Sunday, July 2, 2017

யோக சூத்திரம் - 1.4 - உண்மையும் வடிவும்

யோக சூத்திரம் - 1.4 - உண்மையும் வடிவும் 


वृत्ति सारूप्यमितरत्र ॥४॥

vr̥tti sārūpyam-itaratra ॥4॥

வ்ருத்தி ஸாரூப்யம் இதரத்ரா

வ்ருத்தி = மாற்றம், சலனம், குழப்பம்

ஸாரூப்யம் = தோற்றம், ஒற்றுமை, வடிவ ஒற்றுமை

இதரத்ரா = அது இல்லாத போது


ரொம்பத்தான் சொல் சிக்கனம் !

அது இல்லாத போது , தோற்றம் மற்றும் வடிவங்களை அது தானாக நினைக்கிறது. 

அது ஒரு புறம் இருக்கட்டும். அதுக்கு அப்புறம் வருவோம். 

ஒரு ஊரில் ஒரு குயவன் இருந்தான். அவன் களிமண்ணைக் கொண்டு பல பாண்டங்கள் செய்வான்....குடம், சட்டி, பானை, கரண்டி என்று பல விதமான பாத்திரங்கள் செய்வான்.

ஒரு நாள் அந்த பாத்திரங்களுக்கு பேசும் திறன் வந்து விட்டது. 

அவற்றிடம் போய் நீ யார் என்று கேட்டால், அவை என்ன சொல்லும் ?

"நான் பானை", "நான் சட்டி", "நான் குடம்" என்று ஒவ்வொன்றும் அதனதன் பெயரைச் சொல்லும். 


"இல்லை இல்லை, நீ பானை இல்லை, நீ சட்டி இல்லை, நீ குடம் இல்லை நீங்கள் எல்லோரும்  களிமண் தான் " என்று சொன்னால் , அவற்றிற்கு புரியமா ?

"என்னது களிமண்ணா ? இங்கே பார், நான் எப்படி கீழே பெரிதாகவும், கழுத்து சிறுத்தும், வாய் அகன்றும் இருக்கிறேன். நான் பானை தான். அதே போல் அவன் சட்டி   தான் " என்று அடம் பிடிக்கும். 

வடிவங்கள் வேறாக இருந்தாலும், அடிப்படையில் எல்லாம் களிமண் தான் என்று  அவற்றிற்குப் புரியாது. நமக்குத் தெரியும். 

அதே போல ஒரு பொற் கொல்லன் நகை செய்கிறான். வளையல், கம்மல், மோதிரம் என்று. ஒவ்வொன்றுக்கும் வடிவம், அளவு வேறாக இருக்கிறது. 

ஆனாலும், அவை எல்லாம் தங்கம்தானே ?

ஆனால் அந்த சங்கிலியும், மோதிரமும், வளையலும் தாங்கள் தங்கம் இல்லை, தாங்கள் அந்த சங்கிலி, மோதிரம், வளையல் என்றே சாதிக்கும்.

அது போல, 

நாமும், நம்மை இன்னார் என்று சொல்லிக் கொள்கிறோம். 

இந்தியன், தமிழன், இன்ன ஜாதி, இன்ன மதம், இன்ன மதத்தின் உட்பிரிவு, இந்த  புத்தகத்தை பின்பற்றுபவன், இன்ன தலைவரை பின் பின்பற்றுபவன் என்று ஏதேதோ வழியில் நம்மை அடையாளம்  சொல்கிறோம். 


நாம் அவை எல்லாமா ? நாம் மோதிரமா ? தங்கமா ?

நாம் சட்டி பானையா  அல்லது களிமண்ணா ?


சரி, இந்த சட்டி பானை, மோதிரம் , வளையல் எல்லாம் எப்படி வந்தன ?

தங்கத்தை உருக்கி, ஒரு படிவத்தில் (mould ) ஊற்றினால் அந்த படிவத்தின் வடிவம் வந்து விடுகிறது.  

நாம் எவ்வாறு நம்மை அடையாளம் காண்கிறோம் ?

நமது சித்தத்தில் ஏற்படும் மாற்றங்களால், அனுபவங்களால், சலனங்களால் நாம் நம்மை அடையாளம் காண்கிறோம். 

நம் பெற்றோர், உறவினர், ஆசிரியர், சமுதாயம், நண்பர்கள், நாம் படிக்கும் புத்தகங்கள், எல்லாம் சேர்ந்து நமக்கு அனுபவங்களைத் தருகின்றன. இந்த அனுபவங்கள் சேர சேர நாம் நம்மை ஒரு வடிவில் அமைத்துக் கொள்கிறோம். 

உண்மையான நம்மை நாம் அறியாதவரை , இந்த சித்த சலனங்களால் ஏற்படும் மாற்றங்களை நாம் உண்மை என்று நினைத்து ஏமாறுகிறோம். 


இப்போது யோக சூத்திரத்தை மீண்டும் ஒரு முறை வாசிப்போம். 


வ்ருத்தி ஸாரூப்யம் இதரத்ரா

மற்ற நேரங்களில் (அதாவது சித்தம் தெளிவற்று இருக்கும் நேரங்களில்) , விருத்தி (சலனங்களால், மாற்றங்களால், வேறுபாடுகளினால்) ஸாரூப்யம் தோற்றங்களை, வடிவங்களை ) உண்மை என்று நினைத்துக் கொள்கிறோம்.


சித்தம் தெளிவடையாதவரை , நாம் யார் என்று நம்மை நினைத்துக் கொண்டு இருக்கிறோமோ அது தவறான ஒன்றுதான்.

குடம் தன்னை குடம் என்று நினைத்துக் கொண்டு இருப்பது போல.

நாம் நம்மை பலவாறாக நினைத்துக் கொண்டு இருக்கிறோம். எதுவுமே சரியானது அல்ல.

எது சரியானது என்று பதஞ்சலி சொல்லவில்லை.

என்று உங்கள் சித்தம் அமைதியாக இருக்கிறதோ, அந்த நீங்களே உங்களை கண்டு கொள்வீர்கள்  என்று சொல்கிறார்.

நான் யார் என்பதே எனக்குத் தெரியாது என்று ஆகும் போது வேறு எதை நான்  தெரிந்து கொள்ள முடியும் ?

மனதை இந்த குழப்பங்களில் இருந்து விலக்கி , அமைதி அடையச் செய்தால், நான் யார் என்கிற உண்மையை அறிந்து கொள்ள முடியும்.

சித்தத்தை எப்படி சலனம் இன்றி இருக்கச் செய்வது ?

பதஞ்சலி அதற்கும் வழி சொல்கிறார்.

என்ன என்று சிந்திப்போம்.




No comments:

Post a Comment