யோக சூத்திரம் - 2.30 - உலகோடு வாழ ஐந்து வழிகள் - பாகம் 4
अहिंसासत्यास्तेय ब्रह्मचर्यापरिग्रहाः यमाः ॥३०॥
ahiṁsā-satya-asteya brahmacarya-aparigrahāḥ yamāḥ ॥30॥
ahiṁsā = அகிம்சை
satya = சத்யம்
asteya = திருடாமை
brahmacarya = ப்ரம்மச்சாரியம்
aparigrahāḥ = தன்னடக்கம்
yamāḥ = இயமம்
அகிம்சை, சத்யம் , திருடாமை பற்றி சிந்தித்தோம். அடுத்தது, பிரம்மச்சாரியம்.
பிரம்மச்சாரியம் என்றால் என்ன.
பிரம்மச்சாரியம் என்றால் கல்யாணம் பண்ணிக் கொள்ளாமல் இருப்பது என்று ஒரு பொருள் நிலவுகிறது. கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி, அவன் கட்ட பிரம்மச்சாரி என்ற சொற்கள் வழக்கத்தில் இருக்கிறது.
பிரம்மச்சாரியம் என்றால் அது அல்ல பொருள். நாளடைவில் அப்படி ஆகி விட்டது.
பிரம்மம் + சரியம்.
சாரி என்றால் வழி. பாதை. நெறி. வாழ்க்கை முறை.
பிரம்மம் என்றால் இறை, பரம்பொருள், என்று பொருள்.
பிரம்மச்சாரியம் என்றால் இறைவனைப் போல் வாழ்வது அல்லது இறைவனை அடையும் வாழ்க்கை முறை.
நாம் எங்கு போக வேண்டுமோ , அந்த ஊருக்கு செல்லும் சாலையை கண்டு பிடித்து அதில் செல்ல வேண்டும்.
இறைவனை அடைய வேண்டும், அல்லது இறை நிலையை அடைய வேண்டும் என்றால் அதற்கு எந்த வழி முறையோ அதை பின்பற்ற வேண்டும்.
பின் ஏன் பிரம்மச்சாரியம் என்றால் திருமணம் அல்லாத வாழ்க்கை என்று சொல்கிறார்கள்?
காரணம் இருக்கிறது.
ஒரு இடத்துக்கு செல்ல வேண்டும் என்றால், முயற்சி வேண்டும். சக்தி வேண்டும்.
பாலுணர்வு என்பது ஒரு மிகப் பெரிய சக்தி. அந்த சக்தியை மடை மாற்றி , அந்த சக்தியை பயன் படுத்தி மேல் நிலைக்கு செல்ல வேண்டும்.
திருமணம் செய்து கொள்ளாதே என்பதல்ல அர்த்தம். திருமணத்தின் மூலம், மனிதன் தனது பாலுணர்வின் அபரிமிதமான சக்தியை உணர முடியும். அந்த சக்தியை கொண்டு , அதைத் தாண்டி மேல் நோக்கி செல்லும் வழி பிரம்மச்சாரியம்.
திருமணம் செய்து தான் அதை அறிய வேண்டும் என்று அல்ல. பலர் தங்கள் அறிவினால் அதை அறிந்து , திருமணம் என்ற நிலையை தாண்டி சென்று விடுகிறார்கள்.
சிலர், திருமணம் செய்து , அதை உணர்ந்து பின் துறவறம் மேற் கொண்டு அதை தாண்டி செல்கிறார்கள்.
பெரும்பாலானோர் , திருமணம் செய்து அந்த பந்தங்களிலேயே மூழ்கி விடுகிறார்கள். அதை விட்டு மேலே .வர முடிவது இல்லை. எனவே, அதற்கு பயந்து, திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்வதே பிரம்மச்சாரியம் என்று சொல்லத் தலைப்பட்டார்கள்.
காமம் மிகப் பெரிய உந்து சக்தி. மின்சாரம் .போல. அந்த மின்சாரத்தை கொண்டு என்ன செய்யலாம் என்றால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். அது ஒரு சக்தி அவ்வளவுதான்.
மனிதனின் அந்த ஆதார சக்தியை மேல் நிலைக்கு கொண்டு செல்வது தான் யோகத்தின் நோக்கம். சமாதி நிலைக்கு கொண்டு செல்ல யோகம் வழி சொல்கிறது.
பிரம்மச்சாரியம் என்றால் இறையை நோக்கிய வழி. இறைவனாகவே வாழும் வழி.
திருமணம் செய்து கொள்வது, பிள்ளைகளை பெற்றுக் கொள்வது, அவர்களை வளர்ப்பது என்று அதிலேயே வாழ்க்கை முடிந்து விடாமல், அவற்றை தாண்டி மேலே செல்லும் மார்க்கமே பிரம்மச்சாரியம்.
ஆழ்ந்து சிந்தியுங்கள். உங்கள் சக்தி எந்தெந்த விதத்தில் செல்வழிக்கப் .படுகிறது என்று. அது சரியான வழிதானா என்று சிந்தியுங்கள். உங்கள் சக்தியை இன்னும் சிறப்பாக எப்படி செலவழிக்கலாம் என்று சிந்தியுங்கள்.
உண்பது, உறங்குவது, வேலைக்குப் போவது, சம்பாதிப்பது, டிவி பார்ப்பது, அரட்டை அடிப்பது, செய்தித்தாள் வாசிப்பது, வீட்டை பராமரிப்பது என்றே உங்கள் சக்தி அனைத்தும் சென்று விடுகிறதா ? அது சரிதானா ?
சிந்திக்க வேண்டும்.
http://yogasutrasimplified.blogspot.in/2018/03/230-4.html
No comments:
Post a Comment