Friday, July 19, 2019

யோக சூத்திரம் - 2.49 - ஒன்றிய சக்தி

யோக சூத்திரம் - 2.49 - ஒன்றிய சக்தி


तस्मिन् सति श्वासप्रश्वास्योर्गतिविच्छेदः प्राणायामः ॥४९॥

tasmin sati śvāsa-praśvāsyor-gati-vicchedaḥ prāṇāyāmaḥ ॥49॥

tasmin = அதற்கு பின்

sati = அடைந்த பின்

śvāsa = சுவாசம்

praśvāsyor = வெளியேறுதல்

gati = ஓட்டம், பாதை

vicchedaḥ = தடை படுதல்

prāṇāyāmaḥ = பிராணாயாமம்

ஆசனத்தை சரியான படி அறிந்து , கடை பிடித்து, அதை தாண்டிய பின், மூச்சு வெளியேறுதலை, அதன் பாதையை தடுக்கும் போது பிராணாயாமம் நிகழ்கிறது

மிக ஆழ்ந்து சிந்திக்க வேண்டிய சூத்திரம்.

இந்த உடலுக்கும் மனதுக்கும் உள்ள தொடர்பு எது? எப்படி இரண்டும் இணைந்து  இருக்கின்றன?

மூச்சுக் காற்றால்.

மூச்சு தான் இந்த உடலையும் மனதையும் ஒட்ட வைக்கும் பசை.

இதை நம்புவது கொஞ்சம் கடினமாக இருக்கும். அது எப்படி மூச்சு காற்று இந்த இரண்டையும் ஒன்றாகச் செய்கிறது என்ற சந்தேகம் வரலாம்.  அதைப் பற்றி மேலும் சிந்திக்க இருக்கிறோம்

நம்மையும் இந்த உலகையும் இணைப்பது எது ? இந்த மூச்சு காற்று தான். உணவும், தண்ணீரும் இணைப்பது என்பது என்னவோ உண்மை தான். ஆனால், மூச்சு காற்று மிக நெருக்கமாக, ஒவ்வொரு நொடியும் நம்மை இறுக இணைக்கிறது. நீர் இல்லாமல் சில மணி நேரங்கள் இருந்து விட முடியும். உணவு இல்லாமல் சில நாட்கள் கூட இருந்து விட முடியும். மூச்சு விடாமல் ?

தாகம் எடுத்தாலோ, பசித்தாலோ அதை நீண்ட நேரம் பொறுத்துக் கொள்ள முடியும். கொஞ்சம் சுவாசம் தடை பட்டாலும் தவித்துப் போய் விடுவோம்.

உள்ளிருக்கும் மனதையும், உடலையும், இந்த உலகையும் ஒட்டி வைக்கும் பசை இந்த மூச்சு. பிராணன்.

இதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

அடுத்தது, பிராணாயாமம் என்றால் என்ன?

பிராணாயாமம் என்றால் ஏதோ மூச்சை அடக்குவது, மூச்சு பயிற்சி என்று நினைக்கக் கூடாது.

பிராணன் என்றால் உயிர் சக்தி.

யமம் , யமன் என்றால் கட்டுப் படுத்துவது. கட்டுவது.

இந்த உடலுக்கு யாக்கை என்று பெயர். எலும்பு, சதை, நரம்பு, இரத்தம் இவற்றால் சேர்த்து கட்டப்பட்டது. எனவே இதற்கு யாக்கை என்று பெயர்.

"கால் இரண்டு ஓட்டி, அதில் இரண்டு கை வைத்த வீடு குலையும் முன்னே" என்பார் அருணகிரிநாதர் இந்த உடம்பைப் பற்றி.

"தெய்வத் திருமலைச் செங்கோட்டில் வாழுஞ் செழுஞ்சுடரே
வை வைத்த வேற்படை வானவனே மறவேன் உனையான்
ஐவர்க் (கு) இடம்பெறக் காலிரண்டு ஒட்டி அதிலிரண்டு
கை வைத்த வீடு குலையுமுன்னே வந்து காத்தருளே".



சீர், தளை , அடி , தொடை, இவற்றால் சேர்த்து கட்டப்படும் செய்யுளின் இலக்கணத்துக்கு யாப்பிலக்கணம் என்று பெயர்.

அ -யமம் என்றால் கட்டுப்படாதது, சுதந்திரமானது, பீறிட்டு கிளம்புவது.

பிராணாயாமம் என்றால் உள்ளிருக்கும் உயிர் சக்தி எங்கும் பரந்து வியாபித்து இருப்பது. உலகனைத்தையும் தழுவி நிற்பது. உலகோடு ஒன்றாக இருப்பது. .

அனைத்து சிக்கல்களுக்கும் காரணம் , நாம் இந்த உலகை விட்டு வேறு பட்டு நிற்பதால் தான்.

சரி, எப்படி இது நிகழ்கிறது என்று பார்ப்போம்.

பதஞ்சலி சொல்கிறார்.

"gati-vicchedaḥ "

கதி என்றால் வழி. பர கதி, அதோகதி என்று சொல்லுகிறோம் அல்லவா. அது போல.

மூச்சு வரும் வழியை, பாதையை நிறுத்தினால்.

எப்போது நிறுத்த வேண்டும்...?

மூச்சை உள்ளே இழுக்கும் போது

மூச்சை முழுவதுமாக வெளியே விடும் போது

மூச்சை உள்ளே இழுத்த பின்

மூச்சை உள்ளே இழுக்கும் போது சட்டென்று பாதியில் நிறுத்திப் பாருங்கள். அதே போல விடும் போதும், உள்ளே இழுத்த பின்னும்...என்ன ஆகிறது என்று பாருங்கள்.

நீங்க எதையோ சிந்தித்துக் கொண்டிருப்பீர்கள்..மூச்சு தடை பட்டால்,, அந்த சிந்தனையும் தடை படும். எண்ண ஓட்டம் தடைபடும்.

சிந்தனை நின்று விடும்.

மனம் அலைபாய்வது நின்று விடும்.

அதற்காக மூச்சு விடாமல் இருக்க முடியுமா ? முடியாது அல்லவா.

இது எதற்கு என்றால், மூச்சுக்கும் , மனதுக்கும் (எண்ண ஓட்டத்துக்கும்) உள்ள தொடர்பை அறிந்து கொள்ள).

அது மட்டும் அல்ல, எப்படி மூச்சை பழக்கினால் , மனதை பழக்கலாம் என்று அறிந்து கொள்ள.

இரண்டாவது, மூச்சு ஒரே கதியில் ஓடிக் கொண்டிருக்கும் போது அதை சட்டென்று நிறுத்தினால், உடல் உதறும். தவிக்கும். உடலில் உள்ள அத்தனை சக்தியையும் கூட்டிப் போராடும், அந்த மூச்சை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வர.

எங்கே, இதை முயற்சி செய்து பாருங்கள். வேக வேகமாக ஒரு ஐந்து நிமிடம், வேண்டாம் இரண்டு நிமிடம் மூச்சு விட்டுப் பாருங்கள். வேக வேகமாக மூச்சை இழுத்து விடுங்கள்.  எவ்வளவு சக்தி விரயம் ஆகிறது என்று தெரியும். உடம்பு தளர்ந்து விடும். வியர்க்கும்.

கோபம் கொள்ளும் போது , காம வயப்படும் போது , பயம் வரும் போது மூச்சு வேக வேகமாக இரைக்கும். ஆனால், அந்த மன நிலையில் நீண்ட நேரம் இருக்க முடியாது. உடல் தளர்ந்து விடும். உச்ச பச்ச கோபம் , உச்ச பச்ச காமம் ஒரு சில நிமிடம் தான் தாங்கும். உடனே உடல் தளர்ந்து, மீண்டும் மூச்சு பழைய நிலைக்கு வர முயற்சி செய்து , வந்தும் விடும்.

இதில் இருந்து நாம் அறிந்து கொள்வது என்ன என்றால், மூச்சினால் சக்தி விரயம் ஆகிறது. சக்தியை சேர்க்க வேண்டும் என்றால், சக்தியை ஒருமுகப் படுத்த வேண்டும் என்றால், மூச்சை கட்டுப்படுத்த வேண்டும். தாறுமாறான மூச்சு சக்தியை விரயம் செய்யும் என்றால், சீரான மூச்சு சக்தியை சேமிக்க, ஒருமுகப் படுத்த உதவும் அல்லவா.



நீண்ட தூரம் ஓடும் விளையாட்டு வீரர்களின் மூச்சு ஒரே மாதிரி இருக்கும். பழக்கம் இல்லாமல் ஓடினால், சிறிது தூரம் ஓடுவதற்குள்ளேயே மூச்சு வாங்கி விடும். அவ்வளவு சக்தி விரயம் ஆகிறது என்று அர்த்தம்.

மூச்சை சரிப் படுத்தினால், சக்தியை பெருக்கவோ, செலவழிக்கவோ முடியும்.

மூன்றாவது....


தொடர்ந்து சிந்திப்போம்

https://yogasutrasimplified.blogspot.com/2019/07/249.html