யோக சூத்திரம் - 2.36 - சத்தியமும் செயலும்
सत्यप्रतिष्थायं क्रियाफलाअश्रयत्वम् ॥३६॥
satya-pratiṣthāyaṁ kriyā-phala-āśrayatvam ॥36॥
satya = சத்தியத்தில்
pratiṣthāyaṁ =நிலை பெற்று இருந்தால்
kriyā = காரியம், காரியத்தின்
phala = வெளிப்பாடு
āśrayatvam = தானே அமையும்
சத்தியத்தில் நிலை பெற்று இருந்தால், காரியத்தின் வெளிப்பாடு தானே அமையும்.
நம் ஒவ்வொருவருக்குள்ளும் பல நல்ல விஷயங்கள் இருக்கின்றன. அன்பு,கருணை, உதவும் மனம், அழகை போற்றும் குணம், தயை, நலிந்தவர்களை காக்கும் எண்ணம், உண்மையாக உழைக்கும் எண்ணம், என்று எவ்வளவோ நல்ல குணங்கள் உள்ளே இருக்கிறது. இருந்தும் அவை வெளிப்படுவது இல்லை.
ஏன் ?
நல்லவர்களாக இருந்தும், அதை வெளியில் காட்டிக் கொள்ள முடியவில்லை. காட்டினாலும் , உலகம் நம்ப மறுக்கிறது. ஏன் அப்படி நிகழ்கிறது.
அது மட்டும் அல்ல, நீங்கள் யாருக்கோ உதவி செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்கள். உங்கள் நிதி நிலை உங்களை தயங்க வைக்கிறது. இப்படி எவ்வளவோ நல்ல காரியங்கள் செய்ய நினைத்தாலும் செய்ய முடியாமல் போகிறது.
ஏன் ?
இதை எப்படி மாற்றுவது ?
"சத்தியத்தில் நிலை நின்றால் , காரியங்கள் தானே வெளிப்படும் " என்கிறார் பதஞ்சலி.
சத்தியத்தில் நிலை பெறுதல் என்றால், நிலையாக நிற்க வேண்டும். இங்கொரு காலும், அங்கொரு காலும் இருந்தால் நிலையாக நிற்க முடியாது.
உள்ளொன்று வைத்து புறம் ஒன்று பேசக் கூடாது.
மனமும் செயலும் ஒன்று பட வேண்டும்.
அது எப்படி முடியும். மனதில் நினைப்பதை எல்லாம் வெளியே அப்படியே சொல்ல முடியுமா ?
முடியும், எப்போது என்றால் மனதில் நினைப்பது வெளியில் சொல்லும்படி இருந்தால்.
சத்தியத்தில் நிலை நின்றால் என்பது உண்மை பேசுவது மட்டும் அல்ல. அது ஒரு சிறு பகுதி.
உண்மையாய் இருப்பது. முதலில் நமக்கு நாமே உண்மையாய் இருப்பது. சொல்லும் செயலும் ஒன்றாக இருப்பது. உள்ளும் புறமும் ஒன்றாக இருப்பது.
அது எப்போதாவது ஒரு முறை அல்ல, "நிலை நிறுத்தல்" , எப்போதும் அப்படி இருக்க வேண்டும்.
அப்படி இருந்தால், செயல் தானே வெளிப்படும். அந்த செயலுக்கு நீங்கள் காரணம் அல்ல. அவை உங்கள் மூலம் வெளிப்படும்.
நான் செய்கிறேன், எனக்காக செய்கிறேன், என் குடும்பத்துக்காக செய்கிறேன், என்பதெல்லாம் போய் விடும். நான் வேறு, உலகம் வேறு என்பது மறைந்து , நானும் உலகும் ஒன்றாகி விடும்.
என்னுடைய செயல் மாண்ட வா பாடி தெள்ளேணம் கொட்டாமோ என்பார் மணிவாசகர்.
கயல் மாண்ட கண்ணி தன் பங்கன் எனைக் கலந்து ஆண்டலுமே,
அயல் மாண்டு, அருவினைச் சுற்றமும் மாண்டு, அவனியின்மேல்
மயல் மாண்டு, மற்று உள்ள வாசகம் மாண்டு, என்னுடைய
செயல் மாண்டவா பாடி தெள்ளேணம் கொட்டாமோ!
என்னுடைய செயல் என்று ஒன்று இருக்காது.
இது அவன் திரு உரு, இவன் அவன் எனவே என்பார் மணிவாசகர்.
சத்தியத்தில் நிலை நிற்கும் போது தான் என்பது மறையும்.
உள் ஒளி வெளிப்படும்.
http://yogasutrasimplified.blogspot.in/2018/03/236.html
No comments:
Post a Comment