Friday, March 2, 2018

யோக சூத்திரம் - 2.29 - யோகத்தின்எ ட்டு அங்கங்கள் - பாகம் 7

யோக சூத்திரம் - 2.29 - யோகத்தின்எ ட்டு அங்கங்கள் - பாகம் 7



यम नियमाअसन प्राणायाम प्रत्याहार धारणा ध्यान समाधयोऽष्टावङ्गानि ॥२९॥

yama niyama-āsana prāṇāyāma pratyāhāra dhāraṇā dhyāna samādhayo-'ṣṭāvaṅgāni ॥29॥


yama = இயமம்  = கட்டுப்பாடு, நெறி படுத்துதல்

niyama = நியமம் = கடைபிடித்தல்

āsana = ஆசனம் = உடல் இருக்கும் நிலை

prāṇāyāma = பிராணாயாமம்

pratyāhāra = புலன்களை உள் திருப்புதல்

dhāraṇā  = தாரணம் = மனதை ஒருமுகப் படுத்துதல்

dhyāna = தியானம்

samādhayo = சமாதி

'ṣṭāvaṅgāni = அசத்து + அங்காணி = எட்டு அங்கங்கள்


இயமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், மற்றும் ப்ரத்யாஹார, தாரண  வரை பார்த்தோம்.

அடுத்தது, தியானம்


தியானம் செய்வதற்கு முன் இவ்வளவு செய்ய வேண்டி இருக்கிறது.

இன்று பலர் காலையில் குளித்து விட்டு சாமி படத்தின் முன் சிறிது நேரம் அமர்ந்து  "தியானம் " பண்ணினேன் என்கிறார்கள்.

அது அல்ல தியானம்.

இத்தனை படிகளை கடந்த பின் தான் தியானம் என்ற நிலைக்கே வர முடியும்.

தியானம் என்றால் இதைப் பற்றி தியானம் செய்வது ? கடவுளை என்றால் எந்தக் கடவுளை ? ஜோதி வடிவிலா? எதை நோக்கி தியானம் செய்வது ? போன்ற கேள்விகள் எழும்.

உண்மை என்ன என்றால், இந்த அனைத்து கேள்விகளும் அர்த்தம் இல்லாதவை.

தியானம் என்பது எதைப் பற்றியும் அல்ல. ஒன்றையுமே பற்றி சிந்திக்காமல் இருப்பது. எதுவுமே மனதில் இல்லாமல் இருப்பது. மனம் முழுவதும் காலியாக இருப்பது.

எதை பற்றியோ சிந்திப்பது என்றால் சிந்திக்கும் நான், சிந்திக்கப்படும் அது என்ற இரண்டு இருக்கும் அல்லவா ?

தியானத்தில் அந்த இருமை மறையும். நான், அது என்று வேறுபாடு மறைந்த பின் எதை சிந்திப்பது ? எதை தியானம் செய்வது ?

சித்தம் முழுமையான வெற்றிடமாக இருக்கும்.

அந்த நிலையை ஒரு நிமிடம் கூட நம்மால் அடைந்து நிற்க முடியாது. ஒரு நொடியில்  ஏதோ ஒரு சிந்தனை வந்து விடும். ஒன்று வந்தால், அதில் இருந்து ஒன்று மற்றொன்றாக மாறும். தொடர் சங்கிலி போல் வந்து கொண்டே இருக்கும்.

அருணகிரி நாதருக்கு முருகன் உபதேசம் செய்தது இரண்டே இரண்டு வார்த்தை தான்  "சும்மா இரு ". அவ்வளவுதான் உபதேசம்.

உடம்பு சும்மா இருக்கும்.

மனம் சும்மா இருக்குமா ? மனதை சும்மா இருக்க வைக்க முடியுமா ? அந்த முயற்சியே கூட மனம் தானே செய்ய வேண்டி இருக்கிறது.

எனவே தான் தியானம் மிக மிக கடினமான ஒன்று. ஊசி முனையில் நிற்பது போல. கொஞ்சம் தவறினாலும் சிக்கல் தான்.


ஒளியில் விளைந்த வுயர்ஞான பூதரத் துச்சியின்மேல்
அளியில் விளைந்ததொ ராநந்தத் தேனை அநாதியிலே
வெளியில் விளைந்த வெறும்பாழைப் பெற்ற வெறுந்தனியைத்
தெளிய விளம்பிய வா! முக மாறுடைத் தேசிகனே.

ஏதாவது ஒன்று என்றால் அது இப்படி இருக்கும் என்று சொல்லி விளங்க வைக்கலாம். ஒன்றும் இல்லாததை எப்படி விளக்க முடியும்? திணறுகிறார் அருணகிரிநாதர்.



வெளியில் = இந்த வெட்ட வெளியில்

விளைந்த வெறும்பாழைப்  = பாழ் என்றால் ஒன்றும் இல்லாது. பாழாய் போய் விட்டது என்று சொல்வோமே அது போல. வெறும் பாழை என்றால் ஒன்றும் இல்லாத பாழ்.

வெட்ட வெளியில் விளைந்த வெறும் பாழ். இவ்வளவு சொன்னது போதாது என்று மேலும் சொல்கிறார்


பெற்ற வெறுந்தனியைத் = அந்த வெட்ட வெளியில் விளைந்த வெறும் பாழ் பெட்ரா வெறும் தனியை. தனி என்றால் , வேறு ஒன்றும் இல்லாதது. தனித்து நிற்பது.

ஒன்றும் இல்லாத மிகப் பெரிய சூன்யம். அதை அறிந்தால் அது எப்படி இருக்கிறதாம் ?

"ஆனந்த தேனை " ஆனந்தமான தேன் போல் இருக்கிறதாம்.

அது மட்டும் அல்ல


ஒளியில் விழைந்த உயர் ஞானம் 

என்கிறார். 

சாதாரண ஞானம் அல்ல. உயர் ஞானம். ஒளி வடிவமானது என்றால் அனைத்து  அஞ்ஞானத்தையும் போக்குவது. 

அது தான் தியானம். 

மனம் இருக்கும், சிந்தனை இருக்கும், ஆனால் எதைப் பற்றியும் சிந்திக்காது. 

பார்ப்பதும், பார்க்கப் படுவதும் இந்த இரண்டுக்கும் உள்ள இடைவெளி குறைந்து குறைந்து கடைசியில் ஒன்றாகிப் போனால் பின் எது, எதைப் பற்றி சிந்திக்கும். 

அவன் கொஞ்ச நாள் அவளை பார்க்க வரவில்லை. அவளுக்கு பயங்கர கோபம். அவன் வரட்டும் வச்சுக்குறேன் என்று மனதுக்குள் கோபம் கொப்பளிக்கிறது. எப்படியெல்லாம் அவனை திட்டலாம் என்றெல்லாம் யோசித்து வைத்திருக்கிறாள். 


கடைசியில் அவன் வந்து விட்டான். 

அவனைப் பார்த்தவுடன் அவள் ஓடி சென்று அவனை கட்டிக் கொள்கிறாள். கோபம் இருந்த இடம் தெரியவில்லை.  அன்பில் கரைகிறாள். தான் வேறு, அவன் வேறு  என்று இருந்தால்தானே அவன் மேல் அவள் கோபம் கொள்ள முடியும். இரண்டும் ஒன்றற கலந்து விட்டால் யார்மேல் யார் கோபம் கொள்வது ?

எழுதும் போல் கோல் காணா கண்ணே போல், கொங்கண் பிழை காணேன் கண்டவிடத்து  

என்பார் தெய்வப் புலவர். 

எழுதும் போது பேனா கண்ணுக்குத் தெரியாது (அல்லது கண்ணுக்கு மை தீட்டும் போது , அந்த மை தீட்டும் கோல் தெரியாது) அது போல தியானத்தில் தான் வேறு  உலகம் வேறு என்ற நிலை இருக்காது. உலகம் மறைந்து போகும். 

தியானம்.

செய்ய வேண்டும்.

http://yogasutrasimplified.blogspot.com/2018/03/229-7.html

No comments:

Post a Comment