யோக சூத்திரம் - 2.31 - நிலைகளை கடந்தது
जातिदेशकालसमयानवच्छिन्नाः सार्वभौमामहाव्रतम् ॥३१॥
jāti-deśa-kāla-samaya-anavacchinnāḥ sārvabhaumā-mahāvratam ॥31॥
jāti = ஜாதி
deśa = தேசம்
kāla = காலம்
samaya = சமயம்
anavacchinnāḥ = தடையற்ற
sārvabhaumā = அனைத்திலும்
mahāvratam = மிகப் பெரிய ஞானம் , அறிவு ॥31॥
என்ன இது தலையும் புரியவில்லை, காலும் புரியவில்லை.
அதாவது, முந்தைய சூத்திரத்தில் அகிம்சை, திருடாமை, தன்னடக்கம் என்று ஐந்து வித கூறுகளை கூறினார் அல்லவா.
அவற்றை யார் யாரெல்லாம் கடை பிடிக்க வேண்டும் ?
அல்லது யார் யாரெல்லாம் கடை பிடிக்கக் கூடாது ? என்று இங்கே சொல்கிறார்.
இந்த யோக சூத்திரங்கள் ஒரு குறிப்பிட்ட ஜாதியை சேர்ந்தவர்களுக்கு மட்டும் தான் சொல்லப்பட்டதா ?
இல்லை, அனைத்து ஜாதியினரும் இதை கடைபிடிக்க வேண்டும் என்கிறார்.
இது எங்களுக்கு மட்டும் தான், மற்றவர்களுக்கு அல்ல என்று சிலர் இதை சொந்தம் கொண்டாடக் கூடும் என்று அறிந்து முன்பே சொல்லி வைத்திருக்கிறார். அனைத்து மதத்தினரும் இதை கடைபிடிக்கலாம் என்று.
சரி, இது வெளி நாட்டவருக்கும் பொருந்துமா அல்லது இந்தியாவில் உள்ளவர்களுக்கு மட்டும் தான் இது பொருந்துமா என்றால், அனைத்து தேசத்தினரும் இதை கடைபிடிக்கலாம்.
சரி, இந்த யோக மார்கத்தை கடை பிடிக்க வயது வரம்பு ஏதாவது உண்டா என்றால், அப்படி ஒன்றும் இல்லை. சிறியவர் முதல் வயதானவர் வரை எல்லோரும் கடை பிடிக்கலாம் என்கிறார் (காலம்).
சரி, இப்படி அனைத்துக்கும் சரி சரி என்று சொல்லிக் கொண்டே போனால், யாரவது செய்யக் கூடாது என்று இருக்கிறதா என்றால், அப்படி ஒரு பிரிவினையே இல்லை. எல்லோரும் கடைபிடிக்கலாம். எந்த பிரிவும் கிடையாது.
ஆண் , பெண், பணக்காரன், ஏழை, படித்தவன், படிக்காதவன், என்ற எந்த பாகுபாடும் கிடையாது.
சில சாத்திரங்களை, மந்திரங்களை பெண்கள் சொல்லக் கூடாது என்று ஒதுக்கி வைத்து இருக்கிறார்கள். பெண்களும் அது சரிதான் என்று ஏற்றுக் கொண்டு இருக்கிறார்கள்.
பதஞ்சலி அப்படி எந்த ஒரு பாகுபாடும் ஏற்படுத்தவில்லை. அனைத்து தரப்பினரும் இதை செய்யலாம் என்கிறார்.
யோக சாத்திரம் என்பது அறிவியல் பூர்வமானது.
நியூட்டனின் விதி பெண்களுக்கு செல்லாது என்று யாராவது சொல்வார்களா ? சொன்னால் அது எவ்வளவு நகைப்பு இடமாக இருக்கும்.
அது போல, யோக சாத்திரம் எல்லோருக்கும் பொது. யார் வேண்டுமானாலும் கடை பிடிக்கலாம்.
ஜாதி, மத, பால், நாடு, கால வேறுபாடுகளை கடந்தது அது.
என்ன ஒரு தீர்க்க தரிசனம்.
நீங்கள் யாராக இருந்தாலும் சரி. பாவம் பண்ணியவர், புண்ணியவான், நோயாளி, ஆரோக்கியமானவன், வயதானவன், இளைஞன் ...யாராக இருந்தாலும், யோக சாத்திரம் இரு கை நீட்டி உங்களை வரவேற்கிறது.
http://yogasutrasimplified.blogspot.in/2018/03/231.html
No comments:
Post a Comment