Saturday, January 6, 2018

யோக சூத்திரம் - 2.19 - வெளிப்பாடு

யோக சூத்திரம் - 2.19 - வெளிப்பாடு 



विशेषाविशेषलिङ्गमात्रालिङ्गानि गुणपर्वाणि ॥१९॥

viśeṣa-aviśeṣa-liṅga-mātra-aliṅgāni guṇaparvāṇi ॥19॥

viśeṣa = விசேஷ = தனித்துவமான

aviśeṣa = அ விவேஷ = தனித்துவம் இல்லாத

liṅga-mātra = லிங்க மாத்ர = குறியீடு உள்ள

aliṅgāni = குறியீடுகளுக்கு அப்பால், குறித்து சொல்ல முடியாத

guṇaparvāṇi = குண + பிரவாணி = குணங்களை உடைய


வாழ்வின் நோக்கம் இந்த இன்ப துன்பங்களை விட்டு கடந்து போவது அல்லது இந்த சூழலில் இருந்து விடுபடுவது என்று முந்தைய பிளாகில் சிந்தித்தோம்.

மேலும், நமது ஆசை, கோபம், துக்கம், பொறாமை, எரிச்சல், பயம் போன்ற குண வெளிப்பாடுகளை சாத்வீகம், தமோ மற்றும் ரஜோ குணங்களே காரணம் என்றும் பார்த்தோம்.

பிரச்சனைகளின் ஆணி வேரை பிடிக்க நாம் முயல்கிறோம்.

இன்பம் வேண்டும் - அது வெளி உலகில் உள்ள பொருள்கள் மற்றும் மனிதர்களிடம் இருந்து கிடைக்கிறது - ஆனால் அவற்றை அனுபவிக்க நம் புலன்களும்  மனமும் தேவை என்று பார்த்தோம் - அந்த புலன்களையும் மனதையும்  செயல்படுத்துவது முக்குணங்கள் என்று பார்த்தோம்.

சரி, இதனால் நமக்கு என்ன பலன். மூன்று குணங்கள் நம்மை செலுத்துகின்றன என்று அறிந்து என்ன பிரயோஜனம் ? இதை அறிவதன் மூலம் நாம் எப்படி இந்த இன்ப துன்ப சூழலை கடந்து போக முடியும் ?

அது சரியான கேள்வி.

அதற்கு பதில் இந்த சூத்திரம்.

குணங்கள் நம்மிடம் நான்கு விதங்களில் வெளிப்படுகிறது.

முதல் நிலை

viśeṣa = விசேஷ = தனித்துவமான

தனித்த ஒரு பொருள் மாதிரி இருத்தல். நாற்காலி, பேணா, டிவி, படுக்கை, போல தனித்து நிற்கும் ஒரு பொருள் போல இருத்தல். அது எப்போது நிகழ்கிறது ?

தமோ குணம் மிகுந்து இருக்கும் போது மனிதன் ஒரு ஜடப் பொருள் போல் இருக்கிறான். 

ஆழ்ந்து தூங்கும்  ஒருவனைப் பாருங்கள். மரக் கட்டை போல கிடப்பான். ஒரு உணர்ச்சியும்  இருக்காது. அவனும் ஒரு பேனா, நாற்காலி போல ஒரு பொருள். அவ்வளவுதான்.

அடுத்த வெளிப்பாடு 

aviśeṣa = அ விவேஷ = தனித்துவம் இல்லாத 

ஒரு இடத்தில் இருக்க மாட்டான். இங்கே ஒரு வேலை, அங்கே ஒரு வேலை. ஒரே ஆள் பல விதங்களில்....தந்தையாக, மகனாக, கணவனாக, அதிகாரியாக, சேவகனாக ஒரு தனித்துவம் இல்லாமல் இருப்பான். ரஜோ குணம் மேலிடும் போது மனிதன் தான் யார் என்று அறியாமல் செயலில் முக்கியத்துவம் கொண்டு அலைவான். 

பல அரசர்கள் மற்ற நாட்டின் மேல் போர் தொடுத்து , பலரை கொன்று நாடு பிடித்தார்கள். எதற்கு ? சந்தோஷமாக வாழத்தானே ? சந்தோஷமாக வாழ நாடு பிடிக்க வேண்டும் யார் சொன்னது ? ரஜோ குணம் மேலிட்டால் , மனிதன் தனித்துவம் இழந்து அங்கும் இங்கும் அலைந்து திரிந்து கொண்டிருப்பான். 

பெரிய நிறுவங்களில் வேலை செய்யும் சிலரைப் பார்த்தால் தெரியும். இரவும் பகலும் வேலை வேலை என்று அலைந்து கொண்டிருப்பார்கள். எதற்கு ? தெரியாது. என்னவோ வேலை பிடித்திருக்கும். அதில் ஒரு ஆர்வம். செய்து முடித்தால் அதில் ஒரு சந்தோஷம். 

மலை ஏறுபவனை கேளுங்கள். எதற்கு மலை ஏறுகிறாய் என்று. 

ஓட்டப் பந்தயத்தில் ஓடுபவனை கேளுங்கள் , ஓடி என்ன ஆகப் போகிறது என்று. 

தெரியாது. இருந்தாலும், அதில் ஒரு மகிழ்ச்சி. 

இது ரஜோ குணத்தின் வெளிப்பாடு. 

மூன்றாவது வெளிப்பாடு 

liṅga-mātra = லிங்க மாத்ர = குறியீடு உள்ள 

குறியீடு மாத்திரம். அது என்ன குறியீடு. சாத்வீகம் மேலிடும் போது , இந்த உடல், இதன் பெயர், இதன் நினைவுகள், இதன் உறவுகள் எல்லாம் போய் விடும். மனிதன் இந்த உடல் என்பது ஒரு குறியீடு அவ்வளவுதான். 

ஒரு ஊருக்குப் போகிறோம். அந்த ஊர் நுழைவில் அந்த ஊரின் பெயர் பதித்த ஒரு பலகை இருக்கும். அந்த பலகையா அந்த ஊர் ? இல்லை , அது ஒரு குறியீடு. 

பெயர், ஊர், உறவு, நிறம், உயரம் எல்லாம் ஒரு குறியீடு. மனிதன் இந்த உடலை தாண்டி  போகிறான். அந்த மாதிரி மகான்கள் தங்களை உடலோடு சேர்த்து அடையாளம் காண்பது இல்லை. ஊருக்குப் பெயர் பலகை மாதிரி, இந்த உடல் ஒரு பெயர் பலகை. ஊர் உள்ளே இருக்கிறது. 

இது சாத்வீகம் உச்சம் பெற்றால் நிகழும் நிலை. 

இந்த மூன்றும் , மூன்று குணங்கள் உச்சம் பெற்றால் நிகழும் நிலைகள். 

இந்த மூன்றிலும் இன்ப துன்பங்கள் உண்டு. சாத்வீகம் உச்சம் பெற்றாலும் சிக்கல்தான். வேறு விதமான சிக்கல். நான் என்பது இந்த நிலையிலும் நிகழும். 

இந்த மூன்றும் சரியான விதத்தில் சேரும் போது நிகழ்வது நான்காவது வகை வெளிப்பாடு. 

aliṅgāni = குறியீடுகளுக்கு அப்பால், குறித்து சொல்ல முடியாத 

குறியீடும் இல்லாத ஒரு நிலை. 


நான் என்பது இல்லாமல் போய் விடும். அது எப்படி இருக்கும் என்று குறித்து சொல்ல முடியாது. ஒன்றும் இல்லாத நிலை. 


தத்துவம் மறந்து தன்னையும் நான் மறந்து
நல்லதும் கெட்டதும் நான் என்பதும் மறந்து
பாவ புண்ணியத்தோடு பரலோகம் மறந்திடச்செய் 

அனைத்தும் மறந்த இடம். 

ஔiயில் விளைந்த வுயர்ஞான பூதரத் துச்சியின்மேல்
அளியில் விளைந்ததொரா நந்தத் தேனை யநாதியிலே
வௌiயில் விளைந்த வெறும்பாழைப் பெற்ற வெறுந்தனியைத்
தௌiய விளம்பிய வா.. முகமாறுடைத்தேசிகனே

என்பது கந்தரலங்காரம்.

வெளியில் விளைந்த வெறும் பாழை பெற்ற வெறும் தனியை ....என்று திணறுகிறார் அருணகிரிநாதர். 


ஒன்றும் இல்லை அங்கே. அதை எப்படிச் சொல்வது. ஏதாவது இருந்தால் அது இன்னது என்று சொல்லி விடலாம். இல்லாத ஒன்றை எப்படி விவரிப்பது ?

வெளியில் = ஆகாயத்தில் 
விளைந்த பாழை = பாழானது என்றால் ஒன்றும் இல்லாதது, மறைந்து போனது, இல்லாமல் போனது. "விதை போட்டேன், ஒண்ணும் வரல எல்லாம் பாழா போச்சு "என்று சொல்வது போல. 

அந்த பாழ் வெளி என்ன செய்தது ?


அது ஒன்றை பெற்றது ? ஒன்றும் இல்லாத பாழ் வெளி ஏதோ ஒன்றை பெற்றது. 

அது என்ன ?

வெறும் தனியை = ஒன்றும் இல்லாத தனித்த ஒன்றை பெற்றது. 

ஒன்றும் இல்லாததை எப்படிச் சொல்வது.

ஒருநாமம் ஒருருவம் ஒன்றுமில்லாற் காயிரந்
திருநாமம் பாடிநாம் தெள்ளேணம் கொட்டாமோ.

என்பார் மணிவாசகர். 

ஒரு நாமும் இல்லை. 
ஒரு உருவமும் இல்லை.
ஒன்றும் இல்லை 

அப்படி பட்ட ஒன்றிற்கு ஆயிரம் திருநாமம் பாடி தெள்ளேணம் கொட்டாமோ என்கிறார். 

கயல் மாண்ட கண்ணி தன் பங்கன் எனைக் கலந்து ஆண்டலுமே,
அயல் மாண்டு, அருவினைச் சுற்றமும் மாண்டு, அவனியின்மேல்
மயல் மாண்டு, மற்று உள்ள வாசகம் மாண்டு, என்னுடைய
செயல் மாண்டவா பாடி தெள்ளேணம் கொட்டாமோ!

என்பதும் அவர் வாக்கே.

அயல் மாண்டு = வெளியில் உள்ள அனைத்தும் மாண்டு (இறந்து, மறைந்து)
அருவினை = வினைகள் 

சுற்றமும் மாண்டு = சொந்த பந்தங்கள் மறைந்து 

அவனியின் மேல் மையல் மாண்டு = உலகின் மேல் உள்ள பற்று மறைந்து 

மற்று உள்ள வாசகம் மாண்டு = வேதம், புராணம், இதிகாசம், மந்திரம், 
தந்திரம் என்று எல்லாம் மாண்டு 

என்னுடைய செயல் மாண்ட = என்னுடைய அனைத்து செயல்களும் மாண்டு 


எல்லாம் போய் விட்டால் என்ன இருக்கும் ?  ஒரே ஆனந்தம் தான் என்கிறார் மணிவாசகர். இப்படி அனைத்தும் மாண்டதை தெள்ளேணம் கொட்டி ஆடுவோம் என்கிறார். 

"எல்லாம் அற என்னை இழந்த நலம் சொல்லாய் முருகா சுர பூபதியே "

என்பார் அருணகிரி. 

அனைத்தையும் இழந்த நலம் என்கிறார். 

அனைத்தையும் கடந்து போக முடியும் என்று திரும்ப திரும்ப சொல்லி இருக்கிறார்கள். 

மற்றவர்கள் சொன்னதோடு விட்டு விட்டார்கள். 

பதஞ்சலி ஒரு படி மேலே போய் அதை எப்படி அடைவது என்றும் சொல்கிறார். 


No comments:

Post a Comment