Monday, July 17, 2017

யோக சூத்திரம் - 1.17 - அறிவின் படிகள் - பாகம் 2

யோக சூத்திரம் - 1.17 - அறிவின் படிகள் - பாகம் 2


वितर्कविचाराअनन्दास्मितारुपानुगमात्संप्रज्ञातः ॥१७॥

vitarka-vicāra-ānanda-asmitā-rupa-anugamāt-saṁprajñātaḥ ॥17॥

அறிவு படிப்படியாக விதர்கா, விசாரா, அநந்தா , அஸ்மிதா என்ற நிலைகளில் செல்கிறது.

இந்த தமிழ் உரை , மூல சமஸ்கிரத உரைக்கு வலு சேர்ப்பதாக அமையவில்லை.

இப்போதைக்கு அறிவு  படிப்படியாக முன்னேறுகிறது என்று தெரிந்து கொள்ளுவோம். அவை என்னென்ன படிகள் என்று ஆராய்வோம். முழுவதும் படித்த பின்னால், இந்த சூத்திரத்தின் அர்த்தம் விளங்கலாம்.

அதற்கு முன் சமாதி என்றால் என்ன என்று அறிந்து கொள்வோம்.

சமாதி என்றால் ஏதோ இறந்தபின் , ஒருவரை புதைத்து அதற்கு மேல் கட்டும் ஒன்று என்று  நினைத்துக் கொள்ளக் கூடாது.

எப்படியோ அந்த சொல், இறந்தவரை புதைத்த இடத்திற்கு பெயராகி விட்டது.

அதை கொஞ்சம் தள்ளி வைப்போம்.

சமாதி என்றால் சமம் + ஆதி.  ஆதி என்றால் முதலில் எப்படி இருந்தோமோ அதோடு அல்லது அதற்கு சமாக இருப்பது.

ஆதி என்றால் , முதலில் நாம் தோன்றியபோது எப்படி இருந்தோம் ?

 ஒரு குழந்தைக்கு நல்லது, கெட்டது , உயர்வு, தாழ்வு,  பணக்காரன், ஏழை என்ற பாகுபாடும் கிடையாது.

நாளடைவில் இவற்றை நாம் அறிந்து கொள்கிறோம்.

இவற்றை அறிந்த பின்னும், அந்த குழந்தை மனம் போல் இருப்பது சமாதி.

இருமை அகன்று ஒருமையில் நிலைப்பது சமாதி.


கல்லார்க்கும் கற்றவர்க்கும்  களிப்பருளும் களிப்பே என்பார் வள்ளலார்.

கல்லார்க்கும் கற்றவர்க்கும் களிப்பருளும் களிப்பே
காணார்க்கும் கண்டவர்க்கும் கண்ணளிக்கும் கண்ணே
வல்லார்க்கும் மாட்டார்க்கும் வரம்அளிக்கும் வரமே
மதியார்க்கும் மதிப்பவர்க்கும் மதிகொடுக்கும் மதியே
நல்லார்க்கும் பொல்லார்க்கும் நடுநின்ற நடுவே
நரர்களுக்கும் சுரர்களுக்கும் நலங்கொடுக்கும் நலமே
எல்லார்க்கும் பொதுவில்நடம் இடுகின்ற சிவமே
என்அரசே யான்புகலும் இசையும்அணிந் தருளே.

என்பது திருவருட்பா

‘கேடும் ஆக்கமும் கெட்டதிருவினார்
ஓடும் செம்பொனும் ஒக்கவே  நோக்குவார்.’’

என்பார் தெய்வப் புலவர் சேக்கிழார்.

ஒன்றாக காண்பதுவே காட்சி என்பார் ஒளவையார்

இப்படி இருமை (duality ) மறைந்து , ஒருமை நிலை அடைவதுதான் சமாதி.

அந்த சமாதி இரண்டு வகைப்படும்.

ஒன்று  ஸம்ப்ரஜானதா இன்னொன்று அஸம்ப்ரஜானதா

இதில் ஸம்ப்ரஜானதா என்றால் என்ன என்று இங்கு சிந்திக்க இருக்கிறோம்.

தர்க்கம் என்றால் ஆராய்ச்சி, ஆராய்தல், அலசுதல், சரி எது தவறு எது என்று வாதம் செய்து உண்மையை நிலை நிறுத்துதல்.

நாம்  எதை  ஆராய்ச்சி செய்கிறோமோ , அவை , அவற்றினுள் இருக்கும் இரகசியங்களை நமக்கு வெளிப்படுத்துகின்றன.

உதாரணமாக, நாம் அணுவைப் பற்றி ஆராய்ச்சி செய்கிறோம் என்று வைத்துக் கொண்டால், அந்த அணு எப்படி வேலை செய்கிறது, அதனுள் என்னென்ன இருக்கிறது, அதில் எத்தனை வகைகள் இருக்கின்றன என்றெல்லாம் போக போக புரிந்து கொள்ள முடிகிறது அல்லவா ?

அதே போல நம் உடலை பற்றி ஆராயத் தொடங்கினால் , அதன் உறுப்புகள், அவை எவ்வாறு வேலை செய்கின்றன, அதில் வரும் நோய்கள், அவற்றை எப்படி குணப் படுத்துவது என்றெல்லாம் நம்மால் அறிய முடிகிறது அல்லவா ?

இது வெளி உலகை ஆராயும் போது நாம் அறிந்து கொள்ளும் முறை.

இது விதர்கம்.

மற்றவற்றையும் ஒவ்வொன்றாக அறிவோம்.

------------------------- பாகம் 2 ------------------------------------------------------------------------------------------------------

விதர்கம் என்றால் வெளி உலகை பற்றி ஆராய்வது என்று பார்த்தோம். 

அடுத்தது விசாரம்.

விசாரம் என்றால் என்ன ? 

விதர்கம் என்றால் அறிவை வெளி உலக பொருள்களின் மேல் செலுத்தி அவற்றை ஆராய்வது. விசாரம் என்றால்  அந்த பொருளை அல்லது ஆராய்ச்சிக்கு எடுத்துக் கொண்ட ஒன்றை எப்போதும் மனதில் இருத்திக் கொள்வது. 

விதர்கம் என்றால் அறிவு ஒரு பொருளை பற்றும் பின் விட்டு விடும். விசாரம் என்றால் எப்போதும் அந்த பொருள்  மனதிலேயே இருக்கும். பின் புலத்தில் ஓடிக் கொண்டே இருக்கும். 

"அவ இப்ப என்ன செஞ்சுகிட்டு இருப்பா ? தூங்கியிருப்பாளா ? சாப்டுகிட்டு இருப்பாளா ? டிவி பாத்துக்கிட்டு இருப்பாளா " என்று ஒரு காதலன் எந்நேரமும் காதலியை நினைத்துக் கொண்டே இருப்பதைப் போல. 

பக்தர்கள் இறைவனை எந்நேரமும் நினைத்துக் கொண்டே இருப்பார்கள். 

"இமைப் பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க "

என்பார் மணிவாசகர். 

அது விசாரம். 

ஒரு பொருள் என்பது இருக்க வேண்டும் என்றால் அதற்கு இரண்டு முக்கியமான விஷயங்கள் வேண்டும். 

ஒன்று காலம். இன்னொன்று இடம். 

ஒரு பேனா என்றால், அது எங்கே இருக்கிறது என்று சொல்ல வேண்டும். எப்போது அங்கே இருந்தது என்று சொல்ல வேண்டும். இந்த இரண்டும் இல்லாமல் ஒரு பொருளை பற்றி நாம் கூற முடியாது. 

"மீண்டும் சந்திப்போமா " என்று சொன்னால், எப்போது , எங்கு என்ற கேள்வி எழும். அந்த இரண்டையும் சொல்லாமல்  வெறும் சந்திப்பு என்பது முடியாத காரியம். 

விசாரம் என்பது பொருளை அந்த காலம் மற்றும் இடத்தில் இருந்து நீக்கி மனதுக்குள் கொண்டு வருவது. 

உலகில் எத்தனை ஆயிரம் விஷயங்கள் இருக்கின்றன. பொருள்கள் மட்டும் அல்ல, மனிதர்கள் , உறவுகள்,  அனுபவ தேடல் என்று மனம் ஒன்றில் இருந்து ஒன்றிற்கு எப்போதும் தாவிக் கொண்டே இருக்கிறது. அந்த மாதிரி ஒரு வீடு இருந்தால் ? இந்த மாதிரி ஒரு கார் இருந்தால், இப்படி ஒரு பெண் நமக்கு கிடைத்தால், அடடா, இப்படி ஒரு இடத்துக்கு டூர் போனால் எப்படி இருக்கு, ஆஹா என்ன ஒரு உணவு அதை ருசித்தால் எப்படி இருக்கும் என்று மனம் அலை பாய்ந்து கொண்டே இருக்கிறது. 

இதை எப்படி நிறுத்துவது என்றால், அதில் ஒன்றை பற்றி விசாரம் செய்வது. அதை மனதுக்குள் கொண்டு வந்து விடுவது. நம்மால் பல விஷயங்களை மனதில் நிறுத்த முடியாது. 

எனவே, எந்நேரமும் மனதில் நிறுத்துவது என்றால், ஓடும் மனதை ஏதோ ஒன்றின் மேல் எப்போதும் நிலை நிறுத்துவது. 

அது எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும். ஆனால் ஒன்றே  ஒன்றை மட்டும் பற்றிக் கொள்ள வேண்டும். . 

அப்படி இருக்கும் போது என்ன ஆகும் என்றால், மனம் ஆயிரக்கணக்கான விஷயங்களின் பின்னால் அலையாமல் ஒன்றின் மேலே இலயிக்கும்.

குளத்தில் பல கற்களை எறிந்து கொண்டே இருந்தால், அலை ஓயவே ஓயாது. 

ஒரே ஒரு கல்லை எறிந்தால் , அலை எழும். ஆனால், கொஞ்சம் கொஞ்சமாக அது வலுவிழந்து அலை அடிப்பது நின்று விடும். 

அப்படி, அலை நிற்கும் போது என்ன நிகழ்கிறது. ? அந்த ஒன்றின் ஆழ்ந்த உண்மை (insight ) புலப்படும். 

அடுத்தது "ஆனந்தா".

ஒன்றையே பற்றிக் கொண்ட மனம், நாளடைவில் சலனங்கள் எல்லாம் அடங்கி, அந்த ஒன்றின் உண்மையான ஆழ்ந்த அர்த்தம் (insight ) புலப்படும்போது , ஒரு அமைதி மற்றும் ஆனந்தத்தை அறியும். 

இதன் அடுத்த கட்டம் அஸ்மிதா.

அஸ்மிதா என்றால் எல்லாம் ஒடுங்கி "அனைத்தும் நான்" என்று அறிவது. 

வெளியில் உள்ளவை மட்டும் அல்ல, என் நம் எண்ணங்கள், அனுபவங்கள் எல்லாம் ஒன்று சேர்வது. 

நான் வேறு , நீ வேறு அல்ல. 

அனுபவம் கொள்பவன் வேறு , அனுபவிக்கப்படுவது வேறு அல்ல இரண்டும் ஒன்று என்று அறிவது. 

பார்ப்பவனும், பார்க்கப்படுவதும் ஒன்று. 

இந்த ஒன்றான காட்சியே அஸ்மிதா என்று அழைக்கப் படுகிறது. 

"அஸ்மிதா ரூப " . ரூபம் என்றால் வடிவம், இயற்கை.  

இயற்கை, அதன் அத்தனை வடிவங்களும் , தோற்றங்களும் என்னுள் ஒடுக்கம், அனைத்தும் நான்  என்ற ஞானம் பிறக்கும். 

anugamāt-- இவற்றில் இருந்து , இவற்றை கடைபிடிப்பதன் மூலம் , இந்த் விதர்கம், விசாரம், ஆனந்த , அஸ்மித ரூப என்ற இவற்றை செய்வதன் மூலம் 


saṁprajñātaḥ = உண்மையான அறிவு பிறக்கும். Awareness என்று சொல்லுவார்களே அது.     உண்மையின் தரிசனம் கிடைக்கும். 

விதர்கம் =    ஆராய்ச்சி 
விசாரம் = உள் நுண்ணறிவு (insight )
ஆனந்த =   அறிவினால் வரும் ஆனந்தம் 
அஸ்மித ரூப  = ஒன்றே அனைத்தும் என்ற ஞானம் 
அனுகமத் ஸம்ப்ரஜனதா = இவற்றை கடை பிடிப்பதால் வரும் 

வரட்டும் 

http://yogasutrasimplified.blogspot.in/2017/07/117-2.html

No comments:

Post a Comment