யோக சூத்திரம் - 1.32 - நியமங்கள் - பாகம் 4
शौच संतोष तपः स्वाध्यायेश्वरप्रणिधानानि नियमाः ॥३२॥
śauca saṁtoṣa tapaḥ svādhyāy-eśvarapraṇidhānāni niyamāḥ ॥32॥
śauca = தூய்மை
saṁtoṣa = நிறைவு, சந்தோஷம்
tapaḥ = தவம்
svādhyāy = தன்னில் அறிவது
eśvarapraṇidhānāni = ஈஸ்வர ப்ரணிதானி
niyamāḥ = நியமம் ॥32॥
தூய்மை, சந்தோஷம், தவம் பற்றி சிந்தித்தோம்.
அடுத்தது தன்னை அறிவது.
Self Study.
தூய்மை, சந்தோஷம் மேலும் தவம் இவற்றை கடந்த பின் தான் தன்னைத் தான் அறிய முடியும்.
தன்னைத் தான் அறிவது என்றால் என்ன?
நாம் என்று கூறுவது நமது மனம், அறிவு, ஞாபகம், சிந்தனை இவற்றின் தொகுதி. இல்லையா?
இந்த அறிவு, ஞாபகம், சிந்தனை என்பது நம்முடைய சிந்தனையா? நம் அறிவா?
நமக்குள் ஒரு பெரிய கூட்டமே இருக்கிறது.
நமது பெற்றோர்கள், நண்பர்கள், உறவினர்கள், நாம் படித்த புத்தகங்களின் ஆசிரியர்கள் என்று எல்லோரும் நமது மண்டைக்குள் இருந்து கொண்டு நம்மை ஆளுக்கு ஒரு பக்கம் இழுக்கிறார்கள்.
அது சரி, இது தவறு, மதம், கடவுள், பாவம், புண்ணியம், நல்லது, கெட்டது என்று ஆயிரம் விஷயங்கள் நமது மண்டைக்குள் திணிக்கப் பட்டு இருக்கிறது.
இவை எதுவும் நமக்குச் சொந்தமில்லை. நாம் அறியாத வயதில் நமக்குள் திணிக்கப் பட்டவை.
இவற்றை எல்லாம் தள்ளிவிட்டு, உண்மையிலேயே நாம் யார் என்று அறிய வேண்டும்.
சங்கரர் ஒரு புறம், இராமானுஜர் மறு புறம், இயேசு, முகமது, புத்தர், மஹாவீரர், வள்ளுவர், கம்பர், வியாசர், கார்ல் மார்க்ஸ், என்று ஒரு பெரிய கும்பல் உள்ளே இருக்கிறது.
இதில் யார் சொல்வது சரி, யார் சொல்வது தவறு என்று எப்படி கண்டு பிடிப்பது. எல்லாம் சரி என்றால், முரண்களை எவ்வாறு சரி செய்யவது?
நாம் யாரை வேண்டுமானாலும் , அவர் சொல்வது தான் சரி என்று நினைக்கலாம். நாம் நினைப்பதால் அது சரியாக இருக்க வேண்டும் இல்லை. ஒவ்வொருத்தரும் தாங்கள் நம்பும் குரு தான் சரி என்று நம்புகிறார்கள். நம்புவது என்ன பெரிய காரியம். யார் வேண்டுமானாலும் , எதை வேண்டுமானாலும் நம்பலாம்.
எனவே, இவர்களை எல்லாம் விலக்கி விட்டு, உண்மையிலேயே நாம் யார் என்று அறியத் தொடங்க வேண்டும்.
நமது ஆசைகள் , பயங்கள், கனவுகள், எதிர்பார்ப்புகள், நம்பிக்கைகள், இவை எல்லாம் எங்கிருந்து வந்தன, அவற்றிற்கு காரணம் என்ன என்று யோசிக்க வேண்டும்.
கடன் வாங்கிய ஞானத்தை திருப்பிக் கொடுத்து விட்டு, உண்மையில் நாம் யார் என்று அறிய வேண்டும்.
பல மூக மூடிகளை அணிந்து கொண்டிருக்கிறோம். ஆண் , பெண், குலம் , ஜாதி, நாடு, மொழி, அரசியல் சார்பு, சமய சார்பு, குரு சார்பு என்று முக மூடியின் மேல் முகமூடி .போட்டுக் கொண்டு, நித்தம் கண்ணாடியில் பார்த்து அந்த முகமூடியில் உள்ளது தான் நம் முகம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். உண்மையான முகம் எது என்றே தெரியாமல் இருக்கிறோம்.
நாடகத்தில் இராஜா வேடம் போட்டவன், அதே வேடத்தோடு, தான் உண்மையிலேயே இராஜா என்று நினைத்து உலாவிக் கொண்டிருந்தால் அது எவ்வளவு பைத்தியக்காரத்தனமோ, அதே போல் நாம் அலைந்து கொண்டிருக்கிறோம்.
உண்மை முகம் என்ன என்று அரியத் தலைப்படுவோம்.
http://yogasutrasimplified.blogspot.in/2018/03/132-4.html
No comments:
Post a Comment