Sunday, July 16, 2017

யோக சூத்திரம் - 1.16 - தன்னை அறிந்தால் ஆசைகளை விடலாம்

யோக சூத்திரம் - 1.16 - தன்னை அறிந்தால் ஆசைகளை விடலாம் 


तत्परं पुरुषख्यातेः गुणवैतृष्ण्यम् ॥१६॥

tatparaṁ puruṣa-khyāteḥ guṇa-vaitr̥ṣṇyam ॥16॥

தத் பரம் புருஷா கியாதே  குண வைட்ர்ஸ்ந்யம்

tat = அந்த

paraṁ = உயர்ந்த

puruṣa = தன்னை

khyāteḥ = அறிந்தால், உணர்ந்தால்

guṇa = குண

vaitr̥ṣṇyam  = தாகம் அடங்கும், பற்றுகளில் இருந்து விடுதலை கிடைக்கும் ॥16॥


தன்னை தான் அறிந்தால் ஆசைகளில் இருந்து விடுபடலாம்

புருஷா என்றால் "நான் என்ற உணர்வு", "உண்மையான நான்". அதை அறிந்தால் பற்றில் இருந்து விடுபடலாம்.

முந்தைய ஸ்லோகத்தில், ஆசை என்பது நம் அனுபவத்தில் இருந்தும், மற்றவர்கள் சொல்லக் கேட்டும் வருவது என்று பார்த்தோம்.

சரி, ஆசை வரும் வழி தெரிகிறது.

அதை எப்படி கட்டுக்குள் கொண்டு வருவது.

பார்ப்பதெல்லாம், கேட்பதெல்லாம் வேண்டும் என்கிறதே மனம். அந்த டிவி, இந்த கார், இந்த வில்லா, அந்த tour , இந்த உடை என்று எல்லாம் வேண்டும் என்கிறதே மனம்.

என்ன செய்யலாம்.

தன்னை அறிந்தால் இந்த ஆசைகள் போகும் என்கிறார்.

என்னடா இது புது குழப்பமாக இருக்கிறதே. நான் யார் என்று எனக்குத் தெரியாதா.  என் பெயர், உயரம், நிறம், அப்பா, அம்மா, படிப்பு, உத்யோகம் , என் கனவுகள், கற்பனைகள், ஆசைகள், எல்லாம் எனக்குத் தெரியுமே.

சும்மா, இந்த தன்னை அறிந்தால் ஆசை போகும் என்பதெல்லாம் கதை.

தன்னை அறிந்தால் எப்படி ஆசை போகும் ?

சிந்திப்போம்.

உலகில் உள்ள அனைத்தும் குணங்களால் நிறைந்தது என்பதை முதலில் அறிந்து கொள்ள வேண்டும். குணங்களின் தொகுப்பு தான் உலகில் உள்ள அனைத்தும்.

எப்படி ?

லட்டு என்றால் என்ன ?

லட்டு என்பது மஞ்சள் நிறத்தில் இருக்கும், வாயில் போட்டால் இனிப்பாக இருக்கும், நெய் வாசம் வரும், தொட்டால் மென்மையாக , மிருதுவாக இருக்கும். இந்த குணங்களின் தொகுப்புதான் லட்டு என்பது. இன்னும் கொஞ்சம் வேண்டுமானால் மேலும் சில குணங்களை சேர்த்துக் கொள்ளுங்கள். சின்ன பந்து போல இருக்கும் என்றெல்லாம் சேர்த்துக் கொள்ளலாம். கடைசியில் லட்டு என்பது சில குணங்களின் தொகுதி என்பது தெரிகிறது அல்லவா ?

அது போல, மல்லிகை பூ என்றால் என்ன ?

வெண்மையாக இருக்கும், சின்னதாக இருக்கும், பச்சை நிறத்தில் காம்பு இருக்கும், , சுகமான மணம் தரும்.

கணவனோ, மனைவியோ, காதலியோ , பிள்ளையோ என்றால் என்ன ? அவர்களின் தோற்றம், குணங்கள் இவைகளின்தான் தொகுப்புதான்.

குணங்களை குறைத்துக் கொண்டே வந்தால் கடைசியில் ஒன்றும் இருக்காது.

அடுத்தது, நமக்கு ஒன்றின் மேல் பற்று அல்லது ஆசை வரக் காரணம் என்ன ?

அந்தப் பொருளின் (அல்லது நபரின்) குணங்கள் நமக்கு பிடித்து விடுகிறது.

லட்டு பிடிக்க காரணம், அது இனிப்பாக , மென்மையாக, மணமாக இருப்பதால்.

பாகற்காய் பிடிக்காது ஏன் என்றால் அது கசக்கும்.

சில குணங்கள் பிடிக்கும், சில பிடிக்காது.

சில பேரை பிடிக்கும் காரணம் அவர்களின் குணம். சிலரை கண்டாலே பிடிக்காதது , காரணம் அவர்களின் குணம்.

அடுத்தது, இந்த குணங்கள் எங்கே இருக்கின்றன ? பொருளில் இருக்கிறதா, அல்லது நம்மில் இருக்கிறதா ?

சிந்திப்போம்.

சில மாநிலங்களில் உள்ளவர்கள் நிறைய காரம் சாப்பிடுவார்கள். அவர்களுக்கு கொஞ்சம் காரம் குறைந்தாலும் உணவு சப் என்று இருக்கும். ஆனால், அந்த காரம் குறைந்த உணவோ சிலர்க்கு பொறுக்க முடியாத காரமாக இருக்கும். காரம் என்பது உணவில் இல்லை, உண்பவரின் தன்மையைப் பொறுத்து அமைகிறது.

சிலருக்கு காபி டீ குடிப்பதென்றால் மூன்று தேக்கரண்டி சர்க்கரை வேண்டும். அதுவே சிலருக்கு வாயில் வைக்க முடியாது.

சிலருக்கு வலி பொறுக்க முடியும். சிலருக்கு சின்ன வலி கூட பொறுக்க முடியாது.

சிலருக்கு சில இசை பிடிக்கும். சிலருக்கு அதுவே காட்டு கத்தலாய் தோன்றும்.


மஞ்சள் காமாலை வந்தவனுக்கு எல்லாமே மஞ்சளாகத் தெரியும்.

நமக்கு ஒருவரை பிடிக்கும். அதே ஆளை இன்னொருவருக்கு பிடிக்கவே பிடிக்காது.

எனவே, குணங்கள் என்பது பொருள்களில் இல்லை. அது நம்மில் இருக்கிறது. அதை அனுபவிப்பனில் இருக்கிறது என்பது தெளிவாகும்.

உலக விஷயங்களின் மேல் ஆசை வைப்பது என்பது நம் மீதே நாம் ஆசை வைப்பது தான்.

பொருள்களுக்கு குணங்களைத் தருவதும், தந்த குணங்களை அனுபவிப்பதும் நாம் தான்.

இந்த தருபவனும், அனுபவிப்பனும்தான் "புருஷா" என்று குறிப்பிடப்படுகிறது.

இதை அறிந்து கொண்டால், அதுவே பர வைராக்கியம் எனப்படும்.

ஆசை ஏன் வருகிறது ? எங்கிருந்து வருகிறது ? எப்படி திருப்தி வருகிறது ? என்பதெல்லாம் புரிபடும்.

நான் பொருள்களுக்கு வேண்டிய குணங்களை அளிக்கிறேன்.

நான் பொருள்கள் தரும் இன்பங்களை அனுபவிக்கிறேன்.

இந்த நான்" ஐ புரிந்து கொண்டால், ஆசை மற்றும் வெறுப்பினால் அலையும் மனது தானே அடங்கும்.  சலனங்கள் ஓயும். தெளிவு பிறக்கும்.

உண்மையின் தரிசனம் கிடைக்கும்.

http://yogasutrasimplified.blogspot.in/2017/07/116.html

No comments:

Post a Comment