Saturday, July 8, 2017

யோக சூத்திரம் - 1.8 - தவறான எண்ணங்கள் எப்படி வருகிறது ? - பாகம் 2

யோக சூத்திரம் - 1.8 - தவறான எண்ணங்கள் எப்படி வருகிறது ? - பாகம் 2



विपर्ययो मिथ्याज्ञानमतद्रूप प्रतिष्ठम् ॥८॥

viparyayo mithyā-jñānam-atadrūpa pratiṣṭham ॥8॥

விபரியாயோ மித்ய ஞானம் அதத் ரூப ப்ரதிஸ்தம் 

விபரியாயோ = தவறான அறிவு, குழப்பம், உண்மை இல்லாத அறிவு

மித்ய = உண்மை இல்லாதது, பொய்யானது, தவறானது, மாயை

ஞானம் = அறிவு, அறிவது

அதத் = அது அல்லாத

ரூப = வடிவம் , தோற்றம்

ப்ரதிஸ்தம் = அடிப்படையாக கொண்டது, அதன் மூலம், உறுதியாக நிற்பது


தவறான அறிவு எப்படி வருகிறது என்றால், ஒன்றை அதன் தோற்றத்தை , வடிவை வைத்து எடை போடுவதால்.

நேற்றைய பிளாகில் பொருள்கள் மற்றும் உயிர்களை அவற்றின் தோற்றத்தைப் பார்த்து முடிவு செய்வதால் தவறான எண்ணங்கள் வருகின்றன என்று பார்த்தோம்.

இதன் இன்னொரு பாகம், நமது மனம் அல்லது மூளை அல்லது சித்தம் என்று சொல்லப் பாடுவதில் உள்ள எண்ணப் பதிவுகளால் நாம் தவறான சிந்தனைகளுக்கு ஆட்படுகிறோம்.

எப்படி ?

நாம் ஏதோ ஒரு மதத்தில் பிறக்கிறோம், ஒரு நாட்டில், ஒரு மொழி பேசும் பெற்றோருக்கு  பிறக்கிறோம்.

நம் மதம் உயர்ந்தது என்ற எண்ணம் நமக்கு மிகச் சிறிய வயதில் இருந்தே பதிந்து விடுகிறது. அதனால், மற்ற மதங்களின் உயர்வு தெரிவதில்லை. நான் பிடித்த  முயலுக்கு மூன்றே கால் என்று சாதிக்கிறோம்.

சைவ உணவு சிறந்தது. அசைவ உனவு நல்லதில்லை.

என் கடவுள் உயர்ந்தது.

நான் படித்த , என் முன்னோர்கள் எழுதிய புத்தகங்கள் சொல்வது தான் உண்மை. மற்றவை எல்லாம் பொய்.

பெண்கள் குழப்பமானவர்கள், மயக்குபவர்கள்.

என் நாடு உயர்ந்தது.

ஒரு விலங்கு மற்றவற்றை விட உயர்ந்தது. ஒரு விலங்கு தாழ்ந்தது.

இப்படி ஆயிரம் எண்ணப் பதிவுகள் நமக்குள்ளே நம்மை அறியாமலேயே நிகழ்ந்து விடுகின்றன. நாம் இவற்றை அறிவதே இல்லை.  நாம் கொண்ட கருத்துக்கு ஒரு எதிர் கருத்தை நம்மால் கற்பனை பண்ணிக் கூட பார்க்க முடிவதில்லை.

அப்படி கூட ஒருவன் சிந்திக்க முடியுமா வியக்கிறோம்.

 ஆங்கிலத்தில் prejudice என்று சொல்லுவார்கள்.

இப்படி தவறான எண்ணப் பதிவுகளால் நாம் உலகை தவறாக புரிந்து கொள்கிறோம்.

கண் மூடி சில நிமிடம் யோசியுங்கள்.

நீங்கள் எவை எவை எல்லாம் உயர்ந்தது, நல்லது, கெட்டது , தாழ்ந்தது, உண்மையானது,  ,சரியானது, பொய்யானது என்று பட்டியல் போட்டு வைத்து இருக்கிறீர்கள் என்று.

அந்த பட்டியலில் உள்ளவை எல்லாம் அந்த பட்டியலில் எப்படி வந்தன என்று யோசியுங்கள்.

தவறுகள் உங்களுக்குள் இருந்து ஆரம்பிக்கிறது.

எப்படி புறப் பொருளின் தோற்றத்தை வைத்து அதை எடைபோடக் கூடாதோ, அதே போல நம் மனதின் பதிவுகளைக் கொண்டு உலகையே எடை போடக் கூடாது.

மனதை மாற்றுங்கள். உலகம் மாறும்.

http://yogasutrasimplified.blogspot.in/2017/07/18-2.html

No comments:

Post a Comment