Monday, May 7, 2018

யோக சூத்திரம் - 2.48 - இருமைகள் மறையும்

யோக சூத்திரம் - 2.48 - இருமைகள் மறையும் 


ततो द्वङ्द्वानभिघातः ॥४८॥

tato dvaṅdva-an-abhighātaḥ ॥48॥


tato = அப்போது

dvaṅdva = இருமைகள்

an = இல்லை

abhighātaḥ  = தோற்கும்

இருமைகள் மறையும் என்றால், அது ஏன் மறைய வேண்டும் என்ற முதல் கேள்வி வரும் அல்லவா ?

இன்பம் வேண்டும், துன்பம் வேண்டாம்.

செல்வம் வேண்டும், வறுமை வேண்டாம்.

மகிழ்ச்சி வேண்டும், துக்கம் வேண்டாம். 

உயர்ந்தது வேண்டும், தாழ்ந்தது வேண்டாம் 

என்று தானே எல்லோரும் நினைக்கிறார்கள். பின் எதற்கு இருமை வேண்டாம் என்று சொல்ல வேண்டும். இருமை வேண்டும் என்று அல்லவா தோன்றுகிறது. 

நாளில், பகல் எப்போது முடிகிறது, இரவு எப்போது ஆரம்பிக்கிறது ?

வறுமை எங்கு முடிகிறது ? செல்வம் எங்கு ஆரம்பிக்கிறது? எவ்வளவு இருந்தால் செல்வந்தன் என்று சொல்லலாம் ?

துன்பம் எங்கு முடிகிறது ? இன்பம் எங்கு ஆரம்பிக்கிறது ?

முதலில் இந்த இருமைகளே கிடையாது. வாழ்க்கையில் எல்லாமே ஒரு தொடர்ச்சியான ஒன்று தான்.  இங்கு இது முடிகிறது, இங்கு இது தொடங்குகிறது என்று ஒன்றுமே இல்லை. எல்லாம் ஒரே தொடர்தான். 

நாம் தான் பிரித்து வைத்துக் கொண்டு அல்லாடுகிறோம். 

இவன் நல்லவன், இவன் கெட்டவன், 
இவன் உயர்ந்தவன், இவன் தாழ்ந்தவன் 

என்று பிரித்து வைத்துக் கொண்டு, இது வேண்டும், அது வேண்டாம் என்று சங்கடப் படுகிறோம். 

வாழ்க்கை பிரிக்க முடியாத ஒன்று. நாம் பிரித்து வைத்துக் கொண்டு வருத்தப் படுகிறோம். 

ஆண் பெண் பாகுபாடு கூட இல்லை என்று அர்த்த நாரி என்று வைத்தார்கள். 

நல்லார்க்கும் பொல்லார்க்கும் நடு நின்ற நடுவே என்பார் வள்ளலார். 

கல்லார்க்கும் கற்றவர்க்கும் களிப்பருளும் களிப்பே 
          காணார்க்கும் கண்டவர்க்கும் கண்ணளிக்கும் கண்ணே 
     வல்லார்க்கும் மாட்டார்க்கும் வரம்அளிக்கும் வரமே 
          மதியார்க்கும் மதிப்பவர்க்கும் மதிகொடுக்கும் மதியே 
     நல்லார்க்கும் பொல்லார்க்கும் நடுநின்ற நடுவே 
          நரர்களுக்கும் சுரர்களுக்கும் நலங்கொடுக்கும் நலமே 
     எல்லார்க்கும் பொதுவில்நடம் இடுகின்ற சிவமே 
          என்அரசே யான்புகலும் இசையும்அணிந் தருளே. 

நரர்களுக்கும், சுரர்களுக்கும் நலம் கொடுக்கும் நலமே. 

எல்லாமே தேவை என்று தான் இயற்கை படைக்கிறது. நாம் தான் இது வேண்டும், அது வேண்டாம் என்று பிரித்து வைத்துக் கொண்டு துன்பப் படுகிறோம். 

உடல் relaxed ஆக இருக்கும் போது ...என்று சொல்லும் போது...உடல் எப்போது relaxed  ஆக இருக்கும் ?

மனதில் ஆசை பெருக்கெடுத்தது ஓடாத போது , காமம், கோபம் , பொறாமை, போட்டி கொந்தளிக்காத போது மனம் சாந்தப் படும். 

சூரியன் எந்தப் பக்கம் உதித்தால் எங்களுக்கு என்ன என்று ஆனந்தமாக இருப்போம் என்கிறார் மணிவாசகர். 

"எங்கெழிலென் ஞாயி றெமக்கேலோர் எம்பாவாய்."

ஞாயிறு எங்கு எழுந்தால் என்ன ? கிழக்கில் எழுந்தால் என்ன ? மேற்கில் உதித்தால் என்ன...அதைப் பற்றி எல்லாம் ஒரு கவலையும் இல்லை என்கிறார் மணிவாசகர். 


உங்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலமென்
றங்கப் பழஞ்சொற் புதுக்குமெம் அச்சத்தால்
எங்கள் பெருமான் உனக்கொன் றுரைப்போங்கேள்
எங்கொங்கை நின்னன்பர் அல்லார்தோள் சேரற்க
எங்கை உனக்கல்லா தெப்பணியுஞ் செய்யற்க
கங்குல் பகல்எங்கண் மற்றொன்றுங் காணற்க
இங்கிப் பரிசே எமக்கெங்கோன் நல்குதியேல்
எங்கெழிலென் ஞாயி றெமக்கேலோர் எம்பாவாய்.

விடுங்கள். எல்லாவற்றையும் பிடித்துக் கொண்டு இருக்காதீர்கள். அனைத்தையும் உங்கள் பிடியில் இருக்க வேண்டும் என்று நினைக்காதீர்கள். நீங்கள் பிறப்பதற்கு பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக இந்த உலகம் இருந்தது. உங்களுக்கு பின்னும் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் இது இருக்கும். தளைகளை எல்லாம் விட்டு விட்டு , ஆனந்தமாக இருங்கள். 

உலகம் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று அடம் பிடிக்காதீர்கள். மக்கள் இப்படி இருக்க   வேண்டும், மகன் மருமகள் இப்படி இருக்க வேண்டும், என்று வரையறுக்காதீர்கள். அந்த வரையறைக்குக் காரணம் நீங்கள் நினைத்துக் கொண்டிருக்கும் நல்லது கெட்டது  என்ற அபிப்ராயம். 

அவற்றை விடுங்கள். 

வாழ்க்கை இனிமையாக இருக்கும். சுகமாக இருக்கும். 

அது எப்படி விட முடியும் என்று வாதம் பண்ணினால் , என்ன சொல்ல ?

இன்னும் நாள் ஆகும் , காத்திருக்க வேண்டியது தான்....

http://yogasutrasimplified.blogspot.in/2018/05/248_7.html


No comments:

Post a Comment