யோக சூத்திரம் - 1.34 - எண்ணங்களும் விளைவுகளும்
वितर्का हिंसादयः कृतकारितानुमोदिता लोभक्रोधमोहाअपूर्वका मृदुमध्य अधिमात्रा दुःखाज्ञानानन्तफला इति प्रतिप्रक्षभावनम् ॥३४॥
vitarkā hiṁsādayaḥ kr̥ta-kārita-anumoditā lobha-krodha-moha-āpūrvakā mr̥du-madhya adhimātrā duḥkha-ajñāna-ananta-phalā iti pratiprakṣa-bhāvanam ॥34॥
vitarkā = சந்தேகம், குழப்பம்
hiṁsādayaḥ = காயப் படுத்தும்
kr̥ta = தீமை செய்பவர்
kārita = செய்ய
anumoditā = அனுமதிப்பவர்
lobha = பேராசை
krodha = கோபம், வெறுப்பு
moha = மயக்கம், குழப்பம்
pūrvakā = முன்பு, முன்னால் (பூர்வீகம்)
mr̥du = மிருதுவாக, மென்மையாக
madhya = மத்திய, நடுத்தரமாக
adhimātrā = அதிகமாக
duḥkha = துக்கம்
ajñāna = அஞ்ஞானம்
ananta = எல்லையற்ற
phalā = வெளிப்பாடு
iti = இதுவே
pratiprakṣa =எதிர் நிலையான
bhāvanam = மனோ பாவம் ॥34॥
வன்முறையான எண்ணங்கள் முடிவில்லா துன்பத்தையும் அறிவீனத்தையும் தரும். நீங்கள் செய்பவரா அல்லது செய்யத் தூண்டுபவரா என்பது முக்கியம் அல்ல. அல்லது அந்த வன்மையான எண்ணங்கள் பேராசை, மயக்கம், குழப்பம் போன்றவற்றால் தோன்றியதா அல்லது வேறு எதில் இருந்தும் தோன்றியதா என்பது முக்கியம் அல்ல. அது போல, அந்த எண்ணங்கள் வலிமை குறைந்ததா, வலிமையானதா, அல்லது இரண்டுக்கும் இடைப் பட்டதா என்பதும் முக்கியம் அல்ல. எது எவ்வாறாயினும் , நல்லது அல்லாத எண்ணங்களுக்கு மருந்து அதற்கு எதிரான நல்ல எண்ணங்களை கொள்வதுதான்.
இது ஒரு மிக மிக முக்கியமான சூத்திரம்.
கவனமாக வாசியுங்கள். ஒன்றுக்கு பல முறை வாசிக்க வேண்டும்.
முந்தைய சூத்திரத்தில், ஒரு தவறான அல்லது நெகடிவ் எண்ணங்கள் வந்தால் அதை நல்ல அல்லது பாசிட்டிவ் எண்ணங்கள் மூலம் சரி செய்யலாம் என்று பார்த்தோம்.
இங்கே அதை மேலும் விளக்குகிறார்.
எண்ணங்கள் செயலில் முடிகின்றன. இதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.
நாம் எந்த எண்ணங்களை கொண்டிருக்கிறோமோ, அந்த எண்ணங்கள் அதற்கு உண்டான செயலை , விளைவை உண்டாக்கும். கட்டாயமாக.
நான் முட்டாள், நான் முட்டாள் என்று எந்நேரமும் நினைத்துக் கொண்டே இருந்தால், நாளடைவில் முட்டாளாகவே ஆகி விடுவோம். சர்வ நிச்சயமாக.
இதில் பதஞ்சலி மிக முக்கியமான ஒன்றை சொல்கிறார்.
அந்த எண்ணங்களை நீங்களே உருவாக்கிக் கொண்டாலும் சரி அல்லது மற்றவர்கள் உங்களுக்குள் ஏற்றி விட்டாலும் சரி, விளைவு ஒன்றுதான்.
கெட்ட எண்ணங்கள், தீய எண்ணங்கள், தவறான எண்ணங்கள், நன்மை தராத எண்ணங்கள் அவை கொஞ்சமாக, நடுத்தரமாக அல்லது அதிகமாக எப்படி இருந்தாலும் அதற்கேற்ப தீமை பயக்கும்.
எனவே, அவற்றை அடியோடு உடனே அழித்து ஒழிக்க வேண்டும்.
அதற்கு முந்தைய சூத்திரத்தில் கூறிய எதிர் மனோ பாவம் உதவும்.
எனவே,
எப்போதும் உங்கள் மனதில் என்ன ஓடுகிறது என்று கவனியுங்கள்.
பொறாமை, பயம், கோபம், வெறுப்பு, எரிச்சல், துவேஷம், சலிப்பு, சோம்பல், நம்பிக்கை இன்மை, தன்னம்பிக்கை இன்மை , சந்தேகம் என்று இது போன்ற தவறான எண்ணங்கள் இருந்தால் உடனே அதற்கு எதிர் மறையான எண்ணங்களை கொண்டு வாருங்கள்.
உங்களை சுற்றி உள்ளவர்களை எடை போடுங்கள். அவர்கள் உங்களுக்குள் விதைக்கும் எண்ணங்களை பற்றி சிந்தியுங்கள். இதில் சிக்கல் என்ன என்றால் உங்களுக்கு மிக மிக அருகில் உள்ளவர்கள் உங்களுக்குள் விதைக்கும் எண்ணங்கள் உங்களுக்கு சட்டென்று விளங்காது.
பெற்றோர், கணவன், மனைவி, சகோதர சகோதரிகள் இவர்கள் உங்களை பற்றி உங்களிடம் சொல்லும் எண்ணங்கள் மிக இயல்பாக உங்களுக்குள் சென்று படிந்து விடும். கவனமாக இருங்கள். "உங்களுக்கு ஒண்ணும் தெரியாது " என்று மனைவி கணவனைப் பார்த்து அடிக்கடி சொல்லுவது வேண்டுமானால் மிக இயல்பாக இருக்கலாம். ஆனால், அந்த நஞ்சு நாளடைவில் அவன் பல தவறுகள் செய்ய இடம் கொடுத்து விடும். ஒன்றும் தெரியாததால் தவறு செய்து விடுவான். அலுவலகத்தில் பதவி உயர்வு கிடைக்காது. நன்றாகத்தானே உழைக்கிறேன் எனக்கு ஏன் பதவி உயர்வு கிடைக்கவில்லை என்று கணவன் மண்டையை உடைத்துக் கொண்டிருப்பான். காரணம் அவனுக்குள் விதைக்கப் பட்ட நஞ்சு "உங்களுக்கு ஒரு மண்ணும் தெரியாது "என்று அடிக்கடி சொல்லப்பட்டது.
உங்கள் நன்பர்கள், அலுவலக அதிகாரிகள், உறவினர்கள், ஆசிரியர்கள் , பெற்றோர், மாமனார், நாத்தனார், அக்கம் பக்கத்து வீட்டுக் காரர்கள் என்று பட்டியல் போட்டுக் கொள்ளுங்கள். இதில் யார் யார் உங்களுக்குள் நல்ல எண்ணங்களை விதைக்கிறார்கள், யார் யார் நல்லது அல்லாத எண்ணங்களை விதைக்கிறார்கள் என்று பாருங்கள்.
அடுத்தது, நீங்கள் என்ன செய்கிறீர்கள் மற்றவர்களுக்கு. நீங்கள் மற்றவர்களுக்குள் தீய எண்ணங்களை விதைத்தால் அது உங்களுக்குள்ளும் இருக்கும். "உங்களுக்கு ஒண்ணும் தெரியாது " என்று சொல்லும் மனைவி தனக்குள்ளும் அந்த எண்ணங்களை விதைத்துக் கொள்ளுகிறாள். தன்னிடம் ஒன்றும் இல்லை என்பதை மறைக்க மற்றவர்களிடம் ஒன்றும் இல்லை. நான் அவர்களை விட மோசம் இல்லை என்று தனக்குத் தானே உறுதி செய்து கொள்ளும் உத்தி.
நீங்கள் உங்கள் பிள்ளைகளிடம், கணவன்/மனைவியிடம், நண்பர்களிடம், உறவினர்களிடம் என்ன மாதிரி எண்ணங்களை விதைக்கிறீர்கள் என்று கவனியுங்கள். நீங்கள் விதைத்தாலும் , உங்களுக்குள் விதைக்கப்பட்டாலும் விளைவு ஒன்று தான்.
அடுத்தது, நீங்கள் வாழும் இடம் மற்றும் அதன் சூழ்நிலை. நன்றாக உங்கள் மனதை கவனித்துப் பாருங்கள். ஒரு கோவிலுக்குப் போகிறீர்கள். உள்ளே நுழைந்தவுடன் உங்கள் மனதில் ஒரு மெல்லிய மாற்றம் நிகழ்வதை கவனித்துப் பாருங்கள். நீங்கள் உங்கள் உள்ளுணர்வை கூர்மை படுத்திக் கொண்டால் அந்த மெல்லிய மன மாற்றங்களை உங்களால் அறிய முடியும். "அந்த கோவிலுக்கு போய் விட்டு வந்தால் , ஏதோ ஒரு மனதுக்கு ஆறுதலாக இருக்கிறது " என்று சொல்ல கேட்டு இருக்கிறீர்களா ? ஏன் அப்படி ? கோவிலுக்கு ஏராளமான மக்கள் வருகிறார்கள். அவர்களின் எண்ணங்கள் உங்களை பாதிக்கும். ஒரு எதிர்பார்ப்போடு, ஒரு நம்பிக்கையோடு பலர் அங்கே வருவதால், அவர்களின் நம்பிக்கை எண்ணங்கள் உங்களையும் பாதிக்கும், உங்களுக்குள்ளும் ஒரு நம்பிக்கையை உண்டாக்கும்.
மாறாக ஒரு மருத்துவ மனைக்கு சென்று பாருங்கள். உங்கள் மன நிலை வேறு மாதிரி மாறும்.
நீங்கள் வாழும் இடம், பணி புரியும் இடம், நீங்கள் செல்லும் இடங்கள் உங்கள் மனதை பாதிக்கும். சினிமா கொட்டகை, உணவு விடுதி இங்கெல்லாம் மக்கள் தங்கள் எண்ணங்களை விட்டுச் செல்கிறார்கள். உங்களை அறியாமலேயே அவை உங்களுக்குள் செல்லும்.
எனவே தான், நாம் வாழும் இடம், நம்மை சுற்றி உள்ளவர்கள், நாம் அடிக்கடி போகும் இடம் இவற்றை பற்றி நாம் அறிந்து வைத்திருக்க வேண்டும். தேவை என்றால் மாற்றவும் வேண்டும்.
உங்கள் கணவரோ மனைவியோ உங்களுக்குள் தீய எண்ணங்களை விதைத்துக் கொண்டிருந்தால், அவர்களிடம் சொல்லித் திருத்துங்கள்.
முடியவில்லையா, அவர்கள் சொல்வதற்கு எதிர் மனோ பாவத்தை கொண்டு வாருங்கள்.
உலகை நம்மால் திருத்த முடியாது. எனவே நாம் எப்படி நம்மை சரி செய்து கொள்ளலாம் என்று பதஞ்சலி சொல்லித் தருகிறார்.
எண்ணங்களை கவனியுங்கள்.
அவை வாழ்க்கையை உண்டாக்குபவை.
தூக்கத்தில் இருந்து விழித்துக் கொள்ளுங்கள். என்ன நடக்கிறது என்று கவனியுங்கள்.
நலமே அடைய வாழ்த்துக்கள்.
http://yogasutrasimplified.blogspot.in/2018/03/134.html
No comments:
Post a Comment