Monday, January 8, 2018

யோக சூத்திரம் - 2.20 - புலன்கள் மற்றும் மனதை கடந்து

யோக சூத்திரம் - 2.20 - புலன்கள் மற்றும் மனதை கடந்து 


द्रष्टा दृशिमात्रः शुद्धोऽपि प्रत्ययानुपश्यः ॥२०॥

draṣṭā dr̥śimātraḥ śuddho-'pi pratyaya-anupaśyaḥ ॥20॥


draṣṭā  = பார்ப்பவன்

dr̥śi = பார்ப்பது

mātraḥ = மட்டும்

śuddha = சுத்தமான,

api = இருந்தும்

pratyaya = பார்த்தல் என்பது

anupaśyaḥ = தோற்றம் அளிக்கிறது


என்னது இது பார்ப்பவன், பார்வை, பார்த்தல் என்று ஒரே குழப்பமாக இருக்கிறதே...

பொறுமை...பொறுமை...நிதானமாக அணுக வேண்டும்.

இன்பம் துன்பம் இவற்றில் இருந்து விடுதலை பெறுவதே வாழ்வின் நோக்கம் என்று பார்த்தோம்.

எப்படி விடுதலை பெறுவது என்பது உடனடி கேள்வி.

இன்பமும் துன்பமும் ஏன் வருகின்றன ? எங்கிருந்து வருகின்றன ?

இன்பமும் துன்பமும் வெளியில் இருந்து வருகின்றன இல்லையா.

இனிப்பை தின்றால் இன்பம். ஐஸ் கிரீம் சாப்பிட்டால் இன்பம். மனைவியை அணைத்தால் இன்பம். பிள்ளைகள் மேலே ஏறி விளையாடினால் இன்பம். நல்ல இசை கேட்டால் இன்பம்.

கோபப்படும் மாமியார் துன்பம், அலுவலக மேல் அதிகாரி துன்பம், நோய் துன்பம்.

இப்படி இன்பமும் துன்பமும் வெளியில் இருந்து தானே வருகிறது ?

அதில் சந்தேகம் இல்லையே ?

சரி.

இந்த இன்ப துன்பங்கள் வெளியில் இருந்து மட்டுமே வருகிறதா ?

இனிப்பு சாப்பிடுவது இன்பம் என்றால் அது எல்லோருக்கும் இன்பமாக இருக்க வேண்டுமே ? சில பேர் இனிப்பை கண்டால் காத தூரம் ஓடுகிறார்களே ஏன் ?

ஏன், நாமே சில சமயம் இனிப்பு வேண்டாம் என்போம். காய்ச்சல் வந்து, நாக்கு கசந்து கொண்டிருந்தால் எதுவுமே சாப்பிட பிடிக்காது.

அலுவலகத்தில் பெரிய பிரச்சனை. கம்பெனி யை மூடி விடுவார்கள் போல இருக்கிறது. கடன் வேறு நிறைய இருக்கிறது. மனைவி வந்து கட்டி அணைத்தால் இன்பமாகவா இருக்கும். எரிந்து விழ தோன்றும்...."நேரம் காலம் தெரியாமல் " என்று.

வயதான தாத்தா. காது அவ்வளவா கேக்காது. அவரிடம் போய்நல்ல இசையை போட்டால் அவருக்கு என்ன தெரியும்.

அப்படி என்றால், இன்பமும் துன்பமும் வெளி உலகும், நமது புலன்களும் ஒன்று சேரும் போது உண்டாகிறது என்று தெரிகிறது. வெளி உலகம் மட்டுமே இன்பம் இல்லை. நமது மனமும், புலன்களும் சரியாக இருந்தால் தான் இன்பமும் துன்பமும் நிகழும்.

சரி தானே. சந்தேகம் இல்லையே.

சரி, இந்த இன்ப துன்பங்கள் யாருக்கு நிகழ்கிறது ?

நமது புலன்களுக்கா ? ஐஸ் கிரீம் சாப்பிட்டால் நாக்கு மகிழ்கிறதா ? நல்ல படம் பார்த்தால் கண் சந்தோஷப் படுகிறதா ? நல்ல நறுமணம் முகர்ந்தால் மூக்கு குஷியாகிறதா ?

இல்லை. புலன்கள் செய்திகளை அனுப்புவதோடு சரி. இன்பமோ துன்பமோ அவைகளுக்கு இல்லை. நமது மூளை அவற்றை அனுபவிக்கிறது.

நன்றாக தூங்குபவன் முன்னால் நறுமண மண புகை போட்டுப் பாருங்கள். மூக்குக்குள் அந்த பபுகை போகும், ஆனால், அவன் அதை அனுபவிக்க மாட்டான் ? ஏன் ? புத்தி வேலை செய்யவில்லை. மனம் வேலை செய்யவில்லை.

சரி புலன்கள் அனுபவிப்பதில்லை. மூளை அனுபவிக்கிறதா ? மூளைக்கு அனுபவம் உண்டா  ? அது ஒரு கருவி. அவ்வளவுதான்.

அப்படி என்றால் எது அனுபவிக்கிறது ?

மனம் என்று சொல்லலாம். ஆனால், இந்த மனம் என்பது என்ன ? அதற்கு வடிவம் இருக்கிறதா ? எங்கே இருக்கிறது ? தெரியாது.

முடிச்சு அங்கே தான்  இருக்கிறது.

இந்த முக்குணங்களும் சரியான விகிதத்தில் இருக்கும் போது நான் , எனது என்பதை தாண்டி ஒன்று இல்லாத ஒரு நிலையை அடைவோம் என்று முந்தைய பிளாகில் பார்த்தோம்.

அனுபவிப்பவன் என்று ஒருவன் கிடையாது. நான் என்ற ஒன்று இல்லாவிட்டால் அனுபவமும் கிடையாது. யார் அனுபவிப்பது ?

வீடு இருக்கிறது. குளிர் சாதனம் இருக்கிறது. நல்ல படுக்கை, காற்றோட்டம் இல்லாம இருக்கிறது. வீட்டில் யாரும் இல்லை. எனவே அனுபவம் என்று ஒன்று அங்கு நிகழ்வதில்லை.

சரி. அப்படி ஒரு நிலையை அடைய முடியுமா ? அப்படி ஒரு நிலையை அடைந்தால் என்ன ஆகும் ?

இது வரை நாம் இந்த புலன்களுக்கும் மனதுக்கும் அடிமையாக இருந்தோம். அந்த நிலை அடைந்த பின், புலன்களும் மனமும் நமக்கு அடிமையாக இருக்கும்.


அந்த நிலை சாமியார் நிலை அல்ல. இன்ப துன்பங்களை விட்டு விட்டு ஓடி விடுவது அல்ல. அவற்றை இன்னும் பூர்ணமாக அனுபவிக்க முடியும். இன்பம் துன்பம் கடந்த நிலை அது.

புலன்களும் மனமும் நம்மை அங்கும் இழுத்துக் கொண்டு ஓடாது. நாம் செலுத்தும் இடத்துக்கு அவை செல்லும்.

யானை நம்மை தூக்கிக் கொண்டு ஓடுவதற்கும், நாம் அதன் மேல் இருந்து சவாரி செய்வதற்கும் உள்ள வேறுபாடு.

இரண்டிலும் யானை தான் நம்மை கொண்டு செல்கிறது.

முதலாவதில், யானை நம்மை தன்னுடைய தும்பிக்கையால் தூக்கி, வளைத்து  அது போன இடத்துக்கெல்லாம் நம்மை கொண்டு செல்கிறது.

இரண்டாவதில், நாம் அதன் மேல் ஏறி அமர்ந்து, அங்குசம் கொண்டு அதை கட்டுப் படுத்தி நாம் விரும்பும் இடத்துக்கு அதை செலுத்துகிறோம்.

அதை அடைய முடியும். ஆழ்ந்து சிந்தியுங்கள். இன்பம், துன்பம், அனுபவம், புலன்கள், மனம், இவற்றின் இயக்கம் பற்றி எல்லாம்.

ஒரு முறை வாசித்தவுடன் வருவது அல்ல இது. ஆழ்ந்த சிந்தனை, அது பற்றிய விவாதம், குழப்பம், தெளிவு என்று வர வேண்டும்.

வரும்.

http://yogasutrasimplified.blogspot.in/2018/01/220.html

No comments:

Post a Comment