Wednesday, March 21, 2018

யோக சூத்திரம் - 1.33 - எதிர்பதம்

யோக சூத்திரம் - 1.33 - எதிர்பதம் 


वितर्कबाधने प्रतिप्रक्षभावनम् ॥३३॥

vitarka-bādhane pratiprakṣa-bhāvanam ॥33॥

vitarka  = சந்தேகம்

bādhane = செயல்படும் போது

pratiprakṣa  = எதிர்பதம்

bhāvanam = பாவனை  ॥33॥

செயல்படும்போது சந்தேகம் வந்தால் அதற்கு எதிர்பதத்தை பாவிக்க வேண்டும்.

இதுக்கு சமஸ்கிரதமே பரவாயில்லை போல் தெரிகிறதா?

பொறுமை...பொறுமை.

உடலுக்கு நோய் வருவது போல மனதுக்கும் நோய் வரும். கோபம், தாபம், தயக்கம், பட படப்பு (anxiety ), பயம், மன அழுத்தம் (depression ), பொறாமை , என்று எவ்வளவோ மனம் சம்பந்தப்பட்ட சிக்கல்கள் வரும். அவற்றை எவ்வாறு சரி செய்வது ?

உடலுக்கு ஒரு சிக்கல் என்றால், அதை சரி செய்து கொள்ள உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உண்டு. உடம்பு அந்த சிக்கலை தானே சரி செய்து கொள்ளும். முடியாத நேரங்களில் நாம் சில மருந்துகளை தந்து அதை குணப் படுத்தலாம்.

உதாரணமாக, நாள் பட்ட உணவை உண்டால், வாந்தி பேதி என்று வந்து உடம்பு அந்த கெட்ட உணவை வெளியே தள்ளி விடும்.

காயம் பட்டு, இரத்தம் கசிந்தால், தானே இரத்தம் உறைந்து மேலும் இரத்தம் வெளியேறுவதை தடுக்கும்.


மனதுக்கு அப்படி ஒரு வழி இல்லை. சிக்கல் வந்தால், அதை தானே சரி செய்து கொள்ளத் தெரியாது.

நாம் தான் ஏதாவது செய்ய வேண்டும்.

என்ன செய்ய வேண்டும் என்று பதஞ்சலி சொல்கிறார்.

உங்களுக்கு எந்த விதமான மன சிக்கல் இருக்கிறதோ அதற்கு எதிரான மன நிலையை பாவித்துக் கொள்ளுங்கள்.

உதாரணமாக,

ஒருவர் மேல் உங்களுக்கு அளவு கடந்த கோபம். ஏனோ தெரியவில்லை, அவரைப் பார்த்தாலே பத்திக் கொண்டு வருகிறது. அனால், அவர் உங்கள் வாழ்வில் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறார். அவரை தவிர்க்கவும் முடியாது.

என்ன செய்யலாம் ?

கோபத்திற்கு எதிர் நிலை, அன்பு, கருணை. அவர் மேல் அன்பு செலுத்துங்கள் என்று சொல்லவில்லை. மனதில் அன்பை வரவழைத்துக் கொள்ளுங்கள். கோபம் போய் விடும். அன்பு என்ற பாவனை கொள்ளுங்கள். மனம் ஒரே நேரத்தில் இரண்டு எதிர் நிலையில் இருக்க முடியாது.

அன்பு இருந்தால் , கோபம் இருக்காது. கோபம் இருந்தால் அன்பு இருக்காது.

மனம் சோர்வாக இருக்கிறதா (depression )? மிக மிக உற்சாகமாக இருப்பதாக கற்பனை பண்ணிக் கொள்ளுங்கள். சுறு சுறுப்பாக இருப்பதாக கற்பனை செய்யுங்கள். உடனே நீங்கள் எழுந்து ஓட வேண்டாம். சுறு சுறுப்பாக இருந்தால் மனம் எப்படி பர பரப்பாக இருக்குமோ அப்படி நினைத்துக் கொள்ளுங்கள். சோர்வு பறந்து விடும்.

பயமாக இருக்கிறதா? மிக மிக தைரியமாக இருப்பதாக பாவித்துக் கொள்ளுங்கள். தைரியம் வருகிறதோ இல்லையோ, பயம் போய் விடும்.

தயக்கம் இருக்கிறதா? உறுதியாக இருப்பதாக நினைத்துக் கொள்ளுங்கள்.

உங்கள் மனம் எப்படி இருக்கிறதோ, அதையே எல்லோரிடமும் சொல்லிக் கொண்டு இருந்தால், அந்த மன நிலையே மேலும் உறுதிப்படும்.

வாழ்வில் எதைப் பார்த்தாலும் பயமாக இருந்தால், எல்லோரிடமும் அதையே சொல்லிக் கொண்டு இருக்காதீர்கள். மாறாக, "பயமா, எனக்கா, எனக்கு எதை கண்டும் பயம் இல்லை ..." என்று சொல்லுங்கள். நாளடைவில் பயம் உங்களை விட்டு விட்டுப் போய் விடும்.

பல மாணவர்களுக்கு கணக்கை கண்டால் காலனை கண்டதைப் போல பயம். எனக்கு கணக்கு வராது, கணக்கு டீச்சர் சரி இல்லை, கணக்கு புத்தகம் சரி இல்லை என்று சொல்லிக் கொண்டு திரிவார்கள். அப்படி சொல்லிக் கொண்டிருந்தால் கட்டாயம் கணக்கு வராது.

மாறாக, 'கணக்கு எனக்கு ரொம்ப பிடிக்கும். கடினம் என்றாலும் அதில் ஒரு த்ரில் இருக்கு. எப்போதெல்லாம் நேரம் கிடைக்கிறதோ , நான் கணக்கு போட்டு பார்ப்பேன் " என்று சொல்ல வேண்டும்.

எனக்கு வயதாகி விட்டது. நின்னா உக்கார முடியல, உக்காந்தா நிக்க முடியலை என்று ஒரு நோயாளி போல சொல்லிக் கொண்டு திரியக் கூடாது.

வயதான காலத்திலும் நான் ஆரோக்கியமாக இருக்கிறேன், சுறுசுறுப்பாக இருக்கிறேன் என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும்.

அது தான், எதிர் வினை.

மனம் போல மாங்கல்யம் என்று சொல்லுவார்கள்.

நாம் என்ன நினைக்கிறோமோ அதுவே நடக்கும். உலகுக்கு அல்ல, நமக்கு.

எனவே, எப்போதும் நல்ல சிந்தனைகளை மட்டும் மனதில் வையுங்கள்.

எப்போது பார்த்தாலும் ஏதாவது பிரச்சனை என்று சொல்லிக் கொண்டு இருப்பவர்களை விட்டு தூர விலகி நில்லுங்கள்.

நல்லவர்களோடு சேர்ந்து இருங்கள். அவர்கள் சொல்வதை கேளுங்கள். மனதை உயர்ந்த சிந்தனைகளால் நிறையுங்கள்.

வாழ்வு சிறப்பாக இருக்கும்.

இருக்கட்டும்.

http://yogasutrasimplified.blogspot.in/2018/03/133.html




No comments:

Post a Comment