Wednesday, July 12, 2017

யோக சூத்திரம் - 1.13 - அப்பியாசம் என்பது

யோக சூத்திரம் - 1.13 - அப்பியாசம் என்பது 



तत्र स्थितौ यत्नोऽभ्यासः ॥१३॥

tatra sthitau yatno-'bhyāsaḥ ॥13॥

தத்ர ஷிதோவ் யத்னோ அபியாஷ்

tatra = தத்ர = அதில்

sthitau  = உறுதியான, நிலையான

yatno = யத்னம் = முயற்சி

'bhyāsaḥ = அப்பியாசம்


இந்த இரண்டில் (அப்பியாசம், வைராக்கியம் என்ற இரண்டில்) அப்பியாசம் என்பது உறுதியாக முயற்சி செய்வது

மனதில் வரும் சலனங்களை நிறுத்த இரண்டு விஷயங்கள் தேவை என்று பார்த்தோம்.

ஒன்று அப்பியாசம் , இன்னொன்று வைராக்கியம்.

இதன் விரிவை பார்ப்பதற்கு முன்னால் , பதஞ்சலி எப்படி எழுதிக் கொண்டு போகிறார்கள் பாருங்கள்.

ஒரு கணித சூத்திரத்தை வரவழைப்பது போல, படி படியாக விளக்கிக் கொண்டு போகிறார்.

உண்மையை எப்படி காண்பது . அதற்கு தடையாக இருக்கும் சித்த சலனங்கள். அவை என்னென்ன ? அதில் ஒவ்வொவொன்றுக்கும் விளக்கம். மனதை எப்படி கட்டுப் படுத்துவது.

அதில் அப்பியாசம் என்றால் என்ன என்று இங்கு சொல்கிறார்.

அதில் அப்பியாசம் என்பது உறுதியான முயற்சி.

சமஸ்க்ரித வார்த்தைகளுக்கு பல அர்த்தங்கள் உண்டு. சில சமயம் சரியான அர்த்தத்தை தேடி கண்டு பிடிக்க வேண்டும்.

சில சமயம் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட அர்த்தங்களை சேர்த்து புரிந்து கொள்ள வேண்டும்.

ஷித்தோ என்றால் உறுதியான, நிலையான, நடுக்கம் இல்லாத, அமைதியான, ஒருமுகப்பட்ட  என்ற அர்த்தங்கள் உண்டு. நாம் எல்லாவற்றையும் சேர்த்து பார்க்க வேண்டும்.

சரி, இந்த அபியாசம் எதை அடைய ?

வாழ்வில் நிறைய பேர் மிக மிக மும்மரமாக , ஒரே சிந்தனையுடன் கடினமாக உழைப்பார்கள். அவர்கள் தங்கள் தேவைகளை அடைவார்கள். அடைந்த பின் மகிழ்ச்சியாக இருக்கிறார்களா என்று கேட்டால் இல்லை என்பதே பதிலாக இருக்கும்.

ஏன் ? என்னவாயிற்று ? வேண்டியது கிடைத்து விட்டதே ? பின் என்ன மகிழ்ச்சிக்கு குறை ?

என்ன தேடுகிறோம் என்றே தெரியாமல் தேடுகிறார்கள். எது தேவை என்று தெரியாமலேயே கடுமையாக உழைக்கிறார்கள்.

ஒரு நிமிடம் கண் மூடி யோசித்துப் பாருங்கள்.

உங்கள் மனம் இரண்டு விதமாக செயல் படுவதை அறிவீர்கள்.

ஒன்று, மனம் சிலவற்றின் பின்னால் போகும். அவை வேண்டும்  என்று விரும்பும். பணம், புகழ், அதிகாரம், பதவி, சுகம் என்பவை.

இன்னொன்று, இவை இவை வேண்டாம் என்று வெறுத்து ஓடும். வறுமை, தனிமை, நோய் , பயம் ...இவை வேண்டாம் என்று ஓடும்.

இதில் சிக்கல் என்னவென்றால், முதல் பட்டியலில் உள்ள ஒன்றை எடுத்தால், இரண்டாவது பட்டியலில் உள்ள ஒன்றும் கூடவே வரும்.  தவிர்க்க முடியாது.

மனம் இங்கும் , அங்கும் அலைந்து கொண்டே இருக்கும். இது வேண்டும், ஆனால் அது வேண்டாம் என்று வாதம் பண்ணிக் கொண்டே இருக்கும்.

உறுதியான,  அலைபாயாத, நடுக்கம் இல்லாத பயிற்சி எதுவாக இருக்கும் ?

எது ஒன்றை அடைய நினைத்தால் நமக்கு நடக்கும் வராதோ, மனம் அலை பாயாதோ, அதை அடைய முயற்சி செய்வதே அப்பியாசம்.

குழப்பமாக இருக்கிறதா ?

சரி, சில உதாரணங்கள் பாப்போம்.

எனக்கு ஒரு நாளைக்கு 20 சிகரெட் பிடிக்க வேண்டும். நான் தொடர்ந்து முயற்சி செய்கிறேன். உறுதியாக, தெளிவாக, நடுக்கம் இல்லாமல்.  முடியுமா ?

கொஞ்ச நாளில் உடல் நிலை சீர்கெடும். மருத்துவர் சொல்லுவார், புகை பிடிப்பதை உடனே நிறுத்த வேண்டும் என்று.

இப்படியே  தண்ணி அடிப்பது, திருடுவது, போன்ற செயல்களை நினைத்துப் பாருங்கள்.

இவற்றை தொடர்ந்து, விடாமல், நடுக்கமும், குழப்பமும் இல்லாமல் செய்ய முடியாது.

இயற்கைக்கு எதிரான எது ஒன்றையும் நம்மால் தொடர்ந்து செய்ய முடியாது.

தொடர்ந்து செய்வது என்றால், இயற்கையோடு ஒன்றியதைத்தான் செய்ய முடியும். இயல்பான ஒன்றைத்தான் செய்ய முடியும்.

அப்படி செய்யும் போது , மன சலனங்கள் குறையும், நிற்கும்.

மனதில் சஞ்சலங்களை ஏற்படுத்தும் விஷயங்களை தவிருங்கள்.  மந்தையில் ஏற்படும்  அலைகளை , சிதறல்களை குறைக்க அது ஒரு முதல் படி. அடுத்தது, எது சுகமாக இருக்கிறதோ, எதை தொடர்ந்து உறுதியாக செய்ய முடியுமோ அதை செய்யுங்கள்.

அது அப்பியாசம். தமிழிலே ஒழுக்கம் என்று சொல்லுவார்கள்.


உடனே, நான் அப்பியாசம் செய்யப் போகிறேன் என்று ஆரம்பித்து விடாதீர்கள். கொஞ்சம் பொறுங்கள்.

அப்பியாசம் என்பது ஒரு பாதிதான். வைராக்கியம் என்பது மறு பாதி. அதையும் பார்த்து விடுவோம்.

அப்பியாசம் செய்வதால் என்ன ஆகும் ?

மேலும் சிந்திப்போம்.

http://yogasutrasimplified.blogspot.in/2017/07/113.html

No comments:

Post a Comment