Saturday, March 24, 2018

யோக சூத்திரம் - 1.35 - பொறுப்பு

யோக சூத்திரம் - 1.35 - பொறுப்பு 



अहिंसाप्रतिष्ठायं तत्सन्निधौ वैरत्याघः ॥३५॥

ahiṁsā-pratiṣṭhāyaṁ tat-sannidhau vairatyāghaḥ ॥35॥

ahiṁsā = அகிம்சை

pratiṣṭhāyaṁ  = நிலை பெறுதல்

tat = அவர்களின்

sannidhau  = சூழ்நிலையில்

vairatyāghaḥ  = வைரா (சண்டை,  எதிர் குணம்) தியாக (விட்டு விலகும்)

இவரிடத்தில் அகிம்சை நிலை பெற்று இருக்கிறதோ, அவர்களை சுற்றி எதிர் குணம் (negative feelings ) இருக்காது.

இந்த உலகம் நம்மை எப்போதும் தொந்தரவு செய்து கொண்டே இருக்கிறது. ஒரு நிமிடம் நிம்மதியாக இருக்க விடுவதில்லை. ஏதாவது ஒரு பிரச்னையை கொண்டு வந்து நம் தலையில் போடுகிறது.

நாம் ஒன்றுமே செய்யாமல் சிவனே என்று இருப்போம். இருந்தும் இந்த உலகமே நம்மை விடுவது இல்லை.

ஏன் மகிழ்ச்சியாக இருக்க முடிவதில்லை ?

ஏன் இவ்வாறு நிகழ்கிறது ?

பதஞ்சலி சொல்கிறார்.

யார் மனதில் அகிம்சை நிலைத்து நிற்கிறதோ அவர்களை சுற்றி  வெறுப்பும்,சண்டை சச்சரவும் இருக்காது என்கிறார்.

அதற்கும் நான் சொன்னதற்கும் என்ன சம்பந்தம் ?


மனதில் அகிம்சை இருந்தால் வெளியே வெறுப்பும் சண்டையும் இருக்காது என்கிறார். அது எப்படி ?

என் மனதில் அகிம்சை இருந்தால் வெளியே உள்ள உலகம் எப்படி மாறும்?

உலகம் மாறினால் அல்லவா சண்டை சச்சரவு தீரும்?


இல்லை. அங்கு தான் நாம் தவறு செய்கிறோம்.

நமக்கு நடக்கும் ஒவ்வொரு துன்பத்திற்கும் நாம் வேறு யாரையோ குறை சொல்கிறோம்.  "அந்தக் காலத்தில் , படிக்கிற காலத்தில் என்னை ஒழுங்காக படிக்க வைத்திருந்தால் " , "நல்ல இடத்தில் கட்டி கொடுத்திருந்தால் " என்று நமக்கு வரும் துன்பங்களை உலகின் மேல் ஏற்றுகிறோம். யாரும் அகப்படவில்லை என்றால்  இருக்கவே இருக்கிறார் கடவுள் அல்லது விதியின் மேல்  பழியைப் போட்டு விடுகிறோம்.

மொத்தத்தில் நாம் நல்லவர்கள். உலகம் தவறு என்று நினைக்கிறோம்.

அனைத்து சிக்கலுக்கும் அதுவே காரணம்.

நாம் நம்மை மாற்றினால் உலகம் மாறும்.

உங்களுக்கு என்ன துன்பம் என்று சிந்தியுங்கள். அதற்கு காரணம் உங்கள் மனம் தான் என்று    புரியும்.

உங்கள் பொறாமை , நீங்கள் எவ்வளவு சொத்து சேர்த்தாலும் உங்களை நிம்மதியாக அனுபவிக்க  விடாது. அடுத்தவன் மனைவி அழகு என்று நினைப்பு வந்துவிட்டால், குடும்ப வாழ்க்கையில் சந்தோஷம் போய்  விடும். பக்கத்து வீட்டுக்காரன்  பிள்ளை அதிக மதிப்பெண் வாங்குகிறான் என்று நினைத்து விட்டால், பிள்ளை மேல் உள்ள பாசம் போய் விடும்.

உங்கள்  சந்தேகம்,கோபம், பொறாமை, வன்மம், பழி வாங்கும் குணம் போன்றவை இருக்கும் வரை உலகமும் அப்படித்தான் இருக்கும்.

உலகை பழி சொல்லி புண்ணியம் இல்லை.

உங்களை மாற்றுங்கள்

உங்கள் மனதில் அகிம்சை வந்தால், உங்களை சுற்றி வெறுப்பும் கோபமும் மறையும்.

உங்கள் மனதில் அன்பு வந்தால், உங்களைச் சுற்றி சாந்தம் தவழும்.

இன்னா செய்தாரை ஒறுத்தல், அவர் நாண நன்னயம் செய்து விடல் என்றார் வள்ளுவர்.

நமக்கு கெடுதல் செய்தவருக்கு நல்லது செய்யச் சொல்கிறார்.

ஏன் ? அவருக்கு திருப்பி கெடுதல் செய்தால் என்ன ?

செய்யலாம். அப்படிச் செய்தால் , அவர் நம் மீது பயம் கொண்டு நம்மிடம் மீண்டும் தவறு செய்ய மாட்டார்.

ஆனால், அந்த பழி வாங்கும் குணம் நமது மனதில் ஊறி விடும். அது ஒரு நஞ்சு.

நாம் அவருக்கு கொஞ்சம் கெடுதல் செய்யலாம். ஆனால், நமக்கு நாமே நிறைய தீமை செய்து கொள்வோம்.

ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தை காட்டச் சொன்னார் இயேசு பிரான். ஏன், திருப்பி அடிக்க முடியாமல் இல்லை.  அந்த பழி வாங்கும் குணம் இருக்கும் வரை , நமக்கு நிம்மதி கிடையாது.

நம் மனதில் இருக்கும் ஒவ்வொரு கெட்ட குணத்துக்கும், உலகம் பதில் தரும்.

அது ஒரு கண்ணாடி போல. நாம் எப்படி இருக்கிறோமோ, பிம்பமும் அப்படியே இருக்கும்.

உங்களுக்கு அமைதி,  சந்தோஷம், நிம்மதி, அன்பு  வேண்டுமா ?

உங்கள் மனதை பாருங்கள். அதில் உள்ள அழுக்கை கழுவுங்கள். உலகம் தானாக மாறும்.

பிறரை குறை கூறுவதை நிறுத்துங்கள். இந்த உலகம் இப்படி இருக்கக் காரணம் நீங்கள்தான் என்று உணருங்கள்.

செய்வீர்களா ? நீங்கள் செய்வீர்களா ?

http://yogasutrasimplified.blogspot.in/2018/03/135.html

No comments:

Post a Comment