Wednesday, January 24, 2018

யோக சூத்திரம் - 2.23 - தோற்றமும் அழிவும்

யோக சூத்திரம் - 2.23 - தோற்றமும் அழிவும் 


स्वस्वामिशक्त्योः स्वरूपोप्लब्धिहेतुः संयोगः ॥२३॥

svasvāmi-śaktyoḥ svarūp-oplabdhi-hetuḥ saṁyogaḥ ॥23॥

sva = சுயமான
svāmi = தலைவன், ஆள்பவன்
śaktyoḥ = சக்தி, வலிமை
svarūpa = வடிவம்
upalabdhi = அனுபவம், வெளிப்படுதல்
hetuḥ = ஏதுவான
saṁyogaḥ = சேர்ந்து இருத்தல் , பிணைந்து இருத்தல்

இந்த உலகம் நம்மால் உருவாக்கப்பட்டது என்றால் அதை ஏன் நம்மால் அவ்வாறு உணர முடியவில்லை ? நம்மைத் தவிர்த்த , நமக்கு வெளியே ஒரு உலகம் இருப்பதாகவே நாம் அறிகிறோமே ஏன் ?

அதை மாயை, அவித்தை என்கிறார்கள். ஆனால், அது நம் அறிவுக்கு ஏற்புடையதாக இருப்பது இல்லை.

என்ன மாயை ? உலகம், அதில் உள்ள பொருள்கள், உயிரினங்கள் அனைத்தும் நிஜமாகத்தானே தெரிகிறது. பின் எப்படி அது மாயையாகும் ? இது ஏதோ தத்துவார்த்த தர்க்கம்  போல் தெரிகிறது. நடை முறையில் சரி வருமா என்ற சந்தேகம் நமக்குள் இருந்து கொண்டே இருக்கிறது.

நாம் பார்ப்பது, உணர்வது, அனுபவிப்பது எல்லாம் உண்மையா ?

சூரியன் தினமும் காலையில் கிழக்கில் உதிக்கிறது. மேற்கில் மறைகிறது. கோடிக்கணக்கான ஆண்டுகள் மக்கள் அப்படித்தான் நினைத்துக் கொண்டிருந்தார்கள். ஆனால், அது தவறு என்று தெரிந்து கொண்டோம். சூரியன் உதிப்பது அல்ல, பூமி சுத்துகிறது என்று புரிந்து கொண்டோம்.

சரி , பூமி சுத்துகிறதே, அதை நம்மால் உணர முடிகிறதா  என்றால் அதுவும் இல்லை.

நாம் அனுபவத்தில் காணப்பது தவறாகவும், நாம் அனுபவிக்காதது உண்மையாகவும் இருக்கிறது.

பூமி உருண்டை என்று பார்த்து தெரிந்து கொள்ள முடிகிறதா ? இல்லை. தட்டையாக இருப்பது போல இருக்கிறது. ஆனால் உண்மை அது அல்ல.

இப்படி ஆயிரம் உதாரணங்கள் சொல்லலாம்.


நம் புலன்கள் நமக்கு அறிவிப்பது உண்மையாக இருக்க வேண்டும் என்று இல்லை. நம் புலன்களுக்கு புரிபடாதது தவறாக இருக்க வேண்டும் என்றும் அல்ல.

இந்த உலகம் , அதன் தோற்றம், அது தரும் அனுபவம் என்பது உண்மை அல்ல. அது உண்மை போல நமக்குத் தெரியும்.

ஏன் அப்படி தெரிகிறது ? ஏன் நம்மால் அது மாயை என்று உணர முடியவில்லை ? ஏன் அது சாஸ்வதம் என்று நாம் அதைப் பற்றிக் கொண்டு இருக்கிறோம் ?

விடை வருகிறது அடுத்த சூத்திரத்தில் ....

http://yogasutrasimplified.blogspot.in/2018/01/223.html

No comments:

Post a Comment