Tuesday, March 6, 2018

யோக சூத்திரம் - 2.30 - உலகோடு வாழ ஐந்து வழிகள் - பாகம் 1

யோக சூத்திரம் - 2.30 - உலகோடு வாழ ஐந்து வழிகள் - பாகம் 1 


अहिंसासत्यास्तेय ब्रह्मचर्यापरिग्रहाः यमाः ॥३०॥

ahiṁsā-satya-asteya brahmacarya-aparigrahāḥ yamāḥ ॥30॥

ahiṁsā = அகிம்சை

satya = சத்யம்

asteya = திருடாமை

brahmacarya = ப்ரம்மச்சாரியம்

aparigrahāḥ  = தன்னடக்கம்

yamāḥ  = இயமம ், வழி அல்லது நெறி

யோகம் என்றால் ஏதோ சாமியார்கள் செய்வது. துறவிகள் செய்வது. பெரிசாக தாடி வளர்த்துக் கொண்டு காட்டில் இருந்து செய்வது என்று நினைத்துக் கொள்ளக் கூடாது.

யோகம் என்பது வாழும் முறை எதுவாக இருந்தாலும் அதை இனிமையாக, இன்பமாக வாழ்வது எப்படி என்று சொல்லித் தரும் முறை.

புலன்களை அடக்கி, சாப்பாடு தண்ணி இல்லாமல் உடலை வருத்தி செய்வது அல்ல யோகம்.

சமாதி நிலையை அடைய முதல் படி இயமம் என்று பார்த்தோம்.

இயமம் என்றால் என்ன ? எப்படி அதன் படி நடப்பது என்பதை இங்கே சொல்கிறார்.

இயமம் என்பது ஐந்து கூறுகளை கொண்டது.

அதில் முதலாவது அகிம்சை.

இம்சை என்றால் துன்பம். அகிம்சை என்றால் துன்பம் இல்லாதது.

முதல் படி துன்பம், வருத்தம் இல்லாதது.

நிறைய பேர் நினைப்பது என்னவென்றால் அகிம்சை என்றால் மற்ற உயிர்களை  துன்புறுத்தாமல் இருப்பது என்று.

அது அல்ல..

அகிம்சை என்றால் எந்த உயிரையும் துன்பப் படுத்தாமல் இருப்பது.

இரண்டுக்கும் என்ன வித்தியாசம் ?

எந்த உயிரையும் என்றால் அதில் தானும் அடங்கும்.

பலர், தங்களை தாங்களே துன்பப் படுத்திக் கொள்கிறார்கள்.

எப்படி?

எதெல்லாம் தனக்கு நல்லது இல்லையோ, அதை செய்வது. எது தனக்கு துன்பம் தருமோ, அவற்றை செய்வது.

உதாரணமாக, அளவுக்கு அதிகமாக உண்பது. உடற் பயிற்சி செய்யாமல் இருப்பது. வெட்டி அரட்டையில் ஈடுபடுவது. சரியாக தூங்காமல் இருப்பது. புகை பிடிப்பது. மது அருந்துவது. இப்படி பட்டியல் நீண்டு கொண்டே போகும். இவை அனைத்தும் துன்பம் தருவன. இருந்தும் மனிதர்கள் செய்கிறார்கள்.


தன் மேலே அக்கறை இல்லாதவன் எப்படி மற்ற உயிர்களை துன்பப் படுத்தாமல் இருப்பான்?

இம்ஸை செய்வதன் அடிப்படை காரணம் என்ன ?

மனதில் அன்பு இல்லாமை. அன்பு இருந்தால் , யார் மேல் அல்லது இதன் மேல் அன்பு வைக்கிறோமோ அதற்கு துன்பம் செய்ய மனம் வருமா ? அன்பு இல்லாத இடத்தில் துன்பம் செய்யும் மனம் வருகிறது.

முதலில் தன்னை தான் அன்பு செய்ய வேண்டும். தன்னையே நேசிக்க முடியாதவன் எப்படி மற்றவர்களை நேசிப்பான்?

அடுத்தது மற்ற உயிர்களை நேசிக்க வேண்டும்.

இம்சை என்பது அடித்து , உதைப்பது மட்டும் அல்ல. அதிர்ந்து பேசுவது, அநாகரீமாக பேசுவது, மரியாதை குறைவாக பேசுவது, மனம் புண் படும்படி பேசுவது எல்லாமே இம்சை தான்.

உயிர்கள் மட்டும் அல்ல, மரம், செடி கொடி , ஆறு, குளம், நிலம், மலை என்று இயற்கையை நேசிக்க வேண்டும்.

மரத்தை வெட்டி, கருக்கி, அதன் மேல் கல்லையும் தாரையும் போட்டு பொசுக்கி ரோடு போடுவது இம்ஸை இல்லையா ?

குளத்தில் குப்பையை போட்டு கொட்டி, அதை நிரப்பி, அதன் மேல் கான்க்ரீட் கட்டடம் எழுப்பி வாழ்வது அரக்கத் தனமாக இல்லையா ?

ஆற்றில் கொண்டு போய் கழிவுகளை கொட்டுவது இம்ஸை இல்லையா ?

தன்னை நேசிக்க வேண்டும். தன்னைப் போல பிற உயிர்களை நேசிக்க வேண்டும். இயற்கையை நேசிக்க வேண்டும்.

அப்படி நேசிக்கத் தொடங்கினால் , அகிம்சை மலரும்.

இந்த பூமி சொர்க்க பூமியாக மாறும். எல்லோரும் ஒருவரை ஒருவர் நேசித்து, அனைவரும் ஒன்று கூடி இந்த இயற்கையை நேசித்து அதற்கு ஒரு துன்பம் வராமல் மென்மையாக அதை கையாண்டால், இந்த பூமி எப்படி இருக்கும் என்று ஒரு கணம் நினைத்துப் பாருங்கள்.

போட்டி இல்லை. பொறாமை இல்லை. சண்டை இல்லை. யுத்தம் இல்லை. எனக்கு எனக்கு என்ற பேராசை இல்லை. யாரும் வேறு யாருக்கும் தீமை நினைப்பது இல்லை. சுற்றுப் புற சூழ்நிலையை மென்மையாக கையாள்வது என்று ஆகி விட்டால், வாழ்க்கை எப்படி இருக்கும் ?

அது வாழும் முறையின் முதல் பாடம். அகிம்சை.

மேலும் சிந்திப்போம்.


http://yogasutrasimplified.blogspot.in/2018/03/230-1.html





No comments:

Post a Comment