Wednesday, March 7, 2018

யோக சூத்திரம் - 2.30 - உலகோடு வாழ ஐந்து வழிகள் - பாகம் 3

யோக சூத்திரம் - 2.30 - உலகோடு வாழ ஐந்து வழிகள் - பாகம் 3


अहिंसासत्यास्तेय ब्रह्मचर्यापरिग्रहाः यमाः ॥३०॥

ahiṁsā-satya-asteya brahmacarya-aparigrahāḥ yamāḥ ॥30॥

ahiṁsā = அகிம்சை

satya = சத்யம்

asteya = திருடாமை

brahmacarya = ப்ரம்மச்சாரியம்

aparigrahāḥ  = தன்னடக்கம்

yamāḥ = இயமம் 

அகிம்சை, சத்யம்  பற்றி  சிந்தித்தோம். அடுத்தது,  திருடாமை.  

திருடக் கூடாது. அவ்வளவுதானே. நான் இதுவரை திருடியதே கிடையாது. இனியும் திருடவே மாட்டேன். அது எளிமையான ஒன்று தான் என்று நீங்கள் சொல்வதற்கு முன்...

நீங்கள் திருடவே இல்லையா ? நன்றாக யோசித்துப் பாருங்கள். 

பொருளை திருடி இருக்க மாட்டீர்கள்...கருத்துகளை ?

மற்றவர்களின் கருத்துகளை திருடி உங்கள் கருத்து போல சொல்வது இல்லையா ?


இதுதான் கடவுள், இப்படி செய்தால் கடவுளுக்குப் பிடிக்கும், இது இது கடவுளுக்குப் பிடிக்காது, நல்லது செய்தால் கடவுளிடம் போகலாம், இல்லை என்றால் நரகம்தான், பாவம், புண்ணியம்,  மறு பிறப்பு, கர்மா...இது எல்லாம் உங்கள் கருத்தா ? 

நீங்கள் கண்டு பிடித்ததா ? நீங்கள் அனுபவத்தில் உணர்ந்ததா ?

யாருடையோ கருத்தையோ எடுத்துக் கொண்டு உங்கள் கருத்து போல நீங்கள் பேசுகிறீர்கள், வாதம் புரிகிறீர்கள், சரி தவறு என்று சண்டை பிடிக்கிறீர்கள், சரி என்று நம்புகிறீர்கள்...இது கருத்து  திருட்டு இல்லையா ?

உண்மையில் உங்களுக்கு என்ன தெரியும்? எதை நீங்கள் கண்டு பிடித்தீர்கள்? எது உங்கள் சொந்த அனுபவம் ? 

ஒன்றும் தெரியாது என்பதைத் தவிர வேறு எது உங்களுக்குச் சொந்தம். 

வேதம்? கீதை ? உபநிஷத்துகள்? தேவாரம் ? திருவாசகம்? பிரபந்தம் ? ஆச்சாரியார் சொன்னது ? 

எல்லாம் உங்கள் கருத்துகள் அல்ல. உங்களுக்கு பிடித்திருக்கலாம் அவை. அவற்றை நீங்கள் ஏற்றுக் கொள்ளலாம். அது வேறு விஷயம். அது உங்கள் கருத்து அல்ல. 

மணிவாசகரின் கருத்து எப்படி உங்கள் கருத்தாகும் ?

நம்மாழ்வாரின் கருத்து எப்படி உங்கள் கருத்தாகும்.

இது தான் சரி என்று நீங்கள் எதை வைத்துச்  சொல்கிறீர்கள்?

எனவே, அறிவின் முதல் படி, மற்றவர்களின் கருத்துகளை உங்கள் கருத்தாக நினைக்காதீர்கள். அது அவர்கள் கருத்து. அவற்றை தவிர்த்து உங்கள் கருத்து என்பது என்ன?

ஒன்றும் இல்லை.

அங்கிருந்து ஆரம்பியுங்கள். எது உங்கள் கருத்து? ஆழ்ந்து யோசியுங்கள். உங்கள் கருத்துகள் எங்கிருந்து வந்தன ?

பூஜ்யத்தில் இருந்து ஆரம்பியுங்கள். மற்றவர்களின் கருத்துகளை அவர்களிடமே திருப்பி கொடுத்து விடுங்கள். அவர்களிடம் கேட்டா அவற்றை நீங்கள் எடுத்தீர்கள். கேளாமல் எடுத்தது திருட்டு சொத்து தானே. அவர்களிடமே கொடுத்து விடுங்கள்.

மனம் லேசாக இருக்கும். கருத்து மோதல்கள் இருக்காது. உங்கள் வெற்றிடத்தை உண்மையான உங்கள் அறிவால் , அனுபவத்தால் நிரப்புங்கள்.

இது இயமத்தின் அடுத்த கூறு.

மேலும் சிந்திப்போம்.

http://yogasutrasimplified.blogspot.com/2018/03/230-3.html






No comments:

Post a Comment