Friday, June 30, 2017

யோக சூத்திரம் - 1.3 - தன்னைத் தான் காணும் -பாகம் 1

யோக சூத்திரம் - 1.3 - தன்னைத் தான் காணும் -பாகம் 1 



तदा द्रष्टुः स्वरूपेऽवस्थानम् ॥३॥

tadā draṣṭuḥ svarūpe-'vasthānam ॥3॥

tadā = அப்போது

draṣṭuḥ = பார்ப்பவன் , சாட்சி

svarūpe = தன் நிலையை, தன்மையை

avasthānam  = நிலை பெற்ற பின்



அப்போது, சலனமற்ற நிலையில் தன்னைத் தான் அறிதல் நிகழ்கிறது.

அப்போது ...அப்போது என்றால் எப்போது ?  போன சூத்திரத்தில் பார்த்தோமே, சித்த வ்ருத்தி நிரோதம் நிகழ்ந்த அந்த சமயத்தில்.

எப்போது மனமானது அலைபாயாமல் நிலையாக இருக்கிறதோ, அப்போது அது தன்னைத் தானே அறிகிறது.

அது என்ன தன்னைத் தானே அறிவது ?

கடலில் அலை அடிக்கிறது.

ஒவ்வொரு அலையும் தான் அலை என்று நினைத்துக் கொள்கிறது.  ஐயோ நான் அந்த அலையை விட சின்னதாக இருக்கிறேன், அந்த அலையை விட கொஞ்ச நேரம் தான் இருந்தேன் என்று கவலைப் பட்டு கொண்டு இருக்கிறது.

அலை, நிற்கும் போது தெரியும், அது அலை அல்ல கடல் என்று. அலைக்குத் தெரியாது தான் கடல் என்று.  அலை நிற்கும் வரை, எவ்வளவு சொன்னாலும் அந்த அலை புரிந்து கொள்ளாது. நான் ஒரு அலை, நீ ஒரு அலை, அவன் ஒரு அலை, என்றுதான் பார்க்கும்.

தெளிவான பார்வை வேண்டும் என்றால், சித்த விருத்தி நிரோதம் அடைய வேண்டும்.


draṣṭuḥ = பார்ப்பவன் , சாட்சி

பதஞ்சலி பார்ப்பவன் யார் என்று சொல்லவில்லை. அது ஆத்மாவா , உயிரா, கடவுளா  என்றெல்லாம் சொல்லவில்லை. பார்ப்பவன் யாரோ அவன் தன்னை அறிவான்  என்கிறார்.  Drastuh என்பது காணும் ஒன்று.

எப்படி சித்தம் என்பது அலை பாயும் தன்மை கொண்டதோ, drastuh  என்பது அலைபாயாமல்  உள்ளே நிலைத்து நிற்பது. அது அனைத்தையும் தெளிவாக காண்பது எப்போது என்றால், சித்தம் அலை பாயாமல் இருக்கும் போதுதான். குளத்தின் நீர் அலை பாயாமல் இருந்தால், குளத்தில் உள்ளே இருப்பதை மட்டும் அல்ல, குளத்தையும் தெளிவாக பார்க்க முடியும்.


உலகை பார்ப்பதில் நமக்கும் யோகிகளுக்கும் உள்ள வேறுபாடு என்ன ?

எப்படி சித்தம், அதில் உண்டாகும் விருத்தி, அவற்றை தாண்டி பார்க்கும் drastuh என்பன இயங்குகின்றன என்று பார்ப்போம்.






Wednesday, June 28, 2017

யோக சூத்திரம் - 1.2 - சித்த விருத்தி நிரோதம் - பாகம் 3

யோக சூத்திரம் - 1.2 - சித்த விருத்தி நிரோதம் - பாகம் 3




योगश्चित्तवृत्तिनिरोधः ॥२॥

yogaś-citta-vr̥tti-nirodhaḥ ॥2॥

யோகா சித்த விருத்தி நிரோதா 

சித்தம் என்பது இந்த உலகை அறிய உதவுவுகிறது என்று போன பிளாகில் பார்த்தோம். 

சித்தம் என்பது நம் புலன்கள், அவற்றைக் கொண்டு அறியும் மூளை, மூளையைத் தாண்டி மனம்  என்ற இவை அனைத்தின் தொகுதி பார்த்தோம். 

இன்னும் சற்று ஆழ்ந்து சிந்திப்போம்.

ஒரு இசை அமைப்பாளர் இசை  அமைக்கிறார். நாம் அதை கேட்கிறோம். "ஆகா, என்ன இனிமையாக இருக்கிறது " என்று  சொல்கிறோம்.

அந்த இசையை அமைப்பதற்கு முன், அந்த இசை எங்கே இருந்தது ?

தெரியாது. தெரிந்து கொள்ளவும் முடியாது. ஆனால், அந்த இசை அந்த இசை அமைப்பாளரின் சித்தத்தின் மூலம் வெளிப்பட்டது என்று மட்டும் தெரியும். 

அதே போல, ஒரு கதாசிரியன் ஒரு புத்தகம் எழுதுகிறான். அவன் எழுதுவகற்கு முன், அந்த புத்தகம் எங்கே இருந்தது ? தெரியாது. ஆனால், அந்த கதாசிரியரின் சித்தத்தின் மூலம் அந்த புத்தகம் உருவானது. 

இதை நீங்கள் சிந்தித்துக் கொண்டே போனால் , இந்த உலகம் அனைத்தும் பல  சித்தங்களின் வெளிப்பாடு என்று தெரியும். 

அது ஒரு புறம்  இருக்கட்டும்.

நாம் இசையை கேட்கிறோம், புத்தகத்தை வாசிக்கிறோம் , அவற்றை உணர்ந்து இரசிக்கிறோம். அது நமது சித்ததினால் விளைவது. 

அடடா, இந்த காப்பி எவ்வளவு சுவையாக இருக்கிறது என்கிறோம்.

 எனவே,இந்த உலகம் தோன்றியது சித்தத்தில் இருந்து, இந்த உலகம் அறியப்படுவது அல்லது அனுபவிக்கப் படுவது சித்தத்தின் மூலம். இது இரண்டைத் தவிர உலகம் என்று தனியாக ஒன்றும் இல்லை. 

சித்தம் உலகை உருவாக்கிறது. உலகை அறிகிறது. 

அப்படியென்றால் இந்த சித்தம் எவ்வளவு தெளிவாக இருக்கிறதோ, அந்த அளவுக்கு நம்மால் இந்த உலகை சரியாகப் பார்க்க முடியும். 

ஒரு குளத்தில்   மோதிரம் ஒன்று தவறி விழுந்து விட்டது என்று வைத்துக் கொள்வோம்.  குளத்தின் நீர் சலனமற்று இருந்தால் , நம்மால் சரியான வெளிச்சத்தில் அந்த மோதிரத்தை  முடியும். குளத்தின் நீரும்  தெளிந்து இருக்க  
வேண்டும்.


குளத்தின் நீர் தான் சித்தம். மோதிரம் நாம் காணும் உலகம். 


நீர் தெளிந்து , சலனம் இல்லாமல் இருந்தால் மோதிரம் தெரியும். 

இல்லையென்றால் தெரியாது அல்லது மங்கலாகத் தெரியும் அல்லது தெரியவே தெரியாது. 

அது போல, நம் சித்தம் தெளிவாக, சலனம் இல்லாமல் இருந்தால் இந்த உலகை நாம் தெளிவாக காண முடியும். 

இல்லையென்றால் அரைகுறையாக கண்டு குழம்பிப் போவோம்..குழம்பிய நீரையும், அலை அடிக்கும் நீரையும் மறந்து விட்டு, இந்த உலகமே இப்படித்தான் என்று உலகை குறை சொல்கிறோம்.

யோகே சித்த விருத்தி நிரோதம் என்பது சூத்திரம். 

இந்த விருத்தி என்றால் விளைவது. பெருகுவது. செய்வது என்று பொருள். 

நம் புலன்கள் அங்கும் இங்கும் அலைந்து கொண்டே இருக்கின்றன. புத்தி அங்கும் இங்கும் அலை பாய்ந்து கொண்டே இருக்கிறது.  குளத்தில் அலை அடிப்பது போல புலன்களும் மனமும்  சர்வ காலமும் அலைந்து கொண்டே இருக்கின்றன.

இந்த சலனத்தை நிறுத்து , அவை எங்கு போக வேண்டுமோ அங்கு கொண்டு செல்வது "நிரோதம் " என்று சொல்லப்படுகிறது. 

நிரோதம் என்றால் ஒரு நிறுத்துவது, தடுப்பது என்றுதான் நேரடிப் பொருள் (நிரோத் என்பதும் இந்த வேர்ச்சொல்லில் இருந்து வந்தது தான் )

ஆனால், ஒரு சிறு வித்தியாசம் இருக்கிறது. 

சித்தத்தை அடக்குவது அல்ல. புலன்களை அடக்குவது அல்ல. அவற்றை நம் வழியில் கொண்டு செல்வது. 

ஒரு தேர்ப்பாகன் லகானை கையில் வைத்து இருப்பான். குதிரை ஓடும். லகான் என்பது குதிரை ஓடாமல் பிடித்து நிறுத்துவதற்கு அல்ல. குதிரையை நாம் விரும்பும் திசையில் செலுத்த. 

தறி கெட்டு ஓடும் புலன்களை அதன் போக்கில் விடாமல், நம் வழிக்கு கொண்டு வருவதுதான் நிரோதம்.

யோகப் பயிற்சியின் மூலம், சித்தத்தை (புலன்கள், அறிவு, மனம், அவற்றிற்கு இடையே  ஆன தொடர்பு எல்லாம் சேர்ந்தது சித்தம் ) நல் வழிப் படுத்துவதே  யோக சாதனம்  ஆகும்.

எவ்வளவு முக்கியமான விஷயம் ? தெரிந்து கொள்ள வேண்டாமா ? 

Monday, June 26, 2017

யோக சூத்திரம் - 1.2 - சித்த விருத்தி நிரோதம் - பாகம் 2

யோக சூத்திரம் - 1.2 - சித்த விருத்தி நிரோதம் - பாகம் 2 




योगश्चित्तवृत्तिनिरोधः ॥२॥

yogaś-citta-vr̥tti-nirodhaḥ ॥2॥

யோகா சித்த விருத்தி நிரோதா 

சித்தம் என்பது இந்த உலகை அறிய உதவுவுகிறது என்று போன பிளாகில் பார்த்தோம். 

இந்த சித்தம் என்பது மனம், அறிவு, ஞாபகம், சிந்தனை என்ற இவற்றின் ஒரு தொகுதி. 

பொதுவாக நம் மனம் அல்லது சித்தம் என்பது 5 நிலைகளில் இருக்கிறது. 

முதலாவது - க்ஷிப்தா அல்லது சலனம் உள்ள மனம். அலை பாய்ந்து கொண்டே இருப்பது. குரங்கு போல அங்கும் இங்கும் தாவிக் கொண்டே இருக்கும். ஒன்றில் இருந்து மற்றதற்கு மாறிக் கொண்டே இருக்கும். ஒரு நிமிடம் கூட ஒரு பொருளின் மேலே நிற்காது. 

சரண கமலாலயத்தை அரை நிமிட நேர மட்டில் தவ முறை தியானம் வைக்க அறியாத சட கசட மூட மட்டி என்பார் அருணகிரிநாதர். 

சரணகம லால யத்தை அரைநிமிஷ நேர மட்டில்
தவமுறைதி யானம் வைக்க …… அறியாத
சடகசட மூட மட்டி பவவினையி லேச னித்த
தமியன்மிடி யால்ம யக்க …… முறுவேனோ
கருணைபுரி யாதி ருப்ப தெனகுறையி வேளை செப்பு
கயிலைமலை நாதர் பெற்ற …… குமரோனே


இப்படி அலையும் மனதை நிறுத்து என்று முருகன் உபதேசம் செய்தான் என்று கூறுகிறார்.

"சும்மா இரு சொல் அற என்றலுமே 
அம்மா பொருள் ஒன்றும் அறிந்திலனே "

என்கிறார். 

சும்மா இருக்க முடியாது. மனம் அலைந்து கொண்டே இருக்கும். 

இது ஒரு நிலை. 

இன்னொரு நிலை - முத்தா அல்லது மந்த புத்தி. மந்த புத்தி என்பது எதையும் முடிவெடுக்காமல், எதையும் அறிந்து கொள்ளாமல் முழிப்பது. என்ன சொன்னாலும் மண்டையில் ஏறாது. எதையும் ஒன்றுக்கு பத்து தடவை சொல்ல வேண்டும். மெதுவாகத்தான் புரியும். 


மற்றொரு நிலை - விக்ஷிப்தா அல்லது தடுமாறும் மனம். சரி என்று ஒன்றை நினைக்கும். அந்த பாதையில் போகும். சிறிது காலம் கழித்து , இது சரிதானா என்று தடுமாறும். பின் வேறு ஒரு வழியில் செல்லும். உறுதியற்ற தானம். நாலு நாள் உடற் பயிற்சி செய்வது. உடல் எடை குறையவில்லை என்றால் , இது சரியில்லையோ என்று அதை விட்டு விடுவது. தடுமாறும் மனம். 

இன்னொரு நிலை ஏகாக்ர அல்லது ஒரு முகப் பட்ட சிந்தனை. ஆங்கிலத்தில் concentration என்று சொல்லுவார்கள். சிந்தனை அங்கும் இங்கும் ஓடாமல், தடுமாறாமல், மந்தமாக இல்லாமல், ஒரு முகமாக இருப்பது. அசையாமல் ஒன்றையே பற்றி நிற்பது. 

கடைசியாக , நிரோதா அல்லது நிரோதம் என்பது சித்தத்தை வெல்வது அல்லது அதை நம் விருப்பப்படி செலுத்துவது. 

நிரோதம் என்பதற்கு நேரடி மொழி பெயர்ப்பு என்றால் கட்டுப்படுத்தவது, அடக்குதல், ஆளுதல் , தடை போடுதல் என்று வரும். யோகா மூலம் சித்தத்தை நாம் , நாம் விரும்பும் வழியில் செலுத்த முடியும்.. சித்தம் நம் கட்டுக்குள் வரும். இதை அடைவதுதான் யோகத்தின் நோக்கம். 

அலைபாயும் மனத்தை, தடுமாறும் மனதை, மந்த மனத்தை நம் கட்டுக்குள் கொண்டு வருவதுதான் யோகத்தின் நோக்கம். 

சித்தம் வசப்பட்டால் வாழ்க்கை வசப்படும். அது மட்டும் அல்ல, உலகே வசப்படும். 

யோக சித்த விருத்தி நிரோதா 

விருத்தி என்றால் செயல்பாடு. 

யோகப் பயிற்சின் மூலம், சித்தத்தை நாம் வென்றெடுக்கும் முயற்சி. 

யோக சூத்திரம் - 1.2 - சித்த விருத்தி நிரோதம் - பாகம் 1

யோக சூத்திரம் - 1.2 - சித்த விருத்தி நிரோதம் - பாகம் 1 




योगश्चित्तवृत्तिनिरोधः ॥२॥

yogaś-citta-vr̥tti-nirodhaḥ ॥2॥

யோகா சித்த விருத்தி நிரோதா 

ஒவ்வொரு வார்த்தையையும் மிக மிக கவனமாக போட்டிருக்கிறார் பதஞ்சலி. மிகவும் அடர்த்தியாக எழுதப் பட்டது யோகா. கடுமையான சொற் சிக்கனம். இதனால் ஒரு நல்லது என்ன என்றால், இதில் ஒரு வார்த்தையை எடுத்து விட்டு இன்னோர் வார்த்தையை போட முடியாது. யாரும் இடைச் செருகல் செய்ய முடியாது. ஒரு கணித சூத்திரம் போல, ஒரு அறிவியில் கோட்பாடு (தியரி) போல எழுதி இருக்கிறார்.

யோகா = யோகப் பயிற்சி செய்வதன் மூலம் என்ன கிடைக்கும் ? யோக பயிற்சி செய்தால் என்ன நிகழும் என்று சொல்கிறார்.

சித்த = சித்தம். சித்தம் என்றால் என்ன ? இதற்கு பக்கம் பக்கமாக விரிவுரை எழுதி இருக்கிறார்கள். கொஞ்சம் சிந்திப்போம்.

வெளி உலகில் நடப்பதை நமக்கு நம் புலன்கள் பெற்றுத் தருகின்றன.

ஒளி, ஒலி , தொடு உணர்வு, சுவை,  வாசம், என்பதை கண், காது, உடல், மூக்கு, நாக்கு  என்ற புலன்கள் அறிய உதவுகின்றன.

இது புரிகிறது அல்லவா.

சரி, கண் பார்க்கிறதா ? காது கேட்கிறதா ? இல்லை.

இவை வெளி உலகில் இருந்து வரும் செய்திகளை மூளைக்கு அனுப்புகின்றன. அவ்வளவுதான். கண்ணுக்கு ஒன்றும் தெரியாது. அது ரோஜா பூவா, மல்லிகையா என்று கண்ணுக்குத் தெரியாது. அது காம்போதியா, பைரவி இராகமா என்று காதுக்குத் தெரியாது.

சப்தம் மூளைக்குப் போய் , மூளை அதை கண்டு சொல்கிறது. அது மல்லிகை பூ, இது காம்போதி இராகம் என்று.

சரி, மூளை உணர்கிறதா ? மூளைக்குத் தெரியுமா ?

எனக்கு சங்கீதம் என்றால் என்ன என்றே தெரியாது. என் காதில் ஒரு மோகன இராகப் பாடல் விழுகிறது. ஒரு சங்கீத மேதை என் பக்கத்தில் இருக்கிறார். அவர் காதிலும் அந்த பாடல் விழுகிறது. அவருக்கு அது மோகன இராகப் பாடல், இன்ன தாளம் என்று புரிகிறது. எனக்கு அது சத்தமாக கேட்கிறது. எனக்கும்  காது இருக்கிறது. மூளை இருக்கிறது. இருந்தும் என்னால் அதை அறிய முடியவில்லை.

காரணம் என்ன ?

என் அறிவு, அனுபவம், ஞாபகம் இவை எல்லாம் சேர்ந்து வேலை செய்ய வேண்டும்.

அது மூளை என்ற ஒரு உறுப்பு மட்டும் மட்டும் அல்ல. அதில் கொஞ்சம் மற்றவையும் சேர வேண்டி இருக்கிறது அல்லவா.

இதன் மூலம் நாம் உலகை அறிகிறோமோ, அது சித்தம்.

சித்தம் நேராக உலகை அறிய முடியாது. புலன்களும், மூளையும் வேண்டும். இவற்றின் துணை கொண்டு சித்தம் உலகை அறிகிறது.

இதை புத்தி என்கிறார்கள், மனம் என்கிறர்கள். சித்தம் என்கிறார்கள்.

மிகச் சரியாக அறுதியிட்டு கூற முடியவில்லை. இருந்தும் உங்களுக்கு அது என்ன என்று புரிகிறது அல்லவா ?

இந்த சித்தம் தான் நாம் உலகை அறிய உதவுகிறது.


ஒருவரை பார்த்தவுடன் நமக்கு பிடித்துப் போய் விடுகிறது. அதே ஆளை இன்னொருவருக்கு படித்தவுடன் பிடிக்காமல் போகிறது. ஏன் ? ஆள் ஒருவர் தான். எடை, நிறம், உயரம் எல்லாம் ஒன்று தான். இருந்தும் ஒருவர்க்கு பிடிக்கிறது. இன்னொருவருக்கு பிடிக்கவில்லை.

காரணம் , நம் சித்தம் வேறு, அவர் சித்தம் வேறு.

காதலிக்காக காத்திருந்தால்,  நேரம் நகரவே மாட்டேன் என்கிறது. ஒவ்வொரு வினாடியும் யுகம் போல இருக்கிறது. அவள் வந்து விட்டால், யுகமும் நொடியாக போய் விடுகிறது. "அட அதுக்குள்ள 4 மணி நேரம் ஆகி விட்டதா ? இப்ப தான் வந்த மாதிரி இருக்கு " என்று சொல்லுவதை கேட்டு இருக்கிறோம்.

ஏன் ?

நேரம் என்னவோ ஒரே மாதிரிதான் போய் கொண்டு இருக்கிறது. நாமும் ஒரே ஆள் தான். இருந்தும் நேரம் சில சமயம் வேகமாக போவது போலவும், சில சமயம் மெதுவாக போவதும் போலவும் இருக்கிறது.

ஏன் ?

நம் சித்தம் இருக்கும் நிலை.

உலகம் என்பது நம் சித்தத்தின் நிலையை பொறுத்தது என்று புரிகிறது அல்லவா ?

மழை நல்லதா ?

காதலியின் கை பிடித்து நடந்தால் சுகம் தான். உடம்பு சரியில்லாமல்  இருக்கும் போது நனைந்தால் எரிச்சலும் கோபமும் வரும்.

இப்படி பல உதாரணம் சொல்லலாம்.

வெளி உலகம் என்பது நம் சித்தத்தை பொறுத்தது என்று புரிந்து கொள்ள வேண்டும்.

இது மிக மிக தெளிவாக நம் மனதில் பதிய வேண்டும்.

நல்லதும், கெட்டதும் , சுகமும், துக்கமும், இன்பமும், துன்பமும்,  நம் மன நிலை அல்லது  சித்தத்தை பொறுத்தது.

கோபம், வெறுப்பு, எரிச்சல், காமம், மயக்கம், குழப்பம் எல்லாம் சித்தத்தை  பொறுத்தது  என்று புரிகிறது அல்லவா.

அப்படி என்றால், சித்தத்தை மாற்றினால், உலகம் வேறு மாதிரி தெரியும் நமக்கு.

பச்சை நிற கண்ணாடியை போட்டுக் கொண்டு பார்த்தால், எல்லாம் பச்சையாகவே தெரியும்.

மஞ்சள் காமாலை வந்தால், எல்லாம் மஞ்சளாகத் தெரியும்.

நம் சித்தம் எப்படியோ, உலகம் அப்படியே தெரியும்.

அப்படி என்றால் அந்த சித்தத்தை நாம் அறிந்து கொள்ள வேண்டும் அல்லவா.

அது எப்படி செயல் படுகிறது, அதன் நிலைகள் என்ன, எப்படி ஒரு நிலையில் இருந்து இன்னொரு நிலைக்கு கொண்டு செல்வது எப்படி, இந்த நிலை நல்லது, எது நல்லது இல்லை ....

இவற்றை எல்லாம் அறிந்து கொள்ளலாம் வாருங்கள். 

Sunday, June 25, 2017

யோக சூத்திரம் - 1.1 - இப்போது யோக அனுசாசனம்

யோக சூத்திரம் - 1.1 - இப்போது யோக அனுசாசனம் 


अथ योगानुशासनम् ॥१॥

atha yoga-anuśāsanam ॥1॥

அத யோக அனுசாசனம்

இப்போது யோக பயிற்சி

இப்போது = இந்த நிமிடத்தில், இந்த நொடியில் இருந்து. நாம் எப்போதும் ஒன்று கடந்த கால நினைவுகளில் வாழ்கிறோம் அல்லது எதிர் கால கனவுகளில் அல்லது பயங்களில் வாழ்கிறோம். இந்த நொடியில் நாம் வாழ்வதே கிடையாது.

கண் மூடி ஒரு நிமிடம் யோசித்துப் பாருங்கள். இன்று எத்தனை தடவை பழசை எண்ணிப் பார்த்தீர்கள். எத்தனை முறை எதிர் காலத்தைப் பற்றி யோசித்தீர்கள் என்று.

வாழ்க்கை என்பது நிகழ்காலத்தில் மட்டும் தான் இருக்க முடியும். கடந்த காலம் போய் விட்டது. வராது. எதிர் காலம் இனிதான் வரப் போகிறது. இந்த இரண்டு காலமும் நம் கையில் இல்லை.

நம்மிடம் இருப்பது இந்த நொடி தான். ஏதாவது செய்வது என்றால் இந்த நொடியில் செய்தால்தான் உண்டு.

ஆனால், நாம் இந்த நொடியில் இருப்பதே இல்லை.

பதஞ்சலி சொல்கிறார் "இப்போது யோக பயிற்சி " என்று.

இந்த நொடியில் இருந்து ஆரம்பிக்க வேண்டும்.

நாளைக்கு நல்ல நாள், அடுத்த வாரம் ஆரம்பிக்கலாம் என்று இருக்கக் கூடாது.

இப்போது.

உடனே.

"யோக" - யோகம் என்றால் இணைப்பது. இனைந்து இருப்பதை மீண்டும் இணைக்க முடியாது. பிரிந்து கிடப்பதை இணைத்து வைக்கலாம். எது பிரிந்து கிடக்கிறது ?

மனமும் உடலும்

உடலும் உணர்வும்

மனமே , பல்வேறு பகுதிகளாக பிரிந்து கிடக்கிறது . மனச் சிதைவு என்று சொல்வார்களே.

ஆசை ஒரு புறம், தவறு என்ற எண்ணம் ஒரு புறம், பொறாமை ஒரு புறம், புன்னகை மறு புறம், வெறுப்பு ஒரு புறம், சகிப்பு மறு புறம் என்று மனம் பல பகுதிகளாக  பிரிந்து கிடக்கிறது.

இப்படி உடைந்து கிடக்கும் நம்மை எடுத்து ஒட்டி வைப்பது யோகா. நம்மை முழு மனிதனாக்குவது யோகா.

அனுசாசனம் = பயிற்சி, ஒழுக்கம் (discipline ).

உலகில் உள்ள அத்தனை மதங்களும் ஏதோ ஒன்றை தருவதாகச் சொல்லி தான் மக்களை தன் பக்கம் இழுக்கிறது. ஒன்றும் கிடைக்காது என்றால் மனிதன் ஏன் கோவிலுக்குப் போக வேண்டும், பூஜை செய்ய வேண்டும், காணிக்கை செலுத்த வேண்டும் ? ஏதோ ஒன்று கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தான் இவற்றை எல்லாம் செய்கிறான்.

ஒரு வேளை கிடைக்காவிட்டால் ?

இருக்கவே இருக்கிறது, சொர்கம், மறு பிறப்பு  . இந்த பிறவியில் கிடைக்காவிட்டால் , சொர்க்கத்தில் கிடைக்கும். மறு பிறவியில் கிடைக்கும் என்று  சொல்லி விடலாம். யாராலும் செக் பண்ண முடியாது. மனிதன் ,  ஏதோ பெரிதாக கிடைக்கும் என்று எண்ணிக் கொண்டு மதங்களின் பின்னால் போய் கொண்டிருக்கிறான்.

ஆனால், பதஞ்சலி அப்படி ஒன்றும் தருவதாக, கிடைப்பதாக சொல்ல வில்லை.

யோக பயிற்சியை இப்போது தொடங்கு என்கிறார்.


யோகா செய்தால் அது கிடைக்கும், இது கிடைக்கும் என்று ஆசை காட்டவில்லை.

அனுசாசனம் = அனுசாசனம் என்பதற்கு சரியான தமிழ் சொல் இருக்கிறதா என்று தெரியவில்லை. பயிற்சி, ஒழுக்கம் , discipline என்று சொல்லலாம். அது கட்டு பாடு கிடையாது. அதை செய், இதை செய்யாதே என்று விதிப்பது அல்ல. பயிற்சி. அவ்வளவு தான்.


சரியான பயிற்சி இருந்தால், ஒழுக்கம் இருந்தால் எதையும் அடையலாம். அதனால், பயிற்சியை ஆரம்பி இப்போதே என்கிறார்.

எதை பயிற்சி செய்ய வேண்டும், பயிற்சி செய்தால் என்ன நிகழும்....பார்ப்போம். 

Saturday, June 24, 2017

பதஞ்சலியின் யோக சூத்திரம் - ஒரு அறிமுகம்

பதஞ்சலியின் யோக சூத்திரம் - ஒரு அறிமுகம் 


யோகம் என்றால் என்ன ?

யோகம் என்றால் என்ன என்பதைப் பற்றி பார்ப்பதற்கு முன், யோகத்தைப் பற்றி நாம் ஏன் அறிந்து கொள்ள வேண்டும் என்று பார்ப்போம்.

எல்லோருக்கும் வாழ்க்கையில் ஒரே ஒரு குறிக்கோள் தான் உண்டு - அது எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பது.

துன்பப் பட வேண்டும் என்று யாராவது நினைப்பார்களா ? மாட்டார்கள்.

ஆனால் எப்படி மகிழ்ச்சியாக இருப்பது ? துன்பம் ஏதோ ஒரு வகையில் வந்து கொண்டே இருக்கிறதே ? பணத் தட்டுப்பாடு,  வேலைப் பளு, வீட்டில் உறவுகளில் சிக்கல், மனச் சிக்கல் , என்று ஆயிரம் துன்பங்கள் வந்து கொண்டே இருக்கின்றனவே.

வேண்டுவது என்னவோ இன்பத்தைத் தான். ஆனால் பெரும்பாலான சமயம் துன்பத்தில் தான் உழல்கிறோம்.

ஏன் ?

பணம் உள்ளவனும் துன்பப் படுகிறான். பணம் இல்லாதவனும் துன்பப் படுகிறான்.

திருமணம் ஆனவனும் துன்பப் படுகிறான், திருமணம் ஆகாதவனும் துன்பப் படுகிறான்.

துன்பங்களை விடுத்து , எப்போதும் இன்பமாய் இருப்பது எப்படி ?

இன்பமும் துன்பமும் நம் அறிவினால் அறியப் படுவது.

இலட்சம் ரூபாய் இருந்தால் இன்பமா என்று கேட்டால், ஒன்றும் இல்லாதவனுக்கு   அது பெரிய இன்பம். கோடீஸ்வரனுக்கு அது ஒண்ணும் பெரிய விஷயம் இல்லை.

இன்பமும் துன்பமும் அந்த இலட்ச ரூபாயில் இல்லை. நம் மனதில் இருக்கிறது.

லட்டு தின்பது இன்பமா ? பலருக்கு இன்பம். சர்க்கரை நோய் வந்தவனுக்கு துன்பம். இன்பமும் துன்பமும் லட்டில் இல்லை, உண்பவனிடம் இருக்கிறது.

ஆசை, பயம், சோம்பல், கோபம், காமம், பொறாமை, குழப்பம்,  வெறுப்பு, பற்று, என்ற பல மனம் சார்ந்த விஷயங்களால் துன்பம் வருகிறது.

இவற்றை மாற்றி, எப்படி இன்பமாய் இருப்பது ?

மனதை நம்மால் மாற்ற முடியுமா ?

அது நமது கட்டுக்குள் அடங்குமா ?

மனதை கட்டுப் படுத்த எவ்வளவோ பேர் முயன்று தோற்றிருக்கிறார்கள்.

பதஞ்சலி முடியும் என்கிறார்.


எப்படி ?

மனமும், உடலும் ஒன்றோடு ஒன்று இணைந்தவை. தலையும் வாலும் போல.

மனதை நம்மால் நேரடியாக கட்டுப் படுத்த முடியாது. ஆனால் உடலை கட்டுப் படுத்த முடியும்.

உடலை கட்டுப் படுத்தினால், மனதை கட்டுப் படுத்த முடியும்.

ஆங்கிலத்தில் Reverse Engineering என்று சொல்லுவார்கள்.

உடலை ஒரு ஒழுங்கிற்கு (discipline ) கொண்டு வருவதன் மூலம் நாம் நம் மனதை வழிக்கு கொண்டு வர முடியும்.

மனம் வசப் பட்டால் , வாழ்க்கை வசப்படும்.

எப்படி என்று ஒரு சின்ன உதாரணம் பார்ப்போம்.

நீங்கள் எப்போதாவது சோகமாக இருக்கும் போது உங்கள் மூச்சு எப்படி இருக்கிறது என்று கவனியுங்கள். அது மிகவும் மெல்லிதாக, லேசாக, மெதுவாக வந்து வந்து போகும். அதே சமயம், உங்கள் முதுகு சற்றே வளைந்து இருக்கும். 

அதே நீங்கள் சந்தோஷமாக இருக்கும் போது கவனித்துப் பாருங்கள், சற்று வேகமாக, கொஞ்சம் உள் இழுத்து அது பூராவும் உள்ளே செல்வதற்குள் மூச்சை வெளியில் விடுவீர்கள். முதுகு சற்று நேராகி , மார்பு சற்று விரிந்து இருக்கும்.

கவனித்துப் பாருங்கள்.

இதில் சுவாரசியமான விஷயம் என்ன என்றால்,

நீங்கள் உங்கள்  உடல் இருக்கும் நிலையை மாற்றினால், உங்கள் மன நிலை மாறிவிடும்.

உதாரணமாக, நிமிர்ந்து உட்கார்ந்து, , மார்பை சற்றே விரியச் செய்து, மூச்சை வேகமாக இழுத்து விட்டு கொண்டு, சோகமாக இருக்க முயற்சி செய்யுங்கள். முடியாது.

அதே சமயம், தலையை கவிழ்த்து கொண்டு, மார்பை சுருங்கச் செய்து, மூச்சை லேசாக விட்டு கொண்டு சந்தோஷமாக இருக்க முயற்சி செய்யுங்கள்.

முடியாது.

உடலின் நிலை மாறும் போது , உள்ளத்தின் நிலை மாறும்.

இது ஒரு சின்ன உதாரணம்.

உடலை, வாழ்வை எப்படி ஒரு கட்டுப்பாட்டோடு கொண்டு செல்வது என்று யோகா சொல்லித் தருகிறது.

யோகம் என்றால் இணைப்பது என்று பொருள்.

உடலையும், மனதையும் (புத்தியையும்) இணைப்பது யோகா.

இப்போதெல்லாம் யோகா என்றால் ஏதோ ஒரு உடற் பயிற்சி செய்வது என்று ஆகி விட்டது. சர்வதேச யோகா தினம் என்று கொண்டாடுகிறார்கள். யோகா என்பது உடற் பயிற்சி மட்டும் அல்ல.

உடலை, சிந்தனையை, மனதை கட்டுக்கோப்பாக வைக்கும் வழி அது.

யோகாவை ஒரு அறிவியல் சிந்தாந்தம் மாதிரி மிக மிக நுணுக்கமாக, எழுதி இருக்கிறார் பதஞ்சலி முனிவர்.

ஒவ்வொரு வார்த்தையும் தேர்ந்தெடுத்து போட்டு இருக்கிறார்.

நீங்கள் ஒவ்வொரு கூற்றையும், செய்து சோதித்துப் பார்க்கலாம். ஒரு விஞ்ஞானியைப் போல , யோகா என்பது யார் வேண்டுமானாலும் செய்து சரி பார்த்துக் கொள்ளலாம். நம்பிக்கை எல்லாம் தேவை இல்லை.

எப்படி நியூட்டனின் சித்தாந்தங்கள் வேலை செய்கிறதோ அது போல யோக சூத்திரங்கள்.

வாருங்கள், அந்த பிரம்மாண்டமான யோக கலையை பற்றி அறிந்து கொள்வோம்.