யோக சூத்திரம் - 2.38 - பிரம்மச்சரியம்
ब्रह्मचर्य प्रतिष्ठायां वीर्यलाभः ॥३८॥
brahma-carya pratiṣṭhāyāṁ vīrya-lābhaḥ ॥38॥
brahma-carya = பிரம்மச்சரியம்
pratiṣṭhāyāṁ = நிலை நின்றால்
vīrya = சக்தி
lābhaḥ = இலாபம், அடையலாம் ॥38॥
என்னடா இது ஏதோ சிட்டு குருவி லேகியம் அளவுக்கு வந்து விட்டது. பிரம்மச்சாரியம் , வீரியம், இலாபம் என்று போகிறதே என்று பார்க்கிறீர்களா...பொறுமை.
பிரம்மச்சரியம் என்றால் திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பது, சிற்றின்பத்தில் ஈடுபடாமல் இருப்பது என்பது அல்ல அர்த்தம்.
பிரம்மச்சரியம் என்றால் பிரமம் + சாரியம் = பிரம்மத்தின் வழி நடப்பவன், பிரம்மமாக நடை போடுபவன் என்று அர்த்தம். இறைவனை நோக்கிச் செல்பவன், இறைவனாகவே நடை போடுபவன் என்று அர்த்தம்.
பின் எதற்கு வீரியம் இலாபம் என்கிறார் ?
மனிதனின் சக்தியின் கீழ் நிலை பாலுணர்வு சார்ந்தது. அது ஒரு விலங்கினைப் போல கட்டற்று வெளிப்படுவது. அபரிமிதமான சக்தி ஆனால் அது அந்த சக்தி வீணாக விரயமாகிப் போகிறது.
ஆணுக்கும் சரி,பெண்ணுக்கும் சரி.
மின்சாரம் இருக்கிறது. அதை வைத்தது என்ன வேண்டுமானாலும் செய்யலாம். உருப்படியாக ஏதேனும் செய்யலாம். அல்லது அதை வைத்து ஊரைக் கொளுத்தலாம். பிரம்மச்சரியம் என்பது மனிதனின் அந்த அடிப்படை சக்தியை மேல் நோக்கி நகர்த்தி அதன் மூலம் பல அரிய காரியங்களை செய்வது.
ஆணுக்கும் பெண்ணுக்கும் உள்ள உறவானது மூன்று நிலைகளில் நிகழலாம்.
உடல் அளவில் உறவு இருக்கலாம்.
உடலைத் தாண்டி உடலும் மனமும் கலந்த உறவாக இருக்கலாம்.
இன்னும் ஒரு படி மேலே போய் இரண்டும் வேறல்ல, ஒன்று என்ற நிலை ஒன்று இருக்கிறது. அங்கே உறவு என்று சொல்வதற்கு ஒன்றும் இல்லை. உறவுக்கு இருவர் வேண்டும். அங்கே இரண்டும் ஒன்றாகக் கலந்து விடும்.
அர்த்த நாரி என்று கூறுவது அதைத்தான். அதை மறைமுகமாக, இரகசியமாக சொல்லி வைத்தார்கள்.சிவனும் சக்தியும் ஒன்றென கலந்த நிலை. தெய்வீக நிலை அது.
80 வயதைத் தாண்டிய நாவுக்கரசர், இறைவனே கண்டே தீருவேன் என்று கைலாயம் புறப்பட்டார். இமயமலை அடிவாரம் வந்து விட்டார். கால் விட்டது. உடலால் உருண்டு,கையால் தேய்த்து தேய்த்து செல்கிறார்.
அப்போது அசரீரி சொல்லியது "மனித உடலோடு இறைவனை காண முடியாது. மீண்டு போ" என்று. நாவுக்கரசர் கேட்கவில்லை. பார்த்தே தீருவேன் என்று அடம் பிடித்தார். அப்போது மீண்டும் அசரீரி சொல்லியது, "இங்கே இருக்கும் குளத்தில் மூழ்கி எழு . உமக்கு தரிசனம் தருவோம்" என்றது.
மூழ்கினார். மூழ்கி எழுந்த போது திருவையாறில் இருந்தார். பார்க்கிறார். உலகம் பூராவும் ஆணும் பெண்ணும் சேர்ந்த வடிவில் இருக்கிறது. அது தான் இறை தரிசனம் என்று கூறுகிறார் நாவுக்கரசர்.
காதல் மடப் பிடியோடு களிறு வருவன கண்டேன்
கண்டேன் அவர் திருப்பாதம்
கண்டறியாதன கண்டேன்
என்று சிலிர்க்கிறார். பத்துப் பாடல் பாடி இருக்கிறார். முடிந்தால் படித்துப் பாருங்கள்.
பிரம்மச்சாரியம் என்பது உணர்ச்சிகளை அடக்குவது அல்ல. அதை அடக்கவும் முடியாது. அந்த உணர்வுகளை, அந்த சக்தியை மேல் நிலைக்கு கொண்டு போவதுதான் பிரம்மச்சரியம்.
காமம் யாருக்கு இல்லை ?
அந்த காமத்தை ஞானம் கொண்டு கையாள வேண்டும். வெறும் அறிவு போதாது.
இராவணன் மிகக் கற்றவன். ஆனால்,காமத்தை வெற்றி கொள்ளும் ஞானம் இல்லை. அழிந்தான்.
கற்றனர் ஞானம் இன்றேல் காமத்தை கடக்கலாமோ ? என்று கேட்பார் கம்பர்.
சிற்றிடைச் சீதை என்னும்
நாமமும் சிந்தை தானும்
உற்று, இரண்டு ஒன்றாய் நின்றால்,
ஒன்று ஒழித்து ஒன்றை உன்ன
மற்று ஒரு மனமும் உண்டோ?
மறக்கலாம் வழி மற்று யாதோ?
கற்றனர் ஞானம் இன்றேல்
காமத்தைக் கடக்கலாமோ?
ஞானத்தின் துணை கொண்டு , காமத்தை வென்று , வையத்தில் வாழ்வாங்கு வாழ வேண்டும்.
http://yogasutrasimplified.blogspot.com/2018/04/238.html
No comments:
Post a Comment