யோக சூத்திரம் - 1.32 - நியமங்கள் - பாகம் 3
शौच संतोष तपः स्वाध्यायेश्वरप्रणिधानानि नियमाः ॥३२॥
śauca saṁtoṣa tapaḥ svādhyāy-eśvarapraṇidhānāni niyamāḥ ॥32॥
śauca = தூய்மை
saṁtoṣa = நிறைவு, சந்தோஷம்
tapaḥ = தவம்
svādhyāy = தன்னில் அறிவது
eśvarapraṇidhānāni = ஈஸ்வர ப்ரணிதானி
niyamāḥ = நியமம் ॥32॥
தூய்மை, சந்தோஷம் பற்றி சிந்தித்தோம்.
அடுத்தது தவம்.
தவம் என்றால் என்ன?
சில வார்த்தைகள் சமஸ்க்ரிதத்தில் ஒரு அர்த்தம் தரும். அதே போல் வார்த்தை தமிழிலும் இருக்கும். தமிழ் தெரிந்தவர்களுக்கு உடனே தமிழ் அர்த்தம் தான் உடனே தோன்றும்.
தவம் என்றால் காட்டில் போய் , இறைவனை நோக்கி ஒரு மனதாக பிரார்த்தனை பண்ணுவது என்று தோன்றும்.
சமஸ்க்ரிதத்தில் தவம் என்றால் எளிய, சிக்கனமான என்று பொருள். Austerity என்று ஆங்கிலத்தில் சொல்லுவார்களே அது.
அது என்ன சிக்கன, எளிய வாழ்க்கை ?
சிக்கனம் என்றால் கருமித்தனம் அல்ல. தேவைக்கு அதிகமாக எதையும் கொள்வது கிடையாது. அதே போல் எல்லாவற்றையும் சந்தோஷமாக அனுபவிப்பது அவற்றை சொந்தம் கொண்டாடாமல்.
சற்று விரிவாக பார்ப்போம்.
அளவுக்கு அதிகமாக எதையும் கொள்வதால் தான் அனைத்து சிக்கலும் வருகிறது.
அளவுக்கு அதிகமாக உண்பதால் அனைத்து நோயும் வருகிறது.
அளவுக்கு அதிகமாக சொத்து சேர்க்க வேண்டும் என்று நினைப்பதால் பதற்றம், பயம், நடுக்கம், போட்டி, பொறாமை, வாழ்க்கையை அனுபவிக்காமல் பணத்தின் பின் செல்வது என்று நிகழ்கிறது.
பேராசை போல் ஒரு அழிவு கிடையாது.
தேவைக்கு மட்டும் அனுபவிப்பது.
எத்தனை சட்டை வேண்டும் - அஞ்சு அல்லது ஆறு போதாதா ?
எத்தனை புடவை வேண்டும் ? பத்து பதினைஞ்சு ?
வாங்கி அடுக்குவது. எதற்கு ?
எத்தனை செருப்பு வேண்டும் ? எத்தனை கை பை வேண்டும் ?
எதிலும் ஒரு கணக்கு. தேவைக்கு அதிகமாக மனிதன் சேர்க்க / அனுபவிக்க நினைப்பதால் இயற்கை வளங்களை சுரண்ட வேண்டி இருக்கிறது. மண் வளம் இழந்து போகிறது. சுற்று சூழல் மாசு படுகிறது.
நமக்குத் தேவை இல்லை என்றாலும், மற்றவர்களுக்கு காட்டுவதற்காக பெரிய கார், அளவுக்கு அதிகமான நகை, என்று வாங்கி குவிக்கிறோம்.
அது நமது வாழ்க்கை இல்லை. மற்றவர்கள் பாராட்ட வேண்டும் என்று அவர்கள் எதை பாராட்டுவார்களோ அந்த வாழ்க்கை வாழ்க்கை வாழ்கிறோம்.
எத்தனை பேருக்காக நாம் வாழ முடியும்.
நம் மனதுக்கு சந்தோஷமான வாழ்க்கையை தேர்ந்தெடுத்து வாழ வேண்டும். மற்றவர்கள் என்ன வேண்டுமானாலும் நினைத்துக் கொள்ளட்டும். நீங்கள் சந்தோஷமாக இருக்கிறீர்களா. அது தான் முக்கியம்.
தேவைகள் குறைந்தால், பணம் பணம் என்று அலைவது குறையும்.
தேவைகளை குறைத்து என்று சொல்லும் போது ஏதோ கஞ்சத் தனமான வாழ்க்கை வாழச் சொல்லவில்லை.
நமக்கு எது தேவையோ அவற்றை கொண்டு மகிழ்ச்சியாக வாழ்வது.
அப்படி ஒரு வாழ்க்கை வாழும் போது , மனம் உள் நோக்கித் திரும்பும். இல்லை என்றால் வேறு என்ன வாங்குவது, சந்தையில் புதிதாக என்ன வந்திருக்கிறது என்று அலையும். அதை அடைய பணம் சம்பாதிக்க ஓடும். முடிவில்லா ஓட்டம் அது.
நிறைவான வாழ்க்கை. எளிய வாழ்க்கை. அது தவம்.
http://yogasutrasimplified.blogspot.in/2018/03/132-3.html
No comments:
Post a Comment