Wednesday, July 19, 2017

யோக சூத்திரம் - 1.18 - எண்ணங்களை நிறுத்த

யோக சூத்திரம் - 1.18 - எண்ணங்களை நிறுத்த 


|
विरामप्रत्ययाभ्यासपूर्वः संस्कारशेषोऽन्यः ॥१८॥

virāma-pratyaya-abhyāsa-pūrvaḥ saṁskāra-śeṣo-'nyaḥ ॥18॥

விரமா ப்ரதியாய அப்பியாச பூர்வா ஸம்ஸ்கார செஸோந்ய

மனதில் எண்ண அலைகளே வராமல் தடுப்பதன் மூலம் மனதில் உள்ள பழைய சுவடுகளை அழித்து இன்னொரு வகையான சமாதி நிலையை அடைய முடியும்.

முந்தைய சூத்திரத்தில் எப்படி சம்ப்ரஜானத் என்ற சமாதி நிலையை அடைவது என்று பார்த்தோம்.

அதாவது, விதர்கம், விசாரம், ஆனந்தம், அஸ்மிதா என்ற பல்வேறு நிலைகளின் மூலம் சம்ப்ரஜானத் என்ற சமாதி நிலையை அடையலாம் என்று சிந்தித்தோம்.

அந்த சம்ப்ரஜானத் என்ற சமாதி நிலையில் சித்தம் இறுதியில் ஏதோ ஒன்றை பற்றிக் கொண்டுதான் இருக்கிறது. அது மட்டும் அல்ல, வெளியில் உள்ள அனுபவங்கள் நமது சித்தத்தில் ஏற்படுத்தும் சலனங்களை நாம் நிறுத்தப் பயிலலாம். ஆனால், நமது சித்தத்தில் , ஆதியில் இருந்தே சில படிமானங்கள், சுவடுகள் படிந்து கிடக்கின்றன.  அவை எப்போது வேண்டுமானாலும் சித்தத்தில் அலைகளை கிளப்பி விடலாம். அவற்றை எவ்வாறு நீக்குவது ?

அதற்கும் வழி சொல்கிறார் பதஞ்சலி.

விரமா - நிறுத்துவது. முடிவுக்கு கொண்டுவருவது.
ப்ரத்யாய - சித்தத்தில் உள்ளவற்றை
அப்பியாச = பயிற்சியின் மூலம்
பூர்வாஹ் = பழைய, முன்பிருந்த, ஆதியில் இருந்தே இருக்கும் , பழமையான
ஸம்ஸ்கார = அனுபவ பதிவுகள் , ஆழ்மன பதிவுகள் (sub subconsious )
சேஷ = மீதி இருப்பது, இறுதியில் இருப்பது
அந்ய = மற்ற ஒன்று

அந்ய என்று இங்கே சொல்வது மற்ற ஒரு விதமான சமாதியை.

நமது மனதில் ஓயாமல் ஏதோ ஒரு எண்ணம் ஓடிக் கொண்டே இருக்கிறது. கனவுகள், பயங்கள் , ஆசைகள், குற்ற உணர்வு, பொறாமை, கோபம், காமம், ஆசை , பக்தி, காதல் , என்று ஒன்று மாத்தி ஒன்றாக எண்ணங்கள் ஓடிய வண்ணம் இருக்கின்றன.

இப்படி இடைவிடாமல் எண்ணங்கள் ஓடிக் கொண்டே இருந்தால், மனம் சலனம் அடைந்து கொண்டே இருக்கும். அது மட்டும் அல்ல, எதிலும் ஒரு தெளிவு இருக்காது.

இந்த சலனங்களை நிறுத்த இரண்டு வழி சொல்கிறது யோக சூத்திரம்.

ஒன்று, பலப் பல எண்ணங்களில் இருந்து மனதை ஒருமுகமாக ஒரே ஒரு எண்ணத்தில், சிந்தனையில் நிலை கொள்ளச் செய்வது. பின், அந்த எண்ணத்தின் ஆணி வேரை அறிந்து கொள்வதன் மூலம், அனைத்து எண்ணங்களின் தன்மையை புரிந்து கொள்ள முடியும். கொஞ்சம் கொஞ்சமாக எண்ணச் சிதறல்கள் அடங்கி, தெளிவு பெற்று மனம் ஆனந்தம் அடையும்.

இது ஒரு வழி.

இன்னொரு வழி, எப்போது எந்த எண்ணம் , சிந்தனை வந்தாலும் அதை உடனே நிறுத்துவது. மனதால் சிந்தனைகளே இல்லாமல் செய்வது. எந்த சிந்தனை வந்தாலும், அது நல்லதோ, கெட்டதோ , உயர்ந்ததோ, தாழ்ந்ததோ...பாகுபாடின்றி உடனே அவற்றை நிறுத்துவது.

"விரம" என்றால் நிறுத்துவது.

அப்படி நிறுத்துவதால் என்ன நிகழும் என்று பார்ப்போம்.

"பூர்வ சமஸ்கார " - பழைய எண்ண பதிவுகள்.

நமது மனதில் ஏற்கனவே பல படிமானகள் , சுவடுகள் இருக்கின்றன. அறிந்தோ , அறியாமலோ அவற்றை நாம் நம் மனதில் பதிய வைத்து இருக்கிறோம். இவை பிறப்பிலேயே வந்தாக இருக்கலாம். அல்லது நாம் மிக மிக சிறிய வயதில் இருக்கும் போது நம் மனதில் மற்றவர்களால் ஏற்றப் பட்டதாக இருக்கலாம். பின், நாமே தேடி கொள்வதும் உண்டு - புத்தகங்கள், சினிமா, டிவி, செய்தித் தாள்கள், பத்திரிகைகள், ஆசிரியர்கள், நண்பர்கள், அண்டை அயல், உயர்வு என்று ஆயிரம் வழிகளில் நமக்கு எண்ணப் பதிவுகள் உண்டாகின்றன.

இவை கடவுள், மதம், ஆண் பெண் பற்றிய சிந்தனைகள், நாடு, மொழி, பண்பாடு, கலாச்சாரம், சொர்கம் நரகம் , பாவம் புண்ணியம், என்று பலவேறு துறை சம்பந்தப் பட்டவைகளாக இருக்கும்.

இவை அனைத்தையும் பட்டியல் போட்டு, ஒவ்வொன்றாக அழிப்பது என்பது நடக்காத காரியம்.

இவை அனைத்தையும் மொத்தமாக அழிக்க வேண்டும் என்றால் என்ன செய்வது ?

இந்த பழைய எண்ண சுவடுகள் , புதிதாக வரும் அனுபவங்களால் மேலும் மேலும்  வலுப்பெறுகின்றன. புதிய செய்திகள், அனுபவங்கள் நம்முடைய பழைய பதிவுகளோடு ஒத்துப் போகலாம் அல்லது அதற்கு எதிரான ஒன்றாக இருக்கலாம். இரண்டுமே பழைய எண்ணங்களை வலுப் பெற செய்கின்றன.

எனவே, புதிய சிந்தனைகள் வரும்போது அவற்றை உடனே நிறுத்த வேண்டும். குரங்கு தேங்காயை உருட்டிக் கொண்டு இருப்பதைப் போல, உள்ளே வரும் ஒவ்வொரு சிந்தனையையும் வைத்து உருட்டிக் கொண்டு இருக்கக் கூடாது. "இது சரியா , தவறா ? நல்லதா, கெட்டதா " என்று ஆராய்ச்சி செய்வதன் மூலம் பழைய சிந்தனைகள் வலுப் பெறுகின்றன.

எனவே, மனதில் எந்த சிந்தனை எழுந்தாலும் அவற்றை உடனே நிறுத்த வேண்டும்.

சரி, இப்படி செய்து கொண்டே இருந்தால், நாம் புதிதாக ஒன்றையும் கற்றுக் கொள்ள முடியாதே. முட்டாளாகவே இருந்து விடுவோமே. நல்லதோ , கெட்டதோ, அனைத்தையும் அறிந்து கொள்ள வேண்டாமா ? உலக அறிவு இல்லாமல் எப்படி வாழ்க்கை நடத்துவது ?

நாம் அறிவு என்று நினைத்துக் கொண்டு இருப்பது எல்லாம், தகல்வல்களை சேர்த்து வைப்பது தான்.

அந்த கிரிக்கெட் போட்டியில் அவர் வென்றார், இந்த படத்தில் இவர் நடித்தார், பங்கு சந்தை இத்தனை புள்ளிகள் மேலே போனது, மழை வரும், வராது, இரண்டொரு பாட்டு, என்று தகல்வல்களை சேர்த்துக் கொண்டே இருக்கிறோம். நிறைய தகவல் உள்ளவர் அறிவுள்ளவர் என்று நாம் சொல்லிக் கொள்கிறோம்.

அறிவென்பது தகவல் அல்ல.

எப்பொருள் எத்தன்மைத்தாயினும் அப்பொருள் மெய் பொருள் காண்பது அறிவு.

உண்மையை கண்டு அறிவதே அறிவு.

இப்படி மனதில் எழும் எண்ணங்களை உடனே நிறுத்துவதன் மூலம், மனம் தெளிந்த நிலையை அடையும். உண்மை அதில் பிரதிபலிக்கும்.

விவேகானந்தர் ஒரு உதாரணம் சொல்லுவார் இதற்கு.

திரையில் படம் ஓடிக் கொண்டிருக்கிறது. நொடிக்கு நொடி அதில் காட்சி மாறிக் கொண்டே இருக்கிறது. திரை நினைக்கிறது அந்த காட்சி எல்லாம் உண்மை என்றும் அவை தனக்கு நிகழ்வதாகவும்.  பட பெட்டியை நிறுத்தினால், காட்சிகள் நிற்கும். திரை நிர்மலமாக இருக்கும். அது தான் அதன் உண்மை நிலை. காட்சிப் பதிவுகள் உண்மை அல்ல. தன் மேல் ஓடும் காட்சிகள் உண்மை என்றும், அவற்றை தன்னோடு தொடர்பு படுத்திக் கொண்டு திரை அழுகிறது, சிரிக்கிறது, ஆனந்தம் அடைகிறது, கோபம் கொள்கிறது....

நமது படப் பெட்டி இந்த உலகம். நம்மால் இந்த உலகத்தை நிறுத்த முடியாது. அது அனுபவங்களை தந்து கொண்டே இருக்கும்.

அந்த காட்சிகள் நமக்குள் விழுந்து கொண்டே இருக்கும். விழுந்தவுடன், நமக்குள் ஒரு சிந்தனை பிறக்கும். "அட இது நல்லா இருக்கே, இது நல்லாவே இல்ல,  இவன் நல்லவனா தெரியிறான், இது சுவையாக இருக்கிறது " என்ற எண்ணங்கள் பிறக்கும்.

இந்த எண்ணங்களோடு நாம் ஒன்றி விடுகிறோம். "இது நல்லா இருக்கே" என்ற எண்ணத்தில் இருந்து "எனக்கு இது வேண்டும்" என்று அதனோடு நாம் ஒரு தொடர்பை ஏற்படுத்திக் கொள்கிறோம்.

"ஆஹா இவ அழகா இருக்கிறாள் " என்ற எண்ணத்தில் இருந்து "இவள் எனக்கு வேண்டும், இவள் எனக்கு மட்டும் தான், அவள் வேறு யாரையும் திருமணம் செய்து கொள்ளக் கூடாது " என்று எண்ணங்கள் நம்மை மாற்றுகின்றன.

எனவே, எண்ணங்கள் எழும்போதே அவற்றை நிறுத்தப் பழக (அப்பியாசம்)  வேண்டும்.

ரொம்ப ஆழமான சிந்திக்க வேண்டிய விஷயம்.

சிந்திப்போம்.

http://yogasutrasimplified.blogspot.in/2017/07/118.html

No comments:

Post a Comment