Tuesday, July 11, 2017

யோக சூத்திரம் - 1.12 - அப்பியாசம், வைராக்கியம்

யோக சூத்திரம் - 1.12 - அப்பியாசம், வைராக்கியம் 


अभ्यासवैराग्याअभ्यां तन्निरोधः ॥१२॥

abhyāsa-vairāgya-ābhyāṁ tan-nirodhaḥ ॥12॥

abhyāsa = அப்பியாசம் - பயிற்சி

vairāgya = வைராக்கியம் - பற்றற்று

ābhyāṁ  = இரண்டும்

tan = இந்த

nirodhaḥ  = நிரோதம்

அப்யாஸமும் வைராக்கியமும் நிரோதத்திற்கு இரண்டு கூறுகள் 

சித்தத்தில் ஏற்படும் சலனங்களினால் நாம் இந்த உலகை சரியாக புரிந்து கொள்ள முடியாமல் செய்கின்றன என்று பார்த்தோம். சரியாக அறிந்து கொள்ள வேண்டும் என்றால் சித்தத்தில் ஏற்படும் சலனங்களை நிறுத்தி மனம் அமைதி அடையவேண்டும் என்றும் பார்த்தோம்.

எப்படி அலையும் மனதை நம் வழிக்கு கொண்டு வருவது ?

மனதை , அதன் சலனங்களில் இருந்து சமனப் படுத்த இரண்டு தேவை. அவை

1. அப்பியாசம்
2. பற்றற்று இருப்பது

அப்பியாசம் என்றால் பயிற்சி. தொடர்ந்து, விடாமல் பயிற்சி செய்வது.

வைராக்கியம் என்றால் இருமை (நல்லது கெட்டது , வேண்டியது வேண்டாதது, பெருமை சிறுமை) அற்று நடு நிலையில் இருந்து செயல்படுவது.

நாம் நிறைய படிக்கிறோம். படித்தவர்கள் சொல்வதை கேட்கிறோம். நல்லது கெட்டது எது என்று தெரிகிறது. இருந்தும் நல்லதை செய்யாமல் கெட்டதை செய்கிறோம். ஏன் ?

அதிகமாக உண்பது, புகை, மது , உடற்பயிற்சி செய்யாமல் இருப்பது இவை எல்லாம் கெட்டது என்று அதை செய்பவர்களுக்கு தெரியும். இருந்தும் செய்கிறார்கள். ஏன் ?

பொறாமை, கோபம், அதீத காமம், எல்லாம் கெடுதல் என்று தெரிகிறது. இருந்தும், அவற்றை விட முடியாமல் தவிக்கிறார்கள்.

ஏன் ?


நாம் எந்த காரியத்தை செய்தாலும், அந்த காரியம் நமக்குள் சில பதிவுகளை  ஏற்படுத்துகிறது. அதை சமஸ்கிருதத்தில் "சம்ஸ்காரம்" என்கிறார்கள்.

அது என்ன பதிவு ?

செய்த காரியம் பிடிக்கும், பிடிக்காது, சுகமாக இருக்கிறது, கடினமாக இருக்கிறது, மீண்டும் செய்யத் தூண்டுகிறது,வேண்டவே வேண்டாம் என்று தோன்றுகிறது.

அந்த பதிவின் தன்மையைப் பொறுத்து நாம் அந்த காரியங்களை மீண்டும் மீண்டும் செய்கிறோம். அல்லது , செய்யாமல் விடுகிறோம்.

பொதுவாகவே , கெட்ட காரியங்களுக்கு பயிற்சி தேவை இல்லை. ஒன்றிரண்டு முறை செய்தாலே தானாகவே ஒட்டிக் கொள்கிறது.

தண்ணி அடிக்கவும், புகை பிடிக்கவும், ரொம்ப நேரம் தூங்கவும் என்ன பயிற்சி தேவை.  பயிற்சி இல்லமாலேயே செய்யலாம்.

டிவி சீரியல் பார்ப்பது, whatsapp இல் வெட்டி அரட்டை அடிப்பது, நொறுக்கு தீனி தின்பது இதற்கு எல்லாம் ஒரு பயிற்சியும் தேவை இல்லை.

ஆனால், அதி காலை எழுந்து படிக்கப் போவது, உடற் பயிற்சி செய்வது,  உணவு கட்டுப் பாடு போன்ற நல்ல செயல்களுக்கு பயிற்சி செய்வது.

பயிற்சி என்றால் விடாமல் , திரும்ப திரும்ப செய்வது. பயிற்சி ஒரு பழக்கமாக மாற வேண்டும். பழக்கம் , பின்னால்  வழக்கமாக மாற வேண்டும். பின் அதுவே நமது இயற்கையாக மாறி விடும். நமது இயல்பாக மாறி விடும்.

எனவே பயிற்சி என்பது சித்த சலனத்தை நிறுத்தவே. பதஞ்சலி நல்லது , கெட்டது என்றெல்லாம் சொல்லவில்லை.

சித்தம் சலனப்படுகிறது. அந்த சலனத்தை நிறுத்த பயிற்சி செய்ய வேண்டும். அவ்வளவுதான் அவர் சொல்கிறார்.

எதை பயிற்சி செய்ய வேண்டும், எப்படி செய்ய வேண்டும் என்று பின்னால் வருகிறது. பொறுமை.

வைராக்கியம் - பற்றற்று இருப்பது.  ஏன் பற்றற்று இருக்க வேண்டும் ?

நாம் முன்பே பார்த்தது போல, பற்று என்று வந்து விட்டால் அது நம் சித்தத்தில் ஒரு பதிவை ஏற்படுத்துகிறது (சம்ஸ்காரம்). ஒவ்வொரு பதிவும் ஒரு அலையை உண்டாக்குகிறது.

விரும்பி எறிந்தாலும் , விரும்பாமல் எறிந்தாலும் எறிந்த கல் குளத்தில் அலைகளை தோற்றுவிக்கத்தான் செய்யும்.

நாம் செய்யும் பயிற்சியின் மேல் பற்று வந்து விட்டால், நான் செய்வதுதான் சரி என்று தோன்றும், மற்றவர்கள் செய்வது தவறு என்று தோன்றும். அவர்களோடு வாதம் செய்யத் தோன்றும். வாதம் சண்டையாக மாறும்.

பயிற்சி செய்யும் போது துன்பம் வரும். கஷ்டமாக இருக்கும். எதையும் பொருட்படுத்தக் கூடாது. இது கஷ்டம், இது நடை முறைக்கு சரி வராது, இது வாழ்க்கைக்கு ஏற்றது அல்ல என்று தள்ளி வைக்காமல் சித்த சலனத்தை நிறுத்தும் அவற்றை (அவை பின்னல் வருகிறது) பயிற்சி செய்ய வேண்டும்.

அப்பியாசம் = விடா முயற்சி, தொடர் முயற்சி

வைராக்கியம் = பற்றற்று இருப்பது. ஆங்கிலத்தில் let go என்று சொல்லுவார்களே  அது போல.

மேலும் சிந்திப்போம்

http://yogasutrasimplified.blogspot.in/2017/07/112.html

18

No comments:

Post a Comment