிறார்.

மனதை அதன் போக்கில் போய் அதை வசப் படுத்த வேண்டும் .

மனதின் இயல்பு எதையாவது பற்றிக் கொள்ளுவது. எதையும் பற்றாமல் மனதால் தனித்து இருக்க முடியாது.

ஏதோ ஒரு பிரச்சனை, பேச்சு, டிவி, புத்தகம், சாப்பாடு என்று அதற்கு ஒரு பற்றுக் கோடு வேண்டும்.

ஓடுகின்ற மனதை கட்டி இழுத்தால் , அது இழுக்க நாம் இழுக்க  இறுதியில் நாம் தளர்ந்து போவோம்.

எனவே, மனது எதை விரும்புகிறதோ அதை முதலில் தியானம் பண்ண வேண்டும்.

மனதை பிடிக்காத ஒன்றின் மேல் செலுத்தினால் அது நிற்காது. எதிர்த்து ஓடும்.

எனவே எது மனதுக்கு ரொம்ப பிடிக்குமோ, அதன் மேல் மனதை இலயிக்க விட வேண்டும்.

நல்ல இசை, இனிய மணம் , அழகிய முகம், சிறந்த சிற்பம், ஓவியம், எதுவாக இருந்தாலும் பரவாயில்லை.

பிடித்ததில் மூழ்கிய மனம் அதில் கரைந்து , நாளடைவில் ஒரு நிலை வரும். மனம் அதையும் தாண்டி ஒன்றும் இல்லாமல் நிற்கும் சில கணங்கள். அந்த சில கணங்கள் கொஞ்சம் கொஞ்சமாய் நீண்டு வளரும்.

மேலும் , தியானம் என்பது முழு கவனத்தையும் அதன் மேல் செலுத்துவது. நமக்கு இனிப்பு பிடிக்கும். அதை உண்ண விரும்புகிறோம். கூடவே , "இது நல்லது இல்லை. சாப்பிட்டால் சர்க்கரை வியாதி வரும்." என்ற எதிர்மறை எண்ணம் வருகிறது. அப்புறம் "ஒண்ணு சாப்பிட்டால் என்ன ?" என்ற இன்னொரு எண்ணம் வருகிறது.

இப்படி பெண்டுலம் போல இங்கும் அங்கும் மனம் அலைகிறது.

அப்படி இல்லாமல். முழு கவனமும் , சிந்தனையும் மனதுக்கு பிடித்ததன் மேல் செலுத்த வேண்டும்.

லட்டு பிடிக்குமா....அதை பற்றி சிந்திக்க வேண்டும். அதன் வடிவம், சுவை, நிறம், மணம் என்று அனைத்தையும் பற்றி சிந்திக்க வேண்டும். அப்படி செய்யும் போது நாளடைவில் லட்டின் மேல் உள்ள ஆசை அற்றுப் போகும். நமக்கு ஆசை விடாமல் இருப்பதற்கு காரணம் நாம் எதையும் முழுமையாக அனுபவிப்பது கிடையாது. ஒரு குற்ற உணர்வு இருந்து கொண்டே இருக்கிறது. எதையும் முழுமையாக அனுபவிக்காததால் , மீண்டும் மீண்டும் அவற்றை அனுபவிக்கத் தூண்டுகிறது மனம்.


பதஞ்சலியின் யோகம் எந்த மதமும் சார்ந்தது அல்ல. உங்களுக்கு இயசுவை பிடிக்குமா, அவரை தியானம் பண்ணுங்கள்.

மனதோடு சண்டை போடாதீர்கள்.

மனதில் சஞ்சலம் வரமால் இருக்க இது வழி.

http://yogasutrasimplified.blogspot.in/2017/11/139.html