யோக சூத்திரம் - 2.28 - பயிற்சி
योगाङ्गानुष्ठानादशुद्धिक्षये ज्ञानदीप्तिराविवेकख्यातेः ॥२८॥
yoga-aṅga-anuṣṭhānād-aśuddhi-kṣaye jñāna-dīptir-āviveka-khyāteḥ ॥28॥
yoga = யோக
aṅga = அங்கங்கள்
anuṣṭhānād = பயிற்சி
aśuddhi = அசுத்தம்
kṣaye = மறைதல், அழிதல்
jñāna = ஞானம்
dīptir = வெளிச்சம்
āviveka = அவிவேகம்
khyāteḥ = தொடர்ச்சியாக, விடாமல்
இந்த யோக அங்கங்களை பயிற்சி செய்வதன்ப மூலம், மன மாசுகள் நீங்கி, அறிவும், இடைவிடாத மெய்யறிவும் கிடைக்கும்.
யோகத்தின் ஏழு படிகளை பற்றி நேற்று சிறிது சிந்தித்தோம்.
பதஞ்சலி , நம்மை அடுத்த நிலைக்கு கொண்டு செல்கிறார்.
ஏழு படி என்றால் , ஒவ்வொரு படிக்கும் எத்தனை நாள் ஆகுமோ என்ற பயம் வரலாம்.
பதஞ்சலி சொல்கிறார். அவை படிகள் மட்டும் அல்ல, அவை அங்கங்கள் கூட.
அங்கம் என்றால் எல்லாம் ஒன்று சேர்ந்தது. கை , கால், மூக்கு போன்று ஒன்றோடு ஒன்று தொடர்பு உடையவை. அவை தனித் தனியாக இருப்பவை அல்ல.
என்ன அர்த்தம்?
ஒன்றை செய்யும் போது, இன்னொன்றும் செய்யப்படும்.
காலும், கையும் இணைத்து இருப்பதைப் போல இந்த யோக அங்கங்கள் இணைந்தவை.
அடுத்தது, "பயிற்சி".
அந்த யோக அங்கங்களை இடை விடாது பயிற்சி செய்ய வேண்டும். ஏதோ ஓரிரண்டு நாள் முயன்றேன். ஒண்ணும் நடக்கவில்லை என்று நிறுத்தி விடக் கூடாது. தொடர்ந்து பயிற்சி செய்வதன் மூலம், அவை நமது வாழ்வின் ரூ பாகமா க மாறிவிடும். நமது இயல்பே அதுவாக மாறி விடும்.
மூன்றாவது, பயிற்சி செய்தால் என்ன கிடைக்கும்? எதற்காக மெனக்கிட வேண்டும்?
கீழே கண்ட பலன்கள் கிடைக்கும் என்கிறார்:
1. மன மாசுகள் நீங்கும் - மாசு என்றால் இங்கே குற்றம் என்று அல்ல அர்த்தம். தவறான எண்ணங்கள், தவறான நம்பிக்கைகள், மூட நம்பிக்கைகள். உதாரணமாக, நான் என்பது இந்த உடம்பு என்று நினைப்பது ஒரு மன அழுக்கு. இளமை எப்போதும் இருக்கும் என்று நம்புவது ஒரு மன அழுக்கு. இந்த பயிற்சியின் மூலம் இந்த அழுக்குகள் நீங்கும்.
2. ஞானம் , அறிவு பெருகும்
3. வெளிச்சம் உண்டாகும், அதாவது தெளிவு பிறக்கும். குழப்பங்கள் தெளியும்.
4. அவிவேகம் மறையும் - தவறான ஞானம் மறையும். தவறான புத்தகங்களை படித்து, தவறானவர்கள் கூறிய வார்த்தைகளை கேட்டு வளர்த்துக் கொண்ட ஞானம், விவேகம், அவிவேகம் எனப்படும். அந்த அவிவேகம் நீங்கும். நாம் ஞானம் சேர்க்கிறோம் என்று நிறைய குப்பைகளை சேர்த்துக் கொண்டிருக்கிறோம். அவைகள் நீங்க வேண்டும்.
இந்த பயிற்சியை எவ்வாறு செய்ய வேண்டும்?
விடாமல், தொடர்ந்து செய்ய வேண்டும். ஏதோ ஆரம்பித்தோம், ஒரு சில நாள் செய்தோம் என்று இருக்கக் கூடாது.
சரி, எதை செய்ய வேண்டும் என்கிறார் ?
அதுதான் இந்த யோக சூத்திரத்தின் மூல மந்திரம்.
நாளை முதல் அதை பற்றி சிந்திக்க இருக்கிறோம்.
http://yogasutrasimplified.blogspot.in/2018/02/228.html
No comments:
Post a Comment