Thursday, March 15, 2018

யோக சூத்திரம் - 1.32 - நியமங்கள் - பாகம் 2

யோக சூத்திரம் - 1.32 - நியமங்கள் -   பாகம் 2



शौच संतोष तपः स्वाध्यायेश्वरप्रणिधानानि नियमाः ॥३२॥

śauca saṁtoṣa tapaḥ svādhyāy-eśvarapraṇidhānāni niyamāḥ ॥32॥

śauca = தூய்மை

saṁtoṣa = நிறைவு, சந்தோஷம்

tapaḥ  = தவம்

svādhyāy = தன்னில் அறிவது

eśvarapraṇidhānāni  = ஈஸ்வர ப்ரணிதானி

niyamāḥ  = நியமம் ॥32॥

நேற்று தூய்மை பற்றி சிந்தித்தோம்.

அடுத்தது "சந்தோஷம்".

யாராவது சந்தோஷமாக இருக்கிறார்களா ? எல்லோரும் சந்தோஷத்தைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள். யாரும் அதை அடைந்த மாதிரி தெரியவில்லை. 

நான் சந்தோஷத்தை அடைந்து விட்டேன் என்று யாராவது சொல்கிறார்களா?

அதை மட்டும் அடைந்து  விட்டால், அப்புறம் சந்தோஷமாக இருப்பேன் என்று எத்தனையோ நினைத்து அடைந்தும் இருக்கிறோம். சந்தோஷம் வந்ததா ? இல்லை. 

எதை அடைய வேண்டும் என்று நினைத்தோமோ, அதை அடைந்தவுடன், அதை விட பெரியது வேண்டும் என்று மனம் அடுத்ததை நோக்கி பயணப் படுகிறது. சந்தோஷம் என்பது ஒரு கானல் நீராகவே இருக்கிறது. 

உங்களுக்கு இருப்பதை எல்லாம் ஒரு பட்டியல் போடுங்கள். அவை வேண்டும் என்று கனவு காண்பவர் உலகில் கோடி. அவை எல்லாம் உங்களுக்கு கிடைத்திருக்கிறது. ஒரு நிமிடம் சந்தோஷமாக இருந்து பாருங்களேன்.

இதற்கு காரணம் என்ன ? எல்லாம் இருந்தும் ஏன் நாம் ஏன் சந்தோஷமாக இருக்க மாட்டேன் என்கிறோம்?

சந்தோஷமாக இருப்பது ஒரு குற்றம் என்று நம் மனதில் ஆழப்  பதிந்து விட்டது.

துக்கம்தான் நமது இயற்கையான நிலை. சந்தோஷம் என்பது எப்போதாவது வந்து போவது என்று நினைக்கிறோம். 

சந்தோஷமாக இருந்தால் ஏதோ தவறு என்று நினைக்கிறோம்.

நினைத்துப் பார்த்தால் சந்தோஷப்பட அவ்வளவு இருக்கிறது. ஒவ்வொன்றையும் நினைத்து அவ்வளவு சந்தோஷப் படலாம்.

எல்லாவற்றையும் விடுங்கள். சொத்து, சுகம், கார், வீடு, வாசல், நகை, பதவி, பணம் எல்லாவற்றையும் விடுங்கள்.

முயற்சி இல்லாமல் இயல்பாக மூச்சு விட முடிகிறதா? எவ்வளவு பெரிய சந்தோஷமான விஷயம்.  ஆஸ்துமா வந்து துன்பப் படுகிறவர்களிடம் கேட்டுப் பாருங்கள். மூச்சு விடுவது எவ்வளவு சந்தோஷமான விஷயம் என்று சொல்லுவார்கள்.

வலி இல்லாமல் நீர் பிரிகிறதா. அந்த சில நொடிகளை அனுபவியுங்கள். கிட்னியில் கல் வந்து நீர் பிரிய துடித்துப் போபவர்களை கேட்டுப் பாருங்கள் அது என்ன சுகம் என்று தெரியும்.

நேற்று இரவு தூங்கினீர்களா? என்ன சுகம்.

இப்படி யோசித்துப் பார்த்தால், சந்தோஷம் கொட்டிக் கிடக்கிறது. அள்ள அள்ள குறையாத  அளவு சந்தோஷம் உங்களுக்கு இருக்கிறது.

அதை எல்லாம் விட்டு விட்டு, இல்லாத ஒன்றை நினைத்து துன்பப் பட்டுக் கொண்டிருக்கிறீர்கள்.

முயற்சி செய்ய வேண்டியதுதான். பெரிதினும் பெரிது கேட்க வேண்டியது தான். ஆனால், அது கிடைத்தால்தான் சந்தோஷமாக இருப்பேன் என்று சொல்லாதீர்கள்.

இப்போது சந்தோஷமாக இல்லாவிட்டால், அது கிடைத்தாலும் சந்தோஷமாக இருக்க மாட்டீர்கள்.

 கிடைத்த   ஒவ்வொரு சந்தோஷத்தையும் அனுபவியுங்கள். இந்த நொடியில் எப்படி சந்தோஷமாக இருப்பது என்று பாருங்கள். நாள் முழுவதும் சந்தோஷத்தால் நிறையுங்கள்.

இது ஏதோ போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து மன நிலை அல்ல. இருப்பதில் சந்தோஷம் காண்பது.

நமது இயற்கையான நிலையே சந்தோஷமாக இருப்பது தான். துக்கம் நாமே தேடிக் கொள்வது.

சிரியுங்கள். அன்பைக் கொட்டுங்கள். அன்பை அள்ளுங்கள். கிடைத்த அனைத்துக்கும் நன்றி சொல்லுங்கள்.

பரமானந்த சாகரத்தே என்பார் அருணகிரி.

கடல் போல் ஆனந்தம் முன்னே கிடைக்கிறது. கிளிஞ்சல்களை தேடி பொறுக்கிக் கொண்டு இருக்கிறீர்கள். அவனுக்கு அவ்வளவு கிளிஞ்சலா ? என்னை விட அவனுக்கு அதிகமா என்று பொறாமை வேறு.

சந்தோஷமாக இருங்கள். நீங்கள் ஆசீர்வதிக்கப் பட்டவர். ஒரு குறையும் இல்லை.

http://yogasutrasimplified.blogspot.in/2018/03/132-2.html

No comments:

Post a Comment