Tuesday, March 13, 2018

யோக சூத்திரம் - 1.32 - நியமங்கள் - பாகம் 1

யோக சூத்திரம் - 1.32 - நியமங்கள் -   பாகம் 1



शौच संतोष तपः स्वाध्यायेश्वरप्रणिधानानि नियमाः ॥३२॥

śauca saṁtoṣa tapaḥ svādhyāy-eśvarapraṇidhānāni niyamāḥ ॥32॥

śauca = தூய்மை

saṁtoṣa = நிறைவு, சந்தோஷம்

tapaḥ  = தவம்

svādhyāy = தன்னில் அறிவது

eśvarapraṇidhānāni  = ஈஸ்வர ப்ரணிதானி

niyamāḥ  = நியமம் ॥32॥

இயமம் என்பது என்ன என்று முந்தைய சூத்திரத்தில் பார்த்தோம்.

இங்கே நியமம் என்றால் என்ன என்று சொல்கிறது யோக சாத்திரம்.

இயமம் என்பது நமக்கும் வெளி உலகுக்கும் உள்ள தொடர்பு பற்றியது. நியமம் என்பது நமக்கு நாமே செய்யக் கூடியது.

நாம், நம்மை உயர்த்திக் கொள்ள வேண்டும் என்றால், முதலில் நமக்கும் வெளி உலகுக்கும் உள்ள  உறவை சரி செய்து கொள்ள வேண்டும். இல்லை என்றால்  அது நம்மை தொடர்ந்து தொல்லை கொடுத்துக் கொண்டே இருக்கும்.

உதாரணமாக, இயமம் என்பதில் திருடாமை பற்றி சொன்னார். நாம் திருடி விட்டால், என்ன தான் தியானம், பூஜை, தவம் செய்தாலும் , மாட்டிக் கொள்வோமோ என்ற  பயம் இருந்து கொண்டே இருக்கும். மாட்டிக் கொண்டால் பின்  நம்மால் நம் விருப்பப் படி எதுவும் செய்யக் முடியாது. எனவே, வெளி உலக உறவை முதலில் சரி செய்த பின்,  அக உலகுக்கு வர வேண்டும்.

சிலருக்கு பொறுமை இருக்காது. எவ்வளவு நாள் இந்த வெளி உலக உறவை சரி செய்து கொண்டு இருப்பது என்று  சலித்து, உலக தொடர்புகளை விட்டு விட்டு  துறவியாக காடு மலை நோக்கி சென்று விடுகிறார்கள். ஊருக்குள் இருந்தால் தானே  ஊரைப் பற்றி கவலைப் பட வேண்டும்.

எல்லோராலும் அது முடிவது இல்லை. யோக சாத்திரத்தின் நோக்கமும் அது அல்ல. அது எல்லோரையும் சாமியாராகப் போகச் சொல்லவில்லை.

அக உலகுக்கு வரும் போது , முதல் படி தூய்மை.

எது தூய்மையாக இருக்க வேண்டும்?

முதலில் உடல் தூய்மை.

நாம் என்பது பெரும்பாலும் உடல் தான். மிகச் சிறிய அளவே மனம், அறிவு, ஆத்மா என்று  வருகிறது. இல்லை என்றால், நாம் நம் உடலைத்தான் நாம் என்கிறோம்.

உடல் தூய்மைக்கு முதல் தேவை தூய்மையான உணவு. நாம் சாப்பிடும் உணவு தான் நாம்.  நாம் எதை சாப்பிடுகிறோமோ , அதாகவே இருக்கிறோம்.
You are what you eat என்று சொல்லுவார்கள்.  முதலில் உணவு தூய்மை வேண்டும்.

போதை ஊட்டக் கூடிய மது, காப்பி, டீ போன்றவற்றை தவிர்க்க வேண்டும். எது உங்கள மனதை தவறான வழியில் கொண்டு சொல்கிறதோ, அதைத் தவிருங்கள். எது தவறான வழியில் கொண்டு செல்கிறது என்று நீங்கள் தான் கூர்மையாக கவனிக்க வேண்டும். உள்ளுணர்வை கூர்மையாக வைத்துக் கொண்டால், எந்த உணவு   எந்த மன நிலையை தருகிறது என்று அறிய முடியும்.  உள்ளுணர்வு கூர்மை படாவிட்டால் , விலங்குகள் போல , தீனி தின்பது போல எதை வேண்டுமானாலும் உண்பது என்று ஆகி விடும்.

உடல் எப்படி அதற்கு தரும் உணவைப் பொறுத்து மாறுகிறதோ, அது போலவே மூளையும்/மனமும். அதற்குள் எதைப் போடுகிறோமோ அதைப் பொறுத்து  அது மாறும்.


உயர்ந்த நூல்களை படிக்க வேண்டும். கற்றறிந்த நல்லவர்களோடு பழக வேண்டும். மனதை கெடுக்கும் நூல்கள், டிவி சீரியல்கள், தேவையற்ற வெட்டி பேச்சு என்று இவற்றை தவிர்க்க வேண்டும். இவை மனதை கெடுக்கும். Whatsapp , facebook  என்று  இவற்றின் மூலம்  அர்த்தம் இல்லாத பேச்சுகள், வீண் அரட்டைகள் என்று  பொழுது போனாலும், அவை நம்மை அறியாமலேயே நம் மனதை பாதிக்கின்றன. உங்கள் மூளைக்குள் எவை எல்லாம் போகின்றனவோ, அவை எல்லாம் உங்களை கட்டாயம் பாதிக்கும்.


whatsapp மெசேஜ்  படித்தால் என்ன ஆகிவிடப் போகிறது என்று நினைக்காதீர்கள்.  அந்த விஷம் கொஞ்சம் கொஞ்சமாக மனதுக்குள் ஏறும். நீங்கள் அறியாமலேயே அது உங்களை பாதிக்கும். கவனமாக இருக்க வேண்டும்.

உண்ணும் உணவு, படிக்கும் புத்தகங்கள்/கேட்கும் செய்திகள் இவை உடலையும் மனதையும் பாதிக்கும்.

உடல் தூய்மை என்பது உணவில் மட்டும் அல்ல. உடம்பை சுத்தமாக வைத்துக் கொள்வது. தூய்மையான ஆடைகளை அணிவது. வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்வது என்று அனைத்து விதத்திலும் தூய்மையை கடை பிடிக்க வேண்டும்.

கண்ட இடத்தில் குப்பை போடுவது, எச்சில் துப்புவது, சிறு நீர் கழிப்பது, என்று இருக்கக் கூடாது.

நாம் இருக்கும் இந்த உடல், வீடு, அலுவலகம், நம் தெரு, நம் நாடு என்று அனைத்து இடத்திலும் தூய்மை வேண்டும்.

ஒரு நிமிடம் யோசித்துப் பார்ப்போம்.

நாட்டில் எங்கும் குப்பை கூளம் கிடையாது, சாக்கடை தண்ணீர் கிடையாது, சாலைகளில் எங்கும் ஒரு தூசு தும்பு கிடையாது. ஒவ்வொரு வீடும், அலுவலகமும் துடைத்து வைத்தது போல ஒரு சுத்தம். ஒவ்வொரு மனிதனும் குளித்து முழுகி, தூய்மையான ஆடை அணிந்து சுத்தமாக இருக்கிறான்/ள். தொழிற்சாலைகள்  உள்ள கழிவுகள் சுத்தம் செய்யப்பட்டு காற்றிலோ அல்லது நீரிலோ  விடப் படுகிறது.  அனைத்து நீர் நிலைகளும் தெளிந்த நீரோடு இருக்கின்றன. ஆற்று தண்ணீரை அப்படியே எடுத்து பருகலாம்.

நாடே ஒரு 5 ஸ்டார் ஹோட்டல் வரவேற்பறை போல இருந்தால் எப்படி இருக்கும் ?

தூய்மை என்பது நாம் மற்றவர்களுக்காக செய்வது அல்ல, சட்டத்திற்கு பயந்து செய்வது அல்ல. நமக்கு நாமே செய்து கொள்ள வேண்டிய ஒன்று அது.

நியமத்தின் முதல் படி தூய்மை.

http://yogasutrasimplified.blogspot.in/2018/03/132-1.html









No comments:

Post a Comment