Thursday, July 27, 2017

யோக சூத்திரம் - 1.25 - அனைத்து அறிவும் உங்களுக்குள்

யோக சூத்திரம் - 1.25 - அனைத்து அறிவும் உங்களுக்குள் 



तत्र निरतिशयं सर्वज्ञबीजम् ॥२५॥

tatra niratiśayaṁ sarvajña-bījam ॥25॥

Ishavara is unmatched and is the source of all knowledge. ||25||

முந்திய பிளாகில் ஈஸ்வரனின் தன்மை பற்றி சிந்தித்தோம்.  மனக் கிலேசங்களால் அந்த படைப்பு சக்தியானது பாதிக்கப் படுவது இல்லை என்று கண்டோம்.

இந்த பிளாகில் பதஞ்சலி ஒரு மிகப் பெரிய உண்மையை சொல்கிறார்.


அதற்கு முன்னால் ஒரு சின்ன கதை.

ஒரு ஊரில் ஒரு பிச்சைக்காரன் இருந்தான். அவன், அந்த ஊரில் உள்ள மரத்தடியில் அமர்ந்து பிச்சை எடுத்து வந்தான். வேறு எங்கும் போக மாட்டான். அந்த மரத்தடிதான் அவன் இருப்பிடம். அங்கேயே படுத்து தூங்குவான். அவன் சாமான்கள் , கோணிப்பை எல்லாம் அந்த மரத்தின் அடியில் வைத்து இருப்பான்.

கொஞ்ச நாளில் அவன் வயதாகி இறந்து போனான். ஊர் மக்கள் கூடி, அவன் பல காலம் இருந்த அந்த மரத்தின் அடியிலேயே அவனை புதைத்து , ஒரு சின்ன சமாதி ஒன்று கட்டலாம் என்று முடிவு செய்தார்கள். புதைக்க குழி தோண்டிய போது , அந்தக் குழியில் ஒரு குடம் கிடைத்தது. அந்த குடம் நிறைய  பொற் காசுகள் இருந்தது.

பெரிய புதையலின் மேல் அமர்ந்து கொண்டு வாழ் நாள் முழுவதும் பிச்சை எடுத்திருக்கிறான் அவன்.

வெளியே நீட்டிய கையை கீழே நீட்டியிருந்தால் பத்து தலைமுறைக்கு வாழ புதையல் கிடைத்திருக்கும்.

அவன் அறியாமை புதையலின் மேல் அமர்ந்து கொண்டு பிச்சை எடுக்க வைத்தது.

அது போல, நமக்குள் இருக்கும் அறிவின், ஞானத்தின் ஆற்றலை நாம் அறியாமல் இருக்கிறோம் என்கிறார் பதஞ்சலி.

அளவற்ற ஞானம்  நமக்குள் குவிந்து கிடக்கிறது. அதை நாம் அறியாமல் ஞானத்தை நாம் வெளியே தேடிக் கொண்டிருக்கிறோம்.


tatra = தத்ர = அங்கே (அந்த ஈஸ்வரனுள் )
nir = நிர் = இல்லை
atiśayam = அதிசயம் = அதிசயம் என்றால் சமஸ்கிருதத்தில் உயர்ந்த, சிறந்த என்று அர்த்தம்.
nir-atiśayam = நிர் அதிசயம் = தனக்கு நிகரில்லாத, தனக்கு மேல் ஒன்றும் இல்லாத
sarvajña = சர்வ ஞான = அனைத்து ஞானங்களும் , அனைத்து அறிவும்
bījam = பீஜம் = விதையாக இருக்கிறது

நமக்குள் இருக்கும் அந்த படைப்பாற்றலில் , அத்தனை அறிவின் மூலமும் அங்கேதான் இருக்கிறது.

இதை எப்படி நம்புவது ? நமக்குள் அப்படி ஒன்றும் பெரிதாக இருப்பதாகத் தெரியவில்லையே.

நாம் என்ன பெரிதாக படித்து கிழித்து விட்டோம் இதுவரை.

அனைத்து ஞானங்களின் மூலம் அந்த படைப்பாற்றலில் பொதிந்து கிடக்கிறது என்றால் நம்ப முடியவில்லையே.

பொறுமையாக சிந்திப்போம்.

ஒரு பெரிய இசை அமைப்பாளர் , ஒரு அருமையான இசையை அமைக்கிறார். அந்த இசை எங்கிருந்து வந்தது. அவருக்குள் ஏதோ ஒன்று தோன்றுகிறது. இப்படி செய்தால் என்ன என்று செய்து பார்க்கிறார். அது நன்றாக இருக்கிறது.

அவரிடம் போய் , உலகத் தரம் வாய்ந்த இசை அமைப்பது என்று கேட்டுப் பாருங்கள். முழிப்பார். "அது அந்த நேரத்தில தோணும்...அது படி அமைக்கிறேன் " என்பார்.


எத்தனையோ அறிவியல் உண்மைகள், ஓவியங்கள், சிற்பங்கள் , காவியங்கள், பாடல்கள், இசை, கணித கோட்பாடுகள், உயிரியல் சித்தாந்தங்கள் எல்லாம் ஏதோ மனிதனின் சிந்தனையில் உதித்தது தானே ?

அந்த மனிதனுக்கும் உங்களுக்கும் அடைப்படையில் ஒரு வேறுபாடும் இல்லை.

அதே மூளை, இரண்டு கண், இரண்டு காது, கை கால்கள் எல்லாம் ஒன்றுதான்.

அவரால் முடிவது உங்களால் ஏன் முடியாது ?

அந்த கேள்வி அப்படியே இருக்கட்டும்.

ஒரு இசை அமைப்பாளாரால் சிற்பம் செதுக்க முடியாது. படைப்பாற்றல் இருக்கும் என்றால் எல்லாம் செய்ய வேண்டியது தானே ?

பதஞ்சலி கூறுகிறார் "அனைத்து ஞானங்களின் மூலம் " அந்த படைப்பாற்றலில் இருக்கிறது என்று.

ஒவ்வொருவர் , ஒவ்வொரு மாதிரி அந்த ஆற்றலை வெளிக் கொணர்கிறார்கள்.

சிலர் இசையாக, சிலர் பாடலாக, சிலர் நடனமாக என்று.

அளவிட முடியாத ஞானம் உங்களுக்குள் புதைந்து  கிடைக்கிறது.

"நீங்கள் சொல்வது சரி மாதிரிதான் இருக்கிறது. இருந்தாலும், எனக்குள் அப்படி ஒன்று இருப்பதாகவே எனக்குத் தெரியவில்லையே ...எனக்குத் தெரிந்தது எல்லாம் ஏதோ இங்க கொஞ்சம், அங்க கொஞ்சம் என்று சில பல தகவல்கள், கொஞ்சம் அனுபவம்...எல்லாம் சேர்த்து கொஞ்சம் அறிவு அவ்வளவுதான் ...இதில் அளவற்ற ஞானம் எங்கிருந்து வந்தது ...புரியலையே...கொஞ்சம் புரியும்படி விளக்க முடியுமா " என்று பதஞ்சலியிடம் கேட்டால் அவர் இப்படி விளக்கம் தருவார்......

ஒரு காகிதத்தில் ஒரு புள்ளியை வையுங்கள். அந்த புள்ளியை பற்றி என்ன நினைக்கிறீர்கள்.

அது ஒரு சின்ன புள்ளி. கறுப்பாக இருக்கிறது.

அந்த சின்ன புள்ளி இருக்க வேண்டும் என்றால், அது ஒரு பெரிய காகிதத்தில் இருக்க  வேண்டும் என்று புரிகிறது அல்லவா ?

உங்கள் சொந்த ஊர் எது என்று கேட்டால் , ஒரு ஊரின் பெயரைச் சொல்வீர்கள் அல்லவா ?

அது ஒரு சின்ன ஊர்தான். ஆனால் அந்த ஊர் , ஒரு நாட்டில் இருக்கிறது, அந்த நாடு இந்த பூமியில் இருக்கிறது, இந்த பூமி சூரிய குடும்பத்தில் இருக்கிறது, அது இந்த பிரபஞ்சத்தில் இருக்கிறது என்று புரிகிறது அல்லவா ?


அதே போல கால அளவை எடுத்துக் கொண்டாலும், ஒரு வினாடி என்பது ஒரு நிமிடத்துள் அடக்கம், ஒரு நிமிடம் என்பது மணிக்குள் அடக்கம்...மணி நாளில் அடக்கம், நாள் வாரத்தில், மாதத்தில், வருடத்தில், யுகத்தில் என்று விரிந்து கொண்டே போகிறது அல்லவா.

இவற்றில் இருந்து என்ன தெரிகிறது. எந்த ஒரு சிறிய ஒன்றும் ஒரு மிகப் பெரிய ஒன்றின் கூறு என்று நம்மால் சிந்திக்க முடியும்.

சரி, அடுத்த நிலையில் சிந்திப்போம்.

உங்கள் ஊரும், இந்த பிரபஞ்சமும் தனித்தனியாக இருக்கிறதா ? நிமிடமும் , மணியும், நாளும் தனித்தனியாக இருக்கிறதா ?

இல்லை. இரண்டும் ஒன்றுதான்.

மிகப் பெரிய பிரபஞ்சத்தில் ஒரு பகுதி உங்கள் ஊர்.


அது போல, அளவற்ற ஞானத்தில் ஒரு புள்ளி உங்கள் தற்போதைய ஞானம். அந்த புள்ளி  , அந்த அளவற்ற ஞானத்தில் இருந்து பிரிந்து வந்தது அல்ல. இரண்டுமே பிரிக்க முடியாதது. காகிதமும் புள்ளியும் ஒன்றோடு ஒன்று இணைந்தவை. காகிதத்தில் இருந்து புள்ளியை தனியே பிரித்து எடுக்க முடியாது.

அளவற்ற ஞானத்தில் இருந்து உங்கள் சிற்றறிவை பிரிக்க முடியாது. சிற்றறிவும் , பேரறிவும் ஒன்றுதான். அவற்றை பிரிக்க முடியாது. நாம் புள்ளியை மட்டும் பார்க்கிறோம். காகிதத்தை பார்ப்பது இல்லை.

பேரறிவு உங்களுக்குள் இருக்கிறது என்று ஒத்துக் கொள்கிறீர்களா ?

அதை எப்படி அடைவது என்று பின்னால் சொல்லித் தருகிறார் பதஞ்சலி.

http://yogasutrasimplified.blogspot.in/2017/07/125.html

No comments:

Post a Comment