Thursday, July 6, 2017

யோக சூத்திரம் - 1.7 - பிரமாணத்தின் மூன்று பகுதிகள்

யோக சூத்திரம் - 1.7 - பிரமாணத்தின் மூன்று பகுதிகள் 


प्रत्यक्षानुमानाअगमाः प्रमाणानि ॥७॥

pratyakṣa-anumāna-āgamāḥ pramāṇāni ॥7॥

பிரத்யக்ஷ அனுமான ஆகம பிரமானனி 

முந்தைய சூத்திரத்தில் எண்ண ஓட்டங்களின் ஐந்து நிலைகளை பற்றி சிந்தித்தோம்.

அதில் சிறந்த ஒன்று பிரமாணம் என்றும் பார்த்தோம்.

பிரமாணம் என்றால் நுண்ணறிவு.

இந்த நுண்ணிய அறிவு எப்படி வருகிறது ? அதை எப்படி அடைவது என்று இங்கு சொல்கிறார்.

பிரமாணம் என்பது மூன்று வகைகளில் உள்ளது. பிரமாணம் பல உண்டு. யோக சாத்திரம் முக்கியமான மூன்றை எடுத்துக் கொள்கிறது. அவை

முதலாவது, ப்ரத்யக்ஷ அல்லது நேரடி அனுபவம். கண்ணால் காண்பது, கேட்பது, போன்று புலன்கள் மூலம் அறியும் அறிவு. அனுபவ அறிவு.

அறிவை எப்படி பெற்றாலும் அதை நாம் நேரடியாக அறிந்து கொள்ள உதவ வேண்டும். நம்மால் அதை சரி பார்க்க முடிய வேண்டும். வெறும் கற்பனை மற்றும் நம்பிக்கை மட்டும் போதாது.

விவேகானந்தர் கூறுவார்

‘கடவுள் இருந்தால் அவனை நாம் காண வேண்டும். ஆத்மா இருந்தால் அதை நாம் உணர வேண்டும். அப்படி இல்லையென்றால் நம்பிக்கை இல்லாமல் இருப்பது நன்று. பாசாங்கு போடுவதைவிட நாத்திகனாக இருப்பதே மேல்’

என்று.

அது இல்லாத எதுவும் சரியான அறிவு கிடையாது.

சொர்கம், நரகம், மறுபிறப்பு, கர்ம வினை இவற்றைப் பற்றியெல்லாம் சிந்தித்துப் பாருங்கள். இவை அனுபவ அறிவுக்கு ஒத்து வருமா அல்லது ஒரு நம்பிக்கை அவ்வளவுதானா ?

இரண்டாவது பிராமணம் அனுமான பிரமாணம். அனுமானம் என்றால் யூகித்து அறிவது.  நெருப்பு சுடும், மாடியில் இருந்து கீழே விழுந்தால் எலும்பு முறியும்  என்று யூகித்தது அறிய முடியும். காட்சிப் பிரமாணம் என்று சொல்லிக் கொண்டு நாமே குதித்துப் பார்க்கக் கூடாது. எங்கோ தூரத்தில் புகை வருகிறது என்றால், அங்கே நெருப்பு இருக்கும் இன்று அனுமானிக்க முடியும்.

மூன்றாவது, ஆகம பிரமாணம். ஆகமங்கள் என்றால் புத்தகங்கள் சொல்வது. எல்லாவற்றையும் நாமே கண்டு பிடித்துக் கொண்டிருக்க முடியாது. அறிந்தவர்கள், தெரிந்தவர்கள் சொல்வதை கொண்டு நாம் அறிந்து கொள்வது.

இங்கு தான் சிக்கல் வருகிறது. இதற்கும் காட்சி பிரமானத்திற்கும் தொடர்பு இல்லை என்றால் என்ன செய்வது ?

ஆகமம் ஒன்று சொல்கிறது. யாகத்தில் பொருள்களை போட்டு எரித்தால் தேவர்கள் வந்து  வேண்டிய வரம் தருவார்கள் என்று ஆகமம் சொல்கிறது. நாம் அப்படி செய்து பார்த்தால் ஒரு தேவரும் வருவதாகத் தெரியவில்லை. அப்படி என்றால் என்ன செய்வது ?

ஆகமங்கள் தொடக்கம். எல்லாவற்றையும் நாமே கண்டு பிடிக்க முடியாது. நமக்கு முன் யாரோ முயன்று கண்டு சொல்லி இருந்தால் அவற்றை ஏற்றுக் கொள்ளலாம். ஆனால், அவை நமது அனுபவங்களோடு முரண் பட்டால்,  ஆகம அறிவை தள்ளி வைக்க வேண்டும்.

விவேகானந்தர் சொல்வது போல, கடவுள் என்று ஒருவர் இருந்தால், அவரை நாம் காண வேண்டும். இல்லை என்றால் கடவுளை நம்பாமல் இருப்பதே மேல் என்று சொல்கிறார்.

ஏன் அப்படி சொல்கிறார் ?

ஆகமங்கள் சொல்கின்றன கடவுள் இருக்கிறார் என்று. ஆனால், நாம் ஒருபோதும் கடவுளை கண்டதில்லை. அந்த சமயத்தில் நமக்கு இரண்டு வழிகள் உள்ளன.

ஒன்று, நமக்கு எதுக்கு வம்பு. எல்லோரும் நம்புகிறார்கள். நாமும் நம்பி விட்டு போவோம். காசா பணமா என்று கூட்டத்தோடு கூட்டமாக போய் விடுவது. அது ஒரு வழி.

இன்னொன்று, அது எப்படி ஆகமங்கள் தவறாக இருக்கும் ? அவை சொல்வதற்கும் என் அனுபவத்திற்கும் ஒரு தொடர்பும் இல்லையே. என்ன செய்யலாம் என்று ஆராய்வது ? கடவுளை தேடுவது. உண்மையை காண முயல்வது.

யோக சூத்திரம் இரண்டாவது வழியை சொல்கிறது.


ஆகம அறிவை அனுபவ அறிவாக மாற்று என்கிறது.

பிரமாணம் என்ற சொல்லுக்கு "சான்று" என்று பொருள்.

எது ஒன்றையும் போதுமான சான்று இல்லாமல் ஏற்றுக் கொள்ளக் கூடாது.

அப்படி ஏற்றுக் கொண்டால் என்ன ஆகும் ?

அறிவு மந்தப் படும். அறிவு கூர்மை மழுங்கும். யார் என்ன சொன்னாலும் கேட்டுக் கொள்வது என்று ஆகிவிட்டால் சரி எது, தவறு என்று பகுத்து அறியும் அறிவு மந்தப்படும். முயற்சி குன்றும்.

உங்கள் அனுபவ அறிவுக்கு உட்படாத எதையும் கேள்வி கேட்டு சரி பாருங்கள்.

உங்கள் அனுபவமும், என் அனுபவமும் முரண்பட்டால் இரண்டு அனுபவத்தையும் கேள்வி கேட்க வேண்டும். எது சரி என்று அறிய வேண்டும்.

ப்ரத்யக்ஷ என்ற சொல்லுக்கு அனுபவ அறிவு என்று கூறுவது கூட அவ்வளவு சரியான மொழி பெயர்ப்பு அல்ல. ப்ரத்யக்ஷ என்றால் தெளிவாக , நேரடியாக, தெரிய வேண்டும். கண் முன்னே இருக்க வேண்டும். அதில் சந்தேகம் இருக்கக் கூடாது. அது தான் ப்ரத்யக்ஷம்.

மற்ற ஐந்து எண்ண ஓட்டங்களைப் பற்றியும் பின்னால் கூறுகிறார்.

அவற்றையும் சிந்திப்போம்.

http://yogasutrasimplified.blogspot.in/2017/07/17.html




No comments:

Post a Comment