Monday, July 10, 2017

யோக சூத்திரம் - 1.11 - ஞாபகம் என்பது ...

யோக சூத்திரம் - 1.11 - ஞாபகம் என்பது ...



अनुभूतविषयासंप्रमोषः स्मृतिः ॥११॥

anu-bhūta-viṣaya-asaṁpramoṣaḥ smr̥tiḥ ॥11॥

anu = அதிலிருந்து

bhūta = அனுபவம் எழுகிறது

viṣaya = விஷயங்கள்

a = இல்லை

saṁ = முழுவதும்

அசம் என்றால் அ  + சம்  = முழுமை இல்லாத

pramoṣaḥ = சேர்த்துக் கொள்ளாத, மேலும் கூட்டாத

smr̥tiḥ  = ஞாபகம் என்பது

அனுபுத்த விசய அஸம்ப்ரமோஷ ஸ்ம்ரித்

ஞாபகம் என்பது பழைய அனுபவங்களை மற்ற விஷயங்களின் கலப்பில்லாமல் நினைப்பது. 

எண்ணச் சிதறல்கள் எவ்வாறு எழுகின்றன என்று சிந்தித்துக் கொண்டிருக்கிறோம்.

பிரமாணம்
விபரீதம்
விகல்பம்
நித்திரை

என்பனவற்றை இது வரை சிந்தித்தோம்.

அடுத்தது ஞாபகம்.

ஞாபகம் என்பது முன்பு நடந்த ஒன்றை மனதில் நினைத்துப் பார்ப்பது, வேறு ஒன்றின்  கலப்பில்லாமல்.

சரி, அது எப்படி சித்தம் சிதற வழி வகைக்கும் ? அது எப்படி உண்மையை மறைக்கும் ?

நாம் நம் அனுபவங்களில் இருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும் என்று சொல்கிறோம்.

அது சரி அல்ல.

காரணம் என்ன என்றால், உலகம் மாறிக் கொண்டே இருக்கிறது. நாம் நம் பழைய ஞாபகங்களை  பிடித்துக் கொண்டிருக்கிறோம்.

ரொம்பவும் ஆழமாக போவதற்கு முன்னால் , நமது அன்றாட வாழ்வில் எப்படி  இந்த ஞாபகம் நம்மை சிக்கலில் மாட்டி விடுகிறது என்று பார்ப்போம்.

"அவனை நம்பினேன். இப்படி துரோகம் செய்து விட்டானே "

"அவனா அப்படி செய்தான் ?"

"அவளை உயிருக்கு உயிராய் காதலித்தேன்...இப்படி கடைசியில் என்னை ஏமாற்றி  விட்டு விட்டுப் போய் விட்டாளே "

"அவனை எப்படி எல்லாம் வளர்த்தேன், கல்யாணத்திற்கு பின் எப்படி மாறி விட்டான் "

என்று நமது நடைமுறை வாழ்க்கையில் நாம் எவ்வளவோ  கேட்கிறோம்.

இவற்றிற்கு காரணம் என்ன ?

முன்பு நல்லவனாக இருந்தான். அந்த ஞாபகம் மட்டுமே உண்மை என்று எண்ணிக் கொண்டிருப்பதால் , அவன் வேறு விதமாக மாறினால் துரோகம் செய்து விட்டான் என்கிறோம்.

நல்லவன் கெட்டவனாக மாறுவதற்கும், கெட்டவன் நல்லவனாக மாறுவதற்கும்  இந்த ஞாபகம் தான் காரணம்.

ஒருவனை நல்லவன் என்றோ, கெட்டவன் என்றோ நாம் நம் மனதில் குறித்துக் கொள்கிறோம். அந்த ஞாபகத்தில் இருந்து நாம் அவனோடு உறவாடுகிறோம்.

அது உண்மையை மறைக்கிறது.  அவன் மாறி இருக்கலாம் அல்லவா ?

"முன்னே எல்லாம் என் கணவன் என் மேல் அவ்வளவு அன்பா இருப்பார்...இப்ப எல்லாம் கண்டுகிறதே இல்ல "

"காதலிக்கும் போது எப்படி இருந்தாள் ...கல்யாணத்துக்கு பின் இப்படி மாறிவிட்டாளே "

எல்லாமே நாம் ஞாபகத்தில் இருந்து உண்மையை பார்ப்பதால் வரும் வினை.

ஞாபகம் என்ற கலர் கண்ணாடியை போட்டுக் கொண்டு பார்க்கிறோம்.

சரி, அதற்காக யாரையும் , எதையும் நம்பக் கூடாதா ? அப்படி யாரையும் எதையும்  நம்பாமல், எதிர்  பார்க்காமல், ஒருவரைப் பற்றி ஒரு ஞாபகமும் இல்லமால்  இருக்க முடியுமா ?

இந்த சூத்திரத்தை கூர்ந்து நோக்கினால் நமக்கு .ஒன்று விளங்கும்.

"ஞாபகம் என்பது பழைய அனுபவங்களை மற்ற விஷயங்களின் கலப்பில்லாமல் நினைப்பது. "

ஞாபகம் என்பது வேறு ஒன்றையும் கலக்காமல் நினைப்பது. அதாவது, தற்போதைய நிலை,  சூழ்நிலை என்ன என்று நினைக்காமல், பழசை மட்டும்  நினைத்துக் கொள்வது.

பழசை கொண்டு வர வேண்டும் அதே சமயம் நிஜ உலகம் எப்படி இருக்கிறது என்று  அதோடு சேர்த்துக் கொண்டு பார்க்க வேண்டும். பழைய ஞாபகங்கள் மட்டும் இருந்தால் அந்த உண்மையை மறைக்கும்.


நம்முடைய நம்பிக்கைகள் என்பது பழைய ஞாபகம்  அன்றி வேறு இல்லத்தில்.

வீட்டில்,, நாம் சிறு பிள்ளையாக போது இது இது இன்ன இன்ன மாதிரி என்று சொன்னார்கள்.

அது நம் மனதில் ஆழ பதிந்து விடுகிறது.

அந்த ஞாபகம் மீண்டும் மீண்டும் வந்து கொண்டே இருக்கிறது. நாம் அந்த ஞாபகத்தின் படி நடக்கிறோம்.

நாளடைவில் அந்த ஞாபகங்கள்தான் உண்மை என்று நினைக்கத் தொடங்கி விடுகிறோம்.

உங்கள் ஞாபகங்கள்தான் நீங்கள் யார் என்று தீர்மானிக்கிறது.

ஒரு நிமிடம் யோசித்துப் பாருங்கள் உங்கள் ஞாபகம் எல்லாம் ஏதோ ஒரு காரணத்தால்  அழிந்து விட்டது என்று. (தலையில் அடி பட்டால் பழசெல்லாம் மறந்து போகும் என்கிறார்கள்).

அனைத்து ஞாபகங்களும் அழிந்து விட்டால் , நீங்கள் யார் ? உங்கள் மதம் என்ன ? உங்கள் கல்வித் தகுதி என்ன ? உங்கள் உறவுகள் என்ன ?

எதுவுமே இல்லை.

அப்பா, அம்மா, கணவன், மனைவி, பிள்ளைகள், நட்பு, சுற்றம், வீடு, வாசல், எதுவும்  இல்லை.

கடவுள் இல்லை, மதம் இல்லை, மொழி இல்லை, நாடு இல்லை.

ஞாபகம்தான் எல்லாம் என்று புரிகிறதா ?

யதார்த்த உலகை, நிஜ உலகை வேறு ஞாபகக் கண்ணாடி மூலம் பார்த்துக் கொண்டிருந்தால் எவ்வளவு சிக்கல் என்று தெரிகிறதா ?

ஞாபகங்கள் எண்ணச் சிதறல்களை உண்டாக்குகின்றன.

ஒருவன் நல்லவன் என்று நம் ஞாபகம் சொன்னால், அவனை அடுத்த முறை பார்க்கும் போது  நம்மை அறியாமலேயே புன்னகை  வருகிறது,வ அவனை வரவேற்கிறோம்.

ஒருவன் கெட்டவன் என்று நம் ஞாபகம் சொன்னால், அவனைக் கண்டவுடனேயே வெறுப்பு வருகிறது.

மகிழ்ச்சி வெறுப்பு, கோபம் எல்லாம் எண்ண அலைகள்தான். அவனின் தற்போதைய நிலையை அறிய விடாமல் தடுக்கும்.

"அவ அப்படி சொல்லி இருக்கக் கூடாது "

" அவர் அப்படி செய்திருக்கக் கூடாது "

என்று நம்மை இறந்த காலத்தில் வைத்து அழுத்திக் கொண்டிருப்பவை ஞாபகங்கள்.

நம்மை நிகழ் காலத்தில் வாழ விடாமல் தடுப்பவை ஞாபகங்கள்.

இந்த விபரீதம், விகற்பம், நித்திரை , ஞாபகம் எல்லாம் வரத்தான் செய்யும்.

இவை நம் வாழ்வோடு ஒன்றியவை.

இவற்றை விட முடியாது.

அப்படியானால், இவற்றை கட்டுக்குள் கொண்டு வந்து, சித்த அலைகளை நிதானப்படுத்தி  , உண்மையின் தரிசனத்தை எப்படி பெறுவது ?

யோகா அந்த வழியை சொல்லித் தருகிறது.

http://yogasutrasimplified.blogspot.in/2017/07/111.html



No comments:

Post a Comment