யோக சூத்திரம் - 2.29 - யோகத்தின்எ ட்டு அங்கங்கள் - பாகம் 6
यम नियमाअसन प्राणायाम प्रत्याहार धारणा ध्यान समाधयोऽष्टावङ्गानि ॥२९॥
yama niyama-āsana prāṇāyāma pratyāhāra dhāraṇā dhyāna samādhayo-'ṣṭāvaṅgāni ॥29॥
yama = இயமம் = கட்டுப்பாடு, நெறி படுத்துதல்
niyama = நியமம் = கடைபிடித்தல்
āsana = ஆசனம் = உடல் இருக்கும் நிலை
prāṇāyāma = பிராணாயாமம்
pratyāhāra = புலன்களை உள் திருப்புதல்
dhāraṇā = தாரணம் = மனதை ஒருமுகப் படுத்துதல்
dhyāna = தியானம்
samādhayo = சமாதி
'ṣṭāvaṅgāni = அசத்து + அங்காணி = எட்டு அங்கங்கள்
இயமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், மற்றும் ப்ரத்யாஹார வரை பார்த்தோம்.
அடுத்தது, தாரண.
தாரண என்றால் மனதை ஒருமுகப் படுத்துதல். (Concentration )
சொல்லப் போனால் மனதை ஒரு முகப் படுத்துதல் என்பது ஒரு முழுமையான அர்த்தம் அல்ல.
தாரை என்றால் நீர் கொட்டுவது.
மழை தாரை தாரையாக பொழிந்தது என்று சொல்லுவது போல.
ஒரு பெரிய பீப்பாயில் எண்ணெய் இருக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள்.
அந்த பீப்பாயை சரித்து வைத்து அதில் உள்ள குழாயை திறந்து விட்டால், உள்ளே உள்ள எண்ணெய் கீழே ஒழுகி விழும் அல்லவா ?
அப்படி சீராக ஒழுகி வருவதற்கு தாரை என்று பெயர். ஒரு பிசிறு இல்லாமால், ஒரு ஏற்றம் இறக்கம் இல்லாமல் ஒரே சீராக கீழிறங்கும்.
அது போல் மனதை ஒன்றின் மேல் இலயிக்க விடுவது தாரண.
இதுவரை உடலை எப்படி கட்டுக்குள் கொண்டு வருவது என்று சொல்லி வந்தார்.
இப்போது உடலைத் தாண்டி மனதை நெறி படுத்தும் இடத்துக்கு நகர்கிறார்.
உடலை கட்டுக்குள் கொண்டுவராமல் மனதை கட்டுப் படுத்த முடியாது.
நம் மனம் பல விதங்களில் சிதைவு பட்டு கிடக்கிறது.
சூழ் நிலை அப்படி.
நினைப்பதை எல்லாம் சொல்ல முடியாது, செய்ய முடியாது.
மனம் ஒன்று நினைக்கும், உடல் ஒன்றை செய்யும் அல்லது செய்ய முடியாமல் தவிக்கும்.
மனமும் உடலும் வேறு வேறு பக்கம் இழுத்துக் கொண்டு நிற்கும்.
எந்த பக்கம் போவது என்று தெரியாமல் குழம்பி தவிப்போம்.
உடல் ஒன்றை வேண்டும், பழக்க வழக்கம் வேறு மாதிரி இருக்கும், மனம் இன்னொன்றைச் சொல்லும்.
இதே நாளும் பொழுதும் நடந்தால் மனம் என்ன ஆகும். சிதைவு பட்டு போகும்.
பதஞ்சலி மனதையும் உடலையும் ஒன்றாக இணைக்கிறார்.
யோகா என்றால் சேர்ப்பது என்று பொருள்.
முதலில் வாழ்க்கை வழி முறைகளை சரி செய்து கொண்டு, உடலை நல்ல நிலையில் நிலை நிறுத்தி (ஆசனம் ) , மூச்சில் ஒரு ஒழுங்கை கொண்டு வந்து (பிராணாயாமம்), மனதை உள் நோக்கி திருப்பி (ப்ரத்தியாகார) , தாரணைக்கு வருகிறார்.
நேரடியாக மனதை கட்டுப் படுத்தும் வழி சொல்ல வில்லை. செய்யவும் முடியாது.
ஒவ்வொரு படியாகத் தான் ஏற வேண்டும்.
ஏறுவோம்.
http://yogasutrasimplified.blogspot.in/2018/03/229-6.html
No comments:
Post a Comment