Sunday, January 14, 2018

யோக சூத்திரம் - 2.21 - உருவாக்கப்பட்ட உலகம்

யோக சூத்திரம் - 2.21 - உருவாக்கப்பட்ட உலகம் 



तदर्थ एव दृश्यस्याअत्मा ॥२१॥

tadartha eva dr̥śyasya-ātmā ॥21॥



tad =  அவை
artha = அர்த்தம்
eva = அப்போது
dr̥śyasya = பார்க்கப் பட்டது , உருவாக்கப் பட்டது
ātmā = தன்னால், தான், நான் , உள்ளுணர்வு


இந்த உலகம் பார்ப்பவனும் , பார்க்கப் படுவதும் இரண்டும் சேர்ந்து உருவாக்கப்பட்டது. 

இது ஒரு மிக மிக முக்கியமான சூத்திரம்.

இன்பமும் துன்பமும் நிறைந்ததுதான் வாழ்க்கை. அவற்றை கடந்து செல்வதுதான் வாழ்வின் குறிக்கோள் என்று பார்த்தோம்.

இந்த  இன்ப துன்பங்கள் ஏன் வருகின்றன ?

வெளியில் இருந்து வருகின்றதா ? அன்பும், பாசமும், காதலும், கோபமும், ஏமாற்றமும் வருத்தமும்  வெளியில் இருந்து வருகிறதா ?

வெளியில் இருந்தும் வருகிறது. நாம் அவற்றை எவ்வாறு எதிர் கொள்கிறோம் என்பதிலும் இருக்கிறது.

வெளி உலகு மட்டும் நமது இன்ப துன்பங்களுக்கு காரணம் அல்ல.

நாம் அவற்றை எவ்வாறு கையாள்கிறோம் என்பதைப் பொருத்தும் அமைகிறது.

இந்த உலகம் என்பது பார்ப்பவனும், பார்க்கப் படுபவதும் சேர்ந்து உருவாவது. ஒன்றில்லாமல் ஒன்றில்லை.

பார்ப்பதற்கு யாருமே இல்லை என்றால் வானம் நீலமாக இருக்குமா என்று சங்கரர் கேட்டார்.

அனுபவிப்பவனும், அனுபவிக்கப் படுவதும் இரண்டும் சேர்ந்தே இந்த உலகம் உருவாகிறது.

என்ன இது ஒரே குழப்பமாக இருக்கிறதா ?

சில உதாரணங்கள் பார்ப்போம்.

நீங்கள் கோவிலுக்குப் போகிறீர்கள். வெளியில் செருப்பை விட்டு விட்டு போகிறீர்கள். உள்ளே மணி அடிக்கிறது, இறைவன் மேல் பாடும் பாடல் ஒலிக்கிறது. உள்ளே அர்ச்சகர் அர்ச்சனை செய்கிறார். கற்பூர ஆராதனை காட்டுகிறார். அந்த சூழ் நிலையும், அங்குள்ள பாடல் ஒலிகளும், மணியின் ஒலியும் , அர்ச்சகரின் குரலும், எண்ணெய் விளக்கில் இருந்து கசியும் ஒளியும், கற்பூர மணமும் ஒரு தெய்வீக சூழ்நிலையை உருவாக்குகிறது. கன்னத்தில் போட்டுக் கொள்கிறீர்கள். மனதில் ஒரு பக்தி. ஒரு சாந்தம் வருகிறது அல்லவா ?

அடுத்த முறை கோவிலுக்குச் செல்லும் போது உங்கள் கிறித்துவ அல்லது இஸ்லாமிய நண்பரை கூட்டிச் செல்லுங்கள். அவருக்கு அதே போல் பக்தி வருகிறதா என்று கேளுங்கள்.

அல்லது

நீங்கள் ஒரு சர்ச்சுக்கோ அல்லது மசூதிக்கோ சென்று பாருங்கள் . பக்தி வருகிறதா என்று பாருங்கள்.

சரவண பேல குளா சென்றால் அங்கே பிரமாண்ட சிலை வடிவில் கோமதேஸ்வரர் உடம்பில் ஒரு போட்டு துணி இல்லாமல் நிர்வாணமாக நிற்பதை பார்க்கலாம். ஒரு ஜைன மத பக்தனுக்கு பக்தி வரும். மற்ற மதத்தை சார்ந்தவர்கள் சங்கடத்தில் நெளிவார்கள். அதுவும் பக்கத்தில் மகளோ, மகனோ , மனைவியோ இருந்தால் சங்கடம் இன்னும் அதிகமாகும் ?

ஏன் ?

ஒருவருக்கு பக்தி வருகிறது. இன்னொருவருக்கு சங்கடம் வருகிறது .

சர்ச்சுக்குள் போனால் , செருப்போடு வருகிறார்கள். காலில் ஷூ அணிந்து வருகிறார்கள். இறைவன் முன்னால் செருப்போடு போகலாமா ? பக்தி வருமா ?

அவர்களுக்கு வருகிறது. நமக்கு வருவதில்லை.

உணர்வுகள் என்பது வெளி உலகும், நம் உள் உணர்வும் சேர்ந்தே உண்டாகிறது.

அது ஒரு உதாரணம்.

பல நாள் உருகி உருகி காதலித்து திருமணம் செய்து கொள்கிறான். சில வருடங்களில் , இவளையா காதலித்தேன் என்று வருந்துகிறான்.

என்னவாயிற்று ?

அவள் அப்படியே தான் இருக்கிறாள். இவன் மன நிலை மாறிவிட்டது.

காதல் , வெறுப்பாக மாறிவிட்டது.

இப்படி நீங்கள் ஒன்று வெறுப்பதோ விரும்புவதோ அந்த பொருள் மேல் மட்டும் இல்லை. நீங்கள் எப்படி இருக்கிறீர்களோ அதையும் பொறுத்தது.

யோசித்துப் பாருங்கள்.

யோகா ஒரு படி மேலே போகிறது.

இந்த உலகம் என்று வெளியில் ஒன்றும் இல்லை. நாம் தான் அதை உருவாக்குகிறோம்.

எனவே, இன்ப துன்பங்களுக்கு இந்த வெளி உலகும், நாமும் காரணம் என்று தெரிகிறது அல்லவா ?

சரி. அடுத்த கட்டத்துக்குப் போவோம்.

சில விஷயங்கள் நமக்கு துன்பம் தருகின்றன. அந்த துன்பத்தில் இருந்து நமக்கு விடுதலை வேண்டும்.

என்ன செய்யலாம் ?

ஒன்று இந்த உலகை மாற்றலாம். அல்லது நம்மை மாற்றலாம்.

இரண்டும் சேர்ந்ததுதானே உலகம்.

உலகை மாற்ற நம்மால் ஆகாது.

நம்மை மாற்ற நம்மால் முடியும். முடிய வேண்டும்.

நம் மனம் மாறினால் உலகம் மாறும்.


படிக்கிற காலத்தில் ஆசிரியர் மேல் வெறுப்பும், கோபமும் இருக்கும். படித்து முடித்து நல்ல வேலையில் அமர்ந்தவுடன், அந்த ஆசிரியர்களை நன்றியோடு நினைத்துப் பார்ப்போம்.

என்ன ஆயிற்று ?

நம் மனம் மாறிவிட்டது. அவர் நல்லவராகி விட்டார்.

அதெல்லாம் சரி. மனதளவில் இது சரியாக இருக்கலாம். உடல் வலி, பசி, போன்றவை இருக்கிறதே. அது என் உடலை மட்டுமே சார்ந்து இருக்கிறது. மனம் மாறினால் அந்த வலி போகுமா ?

போகும்.


நாவுக்கரசரை ஒரு அறையில் தூக்கிப் போட்டு , உள்ளே நிறைய விறகுகளை போட்டு தீ மூட்டினார்கள். எரிந்து சாகட்டும் என்று. விறகு திகு திகு என்று எரிகிறது.

விண்ணுற வடுக்கிய விறகின் வெவ்வழல்
உண்ணிய புகிலவை யொன்று மில்லையாம்
பண்ணிய வுலகினிற் பயின்ற பாவத்தை

நண்ணிநின் றறுப்பது நமச்சி வாயவே.

விண்ணுற அடுக்கிய விறகின் வெம்மையான அந்த தழல், எண்ணிப் பார்த்தால் அது ஒன்றும் இல்லை என்கிறார்.

பண்ணிய உலகில் பயின்ற பாவத்தை ....

இந்த உலகம் அப்படியே இருப்பது அல்ல. நாம் அதை பண்ணுகிறோம்.

யோகத்தின் உச்சம் அது.

பெரிய புராணம் படித்தால் , அதன் நெடுகிலும் யோகிகளின் வாழ்க்கை தெரியும். இன்பமும், துன்பம் கடந்த நிலை புரியும்.

இன்பமும் துன்பமும் உள்ளானே இல்லானே 

என்பார் மணிவாசகர்.

இன்பமும் துன்பம் இந்த உலகில் இருக்கும். ஆனால் ஒரு யோகிக்கு இருக்காது. அவன் அவற்றை கடந்தவன்.

நாமும் கடக்க முடியும். அது எப்படி என்று பதஞ்சலி கூறுகிறார்.

கேட்போமா ?

http://yogasutrasimplified.blogspot.in/2018/01/blog-post.html

















No comments:

Post a Comment