Tuesday, January 2, 2018

யோக சூத்திரம் - 2.18 - வாழ்க்கையின் நோக்கம் என்ன ? - பாகம் 2

யோக சூத்திரம் - 2.18 - வாழ்க்கையின் நோக்கம் என்ன ? - பாகம் 2


प्रकाशक्रियास्थितिशीलं भूतेन्द्रियाअत्मकं भोगापवर्गार्थं दृश्यम् ॥१८॥

prakāśa-kriyā-sthiti-śīlaṁ bhūtendriya-ātmakaṁ bhoga-apavarga-arthaṁ dr̥śyam ॥18॥

prakāśa = பிரகாச, ஒளி பொருந்திய

kriyā = கிரியா, வேலை, கர்மம், தொழில்

sthiti = ஸ்திதி, நிலைத்த, அசையாத

śīlaṁ = சில

bhūta = பூத, பஞ்ச பூதங்களால் ஆன

endriya = இந்திரிய, இந்திரியங்கள்

ātmakaṁ = அப்படி

bhoga= போக , அனுபவித்தல்

apavarga-= அபவர்க , விடுதலை அடைய,

arthaṁ = அர்த்தம் - நோக்கம், குறிக்கோள்

dr̥śyam = திரிஷ்யம், பார்வை, பார்க்கப் படுவது ॥18॥


வாழ்வின் நோக்கம் எது  என்பது பற்றி சிந்தித்துக் கொண்டிருந்தோம். (பார்க்க : முந்தைய பிளாக்).

பணம், செல்வம், அதிகாரம், புகழ், அன்பு, அரவணைப்பு, பாதுகாப்பு, வீடு பேறு , முக்தி, சொர்கம் என்று பட்டியல் போட்டுக் கொண்டே போனாலும், இவை எல்லாம் எதற்கு என்ற கேள்வி வரும். 

பணம் எதற்கு ? புகழ் எதற்கு ? அதிகாரம் எதற்கு ? ஏன் சொர்கம் போக வேண்டும் ...என்று கேள்வி கேட்டால், இந்த பட்டியலில் உள்ளவை எல்லாம் அவற்றிற்காக அல்ல ஆனால் அவை தரும் வேறு ஏதோ ஒன்றிற்காக என்று புலப்படும். 

பணத்தை வைத்துக் கொண்டு என்ன செய்வது ? பணம் இருந்தால் பொருள்களை வாங்கலாம், அனுபவங்களை வாங்கலாம்...எனவே பணம் அல்ல முக்கியம். அது தரும் சுகம் தான் குறிக்கோள். 

சரி, அந்த சுகம் எதற்கு என்று கேட்டால் நாம் விடைக்கு நெருங்கி விடுவோம். 

வாழ்வின் குறிக்கோள் இன்பமாக இருப்பது. இந்த உலகிலும், மறு உலகிலும். சொர்கத்திற்கு போய் விட்டால் ஒரே சுகம் தான். கடவுளுக்கு பக்கத்தில் இருக்கலாம். அவர் பார்த்துக் கொள்வார். மறு பிறப்பு இல்லை. ஜாலி. 

எனவே அனைத்தும் இன்பம் வேண்டி அல்லது துன்பம் தவிர்க்க என்று புலப்படும். 

இன்னும் கொஞ்சம் ஆழமாக போவோம். 

இன்பம் வேண்டினால், துன்பம் கூட வந்தே தீரும். அவை இரண்டும் வேறு வேறு அல்ல. இன்பம் தலை என்றால், துன்பம் வால் . தலையை தூக்கினால் வாலும் கூடவே வரும். 

நாணயத்தின் இரு பக்கம் போல. 

நாம் பார்த்த வரை ஒவ்வொரு இன்பத்துக்கும் ஒரு துன்பம் இருக்கிறது. துன்பமே இல்லாத இன்பம் ஒன்று சொல்லுங்கள் பார்ப்போம். அப்படி ஒன்று இல்லவே இல்லை. 

நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம், சொர்கம் , இறைவன் திருவடி போன்றவை இன்பம் மட்டுமே உள்ளவை, துன்பமே இல்லாதது என்று. நினைத்துப் பாருங்கள். வெறும் இன்பம் மட்டுமே உள்ள ஒன்று எப்படி இருக்கும் என்று. 

தாகம் துன்பம். நீர் குடித்தால் "அடடா என்ன சுகம் " என்று சொல்கிறோம். எங்கே,  சுகம் தானே, நாள் முழுவதும் தண்ணி குடித்துக் கொண்டே இருங்கள் பார்ப்போம். 


பசி துன்பம். உணவு உண்டால் சுகம். எனக்கு துன்பமே வேண்டாம். வெறும் இன்பம் மட்டுமே வேண்டும். எனக்கு பசிக்கவே கூடாது என்று யாராவது விரும்புவோமா ? பசியே இல்லை என்றால் மருத்துவரிடம் போவோம். ..."டாக்டர் எனக்கு பசியே இல்லை...ஏதாவது டானிக் தாருங்கள் " என்று கேட்போம். பசி துன்பம் என்றால் அதை ஏன் வேண்டி விரும்பி கேட்கிறோம் ? 

நாளெல்லாம் ஓடி ஆடி உழைக்கிறோம். அலுத்து வீடு வருகிறோம். ஒரே அசதி. சாப்பிட்டுவிட்டு படுகிறோம். சுகமான தூக்கம். சுகம் தானே ? ஒரு ஐந்தாறு நாள் தூங்குவது தானே ? முடியாது. 

இன்பத்தை அனுபவிக்க வேண்டும் என்றால் துன்பம் வேண்டும். 

தாகம் இல்லாவிட்டால் தண்ணீர் குடிப்பதன் சுகம் தெரியாது. 

பசி இல்லாவிட்டால் உணவின் சுகம் தெரியாது. 

உழைப்பின் துன்பம் இல்லாவிட்டால் உறக்கத்தின் சுகம் தெரியாது. 

அறியாமையின் வலி இல்லாவிட்டால் அறிவின் ஆனந்தம் புரியாது. 

அப்படியென்றால் எந்த ஒரு இன்பமும், இன்பமாகவே இருக்க வேண்டும் என்றால், நடு நடுவே கொஞ்சம் துன்பம் வேண்டும். சிற்றின்பத்துக்கு , சின்ன துன்பம். 

கடிகாரத்தின் பெண்டுலம் போல எவ்வளவு தூரம் இடது பக்கம் போகிறதோ, அவ்வளவு தூரம் வலது பக்கம் போயே தீரும். 

அப்படியென்றால் இன்பம் துன்பம் இதில் கிடந்து உழல்வதுதான் வாழ்க்கையா ? 

இல்லை. 

இதை இரண்டையும் கடந்து போவதுதான் வாழ்வின் குறிக்கோள். 

எப்படி கடப்பது ? கடந்தால் என்ன ஆகும் ?  இன்பமும் துன்பமும் இருக்கும் வரை மனம் சஞ்சலித்துக் கொண்டே இருக்கும். துன்பத்தில் இருந்து துள்ளி வெளி வர முயலும், இன்பத்தில் அழுந்தி கிடக்க முயலும். இந்த சூழலில் இருந்து எப்படி வெளிப்படுவது ?

அதுதான் இந்த சூத்திரம். 

அது என்ன என்று நாளை பார்போமா ?

http://yogasutrasimplified.blogspot.in/2018/01/218-2.html

No comments:

Post a Comment