Thursday, July 13, 2017

யோக சூத்திரம் - 1.14 - வேரூன்றிய பயிற்சி

யோக சூத்திரம் - 1.14 - வேரூன்றிய பயிற்சி 



स तु दीर्घकाल नैरन्तर्य सत्काराअदराअसेवितो दृढभूमिः ॥१४॥

sa tu dīrghakāla nairantarya satkāra-ādara-āsevito dr̥ḍhabhūmiḥ ॥14॥

ச து தீர்க்க கால நைரந்தர்யா ஸத்கார ஆதார அசேவித்தோ த்ரதபூமி

sa = ச = அது

tu = து = மேலும்

dīrghakāla  = தீர்க்க கால

nairantarya = நைரந்தர்ய

satkāra = உறுதியாக, முனைப்புடன்

ādara = ஆதார = மதிப்புடன், உயர்வை எண்ணி

āsevito = அசேவித்தோ = செய்தால்

dr̥ḍhabhūmiḥ = வேரூன்றி நிற்கும் ॥14॥

அதை (அப்யாஸத்தை ) நீண்ட காலம் தொடர்ந்து முனைப்புடன் , வேரூன்றி நிலைத்து நிற்கும்படி செய்ய வேண்டும். 

மன சலனங்களை நீக்க அப்பியாசமும் வைராக்கியமும் தேவை என்று பார்த்தோம்.

அதில் அப்பியாசம் பற்றி இங்கே சிந்திக்க இருக்க இருக்கிறோம்.

பயிற்சி என்றால் எவ்வளவு நாள் செய்ய வேண்டும் ?

சில நாள், ஒரு சில வாரம் ? மாதம் ? இரண்டு மூன்று வருடம் ? எவ்வளவு நாள் செய்ய வேண்டும்  என்ற கேள்வி வரும்.

நீண்ட நாள் செய்ய வேண்டும் என்கிறார் (தீர்க்க காலம் - தீர்க்க சுமங்கலி என்பது போல நீண்ட நாள்).

நீண்ட காலம் என்றால் எவ்வளவு நாள் ? வாழ் நாள் இறுதி வரையா ? அப்படி செய்து கொண்டே இருந்தால் பின் அதன் பலனை எப்போது அனுபவிப்பது ?

இந்த கேள்வி அப்படியே இருக்கட்டும். கடைசியில் அதற்கு பதில் இருக்கிறது.

அதற்கு முன்னால் ,

இந்த பயிற்சியை எப்படி செய்ய வேண்டும் ?

இரண்டு முக்கியமான விஷயங்களை  கூறுகிறார்.

ஒன்று தொடர்ந்து செய்ய வேண்டும்.

நிறைய பேர் பல நல்ல விஷயங்களை தொடங்குவார்கள். கொஞ்ச நாளில் அதில் ஆர்வம் குறைந்து விட்டு விடுவார்கள்.

அது உடற் பயிற்சியாக இருக்கட்டும், உணவு கட்டுப் பாடாக இருக்கட்டும், படிப்பாக இருக்கட்டும் எதுவாக இருந்தாலும் தொடங்கும் போது இருக்கும் உற்சாகம் சிறிது நாளில் போய் விடுகிறது. எனவே, வாழ்வில் எதையும் சாதிக்க முடிவதில்லை.

தொடர்ந்து செய்து கொண்டே இருக்க வேண்டும்.

எப்படி என்றால் , நீர் தாரை எப்படி ஒழுகுகிறதோ அது போல். வீட்டில் கூரையில் எங்காவது சின்ன விரிசல் இருந்தால் அதில் இருந்து நீர் ஒழுக்கிக் கொண்டே இருக்கும் அல்லவா அது போல விடாமல் செய்து கொண்டே இருக்க வேண்டும். (nairantarya = நைரந்தர்ய ). தர்யா என்றால் தாரை. நீர் தாரை போல.

அடுத்தது, நாம் செய்யும் எந்த செயலின் மேலும் நமக்கு ஒரு மதிப்பும் மரியாதையும் வேண்டும்.

ஏனோ தானோ என்று செய்யக் கூடாது.

நான் செய்வது நல்ல  காரியம். இதனால் எனக்கும் மற்றவர்களுக்கும் நன்மை பிறக்கும். எனவே இதை செய்கிறேன் என்று செய்யும் பயிற்சியில் ஒரு மதிப்பும், மரியாதையும் இருக்க வேண்டும்.  (ādara)

அடுத்தது, satkāra = உறுதியாக, முனைப்புடன் , உறுதி இருக்க வேண்டும். தளரக் கூடாது. உடலும் மனமும் சலிப்படையும். விடக் கூடாது.


சரி இப்படி, விடாமல், உறுதியாக, மதிப்புடன், நீண்ட காலமாக பயிற்சி (அப்பியாசம்) செய்வது என்பது நடக்கிற காரியமா ? ரொம்ப கடினமாக இருக்கிறதே ? இதெல்லாம் நமக்கு சரிப் பட்டு வருமா ? இல்லை வழக்கம் போல "கேக்க நல்லாத்தான் இருக்கு....ஆனா இதெல்லாம் நடை முறைக்கு சாத்தியமாகாது என்று ஒரு பிட்டை போட்டு விட்டு நகர்ந்து விடுவோமா " என்று நினைக்கத் தோன்றும்.

இந்த கடினமான பயிற்சியை எளிதாக்க வழி சொல்கிறார். அந்த பதிலே , இதை எவ்வளவு நாள் செய்ய வேண்டும் என்பதற்கும் விடை.

இப்படி பயிற்சி செய்து கொண்டிருந்தால்  நாளடைவில் அதுவே நமக்குள் வேரூன்றி  விடும். அப்படி என்றால் , அது நம்மில் ஒன்றாகி விடும். நாம் அதுவாகி விடுவோம்.

வேரூன்றுதல் என்றால்  என்ன ?

செடி சின்னதாக இருக்கும் போது மழை வந்தால் அடித்துக் கொண்டு போய் விடும். ஆடு மாடு தின்று விடும். பெரிய காற்று அடித்தால் வேரோடு விழுந்து விடும். ஆனால், வேர் நன்றாக பாய்ந்து பெரிய மரமாக மாறி விட்டால், காற்று மழை புயல் ஆடு மாடு என்று எது வந்தாலும் கம்பீரமாக நிற்கும்.

அது போல, ஆரம்ப காலத்தில் பல தடைகள், சந்தேகங்கள், இருக்கும். அதுவே வேரூன்றி விட்டால், அவை போய் விடும்.

பிறந்ததில் இருந்து விடாமல் மூச்சு விடுகிறோம். அது பெரிய காரியமாக தெரிகிறதா ? மூச்சு விட முடியவில்லை என்றால்தான் கஷ்டமாக இருக்கிறது.

எந்த பயிற்சியும் விடாமல், தொடர்ந்து, உறுதியுடன் செய்து வந்தால் அது நாளடைவில் பழக்கமாகி நம் வாழ்வோடு ஒன்றாகி விடும். அது செய்வது என்பது ஏதோ ஒரு வேலை போல இருக்காது. இயல்பாக நடக்கும்.

உதாரணமாக, காலையில் பல் துலக்குவது. அது ஒரு வேலையாகவே தெரிவது இல்லை. தூங்குவது போல, மூச்சு விடுவது போல, அது நம்மில் ஒன்றாகிவிட்ட பழக்கம்.

அது போல , அப்யாஸமும் நம்முள் வேரூன்றி நிலைத்து நிற்கும் வரை அதை செய்ய வேண்டும். அதற்கு பின், அது தானாகவே நிகழும்.

கார் ஓட்ட பழகும் போது முதலில் ரொம்ப கடினமாக இருக்கும்.

Steering , accelerator , brake , clutch , gear , signal , horn , indicator , traffic signal , speed braker , ongoing , upcoming traffic  என்று ஆயிரம் விஷயங்களை கவனிக்க வேண்டும். அலுத்துப் போவோம்.

ஆனால், பழகிய பின், இது ஒன்றுமே தெரியாது. ஓட்டிக் கொண்டே பேசலாம், music player இல் பாட்டை மாத்தலாம், என்னவெல்லாமோ செய்யலாம். மிக எளிதாக இருக்கும்.

அது போல மேற்கண்ட முறையில் அப்பியாசம் செய்தால், சித்த விருத்தி என்பது  மிக எளிதாக நிகழும்.

அதற்கு எவ்வளவு நாள் ஆகும் ? அது நீங்கள் செய்யும் பயிற்சியைப் பொறுத்தது.

முழு மனதுடன் (sincere ) முனைப்புடன் செய்தால் சீக்கிரமே நிகழாலாம்.

நிகழ வாழ்த்துக்கள்.

http://yogasutrasimplified.blogspot.in/2017/07/114.html

No comments:

Post a Comment