Monday, January 22, 2018

யோக சூத்திரம் - 2.22 - தனித் தனி உலகம்

யோக சூத்திரம் - 2.22 - தனித் தனி உலகம் 


कृतार्थं प्रतिनष्टंअप्यनष्टं तदन्य साधारणत्वात् ॥२२॥

kr̥tārthaṁ pratinaṣṭaṁ-apy-anaṣṭaṁ tadanya sādhāraṇatvāt ॥22॥



kr̥ṭa =  முடிந்த பின், தீர்ந்த பின்
arthaṁ = அர்த்தம்
prati = அதற்காக
naṣṭam = நஷ்டம், அழிவு, மறைதல்
apy = இருந்தாலும்
anaṣṭaṁ = அ - நஷ்டம் ; நஷ்டம் அடையாமல் , சிதையாமல்  remaining in existence
tat = அது
anya = அந்நிய , மற்றவர்களுக்காக
sādhāranatvāt = அது தன் உலகமாக

பொருள்கள் தங்கள் நோக்கம் முடிந்த பின், மறைந்து விடுவது இல்லை. அது மற்றவர்களின் அனுபவத்திற்காக நிலைத்து நிற்கிறது. 

இந்த உலகம் என்பது அனுபவங்களின் தொகுப்பு என்று பார்த்தோம். அனுபவிப்பவனும், அனுபவிக்கப் படுவதும் இரண்டும் சேர்ந்ததுதான் உலகம் என்று பார்த்தோம்.

அதாவது, அனுபவிப்பவன் இல்லை என்றால், இந்த உலகம் இல்லை என்று ஆகும்.

இரண்டும் வேண்டும் இந்த உலகம் வெளிப்பட.

அதில் ஒரு சிக்கல் இருக்கிறது.

நான் பிறப்பதற்கு முன்பே இந்த உலகம் இருந்தது. நான் இறந்த பின்னும் இந்த உலகம் இருக்கும்.

அப்படி இருக்கும் போது , என்னைத் தவிர்த்து இந்த உலகம் தனித்து இருக்கிறது என்று தானே ஆகும்.

அப்படி என்றால், அனுபவிப்பவனும், அனுபவிக்கப் படுவதும் சேர்ந்து தான் இந்த உலகம்  என்ற கோட்பாடு சரியாக இல்லை. நான் இருந்தாலும், இல்லாவிட்டாலும் இந்த உலகம் இருக்கும் தானே.

அப்படி என்றால், என்னைத் தவிர்த்த இந்த உலகம் என்னை பாதிக்கும் தானே. எனது இன்ப துன்பங்களுக்கு இந்த உலகம்தானே காரணமாக இருக்க முடியும்.

பின் எப்படி, இன்ப துன்பம் நமக்குள் இருந்து வருகிறது என்று சொல்வது.

பதஞ்சலி சொல்வது சரிதானா என்ற சந்தேகம் நமக்குள் எழுவது சரிதான்.

இந்த சந்தேகத்தை எதிர்பார்த்து, அதற்கு விடையாக இந்த சூத்திரத்தை தருகிறார்.

அதாவது, " நமது அனுபவம் முடிந்து விட்டால், அந்த பொருள்கள் போய் விடுவது இல்லை. மற்றவர்களின் அனுபவத்திற்காக அவை நிலைத்து நிற்கின்றன " என்கிறார்.

அது என்ன நம் அனுபவம், மற்றவர் அனுபவம் ?


ஒரு பெண் (உதாரணத்திற்கு, ஆண் என்றும் வைத்துக் கொள்ளலாம்) இருக்கிறாள் என்று வைத்துக் கொள்வோம்.

அவளை , அவளுடைய தந்தை மகளாகப் பார்க்கிறார்,
கணவன், மனைவியாக பார்க்கிறான்
பிள்ளைகள், தாயாக பார்க்கிறார்கள்
உடன் பிறந்தவர்கள் , சகோதரியாக பார்க்கிறார்கள்
மாமியார் , மருமகளாக பார்க்கிறாள்
தாத்தா, பேத்தியாக பார்க்கிறார்

ஒரு பெண்தான். பார்ப்பவரை பொறுத்து அவளின் தோற்றம், குணம் , அனைத்தும் மாறும் அல்லவா ?

தந்தை பார்ப்பது போல, கணவன் பார்ப்பது இல்லை.

கணவன் பார்ப்பது போல, பிள்ளைகள் பார்ப்பது இல்லை.

உண்மையில் அவள் யார் ?

மகளா, மனைவியா, சகோதரியோ, தாயா, மருமகளா ?

அவளுக்கு குழந்தை பிறப்பதற்கு முன்னும் அவள் இருந்தாள். குழந்தை பிறந்த பின், தாயானாள் . தாத்தா இறந்த பின்னும் அவள் இருப்பாள். பேத்தியாக இருக்க மாட்டாள். ஆனால், மற்ற வடிவங்களில் இருப்பாள்.

தாத்தா இறந்த பின், பேத்தியும் மறைந்து போகிறாள். அவள் யார்க்கும் பேத்தி இல்லை இனிமேல். அதற்காக அவளே இல்லை என்று சொல்ல முடியுமா ? மனைவியாக, தாயாக அவள் இருப்பாள்.

ஒரு வேளை கணவன் இறந்து போனால், அவள் மனைவியாக இருப்பதும் மறைந்து போகும். ஆனால், தாயாக, சகோதரியாக அவள் இருந்து கொண்டு இருப்பாள்.

அதைத்தான், பதஞ்சலி சொல்கிறார்.

உங்கள் அனுபவம் மறைந்த பின், பொருள்கள் மறைவதில்லை. அது மற்றவர்களின் அனுபவத்திற்காக இருக்கிறது.

அவர்கள் அந்த  பொருளை வேறு விதமாக பார்ப்பார்கள். அனுபவிப்பார்கள்.

புரிகிறதா ?

இந்த உலகம், பார்ப்பவரைப் பொறுத்து மாறுகிறது.

தாத்தாவின் நிலையில் இருந்து பார்த்தால், பேத்தியாக தெரிவாள்.

காதலன் நிலையில் இருந்து பார்த்தால், காதலியாகத் தெரிவாள்.

அவள் அப்படியேதான் இருக்கிறாள். அவள் ஒன்றும் மாறி மாறி வேடம் இடுவதில்லை. அவளை சுற்றி இருப்பவர்கள் அவளை ஒவ்வொருவிதமாக  பார்க்கிறார்கள்.

அவர்களின் உறவும், பாசமும், நேசமும், அவர்களின் நிலைக்கு தகுந்தாற்போல மாறுகிறது.

நீங்கள் ஒரு பொருளின் மேல் ஆசைப் படுவதற்கு காரணம், அந்த பொருள் மட்டும் அல்ல. நீங்களும்தான் காரணம்.

நீங்கள்தான் அந்த பொருளை உருவாக்குகிறீர்கள். உங்கள் கற்பனையில், மனதில். பின் அதன் மேல் ஆசைப் படுகிறீர்கள்.

பார்வையை மாற்றுங்கள் , உலகம் மாறும்.

பெண்ணை தாயகப் பார்ப்பதும், தாரமாக பார்ப்பதும் பார்ப்பவரின் நிலையைப் பொறுத்தது. அவள் அப்படியேதான் இருக்கிறாள்.

பொருளின் மேல் ஏன் ஆசை வருகிறது ?

பொருளில் ஒன்றும் இல்லை. எல்லாம் உங்களில் இருக்கிறது.

சரி தானே ?

http://yogasutrasimplified.blogspot.in/2018/01/222.html


No comments:

Post a Comment