Tuesday, March 6, 2018

யோக சூத்திரம் - 2.30 - உலகோடு வாழ ஐந்து வழிகள் - பாகம் 2

யோக சூத்திரம் - 2.30 - உலகோடு வாழ ஐந்து வழிகள் - பாகம் 2


अहिंसासत्यास्तेय ब्रह्मचर्यापरिग्रहाः यमाः ॥३०॥

ahiṁsā-satya-asteya brahmacarya-aparigrahāḥ yamāḥ ॥30॥

ahiṁsā = அகிம்சை

satya = சத்யம்

asteya = திருடாமை

brahmacarya = ப்ரம்மச்சாரியம்

aparigrahāḥ  = தன்னடக்கம்

yamāḥ = இயமம் 

அகிம்சை பற்றி நேற்று சிந்தித்தோம். அடுத்தது, சத்யம். 

நடைமுறை வாழ்கையில் சத்யம் என்றால் சொன்ன சொல் தவறாமை. உண்மை பேசுதல் என்று அர்த்தம். 

சத்யம் என்பது இவற்றையெல்லாம் தாண்டியது.

சத்யம் என்பது முதலில் நமக்கு நாமே செய்து கொள்வது. 

நமக்கு நாமே நேர்மையாக இருக்கிறோமா? நமக்கு நாமே உண்மையாக இருக்கிறோமா? 

கோபம் வருகிறது. வெளியே சிரிக்கிறோம். 

எரிச்சல் வருகிறது. வெளியே காட்ட முடிவதில்லை. 

நிறைய விஷயங்கள் செய்ய விருப்பம் இல்லை. இருந்தும் செய்கிறோம். ஏன் ? மற்றவர்கள் என்ன  சொல்வார்களோ? சமுதாயம் என்ன சொல்லுமோ? உறவு, நட்பு என்ன சொல்லுமோ என்று பயந்து  வேண்டாததை, விரும்பாததை செய்து கொண்டிருக்கிறோம். 

பிடிக்காத உறவுகளை பிடித்து தொங்கிக் கொண்டிருக்கிறோம். மனம் சொல்கிறது, விட்டு விட்டு வா என்று. ஐயோ, மற்றவர்கள் என்ன சொல்வார்களோ என்று சகித்துக் கொண்டு வாழ்கிறோம். 

இது நேர்மையா ? இது உண்மையா ? 


நமக்கு நாமே நேர்மையாக இல்லாவிட்டால், உலகோடு எப்படி நேர்மையாக இருக்க முடியும்?

சரி, அதற்காக மனம் விரும்பியதை எல்லாம் செய்ய முடியுமா? உயர் அதிகாரி திட்டுகிறார். தவறு அவர் மேல் தான் என்றாலும், நம்மை குறை சொல்கிறார். மாமியாரும் அப்படித்தான். கணவனும்/மனைவியும் அப்படித்தான். என்ன செய்வது? சகிக்கத்தானே வேண்டி இருக்கிறது? 

இல்லை. சகிக்க வேண்டியது இல்லை. அதற்காக சதா சர்வ காலமும் சண்டை போடவும் வேண்டியது இல்லை. மனதில் பட்டதை, தைரியமாக, மென்மையாக எடுத்துச் சொல்லலாம். 

மனதுக்குள் ஒன்றையும், வெளியில் ஒன்றுமாக வாழ்வதில் பல சிக்கல்கள் இருக்கிறது. 

முதலாவது, மன அழுத்தம் அதிகமாகிக் கொண்டே போகும். எத்தனை நாள் தான் சகித்துப் போக முடியும். மன அழுத்தம் , உடல் உபாதைகளில் கொண்டு போய் முடியும். தூக்கம் இன்மை, பசி இன்மை, அல்சர் என்று பல நோய்களில் கொண்டு போய் முடியும். நோய்க்கு மருந்து உண்டால், அதன் பக்க விளைவுகள் என்ற பிரச்சனை. 

இரண்டாவது, மன சிதைவு. Schizopornia என்று சொல்வார்கள். மனம் திரிந்து போகும். உண்மையில் நீங்கள் யார் என்று தெரியாமல் போகும். பொய்யே பழகி பழகி உண்மையான மனம் எது என்று தெரியாமல் போகும். 

மூன்றாவது, இயற்கையான மன வெளிப்பாடுகள் மறந்து போகும். கோபத்தை அடக்கி அடக்கி , கோபம் வரும் போதெல்லாம் சிரித்து மழுப்பிக் கொண்டிருந்தால், கோபமும் மறந்து போகும், சிரிப்பும் மறந்து போகும். உண்மையியலே சிரித்தால் கூட அது ஒரு இயற்கையான உணர்ச்சியின் வெளிப்பாடாக இருக்காது.  நீங்கள் கவனித்திருக்கலாம், பல ஆங்கில , மேலும் சில தமிழ் நாடகங்களில் இடை இடையே அவர்களை சிரிப்பு ஒலியை போடுவார்கள். யாரோ பலர் பார்த்து சிரிப்பது போல. காரணம் என்ன, மக்கள் சிரிப்பதை மறந்து விட்டார்கள். சிரிப்பு கூட emoji ஆகி விட்டது. வார்த்தைகள் இல்லை. சத்தம் இல்லை. ஒரு குறியீடு. emoji  அல்லாதது lol என்று போட்டு விடுகிறார்கள். மனம் விட்டு சிரிப்பது இல்லை. 

சிரிப்பு மட்டும் அல்ல. அன்பு, காதல், நேசம், கருணை, காமம், பாசம் எல்லாமே மறந்து போகும். பிள்ளைகள் மேல் எப்படி அன்பு கட்டுவது என்று தெரியாமல் பெற்றோர்கள் தவிக்கிறார்கள். எல்லாம் அவன் நல்லதுக்குத்தானே செய்தேன், சொன்னேன், பின் ஏன் அவன் என்னை புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறான் என்று எத்தனை பெற்றோர் வருந்துகிறார்கள் ? எத்தனை பிள்ளைகள் போதை மருந்து போன்ற தவறான வழியில் செல்கிறார்கள் ? காரணம் என்ன என்றால், அன்பை வெளிப்படுத்தத் தெரியவில்லை. கண்டிப்பும், பணம் கொடுப்பதும் மட்டுமே அன்பு என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். காரணம், அன்பு என்பது ஒரு மென்மையான உணர்வு. அதை வெளிப்படுத்தினால் ஏதோ பலவீனம் என்று பலரால் நினைக்கப் படுகிறது. எனவே, அதை வெளிக்காட்டாமலேயே வாழப் பழகி விடுகிறார்கள். 

பின் எப்படி வரும்.

அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ், ஆர்வலர் புன்கணீர் பூசல் தரும் என்கிறார்  வள்ளுவர்.

ஒரு ஆண் அழுவதை நம்மால் ஏற்றுக் கொள்ள முடியுமா ? ஆண் , கண்ணீரை அடக்கியே வாழ பழகுகிறான். பின் எப்படி அவனால் அன்பை வெளிப்படுத்த முடியும்? ஆணின் அன்பு இல்லாமல் பெண் தவிக்கிறாள். 

இப்படி, நமக்கு நாமே நேர்மையாக இல்லாமல் இருக்கிறோம். அழுகை வந்தால் அழ வேண்டும். அது நேர்மை. சத்யம். அழுகை வரும்போது , "இல்லையே, நான் எவ்வளவு பலசாலி தெரியுமா " என்று நடிப்பது பொய்மை. 

அது சத்யம் அல்ல. 

சத்யம் , நம்மில் இருந்து தொடங்க வேண்டும். 

உள்ளும் புறமும் ஒன்றாக இருக்க வேண்டும். 

உள்ளொன்று வைத்தது புறம் ஒன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும் என்பார் வள்ளலார். 

உள்ளும் புறமும் ஒன்றாக இருக்க வேண்டும்.

அதுதான் சத்யம்.

மேலும் சிந்திப்போம்.

http://yogasutrasimplified.blogspot.in/2018/03/230-2.html










No comments:

Post a Comment