Tuesday, March 27, 2018

யோக சூத்திரம் - 2.37 - நிறைந்த செல்வம்

யோக சூத்திரம் - 2.37 - நிறைந்த செல்வம் 



अस्तेयप्रतिष्ठायां सर्वरत्नोपस्थानम् ॥३७॥

asteya-pratiṣṭhāyāṁ sarvaratn-opasthānam ॥37॥


asteya = திருடாமை

pratiṣṭhāyāṁ = நிலையாக நின்றபின்

sarvaratn = சர்வ + ரத்தன் = அனைத்து இரத்தினங்களும் , அனைத்து செல்வங்களும்

opasthānam = உப ஸ்தானம் = கிடைக்கும், இருக்கும். ॥37॥

திருடாமை என்பது நிலை நின்றபின், அனைத்து செல்வங்களும் கிடைக்கும். 

முன்பு இதைப் பற்றி சிந்தித்தோம். செல்வத்தை திருடுவதை விட, கருத்து திருட்டு என்பது எப்படி நமக்குத் துன்பத்தைத் தருகிறது என்று பார்த்தோம்.

அதை இன்னும் கொஞ்சம் விரிவாகப் பார்ப்போம்.

மற்றவர்கள் பொருளை திருட வேண்டும், அவர் அறியாமல் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று ஏன் நினைக்கிறோம் ?

திருட வேண்டும் என்கிற எண்ணம் எங்கிருந்து வருகிறது ?


முதலில், எனக்கு உள்ளது எனக்குப் போதாது என்ற எண்ணம் திருட்டின் ஆரம்ப விதை.  அங்கிருந்துதான் அது ஆரம்பமாகிறது.

இரண்டாவது, எனக்கு வேண்டியதை என்னால் உழைத்து சம்பாதிக்க முடியாது  என்ற தன்னம்பிக்கை இன்மை. தன் திறமையில், உழைப்பில், அறிவில் நம்பிக்கை இன்மை.

மூன்றாவது, நம்பிக்கை இருந்தாலும் பொறுமை இன்மை. இப்பவே வேண்டும். நாளைக்கே வேண்டும் என்ற அவசரத்தில் திருடச் சொல்கிறது. எப்படியாவது குறுக்கு வழியில்  போயாவது இன்பங்களை அடைய வேண்டும் என்ற  எண்ணம்.

நான்காவது,  மற்றவர்களின் துன்பம் பற்றி கவலைப் படாத மனது. மற்றவர்கள்  பொருளை நாம் அபகரித்துக் கொண்டால் அவர்கள் எவ்வளவு துன்பப் படுவார்கள் என்று நினைக்காத , ஈரமற்ற மனம். கருணை அற்ற உள்ளம்.

திருட்டினால் ஒருவன் தனக்குத் தானே பெரிய தீமைகள் செய்து கொள்கிறான்.

திருடு என்றால் பொருளைத் தான் திருட வேண்டும் என்று இல்லை. மற்றவர் கருத்தைத்  திருடலாம். இன்னும் சொல்லப் போனால் மற்றவர் நிம்மதியை , அமைதியை  திருடலாம். ஒன்று கிடக்க ஒன்றைச் சொல்லி, மற்றவர்களை குழப்பி, அவர்களின் நிம்மதியைத் திருடலாம்.

சில பேர் இருப்பார்கள். எப்போது அவர்களிடம் பேசினாலும் போதும், ஏதாவது சொல்லி நம் நிம்மதியை, அமைதியை குலைத்து விடுவார்கள். நம் சந்தோஷத்தை  அவர்கள் திருடிக் கொள்கிறார்கள் என்றே அர்த்தம்.

நான் இதுவரை திருடவே இல்லை என்று யாரும் சொல்ல முடியாது.

இந்த உலகில் அனைத்துமே ஒரு அளவுதான் இருக்கிறது. நாம் , அளவுக்கு அதிகமாக ஒன்றை எடுத்துக் கொண்டால், அது யாருக்கோ போக வேண்டியதை , அவர்கள் அனுமதி இல்லாமல் எடுத்துக் கொள்வது போலத் தான்.

ஒரு ஆண்டில் ஒரு குறிப்பிட்ட அளவுதான் அரிசி உற்பத்தி ஆகும். உங்களிடம் பணம் இருக்கிறது  என்று அளவுக்கு அதிகமாக வாங்கி, அளவுக்கு அதிகமாக உண்டால், பணம் கொஞ்சமாக உள்ள யாரோ ஒருவர் பசியோடு செல்ல வேண்டி இருக்கும். அவர் உணவை நீங்கள் திருடியதாகவே அர்த்தம்.

அளவோடு உண்ண வேண்டும். அளவுக்கு அதிகமாக உண்ணும் யாரும் திருடரே.


உணவு மட்டும் அல்ல. அளவுக்கு அதிகமாக சொத்து சேர்ப்பது, ஆடைகள், நகைகள் எல்லாமே திருட்டு தான்.

ரொம்ப பணம் வைத்திருப்பவர்கள் கொஞ்சம் தானம் செய்வது என்பது அந்த குற்ற உணர்வில் இருந்து விடுபடும் ஒரு முயற்சி.


உலகில் இவ்வளவு பேர் வறுமையில் வாடும் போது நான் இவ்வளவு சொத்து சேர்த்து வைத்திருக்கிறேனே என்ற குற்ற உணர்வு.

மற்றவர்களை விடுங்கள். நீங்கள் , உங்களிடம் இருந்து எவ்வளவு திருடுகிறீர்கள் தெரியுமா ?

என்னது ? என்னிடம் இருந்து நானே திருடுகிறேனா ? அது எப்படி முடியும் ?

உங்கள் நேரத்தை, உங்கள் சந்தோஷத்தை, உங்கள் நல்ல அனுபவங்களை, உங்கள் ஆரோக்கியத்தை, உங்கள் ஆயுளை உங்களிடம் இருந்து திருடுவதில் உங்களை விட பெரிய ஆள் யாரும் இல்லை.

உங்கள் ஆரோக்கியத்தை நீங்கள் குறைத்துக் கொள்ள விரும்புவீர்களா. யாருக்காவது கொடுக்க விரும்புவீர்களா ? மாட்டீர்கள் தானே.

அளவுக்கு அதிகமாக உணவு உட்கொண்டு, உடற் பயிற்சி செய்யாமல், உங்கள் ஆரோக்கியத்தை , உங்கள் அனுமதி இல்லாமல் எடுத்துக் கொண்டது யார் ? நீங்கள் தானே.

எண்ணெய் பலகாரத்தை, இனிப்பு பலகாரத்தை ஒரு கை பார்த்தது யார் ?

நல்ல பொழுதை எல்லாம், வீணாக அரட்டையிலும், டீ வி யிலும் கழித்தது யார் ?உங்கள் நேரத்தை திருடியது நீங்கள் தான்.

மற்றவர்களைப் பார்த்து பொறாமை பட்டு, உங்கள் நிம்மதியை, உங்கள் சந்தோஷத்தை உங்கள் அனுமதி இல்லாமல் எடுத்துக் கொண்டது யார் ? நீங்கள் தானே ?

யோசித்துப் பாருங்கள். உங்களின் பெரிய எதிரி நீங்கள்தான் என்பது புரியும். உங்களின் செல்வம், ஆரோக்கியம், சந்தோஷம் இவை அனைத்தையும் உங்களிடம் இருந்து பறித்து தூர எறிவது நீங்கள்தான் என்பது புரியும்.

எனவே, திருடாமை நிலையாக நின்றால், அனைத்து செல்வங்களும் உங்களிடம் இருக்கும்.

சிந்திப்போம்.

http://yogasutrasimplified.blogspot.in/2018/03/237.html

No comments:

Post a Comment