யோக சூத்திரம் - 1.32 - நியமங்கள் - பாகம் 5
शौच संतोष तपः स्वाध्यायेश्वरप्रणिधानानि नियमाः ॥३२॥
śauca saṁtoṣa tapaḥ svādhyāy-eśvarapraṇidhānāni niyamāḥ ॥32॥
śauca = தூய்மை
saṁtoṣa = நிறைவு, சந்தோஷம்
tapaḥ = தவம்
svādhyāy = தன்னில் அறிவது
eśvarapraṇidhānāni = ஈஸ்வர ப்ரணிதானி
niyamāḥ = நியமம் ॥32॥
தூய்மை, சந்தோஷம், தவம் , தன்னை அறிவது பற்றி சிந்தித்தோம்.
கடைசியாக சரணாகதி. ஈஸ்வர ப்ரணிதானி.
ஈஸ்வரன் என்று இங்கே குறிப்பிடுவது ஒரு குறிப்பிட்ட கடவுளை அல்ல. சிவா, விஷ்ணு, அல்லா, இயேசு என்று எந்த ஒரு கடவுளையும் குறித்து அல்ல.
சரணாகதி என்றால் வாழ்க்கையை அப்படியே ஏற்றுக் கொள்வது. வாழ்வோடு சண்டை போடுவது கிடையாது. எது வந்தாலும் மகிழ்ச்சியாக ஏற்றுக் கொள்வது.
அப்படி என்றால், ஒரு முயற்சியும் வேண்டாமா ? துன்பம் வந்தால் அதை எதிர்த்து போராட வேண்டாமா ? நோய் வந்தால் அதற்கு வைத்தியம் பார்க்காமல் அந்த நோயையை சந்தோஷமாக ஏற்றுக் கொள்ள வேண்டுமா ? அது என்ன பைத்தியகாரத் தனமாக இருக்கிறதே என்று கேள்வி எழலாம்.
அது அல்ல அர்த்தம்.
எது நடந்தாலும், அதை ஏற்றுக் கொண்டு அதில் இருந்து மேலும் எப்படி வாழ்க்கையை மேம்படுத்துவது என்று யோசிக்க வேண்டும்.
சில உதாரணங்கள் தர முடியும்.
யேசுதாஸ் ஒரு பெரிய பாடகர். பல பட்டங்கள், பெருமைகள் கொண்டவர். அவர் குரலுக்கு மயங்காதவரே கிடையாது.
அவர், திருவனந்தபுரம் வானொலியில் அறிவிப்பாளராக சேர விண்ணப்பம் செய்தார். அவர் குரலை கேட்டுவிட்டு, அது நன்றாக இல்லை என்று சொல்லி அவருக்கு அந்த வேலை தரவில்லை.
நல்ல அரசாங்க உத்யோகம் போய் விட்டது. என்ன செய்வது. கையில் காலணா இல்லை. வேலையும் இல்லை.
தோல்வி தானே ? வருத்தம் தானே?
அந்த வருத்தத்தோடு, வண்டி ஏறி சென்னை வந்தார். கர்நாடக சங்கீதம் பயின்றார். உலகப் புகழ் பெற்றார்.
ஒரு வேளை அவர் அந்த அறிவிப்பாளர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப் பட்டிருந்தால்?
வாழ்க்கையில் எது வந்தாலும்,அதை பிரசாதம் போல ஏற்றுக் கொள்ள வேண்டும். அதுவும் நல்லதிற்கே என்று ஏற்றுக் கொண்டு வாழ்க்கையை நடத்திச் செல்ல வேண்டும்.
வேண்டத் தக்கது அறிவோய் நீ
வேண்ட முழுவதும் தருவோய் நீ
என்பார் மணிவாசகர். எனக்கு என்ன தர வேண்டும் என்று உனக்குத் தெரியும் என்று வாழ்வை நடத்திச் செல்வது.
வாழ்வோடு போராட்டம் இல்லை. வாழ்வோடு சுமுககமாகப் போவது.
எப்படி இருந்தாலும் வாழ்விலே தடைகள் வரத்தான் செய்யும். அவற்றை எவ்வாறு எதிர் கொள்வது.
மிக மிக அருமையான, இது வரை யாரும் சொல்லாது வழியைச் சொல்கிறார் பதஞ்சலி.
கோபம், வருத்தம், சோகம், தனிமை, மன அழுத்தம் என்று வரும் போது என்ன செய்ய வேண்டும் ? அவற்றை எவ்வாறு எதிர் கொள்வது என்று இது வரை யாரும் சொல்லாத ஒன்றை சொல்கிறார்.
அது என்ன ?
http://yogasutrasimplified.blogspot.com/2018/03/132-5.html
No comments:
Post a Comment