Wednesday, January 3, 2018

யோக சூத்திரம் - 2.18 - வாழ்க்கையின் நோக்கம் என்ன ? - பாகம் 3

யோக சூத்திரம் - 2.18 - வாழ்க்கையின் நோக்கம் என்ன ? - பாகம் 3


प्रकाशक्रियास्थितिशीलं भूतेन्द्रियाअत्मकं भोगापवर्गार्थं दृश्यम् ॥१८॥

prakāśa-kriyā-sthiti-śīlaṁ bhūtendriya-ātmakaṁ bhoga-apavarga-arthaṁ dr̥śyam ॥18॥

prakāśa = பிரகாச, ஒளி பொருந்திய

kriyā = கிரியா, வேலை, கர்மம், தொழில்

sthiti = ஸ்திதி, நிலைத்த, அசையாத

śīlaṁ = சில

bhūta = பூத, பஞ்ச பூதங்களால் ஆன

endriya = இந்திரிய, இந்திரியங்கள்

ātmakaṁ = அப்படி

bhoga= போக , அனுபவித்தல்

apavarga-= அபவர்க , விடுதலை அடைய,

arthaṁ = அர்த்தம் - நோக்கம், குறிக்கோள்

dr̥śyam = திரிஷ்யம், பார்வை, பார்க்கப் படுவது ॥18॥



வாழ்வின் நோக்கம் பற்றி சிந்தித்துக் கொண்டிருக்கிறோம். (பார்க்க முதல் இரண்டு பாகங்கள்).

இன்பம் தான் குறிக்கோள் என்றால் துன்பமும் கூடவே வரும் என்று பார்த்தோம். 

அப்படி என்றால் வாழ்வின் குறிக்கோள் இந்த இரண்டையும் கடந்து செல்வது என்றும் சிந்தித்தோம்.


கடப்பது என்றால் என்ன ? இன்பமும் துன்பமும் இல்லாத வாழ்க்கை எப்படி இருக்கும் ? அது ஒரு வாழ்க்கையா ? 

இப்போது சூத்திரத்துக்குள் போவோம் 

bhūta = பூத, பஞ்ச பூதங்களால் ஆன

endriya = இந்திரிய, இந்திரியங்கள்

ātmakaṁ = அப்படி

bhoga= போக , அனுபவித்தல்


apavarga-= அபவர்க , விடுதலை அடைய,



நாம் இன்ப துன்பங்களை எப்படி அனுபவிக்கிறோம் ?

நமது புலன்களாலும், மனதாலும் (மனம், அறிவு, புத்தி ).

இந்த புலன்கள் ஐம்பூதங்களால் ஆனது. 

bhūtendriya என்கிறார். பூதங்களால் ஆனா இந்திரியம். 

இவற்றின் மூலம் "போக" , அனுபவிக்கிறோம். 

எதற்காக என்றால், 


apavarga-= அபவர்க , விடுதலை அடைய,

அவற்றில் இருந்து விடுதலை அடைய வேண்டும். 

ஆனால், நாம் சிந்தித்துப் பார்த்தால் ஒன்று புரியும். இந்த புலன்களுக்கு என்று ஒரு அறிவும் கிடையாது. 

இதை சாப்பிடு என்று நாக்கு சொல்வதில்லை. மனம் சொல்கிறது. கை எடுத்து வாயில் போடுகிறது. நாக்கு அதன் சுவையை அறிய உதவுகிறது. நாக்கு அது வேண்டும் இது வேண்டும் என்று சொல்வதில்லை.

அது கொடுத்தவற்றை அனுபவிக்க உதவுகிறது.

புலன்கள் நமக்கு உதவி செய்கின்றன. எனவே, புலன்களை விட்டு விடுவோம். 

புலன்களை கட்டி மேய்ப்பது அறிவு அல்லது மனம்.

அது தான் அனைத்துக்கும் காரணம். 


அதை நாம் எவ்வாறு கட்டுப் படுத்துவது ? புலன்களை கட்டுப் படுத்தி விடலாம். கண்ணில் இனிப்பை காட்டினால் தானே அதை சாப்பிடவேண்டும் என்ற ஆசை வரும். காட்டமலேயே இருந்து விட்டால் அந்த ஆசை வராது. புலன்களை கட்டுவது எளிது. 

மனதை கட்ட முடியாது. இனிப்பை மனம் நினைக்கும். அடடா, இப்போது ஒரு ஐஸ் கிரீம் இருந்தால் எப்படி இருக்கும் என்று மனம்  நினைக்கும். அதை எப்படி கட்டுப் படுத்துவது ?

மனம் ஏதோ ஒரு வழியில் செயல்பட மூன்று காரணங்கள் இருக்கிறது. அது மனதின் மூன்று நிலைகளை பொறுத்தது. மனம் எந்த நிலையில் இருக்கிறதோ, அதற்கு தகுந்தாற் போல அது செயல்படும். 

அவை என்ன மூன்று நிலைகள் ?


prakāśa = பிரகாச, ஒளி பொருந்திய

kriyā = கிரியா, வேலை, கர்மம், தொழில்

sthiti = ஸ்திதி, நிலைத்த, அசையாத


பிரகாச என்றால் சாத்வீகம். ஒளி பொருந்திய. 

க்ரியா என்றால் கிரியை, வேலை, கர்மம் செய்யும் நிலை - ரஜோ குணம். 

ஸ்திதி என்றால் ஒன்றும் செய்யாமல் நிலைத்து நிற்பது. ஒரு வேலையும் செய்யாமல் இருப்பது. தமோ குணம். 

இந்த மூன்று குணங்களால் மனம் உந்தப் படுகிறது. 

ரஜோ குணம் மிகுந்தால் நல்ல சாப்பாடு, உடை, இசை, பார்ட்டி, ஊர் சுற்றுவது, இடங்களைப் போய் பார்ப்பது என்று மனம் அலையும். 

சாத்வீகம் மிகுந்தால் படிப்பு, ஆராய்ச்சி, ஞானம், என்று உண்மையைத் தேடி அலையும். 

தமோ குணம் மிகுந்தால் தூக்கம், அசதி, சோம்பல் என்று மனம் வேலையின்மையை அனுபவிக்கும். 

அப்படி என்றால் நமக்கு மொத்தமே மூணு குணங்கள்தானா ?

 இல்லை.இந்த மூன்று குணங்களும் வேறு வேறு சதவிகிதத்தில் கலக்கும் போது ஒவ்வொரு குணம் உண்டாகிறது. 

அப்படி என்றால், இந்த குணங்களை சரி செய்தால் நாம் மாறி விடுவோம் அல்லவா ?

நமது விருப்பு வெறுப்பு, ஆசை, கோபம், காமம், தாபம், ஏக்கம், எரிச்சல் எல்லாம் இந்த முக்குண சேர்க்கையால் வருகிறது. 

இதை கண்டுகொண்டு , அவற்றை சரி செய்தால் நம் வாழ்க்கை நேராகி விடும். 

புலன்கள் மூலம் வரும் இன்பங்களை , அனுபவிப்பதன் மூலம், அவற்றின் தன்மை அறிந்து, முக்குணங்களை மாற்றி நாம் அவற்றில் இருந்து விடுதலை அடையலாம். 

இது வரை நாம் இந்த புலன்களுக்கும், மனதுக்கும் அடிமை பட்டுக் கிடந்தோம். கிடக்கிறோம். 

இவற்றில் விடுதலை அடைவதுதான் வாழ்வின் குறிக்கோள்.

சிறையில் இருப்பவனுக்கு என்ன குறிக்கோளாக இருக்க முடியும். சிறையை விட்டு விடுதலை அடைவதுதான் அவனின் ஒரே சிந்தனையாக இருக்கும். 

நாம் சிறையில் இருக்கிறோம் என்பதே தெரியாமல் இருக்கிறோம். இந்த புலன்கள் மற்றும் மனம் நம்மை சிறை வைத்திருக்கின்றன. அவை ஆட்டுவித்தபடி நாம் ஆடுகிறோம். 


அந்த வீடு வேண்டும், இந்த கார் வேண்டும், அந்த ஊருக்குப் போக வேண்டும், இந்த உடை வேண்டும், அந்த பெண் வேண்டும், இந்த பதவி வேண்டும் என்றும் என்று வண்டியில் பூட்டிய மாட்டை அங்கும் இங்கும் ஓட்டுவதைப் போல இந்த புலன்களும் மனமும் நம்மை ஓட்டுகின்றன . நாமும் அது அறியாமல் ஓடிக் கொண்டிருக்கிறோம். 

இந்த புலன்களை மற்றும் மனதை வெல்வதன் மூலம் அவற்றில் இருந்து நமக்கு விடுதலை கிடைக்கும். விடுதலை பெற்று வெளியில் வந்தால் தான் உண்மை என்ன என்று புரியும். 


apavarga-= அபவர்க , விடுதலை அடைய,

arthaṁ = அர்த்தம் - நோக்கம், குறிக்கோள்


விடுதலை அடைவதே வாழ்வின் நோக்கம். 

புலனைந்தும் வஞ்சனையை செய்ய என்பார் மணிவாசகர். 


 சுவைஒளி ஊறுஓசை நாற்றமென ஐந்தின்

    வகைதெரிவான் கட்டே உலகு. 

என்பார் வள்ளுவர். 

சரி. எப்படி இந்த குணங்களை நமது கட்டுக்குள் கொண்டு வருவது ?

அது அடுத்த படி. 

http://yogasutrasimplified.blogspot.in/2018/01/218-3.html

No comments:

Post a Comment