Saturday, July 1, 2017

யோக சூத்திரம் - 1.3 - தன்னைத் தான் காணும் -பாகம் 2

யோக சூத்திரம் - 1.3 - தன்னைத் தான் காணும் -பாகம் 2



तदा द्रष्टुः स्वरूपेऽवस्थानम् ॥३॥

tadā draṣṭuḥ svarūpe-'vasthānam ॥3॥

tadā = அப்போது

draṣṭuḥ = பார்ப்பவன் , சாட்சி

svarūpe = தன் நிலையை, தன்மையை

avasthānam  = நிலை பெற்ற பின்



அப்போது, சலனமற்ற நிலையில் தன்னைத் தான் அறிதல் நிகழ்கிறது.

அது ஏன் , சலனமற்ற நிலையில் தன்னைத் தான் அறிவது நிகழ்கிறது. 

நாம் ஒரு கண்ணாடி அணிந்து இருக்கிறோம் என்று வைத்துக் கொள்வோம். அதன் மூலம் உலகை தெளிவாக காண முடியும். ஒரு வேளை அந்த கண்ணாடியில் ஒரு சின்ன கீறல் இருந்தால், நாம் பார்க்கும் உலகும் சற்றே வளைந்து நெளிந்துதானே தெரியும். நாம் சரியாக பார்க்க வேண்டும் என்றால், நாம் அணிந்திருக்கும் கண்ணாடி சரியாக இருக்க வேண்டும். 

அது போல, 

நாம் உலகை சரியாக புரிந்து கொள்ள வேண்டும் என்றால், நம் சித்தம் தெளிவாக இருக்க வேண்டும். நம் சித்தம் சலனம் அடைந்து இருந்தால், உலகும் சலனப்பட்டுத் தான் தெரியும்.  

உலகே மோசம், உலகில் உள்ளவர்கள் எல்லாம் மோசம், எல்லோரும் எனக்கு எதிராக செயல் படுகிறார்கள்   என்று நினைத்தால், அதற்கு காரணம் சித்த சலனம். 

ஒருவர் நம்மை திட்டுகிறார் என்று வைத்துக் கொள்வோம். உடனே, நமது சித்தத்தில் சலனம் ஏற்படுகிறது. "இவன் யார் நாம் திட்ட. இவர் பெரிய நல்லவனா ? இவனைப் பற்றி எனக்குத் தெரியாதா ?" என்று சித்தம் அலை அலையாக சலனப் படுகிறது. 

பாராட்டினாலும் அப்படியே. 

பிள்ளைகள், சாப்பிடும்போது, பேசும் போது செல் போனை நோண்டிக்கொண்டிருந்தால், நமக்குள் ஒரு கோபம், எரிச்சல் வருகிறது. 

இப்போது அவர்களை கோபம் என்ற சிவப்பு கண்ணாடியின் மூலம் பார்க்கிறோம். 

அவர்கள் நம்மை கோப பட வைக்க வேண்டும் என்று செய்யவில்லை. நமக்கு கோபம் வருகிறது. 

இப்படி, நம் சித்தம் சலனம் அடையும் போதெல்லாம், நாம் உலகின் மேல் கோபம் கொள்கிறோம், எரிச்சல் அடைகிறோம் ....

சித்த சலனத்தை நிறுத்த வேண்டும். 

சித்த விருத்தி நிரோத 

நாம் , நம் சித்தம் சலனம் அற்று போகும் வரை காத்திருக்கலாம் அல்லது அப்படி அந்த நிலை அடைந்தவர்கள் சொல்வதை கேட்டு புரிந்து கொள்ளலாம்.  

யோகிகள், சித்தர்கள், நீத்தார் என்பவரெல்லாம் அந்த நிலையை அடைந்தவர்கள்.

சித்தம் நிலை பெற்று, அதன் மூலம் தெளிவான காட்சியை கண்டவர்கள். 

எனவே அவர்கள் சொல்வதை கேட்க வேண்டும். அவர்கள் உண்மையை அறிந்தவர்கள். 

நீத்தார் பெருமை என்று ஒரு அதிகாரமே எழுதி இருக்கிறார் வள்ளுவர். 


சித்தம் சலனம் அடையும் போது எல்லாம், கூர்ந்து கவனியுங்கள். நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்று. நாளடைவில் சலனம் கொஞ்சம் கொஞ்சமாய் குறையும். 

சலனப்பட்ட சித்தத்தால் என்ன நிகழ்கிறது ?

மேலும் சிந்திப்போம். 



No comments:

Post a Comment