Wednesday, August 30, 2017

யோக சூத்திரம் - 1.33 - மனச் சாந்தி பெற வழிகள் - பாகம் 3

யோக சூத்திரம் - 1.33 - மனச் சாந்தி பெற வழிகள் - பாகம் 3 


मैत्री करुणा मुदितोपेक्षाणांसुखदुःख पुण्यापुण्यविषयाणां भावनातः चित्तप्रसादनम् ॥३३॥

maitrī karuṇā mudito-pekṣāṇāṁ-sukha-duḥkha puṇya-apuṇya-viṣayāṇāṁ bhāvanātaḥ citta-prasādanam ॥33॥

மனம் அமைதி பெற என்ன செய்ய வேண்டும் ?

மனம் பல விதங்களில் அலைக் கழிக்கப்படுகிறது. துக்கம், சோகம், பயம், படபடப்பு,  விரக்தி, எரிச்சல், கோபம், காமம், பொறாமை, துவேஷம் என்று பலப் பல விதங்களில் மனம் அல்லாடுகிறது.

உடலை நோய் பிடிப்பதைப் போல, மனதை இவை பிடித்து ஆட்டுகின்றன.

இதனால் மனம் ஓயாத சஞ்சலத்தில் இருக்கிறது.

இதில் இருந்து எப்படி விடுபடுவது.

மிக நீண்ட பட்டியலைத் தருகிறார். 14 வழிகள் சொல்கிறார். அவை என்னனென்ன என்று பார்ப்போம்.

இவற்றில் ஒன்றோ, ஒன்றுக்கு மேலானவைகளோ உங்களுக்குத் தேவைப் படலாம்.

அவை என்னென்ன ?


maitrī =  அன்பு, நட்பு , அணுக்கத் தன்மை

karuṇā = கருணை

mudito = மகிழ்ச்சி, சந்தோஷமாக இருத்தல்

upekṣana = நடுவு நிலைமை

sukha = சுகம், ஆரோக்கியம்

duḥkha = துக்கம்

puṇya = புண்ணியம்

apuṇya = பாவம்

viṣayānam = சூழ்நிலை

bhāvanātaḥ = பயிற்சி, வளர்த்தல், பழகுதல்

citta = சித்தம்

prasādanam = தெளிவு, அமைதி, இணைந்திருத்தல்

முதல் வழி, நம்மை விட மகிழ்ச்சியாக உள்ளவர்களிடம் மகிழ்வோடு பழகுவது. அதாவது, நம்மை விட  உயர்தவர்கள் மேல் பொறாமை கொள்ளாமல் இருத்தல். 

இரண்டாவது, நம்மை விட தாழ்ந்தவர்களிடம் கருணையோடு இருத்தல். இரக்கம் இல்லை. கருணை.  கருனை என்பது அன்பு சார்ந்தது. 

இதுவரை பார்த்தோம். 

அடுத்தது மூன்றாவது. 

நல்லொழுக்கம் கொண்டவரை காணும்போது மகிழ்ச்சி.


நல்லொழுக்கம் என்பதில் நல்ல அறிவு, ஒழுக்கம், நேர்மை போன்ற உயர்ந்த  குணங்கள் உள்ளவரைக்  காணும்போது மகிழ்ச்சி அடைய வேண்டும். 

இது என்ன பெரிய காரியமா என்று தோன்றும். 


இது எளிதான காரியம் அல்ல. நம்மை விட அறிவில், பண்பில் , ஒழுக்கத்தில் உயர்ந்தவர்களை கண்டால் நமக்கு ஒரு தாழ்வு மனப்பான்மை வருவது இயற்கை. நம்மால் அப்படி இருக்க முடியவில்லையே. அவன் நம்மை விட அறிவாளியாக இருக்கிறானே. அவள் நம்மை விட அழகாக இருக்கிறாளே. அவர் நம்மை விட அன்போடும் பண்போடும் இருக்கிறாரே என்றெல்லாம் மனதில் தோன்றும். 

அப்படி தோன்றியவுடன் என்ன செய்வோம் ?

அவர்கள் சொல்வதை, செய்வதை விமர்சிக்கத் தொடங்குவோம். அதில் குறை காணத் தலைப் படுவோம். அது சரியல்ல என்று மறுத்துச் சொல்வோம். 

இவை எல்லாம் முடியாவிட்டால் கூட, "ஹா...அதெல்லாம் நடைமுறைக்கு ஒத்து வராது. எதார்த்தமாக இல்லை. அவருக்கு என்ன தெரியும் நடை முறை வாழ்க்கையைப் பற்றி ..இதெல்லாம் கேட்க நல்லா இருக்கும்...அவ்வளவுதான் "

என்று உயர்ந்த கருத்துகளை தூக்கி எறிந்து விடுவோம்.  கதைக்கு உதவாது . ஏட்டுச் சுரைக்காய் என்று அதன் பெருமையை குறைத்து , சிறுமை படுத்துவோம். 

அது எவ்வளவு பெரிய ஞான நூலாக இருக்கட்டும். சொன்னவர் எவ்வளவு பெரிய ஞானியாக வேண்டுமானாலும் இருக்கட்டும். துச்சமாக தூர தூக்கி எறிந்து விடுவோம். 

நடை முறைக்கு ஒவ்வாத ஒன்றை அவர்கள் சொல்வார்களா என்றெல்லாம் யோசிப்பது கிடையாது.  ஏதோ நமக்குத்தான் எல்லாம் தெரிந்த மாதிரி, 'அதெல்லாம் சரிப்பட்டு வராது " என்று  ஒரு வரியில் அந்த ஞானங்களை மூட்டை கட்டி வைத்து விடுவோம். 

காரணம் என்ன ?

நம்மை விட அவன் பெரிய ஆள் ஒன்றும் இல்லை.  அவனுக்கு மட்டும் இது எப்படி தெரியவந்தது ? நான் என்ன முட்டாளா ? இதெல்லாம் சரிப்பட்டு வராது, எனவே தான் நான் இதைப் பற்றியெல்லாம் சிந்திக்கவில்லை. இல்லையென்றால் எனக்குத் தெரியாதா 

என்பது நமது சிந்தனை. 

இப்படி ஒரு சிந்தனை இருந்தால், எத்தனை ஆயிரம் நல்ல விஷயங்களை கேட்டாலும், படித்தாலும் ஒரு முன்னேற்றமும் வராது. 

நல்லவற்றை , உயர்ந்தவற்றை படிக்கும்போது, கேட்க்கும் போது மனது மகிழ வேண்டும். அடடா, என்ன அருமையான விஷயம். இத்தனை நாள் இதை அறியாமல் போய் விட்டோமே , உடனடியாக இதை கடைப்பிடிக்க வேண்டும் என்று தோன்ற வேண்டும். 

அப்படி தோன்றி செய்யத் தொடங்கினால் , மனம் உயரும், வாழ்வு உயரும். மனதில் திருப்தியும்  அமைதியும் பிறக்கும். 

இது மூன்றாவது வழி. 

என்ன சரிதானே ? 

http://yogasutrasimplified.blogspot.in/2017/08/133-3.html

Thursday, August 24, 2017

யோக சூத்திரம் - 1.33 - மனச் சாந்தி பெற வழிகள் - பாகம் 2

யோக சூத்திரம் - 1.33 - மனச் சாந்தி பெற வழிகள் - பாகம் 2 


मैत्री करुणा मुदितोपेक्षाणांसुखदुःख पुण्यापुण्यविषयाणां भावनातः चित्तप्रसादनम् ॥३३॥

maitrī karuṇā mudito-pekṣāṇāṁ-sukha-duḥkha puṇya-apuṇya-viṣayāṇāṁ bhāvanātaḥ citta-prasādanam ॥33॥

மனம் அமைதி பெற என்ன செய்ய வேண்டும் ?

மனம் பல விதங்களில் அலைக் கழிக்கப்படுகிறது. துக்கம், சோகம், பயம், படபடப்பு,  விரக்தி, எரிச்சல், கோபம், காமம், பொறாமை, துவேஷம் என்று பலப் பல விதங்களில் மனம் அல்லாடுகிறது.

உடலை நோய் பிடிப்பதைப் போல, மனதை இவை பிடித்து ஆட்டுகின்றன.

இதனால் மனம் ஓயாத சஞ்சலத்தில் இருக்கிறது.

இதில் இருந்து எப்படி விடுபடுவது.

மிக நீண்ட பட்டியலைத் தருகிறார். 14 வழிகள் சொல்கிறார். அவை என்னனென்ன என்று பார்ப்போம்.

இவற்றில் ஒன்றோ, ஒன்றுக்கு மேலானவைகளோ உங்களுக்குத் தேவைப் படலாம்.

அவை என்னென்ன ?


maitrī =  அன்பு, நட்பு , அணுக்கத் தன்மை

karuṇā = கருணை

mudito = மகிழ்ச்சி, சந்தோஷமாக இருத்தல்

upekṣana = நடுவு நிலைமை

sukha = சுகம், ஆரோக்கியம்

duḥkha = துக்கம்

puṇya = புண்ணியம்

apuṇya = பாவம்

viṣayānam = சூழ்நிலை

bhāvanātaḥ = பயிற்சி, வளர்த்தல், பழகுதல்

citta = சித்தம்

prasādanam = தெளிவு, அமைதி, இணைந்திருத்தல்


நம்மை விட மகிழ்ச்சியாக உள்ளவர்களிடம் அன்பாக பழகுவது ஒன்று. அதைப் பற்றி முந்தைய பிளாகில் சிந்தித்தோம்.


அடுத்தது, நம்மை விட கீழே உள்ளவர்களிடம் கருணையோடு இருத்தல்.

நம்மில் பலருக்கு ஏழைகளை, துன்ப படுபவர்களை கண்டால் இரக்கம் வரும். பரிதாப  உணர்ச்சி வரும்.  எச்சரிக்கையாக இருக்க வேண்டும் . இரக்கம் மற்றும் பரிதாப  உணர்ச்சி என்பது , நாம் அவர்களை விட உயர்ந்தவர்கள் என்ற  எண்ணத்தில் இருந்து வருவது. அப்படிப்பட்ட எண்ணம் வந்தால் அது மன அமைதியை குலைக்கும்.

கருணை என்பது அன்பில் இருந்து வருவது. நாம் அவர்களை விட உயர்ந்தவர்கள் என்று  நினைப்பதால் அல்ல, அவர்களும் நம்மை போலத் தானே என்ற எண்ணத்தில் இருந்து வருவது.

அடுத்தது மிக மிக முக்கியமான ஒன்று, தீமைகளை கண்டால் விருப்பு வெறுப்பற்று இருங்கள்.

இது என்ன புது கதையாக இருக்கிறது. தீமையை கண்டால் வெறுக்க வேண்டாமா. ஒதுக்க வேண்டாமா. கண்டிக்க வேண்டாமா.

ஏன் பதஞ்சலி தீமைகளை கண்டால் விருப்பு வெறுப்பு அற்று இருக்கச் சொல்கிறார்.

ஏன் நல்லதைக் கண்டால் விருப்பு வெறுப்பு அற்று இருக்கச்  சொல்லவில்லை.

ஆழ்ந்து சிந்திக்க வேண்டிய ஒன்று.

ஒரு தீமையை நீங்கள் வெறுக்கிறீர்கள் என்றால் அந்த தீமையை பற்றி நிறைய  அறிந்து கொள்கிறீர்கள்.

ஒரு பெண் கற்பழிக்க பட்டால் என்று கேட்டால், யார் அந்தப் பெண், எத்தனை வயது, யார் செய்தார்கள், எப்போது நடந்தது என்றெல்லாம் அறிய முற்படுகிறோம். அப்போது, நாம் கேட்காத பல விஷயங்களும் நமக்கு கிடைக்கும். இப்படி ஒவ்வொரு தீமையையும் ஆழ்ந்து ஆராயும் போது நம்மை அறியாமலேயே அதன் மேல் ஒரு ஆர்வம், ஒரு ருசி வந்து விடும். இன்னும் சொல்லப் போனால்,  நாமும் செய்து பார்த்தால் என்ன என்று ஒரு குறுகுறுப்பு தோன்றும்.

தீயவற்றின் மேல் மனம் எளிதாகப் பற்றிக் கொள்ளும். நல்ல விஷயங்களை எடுத்துக் கொள்ள நாள்  ஆகும். தீய பழக்கங்கள் எளிதில் வந்து விடும்.

பெரிய புராணத்தில் ஒரு இடம்.  மெய் பொருள் நாயனார் என்று ஒருவர் இருந்தார்.  பெரிய சிவனடியார். ஒரு நாட்டுக்கு அரசரும் கூட.

சிவனடியார்களை , சிவனாகவே நினைத்து வழிபடும் பக்தி கொண்டவர்.

அவருக்கு ஒரு எதிரி இருந்தான். யாருக்குத்தான் எதிரி இல்லை.

இராமனுக்கு ஒரு இராவணன் இருந்தான். காந்திக்கு ஒரு கோட்ஸே இருந்தான். அது போல, இவருக்கு தத்தன் என்று ஒரு எதிரி இருந்தான். இவரிடம் பல முறை போரிட்டு தோற்றவன்.

போரில் இவரை வெல்ல முடியாது என்று முடிவு செய்து,  எப்படியாவது வஞ்சனையால் இவரை வெல்ல நினைத்தான்.

ஒரு சிவனடியார் போல வேடம் தரித்துக் கொண்டு, மெய் பொருள் நாயனாரை காண வந்தான்.  "எனக்கு ஒரு அரிய ஆகம நூல் ஒன்று கிடைத்து உள்ளது. அதில் உள்ளதை உனக்கு உபதேசம் செய்யலாம் என்று வந்தேன் " என்றான்.

நாயனாரும், "என் பாக்கியம் " என்று வாய் புதைத்து, கண் மூடி கேட்க அமர்ந்தார்.

அந்த சமயத்தில், தான் கொண்டு வந்திருந்த ஓலை சுவடிக்குள் இருந்த கத்தியை எடுத்து  சதக் சதக் என்று குத்தினான் என்று சொல்ல வேண்டும்.

தெய்வப் புலவர் சேக்கிழார் அப்படிச் சொல்ல வில்லை.

"தான் முன் நினைத்த அப் பரிசே செய்ய " என்று சொல்லி , அதைப் பற்றி மேலே விரிக்காமல் விடுகிறார்.

ஏன் ?

தீமையை விவரிக்கக் கூடாது. விவரித்தால் , படிப்பவர்களுக்கு அதில் ஒரு ருசி வந்து விடும்.

ஆனால் இப்போது மர்ம நாவல், திகில் நாவல், க்ரைம் நாவல் என்றே எழுதுகிறார்கள். தவறு. தீமைகளை ஆழ்ந்து மனம் கொடுத்து அறியக் கூடாது.

கைத்தலத் திருந்த வஞ்சக் கவளிகை மடிமேல்
                                  வைத்துப்

  புத்தக மவிழ்ப்பான் போன்று புரிந்தவர் வணங்கும்
                                   போதிற்
பத்திரம் வாங்கித் தான்முன் னினைந்தவப் பரிசே
                                    செய்ய
“மெய்த்தவ வேட மேமெய்ப் பொரு“ளெனத்
                         தொழுது வென்றார்.


தவறு செய்பவர்கள் செய்து விட்டுப் போகட்டும். அரசாங்கம் இருக்கிறது . படை இருக்கிறது. காவல் துறை இருக்கிறது. நாம் ஏன் அந்த குப்பைகளை நம் மூளைக்குள் திணிக்க வேண்டும்.

தீமைகளை கண்டால் விட்டு விலகிப் போய் விட வேண்டும்.  அதை போற்றவும் வேண்டாம். தூற்றவும் வேண்டாம்.

தூற்றப் போகிறேன் என்று அதை பற்றி மேலும் மேலும் அறிந்து கொண்டால், மனம் சஞ்சலப் படும்.

மன அமைதி வேண்டுமா ? தீமைகளைப் பற்றி கண்டு கொள்ளாதீர்கள்.

மேலும் சிந்திப்போம்.

http://yogasutrasimplified.blogspot.in/2017/08/133-2.html

Friday, August 18, 2017

யோக சூத்திரம் - 1.33 - மனச் சாந்தி பெற வழிகள் - பாகம் 1

யோக சூத்திரம் - 1.33 - மனச் சாந்தி பெற வழிகள் - பாகம் 1 


मैत्री करुणा मुदितोपेक्षाणांसुखदुःख पुण्यापुण्यविषयाणां भावनातः चित्तप्रसादनम् ॥३३॥

maitrī karuṇā mudito-pekṣāṇāṁ-sukha-duḥkha puṇya-apuṇya-viṣayāṇāṁ bhāvanātaḥ citta-prasādanam ॥33॥

மனம் அமைதி பெற என்ன செய்ய வேண்டும் ?

மனம் பல விதங்களில் அலைக் கழிக்கப்படுகிறது. துக்கம், சோகம், பயம், படபடப்பு,  விரக்தி, எரிச்சல், கோபம், காமம், பொறாமை, துவேஷம் என்று பலப் பல விதங்களில் மனம் அல்லாடுகிறது.

உடலை நோய் பிடிப்பதைப் போல, மனதை இவை பிடித்து ஆட்டுகின்றன.

இதனால் மனம் ஓயாத சஞ்சலத்தில் இருக்கிறது.

இதில் இருந்து எப்படி விடுபடுவது.

மிக நீண்ட பட்டியலைத் தருகிறார். 14 வழிகள் சொல்கிறார். அவை என்னனென்ன என்று பார்ப்போம்.

இவற்றில் ஒன்றோ, ஒன்றுக்கு மேலானவைகளோ உங்களுக்குத் தேவைப் படலாம்.

அவை என்னென்ன ?


maitrī =  அன்பு, நட்பு , அணுக்கத் தன்மை

karuṇā = கருணை

mudito = மகிழ்ச்சி, சந்தோஷமாக இருத்தல்

upekṣana = நடுவு நிலைமை

sukha = சுகம், ஆரோக்கியம்

duḥkha = துக்கம்

puṇya = புண்ணியம்

apuṇya = பாவம்

viṣayānam = சூழ்நிலை

bhāvanātaḥ = பயிற்சி, வளர்த்தல், பழகுதல்

citta = சித்தம்

prasādanam = தெளிவு, அமைதி, இணைந்திருத்தல்

தலையும் புரியல , காலும் புரியலையா ?


எதை எதோடு பொறுத்த வேண்டும் என்று தெரிந்து கொண்டால், சிக்கல் தீர்ந்து விடும்.

அன்பு மற்றும் நட்பை , மகிழ்ச்சி மற்றும் சந்தோஷத்தோடு சேருங்கள்.

சந்தோஷமாக இருப்பவர்களிடம் நட்பாக இருங்கள்.

யோசித்துப் பாருங்கள். கேட்க ரொம்ப எளிமையாக இருக்கும். செய்வது மிக மிக கடினம்.

சந்தோஷமாக இருப்பவர்களை கண்டால், நமக்குள் ஒரு பொறாமை எழும். என்ன பெரிய சாதித்து விட்டான் , இப்படி கிடந்து துள்ளுகிறான் என்று தோன்றும்.

இல்லாவிட்டால்,  எப்படி அவன் எல்லாம் சந்தோஷமாக இருக்கிறான், என்னால் மட்டும் முடியவில்லையே என்று ஆதங்கம் தோன்றும்.

இல்லை என்றால், அவனை விட நான் எந்த விதத்தில் குறைந்து விட்டேன், எனக்கு மட்டும் ஏன் இப்படி நிகழ்கிறது என்று சுய பரிதாபம் தோன்றும்.


இல்லை என்றால், எனக்கு மட்டும்  அப்படி ஒரு வாய்ப்பு கிடைத்து இருந்தால், நானும் தான் சாதித்து சந்தோஷமாக இருந்திருப்பேன் என்று நாம் சந்தோஷமாக இல்லாமல் இருப்பதற்கு ஒரு காரணம் கற்பிப்போம்.

நாம் யாரோடு நட்பு பாராட்ட விரும்புகிறோம் ? நம்மை விட தாழ்ந்தவனிடம், நம்மை விட பிரச்னைகள் அதிகம் உள்ளவரிடம், நம்மை விட சிக்கல்கள் மற்றும் குழப்பங்கள் அதிகம் உள்ளவர்களிடம் நாம் நட்பாக இருக்கிறோம். "அவனை விட நாம் எவ்வளவோ தேவலை" என்று சந்தோஷப் படுகிறோம்.

மனம் அமைதி பெற வேண்டும் என்றால் நம்மை விட அதிகம் மகிழ்ச்சி உள்ளவர்களிடம் அன்பாக நட்பாக  இருக்கப் பழக வேண்டும்.  முதலில் அது கடினம் தான்.

அதற்கு ஒரே வழி, மனதில் உள்ள பொறாமை அகல வேண்டும்.

மகிழ்ச்சி என்பது பொருள்களில் இல்லை என்ற ஞானம் வர வேண்டும்.

நமக்கு இருப்பதை கொன்டு திருப்தியாக , சந்தோஷமாக வாழ பழக வேண்டும்.

இல்லை என்றால், நம்மை விட உயர்ந்தவர்களை காணும் போதெல்லாம் மனம் ஒரு படபடப்பை அடையும், நாமும் அவனை போல ஆக வேண்டும் என்று ஒரு உத்வேகம் பிறக்கும். எத்தனை பேரை நாம் முந்த முடியும். இந்த போட்டியில் நம்மால் வெல்லவே முடியாது. நமக்கு மிஞ்சி யாரும் இல்லை என்ற நிலையை அடைய முடியுமா ? முடியவே முடியாது.


அதுக்காக , ஒன்றும் செய்யாமல் முடங்கி சோம்பி கிடக்க வேண்டுமா ?

அதுவும் வேண்டாம்.

இருப்பதை கொண்டு நிம்மதியாக வாழப் பழக வேண்டும். நம்மை விட உயர்ந்தவர்களை கண்டால் பொறாமை கொள்ளாமல் அவர்களோடு அணுக்கமாக இருக்கப் பழக வேண்டும்.

நம்மை விட தாழ்ந்தவர்களிடம் நாம் எப்போதும் மகிழ்ச்சியாகவே இருப்போம். நம்மை விட உயர்ந்தவர்களிடமும் அன்பாக நட்பாக இருக்கப் பழகி விட்டால்  வாழ்வில் எப்போதும் மகிழ்ச்சி தான்.

போட்டி இல்லை. பொறாமை இல்லை. அசூயை இல்லை. ஏக்கம் இல்லை.

இவை நீங்கும் போது மனம் தானாகவே அமைதி பெறும்.

மேலும் சிந்திப்போம்.

http://yogasutrasimplified.blogspot.in/2017/08/133-1.html

Wednesday, August 16, 2017

யோக சூத்திரம் - 1.32 - மனதை ஒருநிலை படுத்துதல்

யோக சூத்திரம் - 1.32 -  மனதை ஒருநிலை படுத்துதல்



तत्प्रतिषेधार्थमेकतत्त्वाभ्यासः ॥३२॥

tat-pratiṣedha-artham-eka-tattva-abhyāsaḥ ॥32॥

ஒன்பது விதமான தடைகளும், அதில் இருந்து வரும் நான்கு விதமான  வெளிப்பாடுகளும் எப்படி நாம் மனதை ஒரு நிலை படுத்துவதில் இருந்து நம்மை தடுக்கின்றன என்று பார்த்தோம்.

சரி, அவை தடுக்கின்றன. என்ன செய்வது ? அவற்றில் இருந்து எப்படி மீள்வது ? அதற்கு ஏதாவது வழி இருக்கிறதா ?

வழி சொல்கிறார் பதஞ்சலி.

நாம் நம் மனதை கவனித்துப் பார்த்தால் ஒன்று தெரியும். அது ஓயாமல் ஒன்றில் இருந்து மற்றொன்றுக்கு தாவிக் கொண்டே இருக்கும். எதிலும் நிலையாக நிற்காது.

சரி என்று தெரிந்தாலும், அதை விட்டு விட்டு தவறான ஒன்றை செய்யும். அதை செய்தால் என்ன ? என்ன ஆகிவிடும் என்று தூண்டிக் கொண்டே இருக்கும்.

ஆரோக்கியம் வேண்டும். அதற்கு என்ன செய்ய வேண்டும் - உணவு கட்டுப்பாடு, உடற் பயிற்சி வேண்டும். இது எல்லோருக்கும் தெரிந்ததுதான். இருந்தும், ஒரு  ஐஸ் க்ரீமை கண்டால் , மனம் ஓடுகிறது.

பணம் வேண்டும். ஓய்வு வேண்டும். உறவுகள் வேண்டும். தனிமை வேண்டும் என்று மனம் ஒன்றை தேடிப் போகும் போது , பாதி வழியில் அதை விட்டு விட்டு இன்னொன்றுக்கு போகிறது. இப்படி முடிவில்லாமல் திக்கு திசை தெரியாமல் அலைந்து கொண்டே இருக்கிறது.

என்ன செய்யலாம் ?

எதோ ஒன்றை நோக்கி பயணம் செய்ய வேண்டும்.

மனதை ஏதோ ஒன்றின் மேல் நிறுத்த வேண்டும். அது எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும்.

படம், குறியீடு, ஒலி , ஜோதி, விளக்கு, பூ....எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும்.

மனதை ஏதோ ஒன்றின் மேல் நிறுத்தப் பழக வேண்டும். அப்படி பழகினால் மனம் அலை பாய்வதை குறைத்து இறுதியில் சுத்தமாக நிறுத்த முடியும்.



tat = எவன்
pratiṣedh = தடுத்து, விலக்கி , எதிர்த்து, நீக்கி
artam = அர்த்தம்
eka = ஒன்று
tattva = தத்துவம் , உண்மை, நிலை
abhyāsaḥ = பயிற்சி

எவன் அலை பாயும் மனதை தடுத்து நிறுத்தி ஒரே ஒரு தத்துவத்தின் மேல் நிலை நிறுத்துகின்றானோ அவன் அந்தத் (9 விதமான) வென்று அதன் வெளிப்பாடான நான்கு வித சிக்கல்களில் இருந்து விடுபடுவான்.

இதன் மேல் மனதை நிலை நிறுத்த வேண்டும் என்று சொல்லவில்லை.

அது எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும். எது உங்களுக்கு எளிதாக இருக்கிறதோ அதை வைத்துக் கொள்ளுங்கள்.

சமயப் பெரியவர், கடவுள் படம்,  ஜோதி, மந்திரம், உங்கள் காதலன்/காதலி படம், குழந்தைகள் படம்...எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும்.
மனம் அதன் மேலே நிலைத்து நிற்க வேண்டும்.

சரி, மனதை ஒரு முகப் படுத்தினால் நல்லதுதான். எப்படி செய்வது ?

அதற்கான 10 வழிமுறைகளை பின்னால் தருகிறார்.

அவற்றைப் பற்றி இனி வரும் நாட்களில் சிந்திப்போம்.

http://yogasutrasimplified.blogspot.in/2017/08/132.html

Monday, August 14, 2017

யோக சூத்திரம் - 1.31 - தெளிவின்மையின் நான்கு காரணங்கள்

யோக சூத்திரம் - 1.31 - தெளிவின்மையின் நான்கு காரணங்கள் 



दुःखदौर्मनस्याङ्गमेजयत्वश्वासप्रश्वासाः विक्षेप सहभुवः ॥३१॥

duḥkha-daurmanasya-aṅgamejayatva-śvāsapraśvāsāḥ vikṣepa sahabhuvaḥ ॥31॥

Suffering, depression, nervousness, and agitated breathing are signs of this lack of clarity. ||31||

ஒன்பது விதமான உபாதைகளால் எப்படி நம் சித்தம் கலக்கம் அடைகிறது என்று முந்தைய பிளாகில் பார்த்தோம்.

அந்த உபாதைகள் எப்படி நம்மை பாதிக்கின்றன என்று இங்கே பார்ப்போம்.

அந்த ஒன்பது உபாதைகள் , நான்கு விதங்களில் நம்மை பாதிக்கின்றன.

அவை

duḥkha = வலி, துக்கம்
daurmanasya = சோகம், மன அழுத்தம்
aṅgam = அங்கங்கள் , உடல் உறுப்புகள்
ejayatva = இயல்பாக இல்லாமல் இருத்தல்
aṅgam+ejayatva = உடல் நடுக்கம்
śvāsa-praśvāsaḥ = தவறான முறையில்  மூச்சு இழுப்பதும், வெளி விடுவதும்
vikṣepa = தெளிவின்மை
sahabhuvaḥ = இவை வெளிப்பாடுகள்


நோய் மற்றும் ஆரோக்கியமின்மையில் இருந்து வலியும் துக்கமும் வருகிறது. வலி இருக்கும் போது நம் சிந்தனை , செயல் அனைத்தும் அந்த வலியில் இருந்து எப்படி விடுபடுவது என்பதிலேயே இருக்கும். மனம் வேறு எதையும் தெளிவாக சிந்திக்க முடியாது.  எனவே, உண்மையை அறிய வேண்டும் என்றால், உடல் ஆரோக்கியம் மிக முக்கியம். உடல் , இயல்பாக ஆரோக்கியமாக இருந்தால்தான் எதையும் தெளிவாக அறிய முடியும்.

சரியான உணவு முறை, தேவையான உடற் பயிற்சி, ஓய்வு,  பாதுகாப்பாய் இருத்தல்  என்று உடலை போற்றி பாதுகாக்க வேண்டும்.

சில சமயம், உடல் சரியாக இருக்கும் ஆனால் மனம் சரியாக இருக்காது. ஏதேதோ கவலைகள், மன அழுத்தம், சோகம் என்று மனம் ஆரோக்கியம் இல்லாமல் இருக்கும். உடல் ஆரோக்கியம் எவ்வளவு முக்கியமோ, அவ்வளவு முக்கியம் மன ஆரோக்கியமும். மனதை நல்ல வழியில் நடத்திச் செல்ல வேண்டும். கோபம், அதீத காமம், பொறாமை, பேராசை என்ற நோய்கள் மனதை பிடிக்கும். மன அழுக்குகளை நீக்கி மனதை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

சிலருக்கு எப்போது பார்த்தாலும் ஒரு படபடப்பு இருக்கும். எதை எடுத்தாலும் ஒரு படபடப்பு, ஒரு தவிப்பு. இந்த பரபரப்பு எதையும் தெளிவாக சிந்திக்க முடியாது. உடல் படபடப்பாக இருக்கும் போதும் மனமும் படபடப்பாக இருக்கும்.


மனமும், உடலும் இயங்க அடிப்படை பிராணவாயு. மூச்சு நின்றால் உயிர் போகும். ஆரோக்கியமான உடல், மனம் எல்லாம் சில நிமிடம் மூச்சு இல்லை என்றால்  உயிர் போய் விடும். மூச்சு தவறாக வந்து சென்றாலும் உடலும் மனமும் சலனம் அடையும். எனவே மூச்சு சீராக இருக்க வேண்டும்.


இவை அனைத்தும் ஒரு தெளிவின்மையை உருவாக்கும்.

உடல் ஆரோக்கியம்
மன ஆரோக்கியம்
சீரான மூச்சு

இவை அடிப்படை.

சிந்திப்போம்.


http://yogasutrasimplified.blogspot.in/2017/08/131.html

Tuesday, August 8, 2017

யோக சூத்திரம் - 1.30 - தடைகள்

யோக சூத்திரம் - 1.30 - தடைகள் 



व्याधि स्त्यान संशय प्रमादाअलस्याविरति भ्रान्तिदर्शनालब्धभूमिकत्वानवस्थितत्वानि चित्तविक्षेपाः ते अन्तरायाः ॥३०॥

vyādhi styāna saṁśaya pramāda-ālasya-avirati bhrāntidarśana-alabdha-bhūmikatva-anavasthitatvāni citta-vikṣepāḥ te antarāyāḥ ॥30॥

These obstacles (antaraya) (illness; inertia; doubt; neglect; sloth; desire; blindness; a lack of goals; irresoluteness) obscure that which is immutable in human beings (chitta). ||30||

பிரணவத்தை அறிந்து, உணர்ந்து ஓதினால் பல தடைகளை கடக்கலாம் என்று பெரிய பட்டியல் தருகிறார் பதஞ்சலி.

vyādhi = நோய்

styāna = மனச் சோர்வு

saṁśaya = சந்தேகம் , தயக்கம்

pramāda =  கவனமின்மை

ālasya = சோம்பல்

avirati = பேராசை

bhrānti-darśana = தவறான எண்ணங்கள்

alabdha-bhūmikatva = நடு நிலைமை இன்மை , நிலை தடுமாறுதல்

anavasthitatvāni = தீர்க்கம் இன்மை

citta vikṣepaḥ = மனக் குழப்பங்கள்

te = இவை

antarāyaḥ = தடைகள்



இன்பமாக இருக்க வேண்டும் என்றுதான் எல்லோரும் விரும்புகிறார்கள். ஆனால், யாருமே இன்பமாக இல்லை. அப்படியே  இருந்தாலும், அது சிறிது காலம் தான்  இருக்கிறது. துன்பம், குழப்பம்,  ஏக்கம் எல்லாம் எங்கிருந்தோ வந்து  ஒட்டிக் கொள்கிறது.


இதில் இருந்து எப்படி விடுபடுவது ?

இந்தத் துன்பங்களுக்கு என்ன காரணம் ?

இவற்றை எல்லாம் அறிந்து கொள்ள வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும் ?

ஏதாவது புத்தகங்களை படிக்கலாமா ? இராமாயணம், பாரதம், கீதை, பாகவதம் போன்ற புத்தகங்களை படிக்கலாமா ?

இல்லை, பெரியவர்கள் சொல்லும் உபன்யாசங்களை கேட்கலாமா ?

அல்லது,  பூஜை,கோவில், தீர்த்த யாத்திரை என்று போகலாமா ?

அல்லது, தான தர்மங்கள்,  வேள்வி, என்று செய்யலாமா ?

எதுவும் உதவாது என்கிறார் பதஞ்சலி.

உங்களுக்கு யாரும் உதவ முடியாது. நீங்கள் மட்டும் தான் உங்களுக்கு உதவ முடியும்.

சித்த விருத்த நிரோதம்  - உங்கள் சித்தம் சலனம் இல்லாமல் இருக்க வேண்டும். அப்போதுதான் உண்மை தெரியும். துன்பத்தில் இருந்து விடுபட முடியும்.


அந்த சித்த சலனம் எதனால் வருகிறது ? அந்த அமைதியை அடைய எதெல்லாம் தடையாக இருக்கிறது ?

நோய்  - ஆரோக்கிய குறைவு. உடல் சரி இல்லை என்றால் மனம் சரியாக இருக்காது. உடலை பேணி காக்க வேண்டும். உடம்பை நல்ல விதமாக போற்றி நோய் இல்லாமல் வைத்துக் கொள்ள வேண்டும். ஆரோக்கியம் கெட்டால் மனம் கெடும்.


மனச் சோர்வு - உடல் ஆரோக்கியமாக இருக்கும். திடகாத்திரமாய் இருக்கும். ஆனால், மனம் ஆரோக்கியமாக இருக்காது. எப்பப் பார்த்தாலும் ஒரு சோர்வு. எதிலும் ஒரு  பற்று இல்லாமல் இருக்கும். மனம் ஆரோக்கியமாக இருக்க வேண்டும்.

சந்தேகம்  - எதிலும் நம்பிக்கை இன்மை.

கவனமின்மை = எதைச் சொன்னாலும் சரியாக காது கொடுத்து கேட்பது இல்லை. மனம் எங்கோ ஓடிக் கொண்டிருக்கும்.

சோம்பல் = அப்புறம் செய்யலாம், நாளைக்கு பார்த்துக் கொள்ளலாம் என்ற சோம்பல்.

பேராசை = காண்பதெல்லாம் வேண்டும் என்ற பேராசை

தவறான எண்ணங்கள் = குற்ற எண்ணங்கள். குறுக்கு புத்தி.

நடு நிலைமை இன்மை , நிலை தடுமாறுதல் = எது சரி, எது தவறு என்று தெரியாத குழப்பம்.

தீர்க்கம் இன்மை = முடிவு எடுத்தால் , அதில் உறுதியாக இல்லாமல் அலை பாய்வது.

மனக் குழப்பங்கள் = எல்லாவற்றையும் போட்டு மனதை எந்நேரமும் குழப்பிக் கொண்டே இருப்பது.


கண் மூடி யோசித்துப் பாருங்கள். உங்களுக்குள் இதில் எத்தனை இருக்கிறது என்று. ஒரு காகிதத்தில் எழுதுங்கள்.  இவற்றை களைய என்ன செய்யலாம் என்று யோசியுங்கள்.

பிரணவத்தை ஜெபிப்பதன் மூலம் இவை நீங்கும் என்கிறார். அது நடக்கட்டும் ஒரு புறம். நீங்கள் இவற்றை பற்றி சிந்தித்துக் கொண்டு இருங்கள்.

இன்னும் பட்டியல் முடியவில்லை.


http://yogasutrasimplified.blogspot.in/2017/08/130.html

Sunday, August 6, 2017

யோக சூத்திரம் - 1.29 - தன்னை அறியவும், தடைகளை நீக்கவும்

யோக சூத்திரம் - 1.29 - தன்னை அறியவும், தடைகளை நீக்கவும் 



ततः प्रत्यक्चेतनाधिगमोऽप्यन्तरायाभवश्च ॥२९॥

tataḥ pratyak-cetana-adhigamo-'py-antarāya-abhavaś-ca ॥29॥


tataḥ = இதன் மூலம்
pratyak = ஒருவன், தான், நான் , உள்ளே
cetanā = உள்ளுணர்வு
adhi gamḥ = அறியப்படுதல், அறிதல், அடைதல்
api = மேலும்
antarāyaḥ = தடைகளை
abhāvaḥ = நீக்கவும்
ca = மேலும்

பிரணவத்தை இடை விடாமல் , அர்த்தம் அறிந்து, உணர்வோடு ஜெபிக்கும் போது , இரண்டு விஷயங்கள் நிகழ்கின்றன. அவை, தன்னைத்தான் அறிதல். அந்த அறிதலுக்கு தடையாய் உள்ளவற்றை நீக்குதல்.


ப்ரணவம் என்பது ஆக்கும் சக்தி என்று பார்த்தோம். அந்த சக்தி எல்லோருக்குள்ளும் இருக்கிறது என்றும் பார்த்தோம். அந்த சக்தியின் வெளிப்பாடே இந்த உலகம் என்று பார்த்தோம்.

இந்த உலகம் எவ்வாறு உருவாகிறது ?

வெளியில் உள்ளவை , மற்றும் நாம் அவற்றை அறிவது இந்த இரண்டும் சேர்ந்து நிகழும் போதுதான் இந்த உலகம் உருவாகிறது.

எப்படி என்று பார்ப்போம்.

இந்த உலகம் நாம் எவ்வாறு பார்த்து, கேட்டு அறிந்து இருக்கிறோமோ அப்படித்தானே இருக்கிறது.

இல்லை பச்சையாக இருக்கிறது. மல்லிகை வெண்மையாக இருக்கிறது. முள் குத்துகிறது. நெருப்பு சுடுகிறது. புல்லாங்குழல் கேட்க இனிமையாக இருக்கிறது.


இதுதானே இயற்கை. இப்படித்தானே உலகம் இருக்கிறது.

அது உண்மையா ? உலகம் என்பது அவ்வளவுதானா ?


ஒருவன் பிறவியில் இருந்தே கண் பார்வை இல்லாமல் இருக்கிறான் என்று வைத்துக் கொள்வோம். அவனைப் பொறுத்தவரை, நிறம் என்ற ஒன்று கிடையவே கிடையாது. எவ்வளவு முயற்சி செய்தாலும் , நிறம் என்றால் என்ன என்று அவனுக்கு நம்மால் விளக்க முடியாது. அவனது உலகில் நிறம் கிடையாது.

சரி. அவனுக்கு இல்லாவிட்டால் என்ன ? நமக்குத் தெரிகிறதே. அவனுக்கு நிறம் தெரியாவிட்டால், நிறம் என்ற ஒன்றே இல்லை என்று ஆகி விடுமா ?

இல்லை.  நிறம் ஒன்று இருக்கிறது.

நமக்கு ஐந்து புலன்கள் இருக்கிறது. அதில் ஒன்றின் மூலம் நிறம் என்றால் என்ன என்று அறிகிறோம்.

அவனுக்கு கண் / பார்வை என்ற ஒரு புலன் இல்லை. எனவே அவனைப் பொறுத்தவரை நிறம் என்பது இல்லை.

நமக்கு ஐந்து புலன்கள் இருக்கின்றன.

ஏன் ஐந்து மட்டும் இருக்கிறது ? ஆறாவது, ஏழாவது புலன்கள் இருந்தால் இந்த உலகை இன்னும் நாம் அறிந்து இருப்போம் அல்லவா ? நம்மிடம் இல்லை. நம்மால் அந்த ஆறாவது மற்றும் ஏழாவது புலன்கள் என்ன என்று கூட சிந்திக்க முடியாது. ஒருவேளை இருந்தால், இந்த உலகை இன்னும் வேறு சில கோணங்களில் பார்த்து இருப்போம் அல்லவா.

நாம் காணும் உலகம் நம்மை பொறுத்த வரை இவ்வளவுதான். அதற்கு மேலும் அதில் ஏதாவது இருக்கலாம். நமக்குத் தெரியாது.

கண் இல்லாதவனுக்கு நிறம் தெரியாதது போல, இல்லாத புலன்கள் எதை அறிந்திருக்கும் என்று நமக்குத் தெரியாது.

நம்மிடம் ஐந்து புலன்களுக்கு மேல் இல்லை என்பதால், மொத்தமே ஐந்துதான் என்று நாம் முடிவு செய்து விட முடியாது.

கண் இல்லாதவனைப் பொறுத்தவரை பார்வை என்ற ஒன்றே இல்லை. பார்ப்பது என்றால் என்ன என்று அவனுக்குத் தெரியாது. அது போல , நமக்கு இருக்கும் புலன்களைத் தாண்டி  ஒரு உலகம் இருக்கலாம் அல்லவா.

அவை நமக்குத் தெரியாது.

இந்த உலகம் இவ்வளவுதான் தான் என்று நம் புலன்கள் சொல்கின்றன. புலன்கள் இல்லை என்றால் உலகம் இல்லை. கண் இல்லாதவனுக்கு நிறம் இல்லாதது மாதிரி.

நாம் இந்த உலகை நமது புலன்கள் மற்றும் அறிவின் மூலம் உண்டாக்குகிறோம்.

விண் உற அடுக்கிய விறகின் வெவ் அழல்
உண்ணிய புகில், அவை ஒன்றும் இல்லை ஆம்;
பண்ணிய உலகினில் பயின்ற பாவத்தை
நண்ணி நின்று அறுப்பது நமச்சிவாயவே!

(தேவாரம்)

இந்த உலகம் தானே இருப்பது அல்ல. இது "பண்ணிய உலகம்"  உருவாக்கப்பட்ட உலகம்.

பிரணவத்தை இடைவிடாமல் ஓதுவதுன் மூலம் உங்களை நீங்கள் அறிவீர்கள்.

அப்படி அடைவதற்கு சில விஷயங்கள் தடையாக இருக்கின்றன. அந்த தடைகளை நீக்க இந்த ஜபம் உதவும்.

அது என்ன தடை ?

http://yogasutrasimplified.blogspot.in/2017/08/129.html

Saturday, August 5, 2017

யோக சூத்திரம் - 1.28 - ஜபம்

யோக சூத்திரம் - 1.28 - ஜபம் 


तज्जपः तदर्थभावनम् ॥२८॥

taj-japaḥ tad-artha-bhāvanam ॥28॥

taj = அதை

japaḥ = ஜபம்

tad-= அதன்

artha = அர்த்தத்தை விளங்கி

bhāvanam = உணர்வு பூர்வமாக

ஓம் என்ற பிரணவ மந்திரம் எவ்வாறு இயல்பான ஒரு ஒலியாகவும் , அதே சமயம் பிறப்பு, நிலைப்பு மற்றும் அழிதல் என்ற முத்தொழிலையும் நினைவு கூர்வதாகவும் உள்ளது என்றும் பார்த்தோம்.

நமக்குள் இருக்கும் அளவற்ற படைப்பாற்றலின் பெயர் ஓம்.

எப்படி ஒவ்வொரு செயலுக்கும், ஒரு வார்த்தை இருக்கிறதோ அது போல நமக்குள் இருக்கும் சக்தியின் பெயர் ஓம்.

சரி, நமக்குள் ஒரு சக்தி இருக்கிறது என்று புரிகிறது.

அந்த சக்திக்கு ஒரு ஒலி வடிவம் , அது ஓம் என்றும் புரிகிறது.


அதனால் என்ன ? சக்திக்கு ஒரு பெயர் வைத்து இருக்கிறார்கள். அவ்வளவுதானே. இதனால் நமக்கு என்ன பயன்.

நமது நோக்கம் அந்த சக்தியை வெளியே எப்படி கொண்டு வருவது என்பதுதான்.

எவ்வளவோ பெரிய பெரிய அறிஞர்கள், மஹான்கள் எல்லாம் தோன்றி இருக்கிறார்கள். அவர்கள் மிகப் பெரிய உண்மைகளை உலகுக்கு எடுத்துச் சொல்லி இருக்கிறார்கள். எத்தனையோ கண்டு பிடிப்புகள். சாதனங்கள். அத்தனையும் அந்த படைப்பாற்றலின் வெளிப்பாடு.

அவர்களுக்குள் இருக்கும் அந்த படைப்பாற்றல் தான் நமக்குள்ளும் இருக்கிறது.

அவர்கள் அதை வெளியே கொண்டு வந்தார்கள். நமக்குள் அது உறங்கிக் கிடக்கிறது.

அதை எழுப்பி வெளியே கொண்டு வருவதுதான் திருப்பள்ளி எழுச்சி.

எப்படி கொண்டு வருவது ?

அது ஒரு புறம் இருக்கட்டும்.

சித்த விருத்தி நிரோதம் ....

சித்தத்தில் ஏற்படும் சலனங்களை நிறுத்துவதுதான்  உண்மையை கண்டு அறிய  வழி என்று பார்த்தோம்.

எண்ண சிதறல்களை எப்படி நிறுத்துவது ?

எண்ண அலைகள் எப்படி வருகின்றன என்று முதலில் அறிந்து கொள்ள வேண்டும்.

நமக்கு ஏற்படும் அனுபவங்கள் நமக்குள் ஒரு பதிவை உண்டாக்குகின்றன. நாம் பார்ப்பது, கேட்பது, நம்மை சுற்றி நிகழும் நிகழ்வுகள், நமக்கு நிகழும் நிகழ்வுகள் இவை அனைத்தும் நமக்குள் ஒரு பதிவை உண்டாக்குகின்றன.

கொஞ்சம் காலம் கழித்து , அந்த பதிவு சம்பந்தமான ஒரு நிகழ்வு ஏற்படும் போது , பழைய பதிவில் இருந்து எண்ண அலைகள் தோற்றுவிக்கப் படுகின்றன.

ஒருவன் நமக்கு நல்லது செய்கிறான். அது ஒரு பதிவாக நமக்குள் இருக்கிறது. அடுத்த முறை அவனை பார்க்கும் போது , "இவன் நல்லவன். நமக்கு நல்லது செய்தவன்..." என்ற எண்ணங்கள் தோன்றுகின்றன.

இப்படி ஒன்று இரண்டு அல்ல. ஆயிரக் கணக்கில் நமக்குள் பதிவுகள் இருக்கின்றன. நமக்கே தெரியாது எவ்வளவு என்று.

இதைத்தான் "ஸம்ஸ்காரம்" அல்லது "வாசனை" என்கிறார்கள்.

நம்மை சுற்றி நிகழ்பவை எல்லாம் இந்த ஸம்ஸ்காரத்தில் மோதி புது புது எண்ண அலைகளை உருவாக்கிக் கொண்டே இருக்கின்றன.

அப்படியானால், இந்த எண்ண அலைகளின் ஓட்டத்தை நிறுத்த வேண்டும் என்றால் ஒன்று சம்ஸ்காரம் என்ற பதிவுகள் இருக்கக் கூடாது அல்லது வெளியில் இருந்து வரும் புலன் தரும் செய்திகள் இருக்கக் கூடாது அல்லது அந்த  புலன் தரும் செய்திகளை ஸம்ஸ்காரத்தில் மோத விடக் கூடாது என்பது தெளிவாகத் தெரிகிறது அல்லவா ?

அதை எப்படி செய்வது ?

tat japah tat artha bhavanam

அதை (பிரணவ மந்திரத்தை ) இடை விடாமல், அர்த்தம் அறிந்து, உணர்வு பூர்வமாக ஜபம் செய்வதன் மூலம் என்கிறது இந்த சூத்திரம்.

வெறுமனே ஓம் ஓம் என்று முணு முணுப்பதால் ஒரு பயனும் இல்லை. அப்படி செய்வதால் கொஞ்ச நேரத்தில் மனதும் மூளையும் சோர்ந்து போய் தூக்கம் வரும். அதனால் வேறு ஒரு பயனும் இல்லை.

ஓம் என்ற அந்த பிரணவத்தின் அர்த்தத்தை அறிந்து சொல்ல வேண்டும்.

அதை உணர்வு பூர்வமாக சொல்ல வேண்டும்.

அர்த்தம் என்ன - எனக்குள் ஒரு மிகப் பெரிய படைப்பாற்றல் இருக்கிறது. ஈஸ்வர சக்தி.

உணர்வு பூர்வமாக -  அறிவு ஏற்றுக் கொள்ளும். நமக்குள் ஒரு சக்தி இருக்கிறது. அந்த சக்தியின் ஒலி வடிவம் ஓம் என்பதை அறிவு ஏற்றுக் கொள்ளும். மனம் ஒன்றாது. "சரி, அது ஏதோ இருந்து விட்டுப் போகட்டும்" என்ற அளவில் இருக்கக் கூடாது. அதை உணர்வு பூர்வமாக ஒன்ற வேண்டும்.

"சொல்லிய பாட்டின் பொருள் "உணர்ந்து" சொல்லுவார் ,
செல்வர் சிவபுரம்"

என்பார் மணிவாசகர்.

"உலகெல்லாம் "உணர்ந்து" ஓதற்கரியவன் "

என்பார் தெய்வப் புலவர் சேக்கிழார்.

ஓம் என்பதின் பொருள் அறிந்து, உணர்ந்து , ஜபம் செய்தால் அது நிகழும்.

அப்படி இடை விடாமல் ஜபம் செய்வதன் மூலம்,

முதலாவது, வெளியில் இருந்து வரும் புலன் பற்றிய செய்திகள் குறையும். அது எவ்வளவுக்கெவ்வளவு குறைகிறதோ, அவ்வளவுக்கவ்வளவு அனுபவ பதிவு குறையும். (சம்ஸ்காரம் குறையும்).

இரண்டாவது, அப்படியே அனுபவங்கள் நிகழ்ந்தாலும், அது இந்த உடலுக்குத்தான் நிகழுமே தவிர நமக்குள் இருக்கும் அந்த சக்திக்கு நிகழாது.

மூன்றாவது, ஏற்கனவே நமக்குள் இருக்கும் வாசனைகள், அனுபவ பதிவுகள், சம்ஸ்காரம் என்பவை தேய்ந்து தேய்ந்து மறையும்.

அது எப்படி என்றால்,

நீங்கள் உங்கள் பெயருக்குப் பின்னால் நீங்கள் படித்த படிப்பை போட்டுக் கொள்கிறீர்கள் அல்லவா ? BA , MA என்று.

ஏன் அதற்கு முன்னால் ஒன்றாம் வகுப்பு, இரண்டாம் வகுப்பு என்றெல்லாம் போட்டுக் கொள்வதில்லை ?

அதையெல்லாம் தாண்டி வந்து விட்டீர்கள். அவை இனிமேல் தேவை இல்லை. அவற்றினால் ஒரு அர்த்தமும் இல்லை.

MA படித்த ஒருவன், நான் மூன்றாம் வகுப்பு படித்தேன் என்று சொல்வானா ?

அது போல, உங்களுக்கு நிகழ்ந்த அனுபவங்கள் இந்த உடல் மற்றும் மனம் சார்ந்தவை. நீங்கள் அவற்றைத் தாண்டி, உங்களுக்குள் இருக்கும் சக்தியோடு உங்களை அடையாளம் காணும் பொழுது பழைய நினைவுகள், பதிவகள் அற்றவையாகப் போகின்றன.

அ , ஆ படிக்க திணறியது இப்போது தேவை இல்லாத ஒன்று. அதை கடந்து எவ்வளவோ தூரம் வந்து விட்டோம். இன்னும் அதையே நினைத்துக் கொண்டு ஏன் இருக்க வேண்டும் ?அது போல, நீங்கள் இந்த உடலும் மனமும் அல்ல. சக்தி சொரூபம். உடலுக்கும் மனதுக்கும் நிகழ்ந்தவை ஒரு பொருட்டு அல்ல.

இதை அடைய வேண்டும் என்றால், பிரணவத்தின் பொருள் தெரிந்து உணர்வு பூர்வமாக ஜெபிக்க வேண்டும்.

http://yogasutrasimplified.blogspot.in/2017/08/128.html