Saturday, February 3, 2018

யோக சூத்திரம் - 2.24 - அறியாமையின் விளைவு

யோக சூத்திரம் - 2.24 - அறியாமையின் விளைவு 


तस्य हेतुरविद्या ॥२४॥

tasya hetur-avidyā ॥24॥

tasya = அதன்

hetur = காரணம்

avidyā = அ வித்யா = அறிவீனம்

"அதற்கு காரணம் அறியாமை." 

எதற்கு காரணம் அறிவீனம்?

எதற்கு என்பதற்கு பிறகு வருவோம்.

புகை வண்டியிலோ , பேருந்திலோ பயணம் செய்திருக்கிறீர்களா ?

பயணம் முடிந்தவுடன், நான் இந்த வண்டியை துறக்கிறேன் என்று எப்போதாவது சொல்லி இருக்கிறீர்களா ? இந்த வண்டியின் மேல் உள்ள பற்றை நான் விட்டு விட்டேன் என்று எப்போதாவது சொல்லி இருக்கிறீர்களா ?

சொல்லி இருக்க மாட்டீர்கள்.

ஏன் என்றால், அது உங்களுக்கு சொந்தமானது அல்ல என்று உங்களுக்குத் தெரியும்.  அது என்னுடையது அல்ல என்ற அறிவு இருக்கிறது நம்மிடம். நம்முடையது அல்லாததை  நாம் எப்படி துறப்பது ? அதன் மேல் நமக்கு என்ன பற்று இருக்க முடியும்.

அது புரிகிறது.

ஆனால், நம்முடையது அல்லாத பலவற்றை நாம் நம்முடையது என்று நினைத்து பிடித்துக் கொண்டிருக்கிறோம்.

அப்படி எதை நாம் பிடித்துக் கொண்டிருக்கிறோம் ?

ஒவ்வொன்றாகப் பார்ப்போம்

சில விஷயங்கள் நம்மை கேட்காமலேயே நம்மை விட்டு போய் விடும். எவ்வளவு இறுக்கிப் பிடித்தாலும் அவை நம்மை விட்டு போய் விடும். அவற்றை நம்மது என்று நாம் நினைப்பது அறிவீனம். அவை தன் பாட்டுக்கு வரும் போகும்.

நாம் சொல்வதை கேட்காததை நம்முடையது என்று நாம் எப்படி சொல்வது ?

அதில் முதலில் வருவது - இளமை.  நாம் இளமையாக இருக்கிறோம். இப்படியே இருப்போம் என்று நினைப்பது.

அடுத்தது, ஆயுள். நாம் இந்த உடம்போடு என்றென்றும் இருப்போம் என்று நினைப்பது. மரணம் எனபது வரும் என்று தெரிந்தாலும், அதை தவிர்த்து விட முடியும், தள்ளிப் போட்டு விட முடியும், தள்ளிப் போட்டு விட வேண்டும் என்று எல்லா வயதிலும் எல்லோரும் நினைக்கிறார்கள். நிலையாமை என்பது புரிவது இல்லை.

அடுத்தது, செல்வம். செல்வம் நிரந்தரம் என்று நினைப்பது. ஒரு முறை சேர்த்து விட்டால் போதும். கால காலத்துக்கு நம்மிடம் அது இருக்கும் என்று நினைப்பது.

அடுத்தது, பிள்ளைகள். அவர்கள் நம்முடையவர்கள், என் பிள்ளை என்று நினைக்கும் அறிவீனம்.

அடுத்தது, மனைவி, கணவன். என்னவள், எனக்கு உரியவள், என்றெல்லாம் நினைப்பது  அறிவீனம். அவளுக்கென்று ஒரு மனம், அறிவு, செயல்பாடுகள் உண்டு.

என் நாடு, என் மொழி, என் இனம், என் ஜாதி, என் குலம் என்று மனிதன் தனக்கு சொந்தம் இல்லாதவற்றை எல்லாம் சொந்தம் கொண்டாடுகிறான்.

இது அனைத்தையும் விட, மிக மிக நுண்ணியமான விஷயம், இந்த உடல் என்னது என்று நினைப்பது.

நான் என்பது இந்த உடல் என்று நினைப்பது. இந்த உடல் நானா ? உடல் தாண்டி ஏதேனும் இருக்கிறதா ? இந்த உடல் என்னது என்று சொல்லுவது எது ?

சிந்திக்க வேண்டும்.


அது சரி, நான் கஷ்டப்பட்டு சேர்த்த செல்வம் என்னது இல்லையா ? என் பிள்ளை, என் கணவன் எனக்குச் சொந்தம் இல்லையா ? நல்ல கதையா இருக்கே என்று நாம் சொல்ல காரணம் என்ன ?

இப்படி நமக்கு சொந்தம் இல்லாத எல்லாவற்றையும் நமது என்று நாம் நினைக்கக் காரணம் என்ன ?

அது தான் இந்த சூத்திரம்.

"அதற்கு காரணம் அறியாமை. "

tasya hetur-avidyā

அவித்தையே காரணம்.

யான் எனது என்றவரை கூத்தாடுவானாகி நின்றவனை என் சொல்லி வாழ்த்துவனே என்பார் மணிவாசகர்.



வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி
ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்க்
கோனாகி யானெனதென் றவரவரைக் கூத்தாட்டு
வானாகி நின்றாயை யென்சொல்லி வாழ்த்துவனே.

பற்றை விடுவது பெரிய காரியம் இல்லை. பற்றிக் கொண்டு இருப்பதுதான் பெரிய காரியம்.

இது எனது, இது நான் என்று நினைப்பதுதான் பெரிய காரியம்.

அறிவு வளரும்போது, ஞானம் பிறக்கும் போது , பற்று தானே விலகும்.

சொந்தம் இல்லாததை சொந்தம் கொண்டாடும் அறிவீனம் போகும், எப்போது என்றால் அவித்தை தெளிந்து வித்தை கை கூடும் போது.

http://yogasutrasimplified.blogspot.in/2018/02/224.html









No comments:

Post a Comment